படம் : தமிழ் அலை அலுவலகத்தில் தோழர்களோடு
அன்புத் தோழர் இசாக் அவர்களின் தமிழ் அலை நிறுவனம் தொடங்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் முடிந்திருக்கிறது. பேரன்பு நிறைந்த பெரும் அக்கறைகொண்ட அண்ணன்கள், தோழர்கள், தம்பிகள் சூழ பதினாறாவது ஆண்டைத் தொடங்குகிறது தமிழ் அலை. அவ்வளவும் தோழர் இசாக்கின் தூய அன்பினால் மட்டுமே ஈடேறியிருக்கிறது என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் அலையோடும் கடந்த பதின்மூன்று வருடங்களாக நானும் இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது இதயத்தில் நிறைவான உணர்வை ஏற்படுத்துகிறது.
தோழர்களோடு மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற இலக்கியப் பத்திரிக்கையை 2010 ஆம் ஆண்டு ஆரம்பித்த போது தோழரைச் சந்தித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது அன்பின் பெருநதி. 2013 ல் வெளிவந்த என்னுடைய அழைப்பின் பாடல்கள் தொடங்கி இதோ வெளிவரவிருக்கும் காத்திருக்கும் சாவிகள் வரையிலான என்னுடைய எட்டுப் புத்தகங்களையும் அவரே பதிப்பித்திருக்கிறார். வடிவமைப்பும், தரமும் இவ்வளவு நன்றாக இருப்பதற்கு என்ன காரணம் என்று என்னிடம் கேட்பார்கள் தோழர்கள். அன்பைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும் என்று சொல்வேன்.
பதினாறாவது ஆண்டுத் தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாகத் தமிழ் அலை அலுவலகத்தில் நேற்று தோழர்களெல்லாம் கூடினோம். அன்பைப் பரிமாறிக்கொண்டோம். அப்படியே வெளிவரவிருக்கும் பாலஸ்தீனக் கவிதைகள் அடங்கிய காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தின் அட்டையை வெளியிட்டோம். தமிழ் அலை இயங்கிக் கொண்டே இருக்கும் தோழரே! ஏனென்றால் அன்பால் பிணைக்கப்பட்ட எதுவும் அறுந்து போகாது நிலைத்திருக்கும். இன்னும் உயரங்களை நோக்கி உறுதியாகச் செல்வோம் நாம்.
ஜோசப் ராஜா