நடுநிலைச் சாத்தான்கள்

இது செய்திகளின் காலம். அதிலும் குறிப்பாகப் பொய்ச்செய்திகளின் காலம். இன்னும் திருத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், நடுநிலைமை என்ற பெயரில் பொய்ச்செய்திகள் புற்றீசல்களைப் போல புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்ற காலம். வரலாறு மற்றும் வரலாற்று உண்மைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பில்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் எல்லோருமே கவனத்தோடு கண்டுகொள்ள வேண்டிய காலம்.

கைப்பேசிகள் பரவலாகச் சந்தைப்படுத்தப்பட்ட போது உலகமே கைகளுக்குள் என்று எல்லா மக்களையும் மகிழ்ந்திருக்கச் சொன்னார்கள் முதலாளிகள். ஆனால் அந்தக் கைப்பேசிகளின் வழியாக, உலகத்தின் பொய்களெல்லாம் நம் கைகளில் நிறைந்திருக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் கண்டுகொள்வதே கிடையாது. எழுதப்படும் செய்திகளில் இருக்கும் உண்மையை, காட்டப்படும் காணொளிகளில் இருக்கும் உண்மையை ஆராய்ந்து பார்க்க உங்களுக்கு நேரமில்லையென்றால் பொய்களால் இதயத்தை நிறைத்துக் கொள்ள வேண்டியதைத் தவிர, பொய்களால் காதுகளை நிறைத்துக் கொள்ள வேண்டியதைத் தவிர, பொய்களால் உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியேயில்லை.

உலகத்தின் செய்திகளில் இன்று நிறைந்திருப்பது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை உள்ளும் புறமும் சிதைத்துக் கொண்டிருப்பதுதான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சொல்லிலும் ஒவ்வொருவரின் நிலைப்பாடும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்தச் செய்தியாளரும் எதுவும் தெரியாமல் எதையும் எழுதிவிடுவது கிடையாது. இஸ்ரேலின் இரும்புவளைத்தையும் தாண்டி ஹமாஸின் ஏவுகணைகள் பாய்ந்ததிலிருந்து செய்தியைத் தொடங்குவது ஒரு தரப்பு. அப்பட்டமாக இவர்கள் பாலஸ்தீனத்தின் நூற்றாண்டுத் துயரங்களையும், வலிகளையும் மறைக்கக் கூடியவர்கள்.

காஸாவின் மருத்துவமனைகளில் குண்டுபோடும் இஸ்ரேலைக் கண்டித்துக் கொஞ்சமும், ஆனாலும் ஹமாஸ் செய்தது தவறு என்று அதிகமும் எழுதக்கூடியவர்கள் ஒருவிதத்தில் நடுநிலைமை என்ற பெயரில் நடுமண்டையைக் குழப்பக் கூடியவர்கள். ஒருபக்கம் பொய்ச்செய்திகளைச் சுதந்திரமாக வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள், இன்னொருபக்கம் நடுநிலைச் செய்திகள் என்ற பெயரில் பொய்களுக்குப் பக்கத்தில் உறவாடிக் கொண்டிருப்பவர்கள், இவர்கள்தான் இன்று உலகத்தின் சிந்தனைப்போக்கை நிர்ணயிக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு நடுவில் உண்மையைப் பேசுகிறவர்கள் கிட்டத்தட்ட உயிரைப் பணயம் வைக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

நான்கு நாட்களுக்கு முன்னால் தமிழ்ப்பத்திரிக்கை ஒன்றின் தலைப்பு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலுடன் நிற்பதே நடுநிலைமை என்பதே அந்தக் கட்டுரையின் தலைப்பு. கிட்டத்தட்ட இந்தத் தலைப்பு முதலாளித்துவச் சிந்தனையில் ஊறிப்போன ஒருவருடைய கட்டளை வாக்கியமாகத்தான் எனக்குத் தெரிகிறது. மிகச்சரியாக அந்தக் கட்டுரை இஸ்ரேலின் மீது ஹமாஸ் ஏவிய ஏவுகணைகளிலிருந்து தொடங்கப்பட்டு, மிகமுக்கியமாக இஸ்ரேலை ஆதரிப்பதுதான் நடுநிலைமை என்று முடிக்கப்படுகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான போரில் ஒருநாட்டை மட்டும் ஆதரிப்பது எப்படி நடுநிலைமை ஆகும் என்ற சாதாரண கேள்விகூட புறக்கணிக்கப்படுகிறதே என்று வியப்படைய வேண்டாம். இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு எப்படி எழுதலாம் என்று சிந்திக்கத் தொடங்குகிறவர்கள் இவர்கள்.

இவர்கள்தான் ரஷ்யா – உக்ரைன் யுத்தத்திலும் உக்ரைனை ஆதரிப்பதே நடுநிலைமை என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.  இங்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இப்படிப்பட்ட செய்தியாளர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள். உலகத்தின் மக்களுக்கு இப்படிப்பட்ட செய்திகள்தான் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலில் இருந்து பாலஸ்தீனத்திற்குள் ஏவப்படுகின்ற ஏவுகணைகளைக் காட்டிலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு உளவியலோடு ஒத்துப்போகின்ற தேசங்களிலிருந்து ஏவப்படுகின்ற இப்படிப்பட்ட செய்திகளின் தாக்கம் பயங்கரமானது என்பதையும், ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும் இருக்கிறது.

இந்தியாவில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பொய்ச்செய்திகளைப் பற்றிச் புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டிய தேவையிருக்க வாய்ப்பில்லை. இந்திய மக்களுக்கு ஏதாவது ஒரு அரசியல்வாதியின் வாயிலிருந்து ஒரு பொய்யையாவது கேட்காமல் ஒருநாளும் முடிவடைவது கிடையாது. ஒரு பொய்யை உண்மையைப் போலவே பேசுவதற்கு அவர்களும் வெட்கப்படுவது கிடையாது. அந்தப் பொய்யை உண்மையைப் போலவே கேட்டுக்கொண்டே இருப்பதற்கு நாமும் வெட்கப்படுவது கிடையாது.

தேர்தலுக்காக மட்டுமே பொய்பேசத் தொடங்கியவர்கள், மக்கள் திரளிடமிருந்து பெரும்பாலும் எந்த எதிர்ப்பும் வரவில்லையே என்ற மகிழ்ச்சியில் பொய்மட்டும்தான் பேசவேண்டும் என்பதை கட்டுக்கோப்பாகக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாளை இவர்களின் கைகளில் செயற்கை நுண்ணறிவு கிடைத்தால் கூட, உலகத்திலேயே சிறப்பாகப் பொய்சொல்லக்கூடிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறவர்கள் என்ற பெருமையைப் பெற்றாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆனால் இன்னொரு பக்கம் அதே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி காஸாவில் வெற்றிகரமாக  இன அழிப்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது இஸ்ரேல் என்பதையும் மறந்துவிடவேண்டாம்.

இந்தியாவில் இருக்கும் மாநிலமான மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டிருந்தபோது மெளன விரதமிருந்த இந்தியா, இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தில் உடனடியாக இஸ்ரேலை ஆதரித்து ஆதிக்க மனோபாவத்தின் மீதான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது. ரஷ்யா – உக்ரைன் போரில் நடுநிலைமை என்ற பெயரில் உக்ரைனில் ஒருகாலையும், ரஷ்யாவில் ஒரு காலையும் வைத்துக் கொண்டிருந்தது. இதைக் கண்டித்த உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரி குலேபா இப்படிச் சொன்னார், இந்தியாவின் நடுநிலைமை போரை நிறுத்த உதவாது. இந்தியா தனது வர்த்தக நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று.

ஆம் அவர் உக்ரைனை ஆதரிக்கச் சொல்கிறார். அதோடு சேர்த்து அமெரிக்காவை ஆதரிக்கச் சொல்கிறார். இன்னும் கூடுதலாக நேட்டோவை ஆதரிக்கச் சொல்கிறார். ஆனால் கடுமையான யுத்தத்தில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது வர்த்தக நண்பர்கள் என்ற வார்த்தை ஏன் வருகிறது. அதுதான் இந்த யுத்தத்தின் பின்னால் ஒளிந்திருக்கக் கூடியது. அதுதான் ஒவ்வொரு யுத்தங்களின் பின்னாலும் மறைந்திருக்கக் கூடியது. இப்போது சொல்லுங்கள் யுத்தங்கள் எதற்காக நடந்து கொண்டிருக்கின்றன. சந்தேகமேயில்லாமல் வர்த்தக நலன்களுக்காக மட்டும்தான். 

ரஷ்ய – உக்ரைன் போருக்கு நடுவில் உக்ரைனுக்குச் சென்று பேரன்பையும், பேராதரவையும் தெரிவித்த அமெரிக்க அதிபர், போர் தொடங்கிய உடனே இஸ்ரேலுக்கும் விரைந்தார். இஸ்ரேலை நியாயப்படுத்தினார். இஸ்ரேலுக்காக நிற்போமென்று உறுதிபடச் சொல்லிவிட்டுச் சென்றார். என்னுடைய நண்பர் ஒருவர் கேட்டார், மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதா என்று. தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் தொடங்காமல் விடமாட்டார்கள் என்பது மட்டும் தெரிகிறது என்று சொன்னேன். இஸ்ரேலிலிருந்து திரும்பிச் சென்ற அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளிப்படுத்திய வார்த்தைகளை அவரோடு பகிர்ந்துகொண்டேன். பதிலுக்கு நண்பர் என்னிடம் பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை நாகரீகம் கருதி இங்கே தெரியப்படுத்த விரும்பவில்லை.

இதோ வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் பெருமளவில் நிதியுதவி அளிக்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலன்களுக்கான முதலீடு என்பதை புரியவைப்பேன். இது புத்திசாலித்தனமான முதலீடு. அமெரிக்கத் தலைமைதான் இந்த உலகை ஒன்றிணைத்து வைத்துள்ளது. நமது நட்புறவுகள்தான் நமக்கான பாதுகாப்பு என்றுசொல்லி நிதியை வாரி வழங்குங்கள் என்று கெஞ்சுகிறார் என்று சொல்லமுடியாது, அதேநேரத்தில் கண்ணியமாகக் கட்டளையிடுகிறார் என்று சொல்லலாம்.

இவர்கள் பிரச்சனை உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒன்று அதலபாதளத்திற்குள் சென்றுவிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு போரைத்தவிர அவர்கள் அறிவின் எல்லைக்குள் எதுவும் கிடையாது. இன்னொன்று உலகை வழிநடத்தக்கூடிய தலைமை தாங்கள்தாமென்று தம்பட்டம் அடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டை ஆதரியுங்கள். அல்லது நடுநிலைமை என்ற பெயரில் எங்களோடு கள்ளக்காதல் புரியுங்கள் என்று ஒட்டுமொத்த செய்தி நிறுவனங்களையும், எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் வலைவீசிப் பிடித்து வைத்திருக்கிறார்கள் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாடுகளும்.

முதலாளித்துவ வர்க்கம், மருத்துவரையும், விஞ்ஞானியையும், கவிஞரையும் என எல்லோரையும் தன்னுடைய கூலி உழைப்பாளர்களாக மாற்றிவிட்டது என்று சொன்னார் மாமேதை கார்ல் மார்க்ஸ். நிச்சயமாக இது செய்தியாளர்களுக்கும் பொருந்தும். ஆனாலும் அதையும் மீறி உண்மையின் பக்கம் நின்று கொண்டிருக்கும் செய்தியாளர்களின் நிலையை இங்கேயும் எங்கேயும் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். போருக்கு நடுவே பாலஸ்தீன கொள்கை வலையமைப்பின் தலைவர் தாரிக் பகோனியை தொடர்புகொண்டு நேர்காணல் வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவிலிருந்து வெளியாக கூடிய நியூ யார்க்கர் இதழ்.

ஹமாஸ் தொடங்கிய தற்போதைய தாக்குதல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படியாக பதில் சொல்கிறார். இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் என்னை பேட்டி எடுக்கிறீர்கள், ஏனென்றால் இந்த முறை கொல்லப்பட்டது சில இஸ்ரேலியர்கள். ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று. இந்தக் கேள்வி நியூ யார்க்கர் இதழுக்காக பேட்டி எடுப்பவருக்கு மட்டுமல்ல, உலகமெங்கும் இருந்துகொண்டு காஸாவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் பேரழிவை பார்த்துக் கொண்டிருக்கும் எல்லோரையும் பார்த்துக் கேட்கப்பட்டதுதான்.  என் அன்பிற்குரிய தோழர்களே நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

அதிபர்கள் யுத்தவெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கலாம். இனப்படுகொலை இரசித்துச் செய்து கொண்டிருக்கலாம். வான்வெளித் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் பெருமையாக மக்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்தச் செய்திகளை அதிபர்களின் ஆதரவாளர்களும், நடுநிலைச் சாத்தான்களும் கண்ணுங்கருத்துமாக ஏந்திச் செல்லலாம். ஆனால் என்னுடைய கண்களுக்குத் தெரிவதெல்லாம், இஸ்ரேலில் பிறந்து ஐரோப்பாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோனதன் ஆஃபிர் என்ற இசையமைப்பாளர், என்னுடைய பெயரால் (யூதன்) காஸாவில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் படுகொலைகளை நிறுத்துங்கள் என்று சொல்கிறார். எங்கள் பெயரைச்சொல்லி அவர்களைக் கொல்லாதீர்கள் என்று அமெரிக்காவிலும் போராடுகிறார்கள் யூதர்கள். ஐரோப்பாவிலும் போராடுகிறார்கள் யூதர்கள். நடுநிலைமை ஊடகங்களிலும் கூட இப்படியான செய்திகள் வரலாம், வராமலும் போகலாம்.

உண்மை இதுதான். இஸ்ரேலுக்குள்ளும் கூட எதிர்ப்புக்குரல்கள் இருக்கின்றன. உக்ரைனுக்குள்ளும் கூட எதிர்ப்புக் குரல்கள் இருக்கின்றன. அத்தனை குரல்வளைகளையும் அழுத்தி மிதித்துக் கொண்டுதான் ஜனநாயகம், தேசப்பற்று என்று பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பாவிகள்.

இப்படிப்பட்ட இஸ்ரேலைத்தான் ஆதரிக்கச் சொல்கிறார்கள் இந்த நடுநிலைச் சாத்தான்கள். இப்படிப்பட்ட உக்ரைனைத்தான் ஆதரிக்கச் சொல்கிறார்கள் இந்த நடுநிலைச் சாத்தான்கள். என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள்? படுகொலை செய்வதும் நடுநிலையாக இருப்பதும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் வேறுவேறல்ல என்பதை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன் நான்.

ஜோசப் ராஜா  / 28.10.2023   

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 28/10/2023 - 7:49 AM

“நடுநிலைச் சாத்தான்கள்” என்னும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவைப் பதிவு செய்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

இது இன்றைய காலத்தின் அவசியம்.

நடுநிலை என்ற பெயரே அநியாயத்தின் பக்கம் நிற்பது எனச் சொல்லலாம். அப்படித்தான் இதுவரை நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதும் நிகழ்கிறது. அதைத்தான் உக்ரைன் ரஷ்யப் போர் மூலமும் இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் மூலமும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளக்குகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

படியுங்கள். படித்த பின்பும் நடுநிலை என்ற பெயரில் அநியாயத்தின் பக்கம் நின்று விடாதீர்கள்.

Reply
DAYALAN M 28/10/2023 - 3:16 PM

நடுநிலைமை என்பது அநீதி பக்கம் நிற்பது என்று தான் பொருள்படும்…..ஆனால்
இங்கு அநீதியின் பக்கம் நின்று கொண்டு நடுநிலைமை என்று பேசி திரியும், யுத்தவெறி பிடித்து ரத்தவெறியில் ஊறிபோன ஓநாய்களை நடுநிலைச் சாத்தான்கள் என்று சொல்வது சாலப்பொருந்தும்.உங்கள் கட்டுரை எளிய தமிழில் தெளிந்த சிந்தனையும் சிறந்த புரிதலையும் கொடுக்கின்றது,உங்களின் பணி பாராட்டுக்குரியது……

Reply

Leave a Comment