கேள்விக்குறியாகும் மானுட நாகரீகம்

ன்று காலை மின்சார இரயில் பயணத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்தித்தாள் வாசிப்பதில் மூழ்கியிருந்த வயதான மனிதரின் எதிரில் உட்கார்ந்தேன். காற்றை விலக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் மின்சார இரயிலால், வெளியிலிருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இதயத்திற்கு அவ்வளவு இதமாக இருந்தது. தினமும் பார்க்கும் மரங்கள்தான் ஆனாலும் அழகாக இருந்தன. தினமும் பார்க்கும் வானம்தான் ஆனாலும் புதிதாக இருந்தது.

மனிதர்களைப் போலல்ல, இயற்கை ஒருபோதும் சலிப்படையச் செய்வது கிடையாது. எதிரிலிருந்தவர் திடீரென்று வாசித்துக் கொண்டிருந்த செய்தித்தாளை ச்சீ என்று சொன்னபடி வேகமாக வீசினார். நான் உட்பட பக்கத்தில் இருந்த எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் கண்கள் கலங்கியிருந்தன. துடைத்துக் கொண்டார். அவர் பதட்டமாக இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது. தண்ணீர் வேண்டுமா என்று கேட்டேன், பையில் கொண்டு வந்திருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். சிறிதுநேரம் அமைதியாக இருந்தார்.

“என்ன ஸார், கொடுமையா இருக்கு. அடுத்த வருசம் ரிட்டயர்ட் ஆகப்போறேன், இத்தின வருசத்துல பேப்பர் படிக்கவே பயமா இருக்கிறது இப்பதான் ஸார். கொல்கத்தாவுல ஒரு டாக்டர் பொண்ண அநியாயமாக் கற்பழிச்சுக் கொன்னுருக்கானுங்க. நீதிகேட்டு போராடிக்கிட்டு இருக்காங்க அங்க இருக்கிற மக்கள். இந்தப் பக்கம் மகாராஸ்ட்ராவுல பிஞ்சுக் கொழந்தைங்களத் தொல்லை பண்னிருக்காங்க, அங்கேயும் மக்கள் போராடிக்கிட்டு இருக்காங்க. நம்ம ஊரு மட்டும் லேசுப்பட்டதா என்ன, தஞ்சாவூர்ப் பக்கம் ஒரத்தநாட்ல நாலைஞ்சு பேரு சேந்து ஒரு பொண்ண கற்பழிச்சிருக்காங்க, அவளுக்காக அவளும் போராடிக்கிட்டு இருக்கா, அந்தப்பகுதி மக்களும் போராடிக்கிட்டு இருக்காங்க. எனக்கென்ன சந்தேகம்னா அரசாங்கம், போலீஸ் எல்லாம் என்னதான் பண்ணிட்டு இருக்காங்க? பெண்களையும் கொழந்தையும் பாதுகாக்கிறத விட்டுட்டு இவனுங்களுக்கு என்ன புடுங்குற வேல இருக்கு” என்று கேட்டுவிட்டு பாட்டிலில் இருந்த தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தார்.  

ஆற்றாமையிலும் கோபத்திலும் அவர்சொன்ன வார்த்தைகள் இதயத்தைக் கனக்கச் செய்ததில், வண்டியிலிருந்து இறங்கி மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். பார்க்கவே முடியாத பாலியல் பலாத்காரச் செய்திகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன பத்திரிக்கையின் பக்கங்கள். கேட்கவே முடியாத பலாத்காரச் செய்திகளால் நிறைந்திருக்கின்றன ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டிகளும். இரயிலில் நான் சந்தித்த மனிதரைவிடவும், வீடுகளில் இந்தச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற, அலுவலகத்தில் இந்தச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பெண்களின் மனநிலையை யோசித்தால், இதயம் வெடித்து விடுவதைப் போல இருக்கிறது. மனித சமூகமாக மாபெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை இனியும் மறைக்க எந்தவழியும் இல்லை.

பள்ளியிலிருந்து திரும்பிவந்த என் மகள் “கல்கத்தாவில் என்ன பிரச்சனை அப்பா” என்று கேட்டாள். எந்தக் கேள்விக்கும் பதில்சொல்லக்கூடிய எனக்கு இதயத்தை ஏதொவொன்று அடைத்துக்கொண்டு வார்த்தைகள் வரமறுத்தன. எத்தனை வீடுகளில் எத்தனை குழந்தைகள் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள். எத்தனை வீடுகளில் எத்தனை பெற்றோர்கள் பதில்சொல்ல முடியாமல் பதறிப்போயிருப்பார்கள். இப்படியாக இந்த தேசத்தின் ஒவ்வொரு பெண்களில் இதயத்திலும் அகலாத அச்சத்தை ஆழமாக விதைத்திருப்பது மட்டும்தான் சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்களில் நாம் செய்து தொலைத்தது என்பதை நினைத்து இந்த தேசத்தின் ஒவ்வொரு மனிதனும் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த மண்ணில் எந்தப் பயமுமில்லாமல் ஒருபெண் நடமாடக்கூடிய உத்திரவாதத்தை நம்மால் எப்போது கொடுக்கமுடியும் என்ற கேள்விகளை எல்லோரும் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். எங்கோ நடக்கிறது, யாருக்கோ நடக்கிறது என்றிருந்து விடக்கூடிய செய்தி அல்ல இது. சமூகத்தின் இதயம் அழுகிவிட்டது. அவ்வளவுதான். என்ன செய்யப்போகிறீர்கள்.

இவர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். தங்களுடைய மகத்தான ஆட்சியின் மறுக்கமுடியாத அவலங்களை ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிகாரத்திற்காக அலைந்துகொண்டிருக்கும் அற்பர்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று பேசுவார்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் வேறொன்று பேசுவார்கள். இந்த ஊடக அற்பர்களும் கூட அதிகாரத்திடம் வாலாட்டிக்கொண்டு, சில செய்திகளை ஊதிப்பெருக்குவார்கள், சில செய்திகளை மூடி மறைப்பார்கள். இந்த அற்பர்கள் யாருக்கும் பெண்களைப் பற்றியோ, குழந்தைகளைப் பற்றியோ எப்போதும் எந்த அக்கறையும் இருந்ததேயில்லை. காஷ்மீரின் கத்துவாக் கிராமத்தில் கற்பழித்துக் கொல்லப்பட்ட குழந்தையின் அழுகுரல் இப்போதும் எனக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறது. பேருந்தில், பணியிடத்தில், பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில், புதர்களில், மறைவிடங்களில் எங்கும் எங்கெங்கும் கற்பழிப்பின் கரங்கள் நீண்டிருக்கின்றன. வேடிக்கை பார்க்கும் நேரமில்லை. வெறுமனே இருக்கும் நேரமில்லை.

எதாவது செய். இந்த இழிவுகளுக்கு எதிராகப் போராடு. போராடுகிறவர்களோடு இணைந்துகொள். கவிதை எழுது. எழுதப்படும் கவிதையை எடுத்துச்செல். ஆட்சியாளனைக் கேள்விகேள். முகநூலில் எதிர்ப்பு தெரிவித்திடு. பணியிடத்தில் உன்னோடு வேலைசெய்யும் பெண்ணிடம் கண்ணியமாக நடந்துகொள். பிள்ளைகளுக்கு கண்ணியத்தைக் கற்றுக்கொடு. சுற்றிலும் பார், குற்றங்களால் நிறைந்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்கள், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் எல்லாமும் எல்லாமும் ஒரே வரிசையில் வைத்துப் பார்க்க வேண்டியதுதான். அத்தனையும் ஆணென்ற திமிரில், அதிகாரத்தின் திமிரில், பணவெறியின் திமிரில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பவைதான். இத்தனை இழிவுகளையும் இயல்பை மீறினால் மட்டுமே மாற்றமுடியும். இயல்பான வரையறைகள் மீறப்படுவது வேறொன்றுமில்லை, புரட்சிதான். அழுகிவிட்ட இந்தச் சமூகத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்தியாக வேண்டும்.

புரட்சி என்பது அவ்வளவு சாதரணமான காரியமில்லைதான். இந்தக் குற்றங்களும்கூட அவ்வளவு சாதாரணமானதல்லவே!    

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 21/08/2024 - 1:46 PM

நள்ளிரவில் இளம்பெண் உடல் முழுவதும் நகையணிந்து கொண்டு ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பத்திரமாகச் சென்று திரும்புவதே சுதந்திரம் என்றார் மகாத்மா காந்தி.

நாடு 78 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய காலத்தில்தான் மேற்குவங்க மாநிலத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி மாண்டு போனார். அது மட்டுமன்றி நாடு முழுவதும் தொடரும் இத்தகைய பாலியல் வன்முறைக்கு எதிராக நமது போராட்டம் தொடர வேண்டியது அவசியம்.

அத்தகைய அவசியத்தை கவிஞர் ஜோசப் ராஜா தமது பதிவின் மூலம் வலியுறுத்துவதைப் படியுங்கள். பரப்புங்கள்.

Reply

Leave a Comment