தோழியின் மரணத்தில் பேரழுகை அழுதவள்

எனக்குத் தெரிந்த வரையிலும் சண்டையிடாத சகோதரர்கள் இல்லை. நான் பார்த்தவரையிலும் பிரச்சனைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. எத்தனையோ காதலர்களுக்குள் காதலைவிடவும் கருத்துவேறுபாடுகள் அதிகமாகப் பொங்கி வழிவதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எத்தனையோ நண்பர்களின் நம்பிக்கையைப் பணம் சுக்குநூறாய் உடைத்துப் போட்டிருப்பதை அனுபவிக்கவும், கேட்கவும் செய்கிறோம். இந்த முதலாளித்துவச் சமூகத்தில், சந்தை நிலைபெறத் தொடங்கியபோதே, குடும்பங்களின் அஸ்திவாரங்கள் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டன. இந்த முதலாளித்துவச் சமூகத்தைச் சந்தை வழிநடத்தத் தொடங்கியபோதே மனிதர்கள் தங்களுக்குள் தனித்தனி தீவுகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள்.

கவிதைகளிலும், உரையாடல்களிலும் நான் தொடர்ந்து வலியுறுத்தக் கூடியது அன்பை மட்டும்தான். போர்களையும், புதைகுழிகளையும் மட்டுமே விரும்புகின்ற, மனிதகுலத்திற்கு எதிரான இந்த முதலாளித்துவத்தை வீழ்த்தக்கூடிய மாபெரும் கருவி அன்பு மட்டும்தான் என்று இப்போதும் நம்புகிறேன். ஒருவரையொருவர் அன்புசெய்வதே முதலாளித்துவத்திற்கு எதிரானதுதான். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதே முதலாளித்துவத்திற்கு எதிரானதுதான். முதலாளித்துவத்தின் நங்கூரம் மூலதனம் மட்டுமல்ல, தனிச்சொத்து மட்டுமல்ல, உபரிமதிப்பு மட்டுமல்ல, இந்த மானுடத்திரள் தனிதனித் தீவுகளாகச் சிதறிக் கிடப்பதும்தான். அப்படிச் சிதறிக்கிடந்த மனிதர்கள் ஒன்றுசேர்ந்த பொழுதுகள்தான் இந்த உலகம் அதுவரையிலும் காணாத புரட்சிகளைப் பிரசவித்தது.  

நினைத்துப் பாருங்களேன், ஒரு நட்பைத் தொடர்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது? பணம் பணம் பணம் எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பாம்பைப் போல படுத்துக் கிடக்கிறது. அதனால்தான் போராடுகிறவர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். என்னைப்போல கவிதை எழுதுகிறவர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். எதற்கும் எந்த எதிர்வினையும் எப்போதும் இல்லாமல் இருக்கிறது. அன்பின் இறுக்கத்தையும், அன்பின் தளர்வையும் ஒரேநேரத்தில் அனுபவிப்பது, நீரையும் நெருப்பையும் ஒன்றாய்ச் சுமப்பதற்குச் சமாக இருக்கிறது, ஆனாலும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம்.   

நீண்ட பயணத்தில் நிழல்தரும் ஒற்றை மரமென்பது, பயணத்தில் இருப்பவர்களுக்கு பாதி சொர்க்கம். அதுபோலத்தான் அன்பின் ஊற்றுக்கண்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருக்கும் இந்த உலகத்தில், எப்போதாவது பேசப்படும் உண்மையைப் போல, எப்போதாவது வெளிப்படும் பேரன்பைப் பார்ப்பதென்பது நிச்சயம் பரவசம் தரக்கூடியதுதான். அப்படியொரு பேரன்பை பார்த்த அனுபவத்தைத்தான், அப்படியொரு பெருங்கருணையைப் பார்த்த அனுபவத்தைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

இரண்டு வருடத்திற்கு முன்னால், உடலின் ஒட்டுமொத்த வியர்வைச் சுரப்பிகளும் ஒன்றாய் ஊற்றெடுக்கும் இதேபோன்றதொரு கோடைகாலம். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நண்பரின் மனைவி இறந்துபோனார். வயது நாற்பதுகூட ஆகியிருக்கவில்லை. பெருஞ்சோகம்தான். மருத்துவமனையிலிருந்த நண்பர், வீட்டிற்குச் சென்று ஏற்பாடுகளைக் கவனிக்கச் சொன்னதும், நானும் இரண்டு நண்பர்களும் வீட்டிற்குச் சென்று, பந்தல் போடுவது, இருக்கைகளைக் கொண்டு வருவது, இறுதிச் சடங்குகளைச் செய்கிறவரிடம் நேரத்தை உறுதிப்படுத்துவது, குளிர்பதனப் பெட்டியை வாங்கி வைப்பது, கல்லறையில் குழிவெட்டும் ஆட்களைத் துரிதப்படுத்துவது என ஒவ்வொரு வேலைகளையும் முடித்துவிட்டு வியர்வையில் குளித்தபடி நண்பரின் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்திருந்தோம் நானும் இரண்டு நண்பர்களும்.

மரணத்தைப் போலவே வெயிலும் கொடுமையாக இருந்தது. உறவினர்கள் ஒருவரும் வந்திருக்கவில்லை. நண்பரின் அம்மா மட்டும் மெளனமாக வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தார். வேறு எதாவது செய்யவேண்டுமா என்று நாங்கள் கேட்டபோது கூட இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பதில் சொல்லவில்லை. மகனின் எதிர்காலம் குறித்த கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கலாம். மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுவிட்டோம் என்று நண்பர் சொன்னார். வெளியே உட்கார்ந்திருக்கும் போது, ஆட்டோவிலிருந்து இறங்கி வந்தார் ஒரு பெண். அவ்வளவு அழுகையை அடக்கி வைத்திருப்பவள் போலத் தெரியவில்லை, ஆனால் முகமெல்லாம் துயரம் நிரம்பி வழிந்தது. நேராக என்னிடம் வந்து மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுவிட்டார்களா என்று கேட்டாள். வந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கையொன்றை எடுத்துக்கொடுத்து வீட்டிற்குள் உட்காரச் சொன்னேன். வராண்டாவில் இருக்கையைப் போட்டு உட்காரும்போதே அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.

ஆம்புலன்ஸ் வந்து நின்றது. இறக்குவதற்காகச் சென்றோம். அந்தப் பெண் அவ்வளவு எளிதாக இறக்க விடவில்லை. பெருஞ்சத்தமெடுத்து அழுதுகொண்டிருந்தாள். ஒருவழியாக இறக்கி வராண்டாவில் தயாராக வைக்கப்பட்டிருந்த குளிர்பதனப் பெட்டியில் வைக்கத் தயாரானோம். வீட்டிற்குள் கொஞ்சநேரம் வைத்துவிட்டு கொண்டுவரலாம் என்று சொன்னதும், திருமணப் புடவையில் வைத்து தூக்கத் தொடங்கினோம். அவ்வளவு எளிதாக அவள் தூக்கவிடவில்லை. ஒருவழியாக வீட்டிற்குள் வைத்துவிட்டு மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைப்பதற்குள் எங்களைச் சோதித்துவிட்டாள் அந்தப்பெண். சிலருக்கு கோபம் வந்தது. அவர்களைச் சமாதானப்படுத்திய நண்பர் என்னைப் பார்த்து மெல்லிய குரலில், இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலான தோழிகள் அவரும் என் மனைவியும் என்று சொன்னபோதுதான் அவளை உற்றுப்பார்த்தேன்.

அவள் வெறுமனே அழவில்லை. தன்னுடைய ஆன்மாவின் ஒட்டுமொத்த நேசத்தையும் கண்ணீராய்ப் பொழிந்து கொண்டிருந்தாள். தன்னுடைய இதயத்தின் ஒட்டுமொத்த அன்பையும் கண்ணீரால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். உண்மையைச் சொன்னால் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த எல்லோரையும் தன்னுடைய தோழிக்காக அழவைத்தாள். எதற்கும் கலங்காத நானும்கூட கொஞ்சமல்ல அதிகமாகவே கலங்கிப்போனேன். புன்னகை நிறைந்த முகத்தோடு உயிரற்றவளாய்ப் படுத்துக்கிடவளைப் பார்த்தேன். இந்த அன்பிற்காகவாவது எழுந்து வந்துவிடமாட்டாயா? இந்தக் கண்ணீருக்காகவாவது கசிந்துருகி கண்விழித்துவிட மாட்டாயா என்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். அழுதுகொண்டிருந்தவளை சிலபெண்கள் சூழத் தொடங்கினார்கள். நாங்கள் சுடுகாட்டுப் பாதையில் பயணத்தை தொடங்கினோம். அந்த தெருவைக் கடந்தபிறகும் அவள் அழுகைச் சத்தத்தைக் கேட்க முடிந்தது.

அந்தக் கடைசிப் பயணத்தில் ஏனோ என் நினைவுகளிளெல்லாம் அவள்தான் நிறைந்திருந்தாள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்கும் உங்களுக்கு. சில மரணங்கள் எதிர்பார்க்கப்படும் இந்த உலகத்தில், சில மரணங்கள் ரசிக்கப்படும் இந்த உலகத்தில், சில மரணங்கள் கொண்டாடப்படும் இந்த உலகத்தில், அவளைப்போல பேரன்பை பேரழுகையாய்ப் பொழிந்துகாட்ட எல்லோருக்கும் தோழியோ தோழனோ இருக்கிறார்களா? அந்த மாதிரி உண்மையான ஒரு உறவை நாம் சம்பாதித்து வைத்திருக்கிறோமா? சந்தை ஒவ்வொரு உறவுகளுக்கு மத்தியிலும் திரைபோட்டு வைத்திருக்கிறது. திரை இருக்கும்வரையிலும் சந்தைக்கு இலாபம். திரையை விலக்கி நாம் ஒன்றுசேர்ந்தால், புதிய புரட்சி, புதிய மகிழ்ச்சி, புதிய வாழ்க்கை, எல்லாம், எல்லாமும் சாத்தியமே!

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 30/05/2023 - 3:21 PM

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

அன்பின் உயர்வு குறித்து தான் சந்தித்த அனுபவத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

அத்தகைய அன்பு இல்லாமையால்
நேசம் இல்லாமையால்
குற்றங்களும் வக்கிரங்களும் அவலங்களும் அன்றாடம் அணிவகுத்து வருகின்றன.

அன்பாய் இருப்போம்
அழகிய தாகும் வாழ்க்கை.

Reply
மைத்திரிஅன்பு 30/05/2023 - 5:57 PM

” ஒரு நட்பைத் தொடர்வது எவ்வளவு கடினமாக இருக்கிறது? பணம் பணம் பணம் எல்லா உறவுகளுக்கு மத்தியிலும் பாம்பைப் போல படுத்துக் கிடக்கிறது. அதனால்தான் போராடுகிறவர்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்” இந்த வாக்கியங்களை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. உண்மையில் முதலாளித்துவமும் பொருள் முதல்வாதமும் ‘பணத்தை’ எல்லாவற்றிலும் முன்நிறுத்தியுள்ளது. அதனால் அழும் அளவிற்கான அன்பு என்ற ஒன்று இல்லாமலே போனதை உணர முடிகிறது. மனங்கள் சுருங்கிவிட்டன. அவரவர்களின் சின்ன சின்ன நிறைவுகள் பெரிய பிம்பங்களாகத் தெரிகின்றதே ஒழிய, உண்மையில் பெரிய பிம்பத்திற்கான முன்மாதிரிகளாக வாழ்ந்து முடித்திருக்கும் மனிதர்களையும் உறவுகளையும் யாரும் மதிக்கவும் மனதில் நிறுத்தவும் இந்த எந்திரமயமானச் சூழலில் தயாராக இல்லை. மனிதம் காய்ந்த மனங்களே மிச்சமிருக்கின்றன. நல்ல இலக்கியங்களும், நல்ல நண்பர்களும், நல்ல உறவுகளும் கொண்டுவராத நேரத்தின் குறையே இவை. இப்பதிவு அத்தகைய குறையற்ற ஒருவரின் வாழ்வை காட்சிப்படுத்தியுள்ளது தோழர்.

Reply

Leave a Comment