நவீனத்துவம் என்பது இந்த மானுட வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே ஏதாவது ஒரு பொருளில், ஏதாவது ஒரு வடிவத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். சிக்கிமுக்கிக் கற்களில் நெருப்பை உண்டாக்கிய ஆதிமனிதனின் கைகளால் தொடங்கிவைக்கப்பட்டிருக்கலாம். தனித்தனியாக இருந்த அவர்கள் ஆற்றங்கரையோரமாக நாகரீகங்களை உருவாக்கி ஒன்றுசேர்ந்து கொண்டதும், வேட்டையாடியதும், விலங்குகளைப் பழக்கியதும், இருப்பிடங்களை உருவாக்கியதும், ஒன்றாக உழைத்ததும், விளைந்ததைச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டதுமான அந்த ஆதிப்பொதுவுடமைச் சமூகமானது, சமூக உறவின் அடிப்படையில் இன்றும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறதென்றால் எதற்காக?
அந்தச் சமூகத்தில் நிறைந்திருந்த கூட்டுணர்விற்காகவும், அந்தச் சமூகங்கள் இறுகப் பற்றியிருந்த கூட்டு வாழ்க்கைக்காகவும் அல்லவா! உற்பத்தி பெருகப்பெருக, வேலைப்பிரிவினை வளரவளர, வர்க்க வேறுபாடுகள் கூர்மையடைந்து அந்தப் பழைய பொதுவுடமைச் சமூகம் பண்ணைகளில் அடிமையாய், நிலப்பிரபுக்களின் காலடியில் புழுதியாய் நசிந்துபோன வரலாற்றை நவீனத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. நவீனம் என்பது வெறும் சொல்லல்ல. தொடர் இயக்கத்தில் ஒரு பொருள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாறுவதைப்போல, இன்னும் சொல்லப்போனால் ஒன்றை அழித்து இன்னொன்று உருவாவதைப் போல, சமூக இயக்கத்தில் தம்மை அழுத்துகின்ற ஓர் அமைப்பை எதிர்க்கத் துணிகின்ற எண்ணமே நவீனத்துவம். தங்களுக்கு எதிரான, தாங்கள் விரும்பவே விரும்பாத அமைப்பை எதிர்ப்பதற்காக ஒன்று பத்து நூறாய்க் கைகோர்க்கும் அந்த அணிச்சேர்க்கையே நவீனத்துவம்.
சமூக முரண்பாடுகளிலிருந்தும், சமூக மாற்றங்களிலிருந்தும் வெளிப்படும் கலைஇலக்கியத்திலும், கலைவடிவங்களிலும் பெருந்தாக்கத்தைச் செலுத்தியது நவீனத்துவம். பதினைந்தாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறப்பெடுத்த நவீனத்துவமானது, ஆங்கிலேயர்களின் காலனி ஆசைகளின் வழியாகவும், ஐரோப்பியர்களின் ஆதிக்க எண்ணங்களின் வழியாகவும் கிட்டத்தட்ட உலகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரதிபலிக்கத் தொடங்கின. உதாரணமாகப் பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கித் தமிழ் நாடகங்களில் ஷேக்ஸ்பியரின் தாக்கமில்லாத ஒன்றைச் சொல்லிவிடுவது சிரமமானதுதான். நாடகங்களுக்கு மட்டுமல்ல இந்தத் தாக்கம் கவிதைகளிலும், உரைநடைகளிலும், நாவல்களிலும், ஏன் திரைப்படங்களிலும் கூட எதிரொலிக்கத்தான் செய்தது.
ஆச்சரியமூட்டக் கூடியதும், கேள்விக்குள்ளாக்கக் கூடியதுமான ஒன்றைச் சொல்லவேண்டுமென்றால், நவீனத்துவமானது, இங்கிலாந்தின் பூர்ஷீவாக்களின் விடுதலையைப் பிரதிபலித்த நவீனத்துவ நாடகாசிரியரும் கவிஞருமான. ஷேக்ஸ்பியரிடமிருந்து, அடிமை இந்தியாவின் விடுதலை உணர்வைத் தன்னுடையக் கவிதைகளின் மூலமாகத் தட்டியெழுப்பிய இந்தத் தேசத்தின் நவீனத்துவக் கவிஞர் பாரதியிடம் வருவதற்குத் தோராயமாக ஐந்நூறு வருடங்களைக் கடக்க வேண்டியிருந்திருக்கிறது.
மேற்கு நாடுகளில் முதலாளித்துவம் அதாவது நவீனத்துவம் தோன்றியது. இந்தியாவிற்கோ அது பத்தாம்பாதியாக, அவர்களுக்கு உதவும் வகையில், அவர்களைச் சார்ந்திருக்கும் வகையில் நிறுவப்பட்ட காலனியப் பொருளாதாரத்தில் சிக்கிச் சீரழிந்து அரைகுறையாய் வந்து சேர்ந்தது. முழுமையான சுதந்திரமுமல்லாமல், முழுமையான அடிமைத்தனமுமில்லாமல் கைமாற்றப்பட்ட அதிகாரத்தின் அவலங்களைச் சமூகத்திலும், சமூகத்தின் உற்பத்திப் பொருட்களான கலை, இலக்கியம், விஞ்ஞானம், பொருளாதாரம் என எல்லாவற்றிலும் பார்க்க முடிகிறது
நவீனம் என்பது வேறொன்றுமில்லை மாற்றம் தான். மாற்றத்திற்கான தேவை அவசரமாக இருக்கின்ற காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம். நவீனம் என்பது ஒருவகையில் உறக்கம் கலைவது தான். நவீனம் என்பது ஒருவகையில் எழுந்து நிற்பதுதான். நவீனம் என்பது ஒருவகையில் கண்களைத் திறந்து பார்ப்பதுதான். பாருங்கள், நவீனம் என்பது ஒருவகையில் காதுகொடுத்துக் கேட்பதுதான். நவீனம் என்பது ஒருவகையில் வாய்திறந்து பேசுவதுதான். பேசுங்கள், லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கும் இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக, உறவுகளை மறைக்கும் முதலாளித்துவச் சந்தைக்கு எதிராக, போர்களை மட்டுமே விரும்பும் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிராக, ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்துவைக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு எதிராகப் பேசத் தொடங்குவதுதான் இங்கே நவீனத்துவத்தின் தொடக்கமாக இருக்கப் போகிறது.
அச்சப்படாதிருங்கள் என்றுசொல்ல ஒருவனும் இல்லாத இந்தச் சமூகமைப்பை இன்னும் எத்தனை காலத்திற்குக் கட்டியழுது கொண்டிருக்கப் போகிறீர்கள். அச்சத்தை விதைத்துவிட்டு அறுவடை செய்து கொண்டிருப்பவர்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள்? உங்கள் கண்களுக்கு முன்னாலே லாபம் வலைவலையாக வாரிச்சுருட்டப்படுவதை ஆசியப் பொறுமையோடுதான் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா? பாருங்கள், உலகம் துயரத்தில் சிக்கித் துவண்டு கொண்டிருக்கிறது. மனிதர்களாக நாம் மீண்டெழ வேண்டிய தேவையிருக்கிறது.
நவீனம் என்பது வெறும் சொல்லல்ல, தன்னுணர்வுதான். எல்லாவற்றையும் விரிந்த பொருளில் புரிந்துகொள்ளக் கூடியதுதான். அவசியம் எதுவோ அதுவே நவீனம். ஓவ்வொருவரும் புயலாகப் புறப்படுவதும், ஒவ்வொருவரும் சூறாவளியாகப் பொங்கி எழுவதும், ஒவ்வொருவரும் சூரியனைப் போல ஒளி சிந்துவதும் நவீனம்தான். இறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால் அமைப்பாய்த் திரள்வதும், ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் அதிகாரத்தை அடியோடு தூக்கியெறிவதும், தலைகீழாகப் புரட்டிப்போடுவதுமே நவீனமாகும். ஆம் நண்பர்களே, நீங்கள் சொல்ல வருவது சரிதான்,
“நவீனம் என்பது புரட்சிதான்
ஒவ்வொரு புரட்சியும் நவீனம்தான்.”
ஜோசப் ராஜா
1 comment
“நவீனம்” என்பது ஏதோ புரியாத புதிர் அல்ல. “மாற்றம் ஒன்றே மாறாதது” என்னும் தத்துவத்தின் அடிப்படையில் மாறுவதுதான் நவீனம். சிந்திப்பதில், செயல்படுவதில் என எல்லாவற்றிலும் உழைக்கும் மக்களின் பால் நிற்பதே.
எளிமையாக உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ள கவிஞர் ஜோசப் ராஜாவின் படைப்பைப் படியுங்கள். பகிருங்கள்.