திரையில் தெறிக்கும் இரத்தம்

ஒருபக்கம் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்களை கண்டித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு தூரம் ஏன்? சென்ற வாரம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டப்பட்டு சிகிச்சையில் இருக்கும் மாணவனுக்காகத் துடியாய்த் துடித்துப் போனோம். இந்த தேசத்தின் எந்த மூலையிலும் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படும்போது பதறிப்போகத்தான் செய்கிறோம். சாதிதாண்டி காதலித்த குற்றத்திற்காகப் பட்டப்பகலில், எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்க இளைஞனொருவன் துடிதுடிக்க வெட்டிக் கொல்லப்பட்டதை படபடத்த இதயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். சமகாலச் சமூகங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் குற்றச்செயல்கள் எதிர்காலத்தைக் குறித்தான அச்சங்களை அதிகரிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு காலமாக சாதியின் பெயரால் நிகழ்ந்த மறக்கமுடியாத வன்முறைகளிலிருந்தும், மதத்தின் பெயரால் நிகழ்ந்த மன்னிக்கமுடியாத வன்முறைகளிலிருந்தும் பகுத்தறியும் உணர்வுள்ளவர்களாக எதையாவது உணர்ந்து கொண்டோமா நாம்? உண்மையிலேயே மனங்கசந்து, சங்கடமான இதயத்திலிருந்தே இந்தக் கேள்விகளை முன்வைக்கிறேன் உங்களிடம்.

உண்மைதான், சமூகத்தில் நடக்கும் எந்த வன்முறையையும் அறிவுள்ள, இதயமுள்ள எந்த மனிதனும் ஆதரிப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அதேமனிதர்கள் இன்று திரையில் தெறித்து, திரைமுழுக்க நிறைந்திருக்கும் இரத்தத்தை மிகுந்த மனக்கிளர்ச்சியோடும், பரவசம் நிறைந்த உணர்வோடும் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஞாபகமூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து நீங்கள் பார்க்கப்பார்க்க, தொடர்ந்து நீங்கள் இரசிக்க இரசிக்க அந்தப் பைத்தியக்காரர்கள் தாங்கள் செய்வதுதான் சரியென்று நம்பிக்கொண்டு மீண்டும் மீண்டும் ரத்தத்தை தெறிக்கவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அது வியாபாரம். நூறுகோடி போட்டால் ஆயிரம்கோடி இலாபம் வரவேண்டும். அதற்குமேலும் வருவதற்காக முதலைகளைப்போல வாயைப் பிளந்து கொண்டே காத்திருப்பார்கள். இன்றைய திரைத்துறை முதலாளிகளின் கையிலிருக்கும் இலாபம் தரக்கூடிய சரக்கு. கலைஞர்களும், கலையை நேசிப்பவர்களும் காலூன்றக் கூட இடமில்லாமல் வியாபாரிகளால் நிறைந்திருக்கிறது இந்தச் சந்தை. முதலாளித்துவச் சந்தை இலாபத்தை மட்டும்தான் குறியாகப் பார்க்கும். ஒருபோதும் விளைவுகளைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ஆனால் நீங்களும் நானும் இரக்கமில்லாத இந்த வியாபாரிகளைப்போல இருந்து இருந்துவிட முடியுமா என்ன?

இந்தக் காட்சியைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன். அந்தப் பெரிய திரையில் பின்னணி இசை காதுகளையும், இதயத்தையும் அதிரச்செய்து கொண்டிருக்க, ஆவேசத்தோடு நடந்துவரும் நாயகன், எதிரியின் உடலிலிருக்கும் எல்லா இரத்த நாளங்களையும் வெட்டிக் கிழிக்கிறான். கடைசியில் எதிரியின் தலையை ஒரேவீச்சில் தனியாகத் துண்டிக்கிறான். பின்னணி இசையில்லாமல் மயான அமைதியோடு பறக்கும் தலையைத் தொடர்ந்து செல்கிறது கேமிரா. துண்டிக்கப்பட்டு பறந்துகொண்டிருக்கும் தலையிலிருந்து சொட்டிக் கொண்டிருக்கும் ஒருதுளி இரத்தத்தையும் விட்டுவிடாமல் படம்பிடிப்பதற்கான அதிநவீன கேமராக்கள் வந்துவிட்டன. நாயகனுக்கு இன்னும் அடங்கவில்லை ஆத்திரம். ஓடிசென்று பறந்து கொண்டிருக்கும் தலையைப் பறந்து மிதிக்கிறான். இப்போது அந்த தலையானது புவியீர்ப்பு விசையையும் பொய்யாக்கி எங்கோ பறந்து செல்கிறது. ஆயிரத்தில் ஒரு உதாரணத்தைச் சொல்லியிருக்கிறேன். இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இதுவரையிலும் நீங்கள் பார்த்த திரைப்படங்களில், கைகள் வெட்டப்பட்ட, காதுகள் வெட்டப்பட்ட, கால்கள் துண்டிக்கப்பட்ட, உடலெல்லாம் குத்திக் கிழிக்கப்பட்ட, கற்பழித்து நடுரோட்டில் வீசப்பட்ட எத்தனையோ காட்சிகள் ஞாபகம் வரக்கூடும். வரட்டும், வருவதற்காகத்தான் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நீங்கள் கவனிக்க மறந்திருக்கலாம், உங்களுக்குப் பக்கத்தில் உங்களைச் சுற்றிலும் அந்த இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் குழந்தைகள் அந்தக் காட்சிகளை அவ்வளவு இரசித்துக் கைதட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளிடம் இந்தக் காட்சிகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யோசித்துப்பாருங்கள். இன்னும் சில வீடுகளில் குடும்பமாக உட்கார்ந்து பெரிய திரைகொண்ட தொலைக்காட்சியில் இப்படிப்பட்ட இரத்தம் தெறிக்கும் காட்சிகளையும் இதற்கும் மேலான வன்முறைக் காட்சிகளையும் நொறுக்குத் தீனிகளைத் தின்றுகொண்டும், குடும்பமாக உட்கார்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டிருப்பது பதட்டமாக இல்லையா உங்களுக்கு. வெற்று உணர்ச்சிகளை தூக்கிக்கொண்டு வருவதில் எந்தப் பயனும் இல்லை. இதயத்தை திறந்து இப்போது சொல்லுங்கள் தோழர்களே! பள்ளிமாணவர்கள் அரிவாள் எடுத்த நாங்குநேரிச் சம்பவத்தைக் கண்டிப்பதற்குத் தகுதியுள்ளவர்களா நாம். எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுக்கமுடியும். விதையொன்றும் விளைச்சலொன்றும் சாத்தியமா என்ன?

திரைக்கதை எழுதத் தெரிந்த ஒருவனாக, இப்படிப்பட்ட கொலைநடுங்கும் வன்முறைக் காட்சியை ஒருவர் எப்படிக் காகிதத்தில் எழுதுவார் என்றும், ஒரு தயாரிப்பாளரிடம் எப்படிக் கதையாகச் சொல்லுவார் என்றும், ஒரு நாயகனிடம் எப்படி காட்சிகளை விவரிப்பார் என்றும் நினைத்துப் பார்க்கவே அருவெறுப்பாக இருக்கிறது எனக்கு. ஒரு படுகொலைக் காட்சியை இரசித்து இரசித்து எடுத்துக் கொண்டிருக்கும் இவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பணம் என்ற ஒன்றைத் தவிர எந்த நோக்கமுமில்லாதவர்கள். பொழுதுபோக்கு என்ற போர்வையில் ஒவ்வொரு பார்வையாளனின் ஆன்மாவையும் சிதைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏற்கனவே கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கும் சமூகத்தின் உணர்வுகளை இன்னும் சீரழிக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள். ஒரு தேசத்தின் இயற்கை வளங்களைக் சுரண்டிக் கொழுக்கும் முதலாளித்துவம், அந்த தேசத்தின் மக்களின் உணர்வுகளையும் இப்படிப்பட்ட மோசமான கலைவடிவங்களின் துணைகொண்டுதான் மழுங்கடித்து, சிதறடித்து தொடர்ந்து தன்னுடைய இருப்பை நிலைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கையிலிருக்கும் அணுகுண்டு ஹிரோஷிமா நாகசாகியை தடம் தெரியாமல் அழித்தது போல, முதலாளிகளின் கையிலிருக்கும் திரைத்துறையும் மனித ஆன்மாவைச் சிதைக்கும் பயங்கரமான வன்முறையைத்தான் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

தூய்மையான வெள்ளை உடையைப் போட்டுக்கொண்டு இரத்தம்தெறிக்க வெட்டிக் கூறுபோடும் காட்சிகளை எடுப்பவனுடைய மனோபாவம் இயல்பானதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். கொலையையும் குரூரத்தையும் விவரணையாகக் காட்டத்துடிக்கும் ஒருவன் சாதாரண மனநிலையில் இருக்கும் மனிதனல்ல என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அதேநேரத்தில் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்க்கத் தொடங்கியிருக்கும் உங்கள் மனநிலையையும், இப்படிப்பட்ட காட்சிகள் கொண்ட திரைப்படத்தைக் காணத்துடித்துக் கொண்டிருக்கும் உங்களுடைய பிள்ளைகளின் மனநிலையையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பயமுறுத்துகிறேனென்று என்னைச் சந்தேகிக்க வேண்டாம் தோழர்களே, ஏனென்றால் நான் உறுதியாக உங்களைப் பயமுறுத்தத்தான் செய்கிறேன். ஏனென்றால் இந்த மனிதகுலத்தை மனதார நேசிக்கும் கலைஞனாக எல்லாவற்றின் மீதும் எனக்கு அக்கறை மிகுந்திருக்கிறது.

ஒருபக்கம் தேசத்தின் வளங்களையெல்லாம் வாரிச் சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள் முதலாளிகள். இன்னொருபக்கம் தங்களுடைய அதிகாரங்களைத் தக்கவைப்பதற்காக நிம்மதியாக இருக்கும் சமூகங்களுக்குள் கலவரங்களை நிகழச்செய்து கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள், இப்படியாகச் சகோதர மனிதர்களுக்குள் சாதிநெருப்பும், மதநெருப்பும் காற்றைவிடவும் வேகமாக மூட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இப்படிப்பட்ட சமூகத்திற்கு எப்படியான கலைப்படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று கலைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பிருக்கிறது. இதயமுள்ளவர்களைக் குறிப்பிடுகிறேனே தவிர வியாபாரிகளை அல்ல. அதேநேரத்தில் பார்வையாளர்களாகிய உங்களுக்கும் நல்ல படைப்புகளைத் தேடிப்பார்க்க வேண்டிய பொறுப்பிருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பாவங்களைச் செய்வதும், பார்வையாளனாக இருப்பதும் வேறுவேறல்ல என்பது உங்களுக்குத் தெரியுமென்று நம்புகிறேன்.

திரையை முழுவதும் வன்முறையால் நிரப்பிவிட்டு, சமூகத்திற்குள் வன்முறைகள் நிகழும்போது வெறுமனே கண்டிப்பதிலும், கண்ணீர் சிந்துவதிலும் ஒருபயனும் இல்லையல்லவா! இந்தச் சமூகம் வன்முறையின் பின்னால் ஓடுகின்ற மனநிலை பாதிக்கப்பட்ட சமூகமாக இருக்கக்கூடாது என்று நீங்களும் விரும்புவீர்களல்லவா. அதேநேரத்தில் முதலாளித்துவம் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒவ்வொரு நோயையும் தனித்தனியாகச் சரிசெய்ய முயற்சிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அந்த முதலாளித்துவத்தை அடியோடு ஒழிப்பதும், வேரோடு வெட்டிவீசுவதும் என்பதை நாம் தீர்க்கமாகப் புரிந்துகொள்ள வேண்டிய காலமிது.

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 21/08/2023 - 11:46 AM

விதைத்ததையே அறுவடை செய்ய முடியும் என்பதை திரைப்படக் காட்சிகளைக் கொண்டும் நடப்பு நிகழ்வுகளையும் நிரூபித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

இவ்வளவுக்கும் காரணமான உடைமை வர்க்கத்தை
வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டிய அவசியம் குறித்துப் பேசியுள்ளார்.

நாமும் பேசுவோம்
செயல்படுவோம்.

Reply

Leave a Comment