பதிப்புரை – தோழர். இசாக்

“சுதந்திரமாக இருப்பது என்பது ஒருவரின் சங்கிலிகளைத் துண்டிப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் வாழ்வது.”

&நெல்சன் மண்டேலா.

விடுதலை உணர்வைப் பெற்ற மனிதனின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று மற்றவரின் சுயமரியாதைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் சிந்திப்பதுதான். எந்த அநீதிக்கும் துணைபோகாத மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதன்மூலம் உலக மக்களுக்கான வலியை தன் வலியாக உணரமுடியும்.

தோழர் ஜோசப் ராஜா, மனித மாண்புகளின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டவர். கலைகள் அனைத்தும் மனித இனத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பயன்படவேண்டும் என விரும்புபவர். அவரின் கவிதை மொழியை பாஸிசத்தின் மனிதநேய சிதைப்புகளுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்துபவர்.

உலகின் எந்த மூலையில் அநீதிக்குப் பலியாகி மனிதர்கள் பாதிப்புக்குள்ளானாலும் தோழர் ஜோசப் ராஜாவின் எழுதுகோலில் கண்ணீர்க் கசியும்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் பாஸிசத் தாக்குதல் நடத்துவதைத் தன் கவிதைகளால் கண்டனம் செய்கிறார். பொதுவுடைமைக் கருத்தியலை உள்ளத்தில் ஏந்திய ஒரு தோழனின் இதயம் இப்படிதான் இருக்கும். ஒரு தத்துவம்  ஒவ்வொரு தனிமனித மனத்துக்குள்ளும் இப்படியான மாற்றத்தைத்தான் விதைக்கிறது. அதை முறையாக வெளிப்படுத்துவதில் தோழர் ஜோசப் ராஜா முன் வரிசையில் நிற்கிறார்.

அதிகார வெறிகளால் ஒருபோதும் தொடர் வெற்றியைப் பெற்றுவிடமுடியாது. மாந்தநேயமும் அறநெறியும் வென்றே தீரும் என்பது ஜோசப் ராஜா போன்ற மக்கள் இலக்கிய செயற்பாட்டாளர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

வரலாற்றின் வெளிச்சத்தில் பாலஸ்தீனம் பிரகாசமாக இருந்தாலும் பாஸிசத்தின் இருள் பலமாகக் கவ்வியுள்ளதை ஞாயச் சிந்தனை துளியளவு உள்ளவரும் உணர்வர். பாலஸ்தீன மக்களின் வலிகளுக்காக ஒரு துளி கண்ணீரையாவது சிந்துவர்.

தோழர் ஜோசப் ராஜாவின் காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பு சில மனித இதயங்களையாவது திறக்கும் என்ற நம்பிக்கையில்…

இசாக்

தமிழ் அலை

Related Articles

Leave a Comment