தோழர் ஜோசப்ராஜாவின் கவிதைகள் நமது வாழ்வைப் பேசுகிறது.நாம் கண்டும் காணாமலும் உணர்ந்தும் உணராமலும் கடந்து வந்த நெருக்கடிகளை, அவலங்களைப் பேசுகிறது.நமது எதிர்காலம் குறித்த கனவுகளைப் பேசுகிறது. இவரது கவிதையில் காதல் விடுதலையை வலியுறுத்தும். சுட்டெரிக்கும் சொற்கள் அன்பை வலியுறுத்தும். வாழ்த்துகள் வரலாறு பேசும். அமைதிக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை அறைகூவிடும். இவரது கவிதைகளின் ஜீவ நாதம் மானுட மேன்மையும் சமூக மாற்றமும். சட்டென பற்றிக்கொள்ளும் தீயைப் போல் சமகால வாழ்வின் எல்லா முக்கிய சம்பவங்கள், நிகழ்ச்சிகள் குறித்து இவர் கவிதை படைத்துள்ளார். ஆலாபனைகளுக்கும் இவர் கவிதை பாடுவார். வீடுகளை இழந்து சாவிகளுடன் போர்க்களத்தில் காத்திருக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இவர் கவிதை படைத்திடுவார். இவரது கவிதை உளியைப் போன்றது. நம்மை செதுக்கும். நம்மிடம் பேசும். கேள்வி கேட்கும். செல்லும் திசைவழிகாட்டும். இசையைப் பாடிய கவிதைகளும் உண்டு. இவரது கவிதைக்குள்ளும் இசை உண்டு. பதினாறு ஆண்டுகளாகக் கவிதை படைத்து வரும் தோழர் ஜோசப்ராஜா கவிதைக்கென இந்த இணையத்தை துவக்கி ஒரு ஆண்டையும் நிறைவாகவே நிறைவு செய்துள்ளார். இவரது கவிதை நமக்கானது மக்களுக்கானது. இவரது கவிதையையும் இணையத்தையும் மக்களிடம் கொண்டு செல்வோம். வளர்க இவரது பணி. வாழ்த்துக்கள்.
ஐ. ரத்தினவேல்