நாய்ச் சண்டை

சென்னையில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெருநாய்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எந்தத் தெருவிற்குச் சென்றாலும் குறைந்தது பத்து நாய்களையாவது பார்க்கமுடியும். ஒருவேளை இரவு தாமதமாகி விட்டால் நாய்களிடமிருந்து தப்பித்து, பத்திரமாக வீடுபோய்ச் சேருவதென்பது சவாலான விஷயம்தான். பின்னிரவில் இருபது முப்பது நாய்கள் துரத்த, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இரண்டு கால்களையும் சிறகுகளைப் போலத் தூக்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் பறந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். நாய்கள் நிறைந்திருக்கும் தெருவில் நிம்மதியான தூக்கம் என்பது கொஞ்சம் தொலைவுதான். அதுவும் இந்த நாய்களுக்கிடையே இடத்தகறாறு இரவில்தானா வரவேண்டும்? ஐம்பது நாய்கள் ஒரேநேரத்தில் குலைத்தால் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள்.

இன்று மாலை வீட்டிற்கு வரும்போது தெருமுனையில் ஒரேகூட்டம். என்ன ஏதென்று விசாரிக்கலாம் என்று பார்த்தால் மனிதர்கள் யாருமில்லை. எங்கள் தெருவில் வசித்துக் கொண்டிருக்கின்ற பத்துக்கும் மேற்பட்ட நாய்கள், பக்கத்து தெருவில் வசித்துக் கொண்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட நாய்களோடு வெறித்தனமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. சண்டையென்றால் பெரிதாக யோசித்துக் கொள்ளாதீர்கள், வெறும் வாய்ச் சண்டைதான், ஆனால் ஆக்ரோஷமாக! ஒவ்வொரு நாயும் அடிவயிற்றிலிருந்து குலைத்துக் கொண்டிருக்கின்றன. கழுத்து நரம்புகள் புடைத்துக் கொண்டிருக்க, மொத்தப் பற்களும் வெளியே தெரிய, பயங்கரமாகக் குலைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த நாய்களுக்கு நடுவில் கிடக்கின்றது ஒரு பொருள். அதற்காகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன இந்த யுத்தம். இப்போதைக்கு முடிகிற மாதிரித் தெரியவில்லை என்பதால் மெல்லப் புறப்பட்டு வீடுவந்து சேர்ந்தேன்.

இந்த நாய்களுக்கு அப்படி என்ன கோபம்? இந்த நாய்களுக்குள் அப்படி என்ன பிரச்சனை என்ற எண்ணங்கள் மூளைக்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த வாய்ச்சண்டை, இல்லை நாய்ச்சண்டை எனக்கு வேறொரு காட்சியை ஞாபகப்படுத்தியது. ஆம், அமெரிக்க அதிபர் டிரம்பும், துணை அதிபர் வான்ஸும் கூட்டாகச் சேர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைக் குதறிய காட்சிதான் அது. ஒட்டுமொத்த அமெரிக்காவும் வெட்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஒட்டுமொத்த உக்ரைனும் கோபப்பட வேண்டிய ஒரு சம்பவம் என்பதிலும் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், அந்த அசிங்கத்தை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த உலகம். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனைத் தூண்டிவிட்டு, ஆயுதம் கொடுத்து, பணம் கொடுத்து யுத்தத்தைப் பின்னிருந்த நடத்திய அமெரிக்கா இன்று வட்டியையும் முதலையும் மட்டுமல்ல, உக்ரைனையே கேட்டுக் கொண்டிருக்கிறது.

பூட்டிய அறைகளுக்குள் அதிபர்களுக்கு இடையில் ஆயிரம் நடந்திருக்கலாம். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் ஊடகங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் முன்னால் நடந்த அசிங்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது. யுத்தம் என்ற பெயரில் ஒட்டுமொத்த உக்ரைனையும் இறுகப் பூட்டிவிட்டு, அதிபர் பதவியில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜெலன்ஸ்கி, அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளில் ஆதவுரவுடன் ரஷ்யாவை வீழ்த்திவிடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அதிபர் டிரம்போ நம்மூரில் இருக்கும் வட்டிக் கடைக்காரனைப்போல நேரடியாகப் பேசுகிறார். நாங்கள் இவ்வளவு பணம் கொடுத்திருக்கிறோம், போரிலும் உங்களால் வெற்றிபெற முடியவில்லை, அதைப்பற்றி எங்களுக்குக் கவலையுமில்லை, ஆனால், உக்ரைனின் நிலமெங்கும் புதைந்துகிடக்கும் டைட்டேனியத்தை, லித்தியத்தை, கிராஃபைட்டை, நிக்கல் போன்ற கனிமவளங்களையெல்லாம் அள்ளித்திங்க, எங்கள் பெருத்த வயிற்றுக்குள் நிறைத்துக்கொள்ள அனுமதி கொடு, கையெழுத்துப்போடு என்று வெளிப்படையாகவே கேட்கிறார்.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நாய்கள் தேவையில்லாமல் சண்டை போடுவதில்லை. நாய்கள் தேவையில்லாமல் குலைத்துக் கொண்டே இருப்பதுமில்லை. அப்படியென்றால் தோழர்களே, இந்த யுத்தம் எதற்காக? லட்சோபலட்சம் மக்கள் அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டார்களே! அப்படியென்றால் தோழர்களே, இந்த யுத்தம் யாருக்காக? ஆயிரமாயிரம் மனிதர்கள் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டார்களே! பார்த்துப்பார்த்துக் கட்டியெழுப்பிய வீடுகள் எல்லாம் ஒரு அணுகுண்டுத் தாக்குதலில் தரைமட்டமாகிப் போனதே! எல்லாமும் எல்லாமும் இந்த அதிபர்களும், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் முதலாளிகளும் தின்று செரிக்கத்தானா?

அப்படியென்றால் ஆப்கானில் நடந்த யுத்தம் இதற்காகத்தானா? ஈராக்கில் நடந்த யுத்தம் இதற்காகத்தான? லிபியாவில் நடந்த யுத்தம் இதற்காகத்தானா? இந்த வெட்கமில்லாத அதிபர்கள் அகதிகளுக்காக ஏதாவது பேசியிருக்கிறார்களா? மக்களுக்காக ஏதாவது பேசியிருக்கிறார்களா? குழந்தைகளுக்காக ஏதாவது பேசியிருக்கிறார்களா? இல்லை இப்போதும் இல்லை. எப்போதும் இல்லை. யுத்தம் ஏதோ யுக்ரைனில் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று லேசாக நினைத்துவிடாதீர்கள். மணிப்பூர் எரிந்துகொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது இந்தியா. வேறு எங்கு நெருப்பு மூட்டலாம் என்று வெறுப்பின் கைகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. திருப்பரங்குன்றம் வரைக்கும் ஒரு முயற்சி செய்து பார்க்கின்றன. இந்தப் பயங்கரவாதிகளை, இந்தத் தேசவிரோதிகளை இப்போது புரிந்துகொள்ள வில்லையென்றால் நிரந்தரமாக உங்களுக்கு நரகத்தைத்தான் பரிசளிப்பார்கள். வியாபார ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்குச் சாதகமாக, அவர்களுக்கு இலாபம் நிறைந்ததாக கையெழுத்தாகிவிட்டால், நாளை காலை யுத்தம் முடித்து வைக்கப்படும். அப்படியென்றால் இத்தனை அலைக்கழிப்புகளுக்கும், இவ்வளவு மானுடத் துயரங்களுக்கும் யார் பதில் சொல்வது?

வெறுப்பை விதைப்பவர்கள் இரகசியமாக யாருக்கும் தெரியாமல் வேலைசெய்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. பாலஸ்தீனக் குழந்தைகளைப் பார்த்து இருளின் குழந்தைகள் என்று சொன்னது, இஸ்ரேலின் வெறுப்பால் நிறைந்த வாயொன்று. இந்தியாவில் விதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வெறுப்பைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை, உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. முதலாளிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு பணத்தை வைத்தே அதிகாரத்தைப் பிடிக்கிறார்கள். அதிகாரத்தை வைத்துக்கொண்டே பணத்தைப் பெருக்குகிறார்கள். எலான் மஸ்க், அம்பானி, அதானி என ஒவ்வொரு முதலாளிகளும் ஆட்சியாளர்களோடு இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியாளர்களும் முதலாளிகளோடு இருக்கிறார்கள். மக்களுக்காக யார் இருக்கிறார்கள். மக்கள் யாருக்காக உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் யாருக்காகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடைதேடத் தொடங்கினால், அதுதான் அதுதான் முதலாளித்துவத்திற்கான முடிவாக இருக்கும். வெறுப்புப் பேச்சுகள் இல்லாத, யுத்தங்கள் இல்லாத, கலவரங்கள் இல்லாத நிம்மதியான வாழ்கைக்கான தொடக்கமாக இருக்கும்.

ஓ! இன்னும் அடங்கவில்லை இந்த நாய்கள். ஒரே குரலில், உச்சஸ்தாயியில் மீண்டும் குரைக்கத் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு தேசங்களின் வளங்களையும் சுரண்டுவதற்காக இரக்கமேயில்லாமல் நடத்தப்படுகின்ற போர்கள் உலகத்தின் அமைதியைக் குலைப்பதுபோல, இந்த நாய்ச் சண்டையானது இரவின் அமைதியை மொத்தமாகக் குலைத்துக் கொண்டிருக்கின்றன. எங்கே அந்தக் கல்?

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment