நன்றி தோழர்களே!

காத்திருக்கும் சாவிகள் புத்தக வெளியீட்டைத் திட்டமிட்ட போதே, கச்சிதமாக நடத்திவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம், தோழர் இசாக்கும், தோழர் செல்வாவும், நானும். அதன்படி கச்சிதமாக நடந்து முடிந்தது. காலை பத்து மணிக்குத் திட்டமிட்டிருந்த நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு மாற்றப்பட்டது. மாலையும்கூட ஒன்றரை மணிநேரம் தாமதமாகத்தான் நிகழ்வு தொடங்கியது. ஆனாலும் அவ்வளவு நேரமும் பொறுமை காத்திருந்து, புத்தக வெளியீட்டு விழாவை வெற்றிகரமாக மாற்றியதில் என் அன்புத் தோழர்களே உங்களுக்குத்தான் பெரும் பங்கிருக்கிறது. எப்போதும் நான் சொல்கிறதைப்போல நீங்கள்தான் என்னுடைய பெரும்பலம்.

என்னுடைய குருநாதர், எங்கள் பேராசிரியர் தலைமையில் இந்த விழா நடக்க வேண்டுமென்று விரும்பினேன். மற்றவர்கள் பேசட்டுமென்று, முதலில் அவர் சம்மதிக்கவில்லை. மீண்டும் கேட்டேன், எனக்காகவும், என்னுடைய கவிதைகளுக்காகவும் ஒத்துக்கொண்டார். என்னுடைய கவிதைகளை எப்போதும் மாறாத வாஞ்சையோடு அணைத்துக் கொள்பவர். அவர் கொடுக்கிற நம்பிக்கைதான் என்னை உற்சாகமாக எழுதத் தூண்டுகிறது என்பது, மறுக்கமுடியாத உண்மை. ஓர் உதாரணத்தைச் சொல்லவேண்டுமென்றால், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினா கடற்கரையில் மாபெரும் போராட்டம் நடந்ததை அறிந்திருப்பீர்கள். அங்குசென்று பார்த்துவிட்டு என்னைச் சந்தித்தார். போராட்டத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கவிதையாக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்தப் பயிற்சிதான் பாலஸ்தீனம்வரை பயன்பட்டிருக்கிறது. அனுபவத்திலிருந்து உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டுமென்றால், ஒருவன் குருவைக் கண்டடைவது மிக முக்கியமானது. நான் கண்டுகொண்டேன்.

இந்த நூலை வெளியிடத் தோழர். திருமாவளவன் அவர்கள்தான் பொருத்தமானவர் என்று முடிவுசெய்தபோது, எல்லோரும் அம்முடிவைச் சரியென்று ஒத்துக்கொண்டார்கள். மேடையில் அவர் பேசிய உரை எல்லோருடைய நம்பிக்கையை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்று சொன்னால், அது மிகையாக இருக்காது. கவிதையை எப்படி அணுகவேண்டுமோ அப்படி அணுகினார். கவிதைக்குள் இருக்கும் அரசியலை எப்படி விளக்கவேண்டுமோ, அப்படி விளக்கினார். பேரன்பின் வடிவாக அந்த மேடையை அவர் அலங்கரித்ததை இன்னும் எத்தனை காலமானாலும் மகிழ்ச்சியாக நினைவுகொள்வேன். ஒருவாரம் கடந்துவிட்டாலும், தலைவர், தோழர். திருமாவளவன் அவர்களின் பேச்சை இன்றுவரையிலும் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்.

என்னுடைய அண்ணன் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் அவர்களின் வருகையும், கவிதைகளைப் பற்றிய அவரின் ஆழ்ந்த பார்வையும் அரங்கில் இருந்த எல்லோரையும் வியக்கச் செய்தது என்பது எளிமையான உண்மை. தவிர்க்கமுடியாத வேலைகளைத் தவிர்த்துவிட்டு, எனக்காகவும், கவிதைகளுக்காகவும் வந்திருந்தார். நிகழ்வு முடிந்து இரவு தாமதமாக வீட்டிற்குச் சென்றவர், அதிகாலையிலேயே அற்புதமான கட்டுரையை எழுதி அனுப்பினார். ஒவ்வொரு கலைஞனும் கவனிக்க வேண்டிய, பின்பற்ற வேண்டிய கலை ஒழுக்கமும், கலை நேர்மையும் அவரிடத்தில் நிறையவே இருக்கிறது என்பதை, நான் சொல்லத் தேவையில்லை. அவருடைய படைப்புகளின் வழி இந்த உலகம் அறியும். அவருடைய அன்பின் கரங்களால் என்னை ஏந்திக்கொண்டது வாழ்வு முழுவதும் மறக்கமுடியாதது.

சேது பாஸ்கரா கல்விக் குழுமங்களின் தலைவர் அண்ணன் சேதுகுமணன் அவர்களைக் கடைசி நேரத்தில்தான் அழைத்தோம். அன்பிற்காக மட்டுமே, குறைந்த நேரத்திலும் கவிதைகளை முழுமையாக வாசித்துவிட்டு வந்திருந்தார். அவர் பாலஸ்தீன நிலத்தைப் பலமுறை பார்த்துவிட்டு வந்தவர். அந்த மக்களின் அன்பை சொல்லிக்கொண்டே இருப்பார். போரின் பெயரால் அன்புமிகுந்த அந்த மக்கள் படும் பாடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

என்னுடைய அன்புத்தோழர் ஜி.செல்வா இந்தக் கவிதைகளை வாஞ்சையோடு அங்கும் இங்கும் சுமந்து செல்கிறவர். நிகழ்ச்சிக்கான வேலைகளை தோழர். இசாக்கும், நானும், தோழர் செல்வாவுமே முடிவுசெய்தோம். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் செல்வா என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தனை பரபரப்புகளுக்கு மத்தியிலும் எல்லா வேலைகளிலும் பங்கெடுத்துக் கொண்டார். ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நிகழ்ச்சி காலையிலிருந்து மாலை மாற்ற வேண்டியிருந்தது. அதே அரங்கில் மாலை மாற்றவேண்டுமென்றால், நேராக மாநகராட்சி அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. நான் போவதற்குள் சில தோழர்களிடம் பேசி வேலைகளை முடித்து வைத்திருந்தார். அதிகபட்சம் பத்துநிமிடத்தில், அதே அரங்கில் மாலை நிகழ்வாக மாற்றிக்கொண்டு திரும்பிவந்தேன். எளிய மக்களின் நலன்களுக்கான சதா எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் தோழர் ஜி.செல்வா இடதுசாரி அரசியலை இன்னும் வலுவாக எடுத்துச்செல்வதில் முக்கிய விசையாக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

தோழர் இசாக், ஆம் என்னுடைய எல்லா புத்தகங்களையும் தமிழ் அலை மூலமாக அவர்தான் வெளியிட்டிருக்கிறார். தலைவர், தோழர். திருமாவளவன் அவர்கள் பேசும்போது, தோழர் இசாக்கிற்கும் எனக்குமான பிணைப்பைப் புரிந்து வெளிப்படுத்தினார். இன்று தோழர் என்பதையும் தாண்டி என்னுடைய குடும்ப உறவு. தலைவரை அழைத்து கச்சிதமாக நடத்திக் காட்டிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். நடத்திக் காட்டவும் செய்தார். சொல் அல்ல, செயல்தான் முக்கியம். இசாக் அவர்களை நான் செயலிலிருந்தே நெருங்கிச் செல்கிறேன். நானும் செயல்படுகிறவன் என்பதால்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தோழர்கள் வஸந்த், செளந்தர் மற்றும் விஜய் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் இருபதுக்கும் மேற்பட்ட ஓவியர்களின் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதிகபட்சம் மூன்றுநாட்களில் போரின் வலிகளைச் சொல்லும் முக்கியமான அந்த ஓவியங்களை வரைந்திருந்தார்கள் ஓவியர்கள். பார்வையாளர்கள் எல்லோரும் பாராட்டினார்கள் ஓவியங்களை. தோழர். திருமாவளவன் அவர்களும் இந்த ஓவியங்களைப் புத்தகமாகக் கொண்டுவாருங்கள், ஓவியர்களைச் சந்திக்க நான் வருகிறேன் என்று வாஞ்சையோடு சொல்லிச் சென்றார். அத்தனை ஓவியர்களையும் அணைத்துக் கொள்கிறேன்.

நிகழ்ச்சிக்குரிய முக்கியமான வேலைகளை இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் என் அன்புத் தோழர்கள் விடிவெள்ளியும், பிரகாஷ் அவர்களும் பகிர்ந்து கொண்டார்கள். சீக்கிரமாக உங்களை இயக்குநராகப் பார்க்க விரும்புகிறேன் தோழர்களே!

பெரிய அரங்கம், ஆட்கள் வருவார்களா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்பினார்கள். நான் நம்பினேன். அரங்கம் நிறைய ஆட்கள் வந்தார்கள். பெரிய நிகழ்ச்சி, செலவுகள் அதிகமாக இருக்குமே என்று ஆதங்கப்பட்டார்கள் சிலர், அப்படியெல்லாம் என்னை தனியே விட்டுவிட மாட்டார்கள் என் தோழர்கள் என்று சொன்னேன். செலவுகளை ஆளுக்குக் கொஞ்சமாகப் பகிர்ந்து கொண்டார்கள். நேரில் வந்தவர்கள் மட்டுமல்லாமல், நேரலையில் பார்த்தவர்களும், பதிவுசெய்யப்பட்ட காணொளிகளைப் பார்த்தவர்களும், நிகழ்ச்சி கச்சிதமாக இருந்தது என்று சொன்னார்கள். அத்தனை வாழ்த்துகளும் நம் எல்லோருக்குமானது தோழர்களே! அத்தனை அங்கீகாரங்களும் நம் எல்லோருக்கும்மானது தோழர்களே! நீங்கள் இல்லையென்றால் நான் யார்? என் கவிதைகளை அன்பின் கரங்களால் சுமந்து சென்றுகொண்டிருக்கும் நீங்கள் இருக்கும்வரையிலும் கவிதை நிற்காது. இடியாய், மழையாய், தென்றலாய் கவிதைகள் இன்னும் இன்னும் பிறந்துகொண்டே இருக்கும். மார்க்சியம் சமூக மாற்றத்தின் திறவுகோல் என்பதில் இன்னும் அதிகமாக நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று சொன்னார் தோழர் ஒருவர். நம்புவோம். நடைபோடுவோம்.

நன்றி தோழர்களே!

ஜோசப் ராஜா

படம் 1 :  கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைத் தோழர். திருமாவளவன் அவர்கள் பார்வையிட்டபோது.

2. நிகழ்ச்சியின் முழுமையான காணொளிப் பதிவு கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.

Related Articles

Leave a Comment