புத்தக அறிமுகம்
இந்தப் புத்தகம் திரைக்கதை பற்றியது மட்டுமல்ல. திரைக்கதைக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கையைப் பற்றியது. வாழ்விலிருந்துதான் கதைகளும் திரைப்படங்களும் உருவாகின்றன என்ற செய்தியை உண்மையாகவும் உறுதியாகவும் நிரூபிக்கக் கூடியது. தமிழ்நாட்டில் தொடங்கி உலகமெங்கும் பயணித்து, எண்ணற்ற விருதுகளை மட்டுமல்ல எண்ணிலடங்கா இதயங்களையும் வெற்றிகொண்ட டுலெட் திரைப்படத்தின் திரைக்கதையும் உருவாக்கமும் என்ற புத்தகத்தை உயிர் எழுத்து பதிப்பகம் மிக நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. எளிமையான ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கான முழுமையான கையேடு என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் ஒரு திரைப்படத்தின் சகலவிதமான நுட்பங்களையும் எந்த ஒளிவுமறைவுமில்லாமல் விரித்து வைத்ததில்தான் இந்தப் புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. வாழ்க்கையிலிருந்து கதையையும் திரைப்படத்தையும் எடுப்பதற்கான பெரும் நம்பிக்கையைக் கொடுத்ததில்தான் இந்தப் புத்தகம் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் ஆசையையும் தூண்டியது.
தன்னுடைய வாழ்வின் எந்தத் தருணத்தில் டுலெட் திரைப்படத்தின் கரு உருவாகியது என்ற கதையில் தொடங்கி, சரியான தயாரிப்பாளரைத் தேடி அலைந்து, கடைசியில் தயாரிப்பாளரை உருவாக்கிய கதையை, திரைக்கதையை இறுதிசெய்த கதையை, நடிகர்களைத் தேர்வுசெய்த கதையை, ஒவ்வொரு காட்சியாகத் திரைப்படத்தைச் செதுக்கிய கதையை, படத்தொகுப்பில் அடைந்த பரவசத்தை, பின்னணி இசையில்லாத இந்தப் படத்தின் ஒலிச்சேர்க்கையில் எதிர்கொண்ட சவால்களை, உண்மைக்கு நெருக்கமான திரைப்படத்தைக் கொடுப்பதற்காக ஒரு கலைஞன் அனுபவித்த பாடுகளை, அவஸ்தைகளை, தான் நினைத்தது கிடைத்தபோது பற்றிக்கொண்ட மகிழ்ச்சியை ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்படி 420 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உழைப்பைக் கொட்டிக் கொண்டுவந்திருக்கிறார் அண்ணன் செழியன்.
”ஒரு கவிஞன் இந்த அளவிற்குச் சித்ரவதைக்குள்ளானால் அவன் தன்னுடைய துயரங்களைப் புகழாகவும் பொன்னாகவும் மாற்றிவிடுவான்” என்ற மாயகோவ்ஸ்கியின் கவிதை ஞாபகம் வருகிறது இந்நேரம். வாடகைக்கு வீடுதேடி அலைந்த அலைச்சல், சந்தித்த மனிதர்கள், கிடைத்த அனுபவங்கள், பாருங்களேன்! டுலெட் திரைப்படமாக மாறியிருக்கிறது. உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் கலைஞர்கள் உலகெங்கும் ஒரேமாதிரிதான் இருக்கிறார்கள். ஒரேமாதிரிதான் சிந்திக்கிறார்கள்.
இந்தப் புத்தகம் இரத்தமும் சதையுமான ஒரு வாழ்விலிருந்து வெளிப்பட்டது என்பதையும், வாழ்க்கையை நேர்மையாகவும், உண்மையாகவும் அணுகிய ஓர் அற்புதமான கலைஞனின் முழுப்பிரசம் என்பதையும் வாசிக்கும்போதே புரிந்துகொள்ளலாம். ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் எண்ணிலடங்கா அவஸ்தைகளும், மிகச்சரியான திட்டமிடல்களும், எல்லைகளற்ற காத்திருப்புகளும் எழுதப்பட்ட விதத்தில் கண்டிப்பாக உங்களைத் துடிதுடிக்கச் செய்யும். அனுபவித்ததைத்தான் சொல்கிறேன்.
2019 ஆம் ஆண்டு வெளிவந்த டுலெட் திரைப்படத்தை நிச்சயம் நீங்களும் பார்த்திருப்பீர்கள். பெரும்பாலான மனிதர்கள் பணத்தை மட்டுமே தேடியபடி திசைகளெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் பெருநகரத்தின் வாழ்க்கைச் சூழலில், எளிய மக்களின் வலிகளும், வேதனைகளும் ஒரு கலைஞனின் கண்களுக்கு மட்டுமே தரிசனமாகக் கூடியவைகள். எளிய மக்களையும், அவர்களின் வாழ்க்கைப் பாடுகளையும் தரிசித்த கலைஞர்கள்தான் இந்த உலகின் உன்னதமான திரைக்காவியங்களை உருவாக்கிக் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட உன்னதங்களின் வரிசையில் நிச்சயமாக இருக்கக்கூடியதுதான் டுலெட் திரைப்படம்.
இலாபநோக்கம் மட்டுமே கொண்ட முதலாளிகளின் ஆக்கிரமிப்பால் இன்று திரைப்படத்துறை வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், கலையை சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தக்கூடிய படைப்பாளர்கள் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு நடுத்தரவர்க்கத்துக் குடும்பத்தின் ஆசைகளும், அவஸ்தைகளும் நிறைந்த வாழ்வை, அதன் அத்தனை பரிமாணங்களோடும் வெளிப்படுத்திய டுலெட் திரைப்படம் கலையின் மீதான நம்பிக்கையையும், தமிழ் சினிமாவின் மீதான ஆசையையும் இன்னும் அதிகரிக்கச் செய்கிறது. முக்கியமாகச் சிகரங்களை நோக்கிய பயணத்திற்கு இன்னும் உற்சாகம் தருகிறது.
மன்னரைப் புகழ்ந்து பாடுங்கள், ஏராளமான பொன்னும், பொருளும், புகழும் கிடைக்கும் என்று அரசவையிலிருந்து அழைப்பு வருகிறது. ”நிதி சால சுகமா” என்று கேட்டு நிராகரிக்கிறார் அழைப்பை மட்டுமல்ல, அத்தனை பொன்னையும் அத்தனை பொருளையும். தொடர்ந்து காவேரி நதிக்கரையில் தியாகராஜரின் இதயத்திலிருந்து இசை ஆறாய்ப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது. பெரிய மாற்றமெல்லாம் இல்லை, இன்றும்கூட நிதி சால சுகமா என்று கேட்கக்கூடிய கலைஞர்களால் மட்டுமே டுலெட் போன்ற சினிமாக்களை உருவாக்க முடியும் என்பதே உண்மையாக இருக்கிறது.
இன்று நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்திய திரைப்பட மேதை சத்யஜித் ரே, தன்னுடைய பதேர் பாஞ்சாலியை அவ்வளவு எளிதாக எடுத்துவிடவில்லை. தன்னுடைய காப்பீட்டு அட்டையை அடகுவைத்து படப்பிடிப்பை நடத்துகிறார். தன்னுடைய மனைவியின் நகைகளை அடகுவைத்து படப்பிடிப்பைத் தொடர்கிறார். தான் நேசித்த கலைக்காக, தான் நம்பிய கலைவடிவத்திற்காக எல்லாவற்றையும் மீறி முயற்சி செய்கிறார். கிட்டத்தட்ட டுலெட்டும் கூட எல்லாவற்றையும் மீறி நிறைந்த நம்பிக்கையோடு செய்யப்பட்ட முயற்சி என்பது இதோ இந்தப் புத்தகத்தின் மூலமாக உங்களுக்குப் புரியவரும்.
சந்தையின் தேவைக்குப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதைப்போல, திரைப்படங்களும் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கு எல்லாமும் தெரியும், என்ன செய்யப் போகிறீர்கள்? தியாகைய்யரின் காலம் வேறு. இன்று ”நிதி சால சுகமா” என்று கேட்டால் நீங்கள் முதலாளித்துவத்தை எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குப் பிடித்த படத்தை, உங்களுக்குப் பிடித்த மாதிரி எடுக்க நினைத்தால் மாற்றத்தை நோக்கிய பயணத்தைத் தொடங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்ததும் எனக்குள் எழுந்த கேள்விகள் இதுதான். நாம் யாருக்காகத் திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்காகவா? மக்களுக்காகவா? முதலாளிகளுக்காகவா?. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் டுலெட் சினிமா. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் டுலெட் திரைக்கதையும் உருவாக்கமும் புத்தகம்.
வருங்காலத்தில் உங்களுடைய திரைப்படங்களில் உண்மையை நெருங்கிச் செல்ல விரும்பினீர்கள் என்றால், உங்களுடைய திரைப்படங்களில் வாழ்க்கையை அதன் அத்தனை பரிமாணங்களோடும் போலித்தனங்கள் இல்லாமல் வெளிப்படுத்த விரும்பினீர்கள் என்றால் ஒரு பாடப்புத்தகத்தைப் போல இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டுமா? புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்களேன்!
இந்த நூலின் முத்தாய்ப்பான முன்னுரையை இப்படியாக முடிக்கிறார். . .
” உங்கள் முதல் படத்தை எழுதத் துவங்குங்கள். எழுதியிருந்தால் துணிச்சலாக எடுக்கத் துவங்குங்கள். யாரையும் குறை சொல்லாதீர்கள். எதற்காகவும் தயங்காதீர்கள். யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். எதிர்கொண்டவன் என்ற முறையில் சொல்கிறேன். எவ்வளவு இருள் சூழ்ந்தாலும், அதற்குள் வெளிச்சம் இருக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் அதற்குள் வழி இருக்கிறது. உங்கள் கலைக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால், அது ஒருபோதும் உங்களைக் கைவிடாது. துவங்குங்கள். தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்குங்கள். உங்கள் முதல் படத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.”
– ஒளிப்பதிவாளர், இயக்குநர். செழியன்
1 comment
“டு லெட்” திரைக்கதை
ஆக்கமும் உருவாக்கமும் குறித்த பெரிய நூலை வாசித்து முழுக்க உள்வாங்கி அதன் அர்த்த அடர்த்தியை அழகுறச் சொல்லியுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்வது எளிது. ஆனால் அத்திரைப்படத்தை உருவாக்கி தயாரிப்பது எவ்வளவு
கடினம் என்பதை விவரித்திருக்கிறார் இயக்குநர் செழியன். இந்நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்பது கவிஞர் ஜோசப் ராஜாவின் எழுத்துக்கள் தரும் உந்துதல்.
நூலை வாங்கிப் படியுங்கள். அதற்கு முன்பாக நூல் மதிப்புரையையும் படித்து விடுங்களேன்.