நோய்கொண்டு மெலியனாயின் மருந்துண்டு தமிழ்கற்க – மாகறல் கார்த்திகேயன்

மனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் மொழிதான் முக்கியமானதென்று கருதுகிறேன். மொழியைக் கண்டுபிடிப்பதற்கான இயக்கத்தில் இருந்த காலத்தில், அந்த ஆதி மனிதர்களின் ஓசைகளாலான  உணர்வுப் பரிமாற்றம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அடர்ந்த வனாந்திரங்களிலும், இருள்சூழ்ந்த குகைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைந்திருந்த மரக்கூட்டங்களுக்கு கீழும் நிறைந்திருந்த அந்த ஓசைகளை இங்கிருந்து கேட்க முயற்சிக்கிறேன். எங்கும் ஓசைகளே நிறைந்திருக்கின்றன.

ஒரு வார்த்தையைக் கண்டுபிடிப்பதற்குள் எத்தனை ஆயிரம் முறை ஓசையெழுப்பிருப்பாள் அந்த ஆதித்தாய். ஒரு வார்த்தையை உருவாக்குவதற்காக எத்தனை ஆயிரம் முறை சுற்றிச் சுழன்றிருக்கும் அந்த ஆதிமனிதனின் நாக்குகள். உடல் அசைவினால் பேசப்பட்டதைத் தாண்டி, சைகைகளினால் பேசப்பட்டதைத் தாண்டி, கண்களினால் பேசப்பட்டதைத் தாண்டி, கொஞ்சம் எழுத்துக்கள் சேர்ந்து பேசப்பட்ட முதல் வார்த்தை என்னவாக இருந்திருக்கும் என்ற கேள்விகள் கண்டிப்பாக யாருக்குமே ஆச்சரியமூட்டக்கூடியதுதான். ஆச்சரியங்கள்தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கின்றன. ஆச்சரியங்கள்தான் ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்கின்றன. ஆச்சரியங்கள்தான் படைப்புகளுக்கான தொடக்கமாக இருந்திருக்கின்றன. ஆச்சரியமடைவதை விட்டுவிடாதீர்கள்.

”ஆதியிலே வார்த்தை இருந்தது” என்ற வாக்கியத்தை, சிறுவனாகத் தேவாலயத்தில் முதன்முதலில் கேட்டபொழுது சிலிர்த்துப் போனது உடல். வாழ்வு முழுவதும் வார்த்தையைத்தான் தரித்துக் கொள்ளப்போகிறேன் என்பதற்கான அறிகுறியாகக்கூட இருக்கலாம். இந்த நூற்றாண்டின், இந்த இடத்தில் வார்த்தைகள் இல்லாமல் இந்த உலகம் இயங்குவது சாத்தியமா என்று யோசித்துப் பார்த்தால், எப்படிச் சாத்தியமாகும் என்ற எதிர்கேள்விதான் பதிலாகக் கிடைக்கும். வார்த்தைகளே எங்கும் எங்கெங்கும் வியாபித்திருக்கின்றன. வார்த்தைகளுக்காத்தான் ஒவ்வொரு மானுட உறவும் காத்துக்கிடக்கின்றது.  

அதனால்தான் மானுட உழைப்பின் புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு, விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விரிந்த தன் வயிற்றிற்குள் இந்த உலகத்தின் ஒவ்வொரு மொழியையும், இந்த உலகத்தின் ஒவ்வொரு மொழியிலுள்ள ஒவ்வொரு சொல்லையும், இந்த உலகத்தின் ஒவ்வொரு சொல்லிலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் சேமித்துக் கொண்டிருக்கிறது. இதுவரையிலும் தாயிடம் மொழிகற்ற குழந்தைகள், வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவிடம் காதேந்தி கற்றுக்கொள்ளலாம். இப்படியாக வருங்காலத்தில் மானுட வரலாற்றின் எந்தத் தருணத்தையும் யாரும் தவறவிடாமல் தரித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் கூட அதிகரித்திருக்கிறது.

இந்த மனிதகுலம் இதுவரையிலும் ஆயிரக்கணக்கான மொழிகளை உற்பத்தி செய்திருக்கிறது. ஆனால் அத்தனை மொழிகளும் இப்போதைய பயன்பாட்டில் இல்லை என்பது துயரம்தான். மொழி இல்லை என்பதை அந்த மொழி பேசிக்கொண்டிருந்த மனிதர்கள் இல்லையென்றுதான் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனக்குழு இன்னொரு இனக்குழுவை அழித்தபோது, செத்துப்போன மனிதர்களோடு அவர்களின் மொழியும் செத்துப்போயிருக்கலாம். அப்படிப்பட்ட அழிவிலிருந்து தன்னுடைய மொழியைக் காப்பற்றத்தான் ஒவ்வொரு இனக்குழுவும் எழுத்தைக் கண்டுபிடிக்க இடையறாது முயற்சி செய்திருக்கும்.

நிச்சயமாக நீங்கள் நம்பலாம், இதுவரையிலும் முயற்சி செய்த எதையும் கண்டுபிடிக்காமல் போனதில்லை மனிதகுலம். ஆக்கப்பூர்வமாக இருந்தாலும், ஜப்பானின் இரண்டு நகரங்களைக் காவுவாங்கிய அணுகுண்டாக இருந்தாலும் முயற்சிசெய்து முடித்திருக்கிறான் மனிதன். அப்படித்தான் உணர்வுப் பறிமாற்றத்திற்கான தேவையிலிருந்து மொழியும், மொழியின் அடுத்த நகர்வான வாய்மொழி இலக்கியமும், அடுத்த தலைமுறைக்கான தேவை கருதியும், சிந்தனையின் பாதுகாப்பு கருதியும் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்திலக்கியமும் என இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த மனிதகுலம்.

உணர்வை வெளிப்படுத்த மொழி என்ற ஊடகத்தை கண்டிபிடித்ததிலிருந்தே சிந்தனையில் பாய்ச்சலை நிகழ்த்தத் தொடங்கியிருக்கிறது மனிதகுலம். சங்ககாலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களை, அவர்களின் வாழ்க்கை முறையை, அவர்களின் காதலை, அவர்களின் கனவுகளை, அவர்களின் லட்சியங்களை சங்கப்பாடல்களின் வழியாக தரிசித்துக் கொண்டிருக்கிறோம். ஹோமர் தன்னுடைய காப்பியங்களின் வழியாக கிரேக்கர்களின் வாழ்க்கையை, பண்பாட்டை, போர்களை இன்றைக்கு வாசிக்கத் தொடங்கும் ஒருவனுக்குக்கூட சொல்லிக் கொண்டிருக்கிறார். மொழிதான் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் பாலமாக இருக்கிறது. மொழிதான் எதிர்காலத்திற்கான பாதையாகவும் இருக்கிறது.

அதனால்தான் மொழியைத் தாய்மொழி என்றுசொல்லி இதயத்தோடு அணைத்துக்கொண்டது இந்த மனிதகுலம். அப்படிபட்ட தாய்மொழிக்கு ஆபத்து வந்த போதெல்லாம் உயிரையும் கொடுத்துப் போராடிக் காத்தது இந்த மனிதகுலம். அவார் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட, ரஷ்யக் கவிஞன் ரசூல் கம்சதேவின் பிரபலமான கவிதை ஒன்றுண்டு. ”என் தாய்மொழி நாளை இறக்கப்போகிறது என்றால், நான் இன்றே இறந்துவிடுவேன்” என்ற அந்தக் கவிதையை இந்த உலகத்தில் மொழியுணர்வு கொண்ட எல்லோரும் ஒரேமாதிரி உணர்ந்து கொண்டார்கள்.

இந்த உலகத்தில் யாரையும் விடவும் மொழியைக் காப்பதற்கான நீண்டகாலப் போராட்டங்களை நடத்தியவர்கள் தமிழர்கள். அந்தப் போராட்டத்தின் காலக்கட்டத்தில் மொழிதான் எல்லோரையும் இணைத்தது. மொழி எல்லோரையும் போராட்டக்களங்களை நோக்கி   அழைத்தது. ஒவ்வொரு வீடுகளிலும், ஒவ்வொரு கல்விச்சாலைகளிலும், ஒவ்வொரு அரசியல் களங்களிலும் மொழிதான் பிரதானமான பேசுபொருளாக இருந்தது. தாய்மொழி உணர்வை இதயத்திலும், தாய்மொழி எழுத்துக்களைக் கைகளிலும் ஏந்திப் போராட்டக்களங்களில் கனன்று கொண்டிருந்த எத்தனையோ மனிதர்கள் தாய்மொழிக்காக, தாய்மொழியைக் காப்பதற்காக, தாய்மொழியைத் தாங்கிப்பிடித்தபடி உயிரிழந்தார்கள். இதையெல்லாம் இந்தச் செயற்கை நுண்ணறிவின் தலைமுறைக்குச் சொல்லவேண்டிய தேவையிருக்கிறது.

ஏனென்றால், பணம் பிரதானமாய் ஆகிவிட்ட இந்தத் தலைமுறைக்கு எதுவுமே முக்கியமில்லாமல் போய்விட்டது. உறவுச்சங்கிலி உடைக்கப்பட்டு மனிதர்கள் தனித்தனியாகச் சிதறிப்போயிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் கடினமான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்ணவும் உறங்கவும் உழைக்கவும் என ஒவ்வொரு நிமிடமும் ஓடிக்கொண்டே இருக்கிறான் மனிதன். சிக்கலான இந்த வாழ்க்கை அவனை சொந்த நிலத்திலிருந்தும், சொந்த மொழியிலிருந்தும், அவனுக்குச் சொந்தமான அனைத்திலுமிருந்தும் அந்நியப்படுத்தியிருக்கிறது. ஒருமொழி எப்படி உயிர் வாழ்கிறது என்பதை ஒவ்வொருவரின் இதயத்தை நோக்கியும் உரக்கப் பேசவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

ஒரு கவிஞனாக, வெறும் போராட்டங்களால் மட்டுமே ஒரு மொழியைக் காப்பாற்றிவிட முடியாது என்பதை இந்த நேரத்தில் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு மொழியைப் பேசுகின்ற மக்கள் எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு அந்த மொழியில் படைக்கப்படும் இலக்கியங்களும்; அந்த மொழியில் உருவாக்கப்படும் இலக்கண நூல்களும் முக்கியமாகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மொழியின் தொடக்கத்தையும், அந்த மொழியின் தொடர் பயன்பாட்டையும், அந்த மொழியின் எதிர்காலத்தையும் ஆய்ந்து அறிகின்ற மொழி ஆராய்ச்சியும் மிகமுக்கியமாகிறது. இந்த வேளையில், ரஷ்யாவில் 1917ல் நடந்த புரட்சிக்குப் பிறகு புதிய மொழிகளுக்கான ஆராய்ச்சி மையத்தை அமைத்து மாஸ்கோ மொழியியல் பல்கலைக்கழகத்தை மொழி ஆராய்ச்சியின் முக்கியமான இடமாக போஷ்விக்குகள் மாற்றினார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

”கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி” என்று சொல்கிறது புறப்பொருள் வெண்பா மாலை. ”இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று சொல்கிறது பிங்கல நிகண்டு. இப்படியாகத் தமிழின் பெருமையைச் சொல்ல நம்மிடம் ஏராளமான வார்த்தைகள் இருந்தாலும்கூட, பெற்றதை விடவும் நாம் இழந்ததுதான் அதிகம் என்பதை மறந்துவிடக்கூடாது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்தோம் உண்மைதான். சங்கப் புலவர்களால் இயற்றப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களில் காற்றிற்கும், மழைக்கும், காலத்திற்கும் மிஞ்சியிருப்பனவற்றவைத்தான் இப்போது வைத்துக் கொண்டிருக்கிறோம்.

எல்லா அழிவிலிருந்தும் எஞ்சியவற்றைத்தான் மீனாட்சி சுந்தரம், ஆறுமுக நாவலர், தாமோதரம் பிள்ளை, உ.வே. சா போன்றவர்கள் அலைந்து திரிந்து, அரும்பாடுபட்டு, உயிரையும், உடலையும் வருத்தித் தங்களுடைய இயல்பிற்கு மீறி முயற்சிசெய்து முடிந்தமட்டும் நம்கைகளில் கொண்டுவந்து சேர்த்தார்கள். அப்பேர்ப்பட்ட நம் மொழியின் மூலாதாரங்களை முறையாக ஆராய்ந்த ஒருவரைப்பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதுவரையிலும் தொகுக்கப்பட்ட அத்தனை இலக்கிய நூல்களையும், அத்தனை இலக்கண நூல்களையும் முறையாக வாசித்து, ஆராய்ந்து, 1913 ஆம் ஆண்டில் தமிழின் முதல் மொழிநூலை வெளியிட்டவர் அவர்தான்.

மாநகரத்திலோ, நகரத்திலோ இருந்து வந்தவர் அல்ல, காஞ்சிபுரத்திற்குப் பக்கத்திலிருக்கும் மாகறல் என்ற கிராமத்திலிருந்து வந்தவர். அன்றைய மதராஸ் மாகாணத்தின் சைதாப்பேட்டைக்கு பக்கத்தில் இருந்த வெஸ்லேனியன் மிஷன் தியாலஜிகல் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழை உயிரினும் மேலாக நேசித்தவர். பொழுதெல்லாம் மொழிகுறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தவர். தமிழே உலகின் முதன்மொழி என்று தன்விருப்பத்தின் பேரிலோ, போகிறபோக்கிலோ சொல்லவில்லை, ஆராய்ந்து, அலசிப்பார்த்து ஆணித்தரமாக உறுதியிட்டுச் சொன்னார், தமிழ்தான் உலகத்தின் முதன்மொழி என்று. அவர் பெயர் மாகறல் கார்த்திகேயன்.

மொழியின் மீதான பெரும் விருப்பத்தைக் காட்டிலும் அவரை, அந்தக் காலமே மொழிநூலை எழுதத் தூண்டியிருக்கும் என்றே நம்புகிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயணித்துப் பார்த்தால் வடமொழி ஆதிக்கம் எந்தளவிற்கு இருந்தது என்பதை யாரும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம். வடமொழி தேவமொழி என்று அக்கறையாக அடைகாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலம். வடமொழிதான் உலக மொழிகளுக்கு மூலமானது என்று சொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலம். வடமொழியை அடிப்படையாக கொண்டே இந்திய மொழிகள் தோன்றியிருக்கின்றன என்ற அவசர ஆய்வுகள் வெளிவந்து கொண்டிருந்த காலம். மக்களும்கூட இவற்றையெல்லாம் நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த வடமொழி மயக்கத்திலிருந்து தெளிவடையச் செய்த கால்டுவெல்லாரைத் தொடர்ந்து, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே முதன்மொழி தமிழ்தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர்களில் முதன்மையானவர் மொழியியல் ஆராய்ச்சியாளர் மாகறல் கார்த்திகேயன்.

அப்படி அழுத்தம் திருத்தமாகச் சொல்லவேண்டிய நிலைதான் அன்றிருந்தது. அதனால்தால் பாரதியைப் போன்ற கவிஞர்கள் மொழியைப் போற்றிப் புகழும் கவிதைகளைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். எழுதவேண்டிய தேவையும் அவர்களுக்கிருந்தது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லேஅதைத்

தொழுது படித்திடடி பாப்பா

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்

செந்தமிழ் நாடென்னும் போதினிலேஇன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே

என்று பாரதி தொடர்ந்து தமிழின் பெருமையைக் கவிதையில் பெருக்கிக் கொண்டேயிருந்தார். கிட்டத்தட்ட அதேவேலையைத் தன்னுடைய மொழி ஆராய்ச்சியில் கார்த்திகேயன் முயற்சிசெய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

எதற்காக இந்த மொழி ஆராய்ச்சி என்பதற்கு இப்படியாகக் காரணம் சொல்கிறார் கார்த்திகேயன், ஒவ்வோர் பொருளின் தன்மையறிந்த மருத்துவன் நல்லதோர் மருந்து கூட்டுமாறுபோல, ஒவ்வொரு சொல்லின் காரணமுணர்ந்த புலவன் நல்லதோர் பாநடையும், உரைநடையும் அமைத்தல் கூடுமாதலின் அனைத்துச் சொற்களுக்கும் காரணமுதலியன கூறத் துணிந்தனன் என்று. சொல்லின் காரணம் புலவர்களுக்குத் தேவைதான். ஆனால் அக்காரணம் புலவர்களுக்கானது மட்டுமல்ல, இந்த மொழியைப் பேசுகின்ற ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில் ஆரியமயக்கு மேலோங்கி இருந்த காலத்தில் தன்னுடைய மொழி ஆராய்ச்சியால் தமிழின் பெருமையை, தமிழின் தொன்மையை, தமிழின் இனிமையை உலகம் கேட்க உரக்கச் சொன்னார் மாகறல் கார்த்திகேயன்.

கவிதையைப் பற்றிய தன்னுடைய புகழ்பெற்ற ஆராய்ச்சி நூலை இப்படித் தொடங்குவார் கிறிஸ்டோபர் காட்வெல், கவிதை மொழியில் எழுதப்படுவதால், இந்தப் புத்தகம் மொழியின் மூலாதாரங்களைப் பற்றியதுமாகும். தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதற்காக மானுடத்திரளால் உற்பத்தி செய்யப்பட்டதே மொழி. எனவே மொழியின் மூலாதாரங்கள் பற்றிய இந்த ஆய்வை, கவிதையின் மூலாதாரங்கள் பற்றிய இந்த ஆய்வை மானுட சமூகத்தைப் பற்றிய ஆய்விலிருந்து பிரிக்க முடியாது என்று உறுதிபடக் கூறுவார். மொழிநூல் உட்பட இதுவரையிலும் வந்திருக்கும் ஆராய்ச்சிகளை இந்தக் கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ளலாம். இனிவரப்போகும் ஆராய்ச்சிகளையும் இந்தக் கண்ணோட்டத்தில் செய்திடலாம்.

முக்கியமாக தாய்மொழிப் பற்றின் மிகுதியில் கண்ணை மூடிக்கொண்டு வாய்க்கு வந்ததைப் பேசாமல் ஆராய்ச்சியின் அடிப்படையில் பேசுவதற்கு கார்த்திகேயனாரின் மொழிநூல் நிச்சயம் தேவைப்படும். தன்னுடைய ஆராய்ச்சியின் முக்கிய நோக்கத்தை இப்படியாக வெளிப்படுத்துகிறார் அவர், தமிழ் ஆரியத்திற்கு முற்பட்டது, முற்பட்டது என்று கூறுவனவெல்லாம், உண்மை கூற வந்ததன்றி ஆரியத்துக்குக்குறைகூற வந்ததன்றுஎன்று. கார்த்திகேயனாரின் இந்தக் கூற்றை ஒவ்வொரு ஆய்வாளனும், ஒவ்வொரு படைப்பாளனும் கண்ணுங்கருத்துமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

இன்னும்கூட 350 பக்கங்கள் கொண்ட இந்த மொழி ஆராய்ச்சி நூலில் மாகறல் கார்த்திகேயனாரின் சிறப்பம்சமாக நாம் பார்க்க வேண்டியது, தமிழை அடிப்படையாகக் கொண்டு முதன்முதலில் தமிழில் எழுதப்பட்ட மொழிநூல் இதுதான் என்பதும், குமரிக்கண்ட கொள்கையையும், தமிழரை உலகின் முதல் மாந்தரெனவும், தமிழை உலக மொழிகளில் முதன் மொழியெனவும் ஆய்வின் மூலமாக நிரூபிப்பதும், தமிழின் இலக்கணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு மொழி ஆராய்ச்சியை மேற்கொண்டதுமாகும்.  

மேலும், ஆய்விற்காகக் கார்த்திகேயனார் கருத்தூன்றிக் கவனித்த பழந்தமிழ் நூல்களை மொழி நூலின் ஓரிடத்தில் பட்டியிடுகிறார். வாசிப்பைக் கைப்பேசிகளுக்குள் சுருக்கிக் கொண்டு, எல்லாவற்றையும் மேலோட்டமாக வாசித்துவிட்டு, எல்லாவற்றையும் அறிந்ததைப்போல பாவனை செய்துகொண்டிருக்கும் தலைமுறை தவிர்க்காமல் இதைப் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறேன். பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டு, உரிச்சொன்னிகண்டு, ஆசிரியநிகண்டு, கயாகரநிகண்டு, திவாரகம், மஞ்சிகன் ஐந்திணைச்சிறுநிகண்டு, போகர்நிகண்டு, சட்டமுனி நிகண்டு, தன்வந்தரி நிகண்டு, பஞ்சகாவியநிகண்டு, போகர் அகராதி, வைத்திய அகராதி, மலையகராதி, கன்னடநிகண்டு, வடமொழி நிகண்டுகள், சங்கச்செய்யுள்கள், திருக்குறள், திருக்கோவையார், தேவாரம், ஆழ்வார் பிரசுரம், சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலிய பல நூல்களையும்; உலக வழக்கையும், வேடர், குறவர், முதலோர் பேசுஞ் சொற்களையும் ஆராய்ந்தமையால் ஒவ்வோர் சொற்குள்ள இயைபு முதலியன புலப்பட்டன.

அவற்றுள் வைத்தியநூல்களை நன்கு ஆராய்ந்த பின்னரே மருதோன்றி, புலிதொடக்கி, புனுகுசட்டம், பொடுதலை, ஆடாதோடை, பங்கம்பாளை, கக்கரிக்காய், கத்தரிக்காய், சிறியாநங்கை முதலிய சொற்களின் உண்மைக்காரணமும்; பரணி, உரோகணி, விசாக முதலியவற்றின் காரணமும் புலனாயினஎன்று தன்னுடைய உழைப்பின் ஒருபகுதியை பட்டியலிடும் கார்த்திகேயனாரை எல்லாமும் கணிப்பொறியில் இருக்கிறது, எல்லாமும் கைப்பேசியில் இருக்கிறது என்று சொல்லித்திரியும் நாம் இன்னும் ஆழமாகக் கவனிக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஒவ்வொரு நூலும் வாசலுக்கு வந்தா காத்திருந்திருக்கும், கால்கடுக்க எவ்வளவு அலைந்திருப்பார்கள், பொறுமையாக எவ்வளவு காலம் காத்திருந்திருப்பார்கள் என்று நினைக்கும்போது உண்மையிலேயே அந்த உழைப்பைப் பற்றிக்கொள்ளத்தான் ஆசைகொள்கிறேன்.

மொழி ஆராய்ச்சி எதற்காக என்ற கேள்விக்கு, மொழியாராச்சியாற் பயனுண்டோவெனின் ஒவ்வோர் சொற்காரணமுமேயன்றிப் பண்டைக்காலத்துச் சரித்திர முதலியனவும் விளங்கலின் பெரிதும் பயனுண்டென்க என்கிறார் கார்த்திகேயனார்.  மொழிகுறித்துச் சிந்திக்கும் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக்கொள்வதெல்லாம், 1913 ஆம் ஆண்டிலே தமிழின் அடிப்படையில் முதன் மொழி நூலை உருவாக்கிக் கொடுத்துவிட்டார் மாகறல் கார்த்திகேயன். இன்னும் வளர்த்தெடுக்க வழிபார்ப்போம். மொழியை வளர்த்தெடுப்பது என்பது சமூகத்தை வளர்த்தெடுப்பதுதான் என்பதையும் சொல்லத்தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

மேலும் மாகறல் கார்த்திகேயனாரின் இன்றைக்கும் பொருந்துகின்ற இதயத்தைத் துளைக்கும் கோரிக்கையோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். பலவகையிலும் குன்றிய நிலையிலுள்ள தமிழை இத்தருணத்திற் காப்பதுமே தமிழிலே பிறந்து, தமிழிலே வளர்ந்து தமிழையே பேசுந் தமிழ்ப்பெருஞ் செல்வர்களுக்குத் தலையாய அறமாகின்றது. நின்கை தமிழ்நூல் எழுதுக. நின்வாய் தமிழையே பேசுக. நின்மனம் தமிழையே சிந்திக்க.

நோய்கொண்டு மெலியனாயின் மருந்துண்டு வலியனாகித் தமிழ்கற்க”.

முற்றும்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

மைத்திரிஅன்பு 24/05/2024 - 12:16 PM

வணக்கமும் வாழ்த்துகளும் தோழர். நீண்ட நாட்களுக்கு முன்பாக பகிரப்பட்ட இணைப்பு. இன்றுதான் ஓய்வான சூழலில் வாசிக்க நேர்ந்தது. மிக அவசியமான கட்டுரை. மொழிப் பொருண்மையில் அறியப்பட வேண்டிய ஆளுமையை அறிமுகப்படுத்திய கட்டுரை. 1913-இல் தமிழுக்காக எழுதிய மொழி நூலாக காஞ்சிக்கு அருகிலிருந்த மொழி ஆர்வலர் ஆய்வாளர் மாகறல் கார்த்திகேயன் வெளியிட்ட இந்நூலை, PDF வடிவில் கவனித்திருக்கிறேன். பாதுகாப்பாக சேமித்து வைத்திருக்கிறேன். ஆனால் வாசிக்க வாய்க்கவில்லை. இன்று நீங்கள் இந்நூல் குறித்தும் இந்நூல் வெளியான காலச்சூழலில் – மொழியின் அவசியம் குறித்தும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு. வாய்ப்பும் சூழலும் அமைய அன்னாரின் நூலை நானும் வாசிக்கிறேன். நான் இலக்கிய வாசிப்புகளிலேயே உழன்றுவிட்டதால், இலக்கணம், மொழி நூல் குறித்தான நூல்களின் மீது அதிக கவனம் பெற வாய்ப்பின்றி போனது. ஆனாலும் ஆய்வாளரின் கருத்துக்கும் உங்களின் தகவலுக்கும் ஏற்ப மொழியே அடிப்படை. மொழியின்றி ஓர் அணுவும் அறிவு சார்ந்து இயக்க வாய்ப்பில்லை. மொழியால்தான் எல்லாவிதமான அரசியலும் அழகியலும் ஆய்வியலும் முடிவு கண்டுள்ளது. பல்வேறு கருத்தியல்களை கட்டமைத்துள்ளது. மொழியில்லா உலகம் முழுமைப்பெற வாய்ப்பில்லை. பேச்சு மொழி என்று ஒன்று இல்லாத கற்காலச் சூழலிலும் மனிதர்கள் ஒலிக்குறிப்புகளால் தங்களின் உணர்வுப் பகிர்வுகளை மொழியுணர்வாகவே வெளிப்படுத்தியுள்ளனர். எல்லா உயிரினங்களும் இன்றும் அவ்வகையான ஒலிக்குறிப்புகளை மொழி பரிமாற்றத்துக்கான பகிர்வாக வெளிப்படுத்துவதை உணரவேண்டியுள்ளது. ஆக மொழி என்னும் வெளிப்பாட்டின் வழியே எல்லா உணர்வுகளையும் உயர்வுகளையும் மனிதன் அடையமுடியும். அத்தகைய சிறப்பு மிக்க மொழிக்கான போராட்டங்கள் காலம் காலமாக நிகழ்ந்துவருவதும் அதையே உணர்த்துவனவாக உள்ளன. அந்த மொழியின் வழியே இனியும் அடைய வேண்டியவை ஏராளம் உள்ளன. இன்று வாசித்த உங்கள் பதிவின் வழியே முதற்மொழி நூல் எழுதிய ஆளுமையை அறிந்துகொண்டதோடு – வாசிக்க வேண்டிய களங்கள் இன்னும் இன்னும் விரிந்திருப்பதை உணர முடிந்தது. மகிழ்ச்சி தோழர். நன்றியும் வணக்கங்களும்.

Reply

Leave a Comment