துயரங்களிலிருந்துதான் இந்த உலகம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.
நன்மை – தீமை எல்லாவற்றையும்.
சிறிய அளவிலான துயரங்கள் ஒரு பெரும் சீரழிவின் முன்னறிவிப்பாகக் கூட இருக்கலாம்.
சமீபத்தில் கரூரில் நடந்த சகிக்க முடியாத துயரக் காட்சிகள் இன்னும் கூட எல்லோர் இதயத்திலும் வலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.
ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அந்தத் துயரத்திற்குப் பிறகு நிகழ்ந்த உரையாடல்கள், நீதி விசாரணைகள், குற்றச்சாட்டுகள், தீர்ப்பு சொல்லுதல் என எல்லாவற்றையும் பார்க்க நேர்ந்தது.
யாருக்கும் பொறுமை இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.
அதையொட்டிய பேச்சுக்களில் தற்குறி என்ற சொல்மட்டும் சூறாவளியைப் போல சுழன்று கொண்டிருக்கிறது. இப்போது வரையிலும்.
நீங்களே சொல்லுங்களேன், இந்தத் தற்குறிகள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையா?
ஒரு நடிகர் கட்சி ஆரம்பிக்கிறார். அதுவரையிலும் அந்த நடிகரை திரையில் இரசித்துக் கொண்டிருந்தவர்கள், நேரில் அவரைப் பார்க்கக் கூடுகிறார்கள்.
அந்த நடிகரும் சமூக மாற்றத்திற்காக தன்னுடைய பிம்பத்தை பயன்படுத்தியவர் கிடையாது. அப்படி இருக்கும்போது அவரைத் தங்களுடைய நாயகனாக ஏற்றுக் கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன சொல்ல முடியும்!
அந்த வண்டிக்குப் பின்னே ஓடுகிறவர்கள் யார்? அந்தக் கட்டிடங்கள் மேல் ஏறுகிறவர்கள் யார்? அங்கிருக்கும் மரங்களின்மீது ஏறுகிறவர்கள் யார்? உயிரைப்பற்றி எந்த அக்கறையுமில்லாமல் தாந்தோன்றித்தனமாகத் திரிந்து கொண்டிருப்பவர்கள் யார்?
நம்முடைய தம்பிகளல்லவா! நம்முடைய மகன்களல்லவா!
அரசியல் என்றால் என்னவென்று தெரியாத இவர்கள், தத்துவம் என்றால் என்னவென்று தெரியாத இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
நம்முடைய வீடுகளிலிருந்துதானே!
தலைவனென்றால் யாரென்று தெரியாத இவர்களை வளர்த்து ஆளாக்கி அனுப்பியது யார், நாம்தானே!
உங்களை சங்கடப்படுத்த நினைக்கவில்லை என்றாலும், குழந்தைகளையும் கூட கொன்றுபோட்ட கரூரின் இரத்தக்கறை நம் எல்லோரின் கைகளிலும் படிந்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
அந்த நடிகர் காரணமா? அந்த அமைச்சர் காரணமா? இல்லை அரசு காரணமா? ஆம் எல்லாவற்றையும் விட இப்படிப்பட்ட இலக்கற்ற இளைஞர்களை உருவாக்கிய ஒவ்வொரு பெற்றோரும் காரணமென்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.
அந்தக் கூட்டத்தில் ஒரு கோடீஸ்வர வீட்டின் பிள்ளை இருந்திருப்பானா? அந்தக் கூட்டத்தில் நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்ற ஒரு இளைஞன் இருந்திருப்பானா?
பாருங்கள் தோழர்களே! தற்குறிகள் என்று நீங்கள் ஏளனமாகப் பேசிக்கொண்டிருக்கும் அந்த இளைஞர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தின் பிள்ளைகளாக இருப்பதைப் பாருங்கள்.
சமூகத்தின் மீது எந்த அக்கறையுமில்லாத திரைக்கலைஞர்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள். அவர்கள் கோடிகோடியாக சொத்துக்களைச் சேர்க்க நீங்கள்தான் காரணமாக இருக்கிறீர்கள்.
பொழுதுபோக்கு என்ற பெயரில் திரைவடிவத்தில் இந்தச் சமூகத்தை சீரழித்தது போதாதென்று, இப்போது அரசியல் வடிவத்தில் வருகிறார்கள். அதற்கான நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள்தான் கொடுக்கிறீர்கள்.
அந்த நடிகரையோ அவரைத் தலைவனாகப் பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களையோ நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இந்த முதலாளித்துவ அமைப்பு இப்படிப்பட்டவர்களைத்தான் கொண்டு வந்து நிறுத்தும். அதுதான் முதலாளித்துவம் நீடித்து நிலைபெறுவதற்குத் தேவையாக இருக்கிறது.
உங்களால் முடியுமென்றால் இந்த இளைஞர்களில் பாதிப்பேரையாவது அரசியல் அறிவுள்ளவர்களாக மாற்றிப் பாருங்கள். அவர்களுக்கு அந்த நடிகர் தேவையாக இருக்கிறது.
அந்த நடிகர் மட்டுமல்ல இன்னும் நிறையத் தலைவர்களின் பிம்பம் தகர்ந்துபோகும்.
ஒரு உண்மையை உங்களுக்கு உரக்கச் சொல்லமுடியும் இப்போது. நாற்பது வயதைத்தாண்டிய ஆயிரக்கணக்கான நபர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவன் நான்.
அதில் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலானவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. தத்துவம் என்றால் என்னவென்றே தெரியது. வரலாறு என்றால் என்னவென்றே தெரியாது.
புத்தக வாசிப்பிற்கும் அவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்கக்கூடிய ஆர்வமும் கிடையாது.
தெருக்களில் ஒரு நடிகரின் வண்டிக்குப் பின்னால் மந்தைகளைப்போல ஓடிக்கொண்டிருப்பவர்கள் வேறு யாருமல்ல இந்த முட்டாள்கள் பெற்றுமட்டும் போட்ட பிள்ளைகள்தான்.
விதைத்ததை மட்டும்தான் அறுக்க முடியும்.
சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
உங்களுக்குப் புரியும். எனக்குத் தெரியும்.
இந்தத் துயரம் கடைசியாக இருக்க வேண்டுமென்றால் வேறு வழியில்லை. உறக்கம் கலைத்து எழுந்தாகத்தான் வேண்டும்.
இரவு வணக்கம் தோழர்களே!
ஜோசப் ராஜா
