மனிதம் திறக்கும் சாவிகள்
கவிஞர் ஜோசப் ராஜா கவிதைக்குப் புதியவர் அல்ல. அவருக்கும் கவிதை புதிதல்ல. எழுதிக் கொண்டே இருப்பது எமது கடமை. ஆனால் அக்கவிதைகள் யாருக்கானவை என்பதில் கவனமாக இருப்பவர். அதனால்தான் மக்கள் கவிஞராக வாழ்கிறார் தமது கவிதைகளில்.
ஏற்கனவே அவரது ஆறு கவிதைத் தொகுப்புகளை வாசித்த அனுபவத்தில் அவரது “காத்திருக்கும் சாவிகள்” எனும் இக்கவிதைத் தொகுப்பு அதே பாதையில் மனித நேயத்தை வரித்துக் கொண்டு பயணிப்பதை உணர முடிகிறது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் இணையத்தில் அவ்வப்போது வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் மேலிடும் உணர்வுகளை விட ஒட்டுமொத்தமாக அனைத்து கவிதைகளையும் வாசிக்கும்போது கூடுதல் அர்த்த அடர்த்தியைப் பெறுகின்றன அவரது கவிதைகளும் எனது உணர்வுகளும்.
பாலஸ்தீனம் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை அதிலும் குழந்தைகள் பெண்கள் என நம் கண்களான அவர்கள் நிலையிலிருந்து நெக்குருக வடித்த கவிதைகளை அவை ஜோசப் ராஜாவின் தூரிகையிலிருந்து வரக் காரணமான பாலஸ்தீனத்திற்கே இந்நூலைச் சமர்ப்பித்திருப்பது சிறப்பு.
எழுதுவதென்றால் வெறுமனே மனதில் தோன்றுவதை எழுதுவதல்ல. மாறாக தான் எழுத முற்படு முன் அந்தக் களம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் வாசித்து அறிந்து கொண்டு எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே. எனவேதான் இவரது அனைத்து கவிதைகளும் வெற்றி பெற்றி பெற்றிருக்கின்றன.
வாசித்த அனுபவங்களுடன் பற்றி எரிந்து கொண்டிருக்கும் காஸாவில் மனதளவில் வாழ்ந்து கொண்டு கவிதைகளை வடித்துள்ளார் கவிஞர். தான் யாருக்காக எழுதுகிறோமோ அத்தகைய பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் குழந்தைகளாகவே மாறி வெளிப்படுத்தும் இவரது கவிதைகள் இவரது வேண்டுகோளுக்கிணங்க காற்றைப் போல கடத்தப்பட வேண்டியவை. அழகிய முறையில் ஜோசப் ராஜாவின் கவிதைகளைத் தொடர்ந்து அச்சில் கொண்டுவரும் தமிழ் அலையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பதிப்புரையில் இசாக் கூறும்போது, அவரது எதிர்பார்ப்பாக சில மனித இதயங்களையாவது “காத்திருக்கும் சாவிகள்” திறக்கும் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. அது கவிதையின் வெற்றி. ஆம். கவிஞர் ஜோசப் ராஜாவின் இக்கவிதைகள் வெற்றி பெற்று மனித இதயங்களைத் திறந்து மனிதத்தைப் பரப்பும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அனைத்துக் கவிதைகளையும் குறிப்பிடுவது கூடாது. வாசித்துணர வேண்டும்.
சான்றுகளாக சில கவிதைகள்:
“ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும்
பூக்கத் தொடங்குகின்றன புதுக் கோலங்கள்
தேநீர்க் கோப்பைகளிலிருந்து
எழுகின்ற புகை
தூக்கத்தின் ரேகைகளை
அழித்துக் கொண்டிருக்கிறது
தூக்கம் கலைந்த
குழந்தைகளின் முகங்கள்
குட்டிச் சூரியனாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன
ஒவ்வொரு வீட்டின்
சமையலறையில் இருந்தும்
ஓடோடி வருகின்றன
ஒவ்வொரு விதமான வாசனைகள்
தூங்கி எழுந்த மகள்
அப்பா என்றழைத்தபடி
இறுகப் பற்றிக் கொள்கிறாள்
ஒரேயொரு விடியல் தான்
எத்தனை எத்தனை காட்சிகள்
எத்தனை எத்தனை அனுபவங்கள்
இந்த அனுபவங்கள்
எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதுதான்
இந்தக் காட்சிகள்
எல்லோரும் பார்க்கக் கூடியதுதான்”
என்று கூறும் கவிஞர் ஜோசப் ராஜா
“நிம்மதியான இந்த வாழ்க்கையிலிருந்து
நிலைகுலைந்திருக்கும் அந்த வாழ்க்கையை
நினைத்துப் பார்க்கிறேன்”
என்று அவர் அடுக்கும் அவலங்களை எழுதவே கை நடுங்குகிறது. இறுதியாக திடமாய் நம்புகிறேன் என்கிற கவிஞர்,
“நீங்களும் நானும்
அனுபவித்துக் கொண்டிருக்கும்
நிம்மதியான
இந்த விடியலின் சுகத்தை
காஸாவின் மக்களும்
அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்”
என்று அவரது வேட்கையை வெளிப்படுத்துகிறார்.
காசாவின் குழந்தைகள் சொல்ல விரும்புவதாக
“பெரியவர்களாயிருப்பது என்பது
பெரியவர்களாக மட்டுமே இருப்பதல்ல”
எனின் அவர்களின் போராட்டங்களுக்குத் துணை நிற்பதே.
யுத்தக் காட்சிகளும் மகளின் கேள்வியும் எனும் தலைப்பிட்ட கவிதையில் படங்களுடன் யுத்தக் காட்சிகளை நம் கண் முன் நிறுத்துகிறார் கவிஞர்.
வியட்நாம் சிறுமியின் புகைப்படமும் முள்ளிவாய்க்காலில் குண்டடி பட்டு சிதறிக் கிடந்த பிள்ளைகளின் புகைப்படமும் காஸாவின் பள்ளி, அகதிகள் முகாம் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்து அழிக்கும் இஸ்ரேலின் அட்டூழியங்களைப் பார்த்தும் கேட்டும் கூட அசைவற்ற ஜடங்களாக இருந்துவிட முடியுமா என்ன? எனவேதான்,
“ஏவுகணைகளுக்கும் எறிகுண்டுகளுக்கும்
தப்பித்த குழந்தைகள்
நாளை கேள்விகள் கேட்பார்கள்
என்ன பதில் சொல்வீர்கள்?”
எனக் கேள்வி எழுப்புகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
பாலஸ்தீனப் போர் குறித்து ஒரு நூலே கவிதை வடிவில் வந்திருக்கிறது எனின்,
“எதற்காகப் பாலஸ்தீனத்தைப் பற்றி மட்டும்
உலகெங்கும் இருந்தும்
இத்தனை கவிதைகள்
புறப்பட்டு வருகின்றன”
எனக்கேட்டு,
அதற்கான பதிலாக
“பாலஸ்தீனம் போராடிக் கொண்டே இருக்கிறது
“அதனால்தான் கவிதைகளும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன” என்கிறார்.
துனீசியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜபீயர்,
“இந்த வெற்றியால்
நான் மகிழ்ச்சியாக இல்லை
இந்த உலகத்தின் நிலைமைகள்
என்னை
மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை
ஒவ்வொரு நாளும்
படுகொலை செய்யப்படும்
பாலஸ்தீனக் குழந்தைகளைப் பார்ப்பதற்கு
உண்மையிலேயே கடினமாக இருக்கிறது
இரவுகள் தூக்கமில்லாமல் இருக்கிறது
இதயம் உடைந்து நொறுங்குகிறது”
என்று சொல்லிவிட்டு
உண்மையாகவே உடைந்து அழுகிறாள்.”
பேச முடியாமல் அழுத
ஒன்ஸ் ஜபீயரின் கண்ணீர் கவிதையை வாசிப்பவர்களை உலுக்கி எடுக்கும்போது நம்மையும் ஏதேனும் செய்யத் தூண்டும் தானே. சொல்லாக செயலாக இயங்கினால் தானே மனிதர்கள். குறைந்தபட்சம் மனதளவில் உணரத் தலைப்பட்டாலே ஒரே வகையிலான வெற்றிதானே.
காஸாவின் நெடுந்துயரங்களுக்கு மூல காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுதந்திர தேவி சிலை குறித்த கவிதையில்,
“சுதந்திரத்தின் தேவையைச்
சொல்லிக் கொடுப்பதற்காகவே
உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
சுதந்திர தேவியின் சிலை”
எனக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமானதே.
ஐ.நா.வின் பேச்சையோ தீர்மானத்தையோ கிஞ்சிற்றும் கேட்காத உலக நாட்டாண்மையாகச் செயல்படும் அமெரிக்காவுக்கு அக்கால சிம்ம சொப்பனமாக சோவியத் ரஷ்யா இருந்தது. இப்போதோ அத்தகைய சோஷலிச முகாம் ஒன்று இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா புரியும் போர் வெறிச் செயல் வெறுக்கத் தக்கது.
முக்கால் நூற்றாண்டுக்காலமாக சாவிகளுடன் காத்திருக்கும் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கையை,
“அந்தச் சாவிகள்
அவர்களுடைய சொந்த வீட்டை மட்டுமல்ல
இந்த உலகத்தின்
ஒவ்வொரு இதயங்களையும்
திறக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் கவிஞர் ஜோசப் ராஜா.
இந்த நம்பிக்கை வீண்போகாது. இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயமும் திறக்கும் என்பது நிதர்சனம். வாங்கிப் படிப்பதும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கவிதைகளைக் கடத்துவதும் காலத்தின் கட்டாயம்.
.. பெரணமல்லூர் சேகரன்