புத்தகங்கள் வாங்க : https://josephraja.com/product-category/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
வாசகனாகப் புத்தகக் கண்காட்சி பற்றிய என்னுடைய பார்வையும், எழுத்தாளனாகப் புத்தகக் கண்காட்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிச்சயம் வேறு வேறானது. கால்கடுக்க நடந்துசென்று பலவருடங்களாகப் புத்தகங்களை வாங்கியது எப்போதும் இனிமையான நினைவுகள்தான். பத்து வருடங்களுக்கு முன்னால் சோவியத்தில் இருந்தும், சீனத்தில் இருந்தும் அனுப்பப்பட்ட புத்தகங்களின் இறுதிப் பிரதிகளை நானும் என்னுடைய தோழர்களும் வாங்கி முடித்தோம். இப்போது அவையெல்லாம் புதிய வடிவத்தில், அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
புரட்சி நடக்கவில்லை என்றாலும், புரட்சிகரப் பதிப்பகங்கள் நிறைய வந்திருக்கின்றன. புதிய மாற்றமாக எழுத்தாளர்கள் நிறைப்பேர் பதிப்பகம் தொடங்கிருப்பதைப் பார்க்க முடிகிறது. வரும்காலங்களில் எழுதும் எல்லோரும் பதிப்பகம் தொடங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சமூக மாற்றத்தில் அக்கறைகொண்ட ஒருசில நல்ல பதிப்பகங்களும் வந்திருக்கின்றன. வியாபார ஆசையில் மட்டுமே முளைத்திருக்கும் பதிப்பகங்களும் முளைத்திருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும் எல்லோரும் புத்தக கண்காட்சிக்கு செல்லுங்கள், உங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி வாசியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக குழந்தைகளுக்கு அந்த உலகத்தை அறிமுகம் செய்யுங்கள். அவர்களின் எதிர்காலத்திற்குச் செய்யும் பெரும் உதவியாக இருக்கும்.
ஓ! நான் சொல்ல வந்தது இதுதான். கவிதைக்கான வாசகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள் என்று பதிப்பகங்கள் அத்தனையும் முடிவுசெய்திருந்த நேரத்தில்தான், நான் தீவிரமாக எழுதத் தொடங்கியிருந்தேன். நிலைமையை ஆய்வுசெய்து அதிர்ச்சியடையாமல், அன்பு நண்பர் இசாக்கின் உதவியுடன் சொந்தச் செலவில்தான் ஏழு புத்தகங்களையும் வெளியிட்டேன். ஒவ்வொரு புத்தகத்தையும் என்னுடைய தோழர்கள் ஆயிரம் பிரதிகள் வரையிலும் கொண்டு சென்றார்கள். அவர்களின் தோழமைக்கு கடன்பட்டவனாகத்தான் இருக்கிறேன்.
தவாரிஷ் லெனின் கவிதைப் புத்தகத்தை மதிப்பிற்குரிய தோழர் நல்லகண்ணு அவர்கள் ஐநூறு பிரதிகள் வரையிலும் விற்றுமுடித்து, என்னை அழைத்து அந்தப் பணத்தை வலுக்கட்டாயமாகக் கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். என்னிலும் பொருளாதாரத்தில் கீழிருக்கும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் என்ன செய்வார்கள் என்று நினைத்தால் துயரம் சூழ்கிறது. வரும்காலத்தில், முடிந்தால் கவிதைகளுக்காக மட்டும் பதிப்பகம் கொண்டுவர முயற்சிக்கலாம். கண்காட்சியில் இடம்பெறவும் கூடுதலாக முயற்சிக்கலாம். மக்கள் கூடும் இதுபோன்ற இடங்களை நாமும் விட்டுவிடக் கூடாதல்லவா.
ஆக, தோழர்களே இப்போதைக்கு என்னுடைய புத்தகங்கள் தேவையென்றால் இந்த இணையதளம் மூலமாகவே வாங்கிக் கொள்ளுங்கள் ( புத்தகங்கள் வாங்க என்ற இணைப்பில்). புத்தகக் கண்காட்சி முடிந்ததும் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்டுவர முயற்சிக்கிறேன். இந்த வார்த்தைகளும், இந்த வாழ்க்கையும் உங்களுக்கானதுதான். தொடர்ந்து இயங்குவோம். விரும்பிய மாற்றங்களை அடைய முயற்சிப்போம்.
கவிதைக்கு வாசகர்கள் இல்லையென்று என்னிடம் யாராவது சொன்னால், எதிர்வினை எப்படி இருக்கும் என்று இப்போது சொல்லமுடியாதுதான். ஏனென்றால் கவிதையின் வாசகர்களை இரத்தமும், சதையுமாகச் சந்தித்துக் கொண்டிருப்பவன் நான். ஒருபக்கம் சமூக மாற்றத்தை வலியுறுத்தும் கவிதைகளை வரவேற்பவர்கள் பெருகியிருக்கிறார்கள். இன்னொருபக்கம் கவிதை வியாபாரிகள் அவர்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
எது எப்படியாகினும் இலக்கை நோக்கிச் செல்வோம் நாம். நல்ல கவிதைகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். நல்ல கவிஞர்களை கூடிக் கொண்டாடுங்கள். இதுவரையிலும் செய்ததை, இனி செய்யாதீர்கள். கவிதை எப்போதும் சமூகத்திற்கானதே. கவிஞனும் சமூகத்திற்கானவனே.
புத்தகக் கண்காட்சிக்குச் செல்லுங்கள். முடிந்தால் அந்தத் திருவிழாவில் சந்திப்போம் நாமும்.
ஜோசப் ராஜா
2 comments
கவிஞர் ஜோசப் ராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.கவிதைக்கான வாசகர்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கிறார்கள் பெரும்பகுதியான வாசகர்களை திரைப்படப் பாடல்களில் முழ்கி இருப்பதை நாம் அறிவோம். இப்பாடல்கள் தாளமிடப்பட்ட கவிதைகள்.ஆகவே கவிதைகளைத் தாளத்தோடு இணைப்போம். எவ்வளவோ இணைப்பு வழிகள் வளர்ந்து விட்டன. வழிமுறைறை வளப்படுத்துவோம்.
புத்தகக் கண்காட்சி காலம்.
இக்காலத்தில் புதிய நூல்களை வெளியிடுவதும் நூல்களை ஏராளமாக வாங்கி வருவதும் நிகழும்.
எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் படும் இன்னல்கள் ஏராளம் .
அதுவும் ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமென்றால் எழுத்தாளர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. தன் அனுபவ அடிப்படையிலான உண்மை நிலையை ஜோசப் விவரித்துள்ளார். அதுவே பெரும்பான்மையான எழுத்தாளர்கள் நிலை.
புத்தகக் கண்காட்சிக்கு செல்லுங்கள். புத்தகங்களை வாங்குங்கள். புத்தகங்களைப் படியுங்கள்.
நன்றி.