நெடுநல்வாடை

காட்சிகளாய் ஒரு கவிதை

“சரித்திரத்தில் புனிதமான சம்பவமாகப் போற்றப்படுவது ஒரு கவிஞனின் பிறப்புதான்” என்று சொல்கிறார் எமர்சன். கவிஞனாக இருப்பதால் எமர்சனின் இந்தக்கூற்று எப்போதும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பல்லாயிரம் வருடத் தொடர்ச்சியின் தொடர்ச்சியாக நானும் இருப்பதால், இந்தக் கூற்றை மிகையான ஒன்றாக ஒருபோதும் எண்ணியது கிடையாது. ஏனென்றால் வரலாற்றின் பக்கங்களில் அப்படி எத்தனையோ கவிஞர்களைக் கண்டுவிட்டோம் நாம்.

உலகெங்கிலுமுள்ள ஆயிரக்கணக்கான கவிஞர்களின் கவிதைகளைப் படித்துமுடித்தும் கூட, ஒருபோதும் கவிதைகள் எனக்குச் சலித்துப்போனதில்லை. என்னளவில் வாழச்சலிக்காத ஒருவனுக்குக் கவிதையும் ஒருபோதும் சலித்துப்போகாது தான்.

கவிதையென்பது வேறொன்றுமில்லை உங்களுக்கும் எனக்குமான உறவுதான் கவிதை. உங்களையும் என்னையும் பிரிந்திருக்க விடாமல் செய்யும் உன்னதம்தான் கவிதை. ஆயிரமாயிரம் வருடங்களாக இந்தப் பெருநிலத்தில் நடந்துதிரிந்த எண்ணிலடங்காக் கவிஞர்களை எண்ணிப்பார்க்கிறேன்.

எத்தனை எத்தனைக் கவிஞர்கள், எத்தனை எத்தனைக் கவிதைகள். வார்த்தைகள் மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்த அந்தக் கணங்களை நினைத்துப் பார்க்கையில் சிலிர்த்துப் போகிறேன். மானுடத் திரள்களின் ஊடாகவே வளர்ந்து வந்திருக்கிறது கவிதை.

லட்சோபலட்சம் மானுடத் திரள்கள் ஒன்றாய்ச் சேர்ந்து ஒழுங்கு செய்திருக்கிறது கவிதையை. லட்சோபலட்சம் வார்த்தைகள் ஒன்றாய்ச் சேர்ந்து ஒழுங்கு செய்திருக்கிறது மானுடத் திரளை. கொள்வதும் கொடுப்பதும் இலக்கியத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் நிறைந்திருக்கிறது தான்.

ஒரு நல்ல கலை இலக்கியமானது மனித ஆன்மாவை மேம்படச் செய்கிறது. நல்ல கலை இலக்கியத்தால் மேம்பட்ட ஆன்மாக்கள் நிறைந்த சமூகம் ஒருபோதும் பின்னோக்கிப் போவதில்லை. அதன் பாதை சிகரங்களையும், நட்சத்திரங்களையும் நோக்கியதுதான்.

உங்களிடம் கெஞ்சப் போவதில்லை நான், உரிமையோடு சொல்கிறேன். கவிதையைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள். கவிதை உங்களைப் புதுப்பிக்கும், கவிதை உங்களை மலரச்செய்யும், கவிதை உங்களை ஆற்றுப்படுத்தும், கவிதை உங்களை ஆவேசப்படுத்தும்.

நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இந்த உலகத்தின் வரலாறு கவிதைகளில் உறைந்து கிடக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதித்தாய் கவிதைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்த நிலமும் இந்த வாழ்க்கையும் வார்த்தைகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.

“உங்களுடைய கடவுள்களுக்கு முன்னமே நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்ற ஆதிவாசி மனுஷியின் குரல் ஒட்டுமொத்த உண்மையையும் போட்டுடைத்து விடவில்லையா. ஆற்றங்கரைகளிலும் அடர்காடுகளிலும் இருந்துகொண்டு, உங்களுக்கு வாழ்வையும் நாகரீகத்தையும் கொடுத்த அவர்களை மறந்து விடாதீர்கள்.

வரலாறு உங்களுக்கு மட்டும் சொந்தமானதில்லை. லட்சோபலட்சம் மனிதர்களின் ரத்தத்தாலும் சதையாலும் எழுதப்பட்ட வரலாற்றை ஒரு சின்னக்கும்பல் சுவீகரித்துக் கொள்ள நினைப்பதை, மகா சமுத்திரத்தை குடித்துத் தீர்க்கப்போன முட்டாளுடன் தான் ஒப்பிட முடியும்.

எத்தனை எத்தனை இலக்கியங்களை இந்த நிலம் பிரசவித்திருக்கிறதோ, அத்தனையையும், ஒன்றுவிடாமல் அத்தனையையும் என் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளவே ஆசையோடிருக்கிறேன்.

மழை தூறிக்கொண்டிருந்த ஒரு மார்கழி மாதத்தின் காலை வேளையில், ஒரு அசரீரியைப் போல, நெடுநல்வாடையின் சிலவற்றையாவது காட்சிப்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட்டார் குருநாதர்.

கொஞ்சநேரம் கழித்து நெடுநல்வாடை என்னைக் குளிரச்செய்து கொண்டிருக்கிறது. உண்மையாகவே சில்லிட்ட என்னுடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்கிறேன். என்னைச்சுற்றி மட்டும் பெய்யெனப் பெய்து கொண்டிருக்கிறது பெருமழை.

”மருவினிய கோல நெடுநல்வாடை” என்று புகழ்ந்து சொல்லப்படும் பத்துப்பாட்டின் ஏழாவது பாட்டாகிய நெடுநல்வாடையை, நீங்கள் கடுங்கோடையில் படித்தால் கூட, மழையையும், குளிரையும் உணராமல் வாசித்து முடிப்பது என்பது சாத்தியமில்லாதது.

சாதாரணமாக, ஒரு கவிதையில் சில காட்சிப்படிமங்களை கண்டு ரசித்திருக்கலாம். 188 வரிகளாலான நெடுநல்வாடையின் ஒவ்வொரு வரிகளுமே காட்சிப் படிமங்கள் தான்.

கைகளிலிருந்து வெளிப்பட்டதா இல்லை கண்களிலிருந்து வெளிப்பட்டதா என்று சந்தேகித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எல்லாக் கவிதைகளையும் படிக்கலாம். ஆனால் நெடுநல்வாடையைப் பார்க்கலாம். காட்சி, காட்சிதான் ஒவ்வொரு வரியும், காட்சிதான் ஒவ்வொரு வார்த்தையும்.

ஒரு கவிஞன் காலச்சக்கரத்தையே தன்னுடைய எழுத்தில் உறைய வைத்துவிட்டுப் போயிருக்கிறதைப் பாருங்களேன்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய, மனிதர்களால் பாழ்படுத்தப்படாத, தெய்வமாக வழிபாடு செய்யப்பட்ட இயற்கையையும் மழையையும் உணரச் செய்திருக்கிறார் நக்கீரனார்.

இரண்டாயிரம் வருடத்திற்கு முந்தைய நிலத்தையும், மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், தாவர சங்கமங்களையும், தலைவியையும், தலைவனையும் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் நக்கீரனார்.

கைதேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியத்தை தன்னுடைய அன்பின் வார்த்தைகளால், தன்னுடைய ஆன்மாவின் வார்த்தைகளால் இன்னுங்கூட அழகுசெய்து காட்டுகிறார்.

திறமையான கட்டிடக்கலைஞர்களின் உழைப்பையும், திறமையான தச்சர்களின் உழைப்பையும் உண்மையாகவே உணர்ந்து சொல்கிறார்.

போருக்குச் சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியை, பிரிவும் கூடவே குளிரும் வாட்டுவதைச் சொல்லிச்சொல்லி அவளுக்காக நம்மையும் கூட கலங்கச் செய்து விடுகிறார்.

முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய,

உரோகிணி நினைவனள் நோக்கி, நெடிது உயிரா

என்று திங்களோடு எப்போதும் பிரியாமல் இருக்கும் உரோகிணி நட்சத்திரத்தைப் போல நானும் என் தலைவனைப் பிரியாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று பெருமூச்சு விடும் தலைவியைப் போல, பெருமூச்சுவிடுகின்ற எல்லா உள்ளங்களையும் ஏந்திக்கொள்கிறேன்.

இப்படியாக, இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னதான புல், பூண்டு, செடி, கொடி, மலை, நதி, மனித சமூகம், மனித வாழ்க்கை, வாழ்விலிருந்த வழிபாட்டு முறைகள் எல்லாவற்றிற்குமே சாகாவரம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ஒவ்வொரு வரியிலும் மழையின் ஈரம், ஒவ்வொரு வரியிலும் ஈரத்தின் ஈரம். ஒவ்வொரு வார்த்தையிலும் மழை சொட்டிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையிலும் குளிர் நீங்காமல் இருக்கிறது.

“அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த

வந்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க”

என்று, பரந்த வயலில் முற்றிய நெற்கதிர்கள் தலைகவிழ்ந்து நிற்பதைச் சொல்கிறது ஒரு காட்சி. அதைப்போலவே அந்தப் பிரபஞ்சக் கவிஞன் நக்கீரனாரின் முன் நாமும் தலைகுனிந்து மரியாதை செய்வதும் தகுமே.

ஓ நக்கீரனாரே, இரண்டாயிரம் வருடங்கள் கழித்து நம்மைப் போலொரு வாழ்க்கைச் சூழல் வாய்க்கப்பெறாத துர்பாக்கியமான காலத்தின் எளிய கவிஞன் நம்மைத் தீண்டுவான் என்று எண்ணிப் பார்த்தீரா?

நீர் காட்டிய எல்லாக் காட்சிகளையும் பார்த்து நான் பரவசமடைந்தது உண்மைதான். ஆனபோதிலும் உள்ளூரத் துயர்கொண்டதும் கூட மறுக்க முடியாத உண்மைதான்.

நீர் வாழ்ந்த சமூக அமைப்பிலிருந்து எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டோம். பேரரசர்களும், குறுநில மன்னர்களும், நிலப்பிரபுக்களும், ஜமீன்தார்களும் வரலாற்றின் பக்கங்களுக்குள் குடியேறிவிட்டார்கள். இந்த நிகழ்காலத்தை மக்களுக்காக மக்களே ஆட்சிசெய்வதாய் நம்பச் சொல்கிறார்கள்.

மக்களாட்சி, ஜனநாயகம், சட்டம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு சாதியையும் மதத்தையும் மட்டுமே இரும்பு விளக்கில் எரியும் சுடருக்கு நெய் ஊற்றுவதை போல ஊற்றி ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். எரிந்து கொண்டிருக்கிறது.

பற்றியெரிந்து கொண்டிருக்கிறது இந்த தேசம். மதத்தால் எரிந்து கொண்டிருக்கிறது. சாதியால் எரிந்து கொண்டிருக்கிறது. துயருண்ட என் ஆன்மா எவ்வளவு தூரம் துவண்டிருக்கிறது என்பதையெல்லாம் உம்மிடம் காட்டிக்கொள்ளக் கூடாதென்றுதான் நினைத்தேன்.

ஆனபோதிலும் நக்கீரனாரே, ஒரு கவிஞனின் வலிகளையும் வேதனைகளையும் சக கவிஞனிடம் பகிர்ந்து கொள்வது எத்துனை ஆறுதலளிக்கக் கூடியதென்று உமக்குத் தெரியாதா என்ன. நீண்டநெடிய உறக்கத்திலிருந்த இந்த மானுடத்திரள், இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்ல விழிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனாலும்,

நாங்கள் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டோம் நக்கீரனாரே எல்லாவற்றையும். ஆறுகளை தொலைத்துவிட்டோம். மலைகளைத் தொலைத்துவிட்டோம். தெய்வங்களைத் தொலைத்துவிட்டோம். முக்கியமாகப் பண்பாட்டைத் தொலைத்துவிட்டோம்.

அடையாளங்கள் தேடித்தேடி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கும் அவலமான காலத்தில், மார்கழியின் கொஞ்சமான குளிரையும் கூட போராட்டக்களங்கள் சூடாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உம்மோடும் உம் வார்த்தைகளோடும் நின்று கொண்டிருக்கிறேன் நக்கீரனாரே.

சுதந்திரமான வாழ்விற்காகவும், அச்சமற்ற இருப்பிற்காகவும், மானுட விடுதலைக்காகவும் எங்கள் தலைவிகள் வீதிகளையும் சாலைகளையும் மைதானங்களையும் கடுங்கோபத்தோடும், கட்டற்ற ஆவேசத்தோடும் நிறைத்திருக்கும் நேரத்தில் தான் உம்மைக் கைக்கொண்டிருக்கிறேன் நக்கீரனாரே.

எங்கள் பிள்ளைகள் பார்ப்பதற்கு மரங்கள் இல்லை. எங்கள் பிள்ளைகள் விளையாடுவதற்குச் சோலைகள் இல்லை. எங்கள் பிள்ளைகள் துள்ளிக்குதித்துக் கையசைக்கப் பறவைக்கூட்டங்கள் இல்லை. எங்கள் பிள்ளைகள் பிடித்து விளையாடத் தட்டாம்பூச்சிகள் இல்லை.

பாதி வயல்வெளிகள் பாதி பாலைவனங்களாக மாறிக்கிடக்கின்றன. ஒட்டுமொத்த மனிதர்களின் வாழ்க்கையையும் ஒருசில மருந்துக் கம்பெனிக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகளை அழித்தும், கட்டிடங்களை வளர்த்தும், மழையைத் துரத்தியும் வளர்ச்சியடைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு உப்புச்சப்பற்ற ஒரு வாழ்க்கையில் அரைப்பிணங்களாய் அலைந்து கொண்டிருக்கிறோம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்ற செய்தியே எங்களையெல்லாம் பரவசமடையச் செய்கிற காலத்தில், நீர் சொல்லும் பொய்யா வானத்தின் அடைமழை பொழிந்து கொண்டேயிருப்பதைப் பார்க்கபார்க்க ஏக்கமாகத்தான் இருக்கிறது.

அளவிற்கதிகமான மழை, அளவிற்கதிகமான வெயில், புரண்டோடும் வெள்ளம், தாகத்திற்கு ஒரு சொட்டும் நீரில்லாத பஞ்சம் என லாபமே குறிக்கோளாய் உருக்கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ சமூகத்தின் முன்னால் இயற்கையே குழம்பிப் போய்க் கிடக்கிறது.

உண்மைதான், பிரபஞ்ச இயக்கத்தையே பேராசைக்காரர்களின் லாபவெறி தலைகீழாய் மாற்றிப்போட்டிருக்கிற கொடுங்காலத்தின் கவிஞன் நான்.

உண்மைதான், இரக்கமேயில்லாமல், இயற்கையை ஓடிஓடி வேட்டையாடி ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட மோசமான காலத்தின் கவிஞன் நான்.

ஆனபோதிலும் நக்கீரனாரே அன்பாய், அழகாய் நீர் காட்டிய மழையையும், நிலத்தையும், மனிதர்களையும், மனிதர்களின் கூட்டு வாழ்க்கையையும் என எல்லாக் காட்சிகளையும் பார்த்து முடித்த பிற்பாடு, எனக்குத் தோன்றியது இதுதான்.

எந்த ஒரு படைப்பு பகிர்ந்துகொள்ளத் தூண்டுகிறதோ அதுவே ஆகச்சிறந்ததென்று நம்புகிறேன். அந்த வகையில் ஆகச்சிறந்த படைப்பு நெடுநல்வாடை.

(குறிப்பு : 2020 ல் வெளிவந்த இப்புத்தகம், இரண்டாம் பதிப்பாக மீண்டும் வெளிவந்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )

 

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 17/02/2023 - 9:48 PM

நெடுநல்வாடையைப் படம் பிடித்துக் காட்டிய கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதையைப் படியுங்கள்.
அது சொல்லும் பண்டைய இயற்கை வளங்களைக் காணுங்கள். மகோன்னதமான இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்து வரும் இப்போதைய சமுக அமைப்பை மாற்றி அமைப்பது ஒன்றே நெடுநல்வாடை காட்டும் இணையற்ற இயற்கையைப் பாதுகாக்கும் வழியாகும்.
அதுவரை இயற்கையை அழிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்ப்போம். நம்பிக்கை விதை விதைப்போம்.

Reply

Leave a Comment