இந்தப் பதினேழு வருடங்களில் சென்னையில் நான் மாறிமாறி வசித்தது நான்கைந்து பகுதிகள்தான். அனகாபுத்தூருக்கு வந்து பத்துவருடங்கள் மின்னலைப்போல ஓடி மறைந்துவிட்டன. நான் வசித்துக்கொண்டிருக்கும் இந்தத் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவை ஏற்படுத்திய பெருந்தொற்றானது, ஒருபக்கம் சிதறிக்கிடந்த மனிதர்களை ஒன்றுசேர்த்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். அப்படித்தான் அவரவர் வேலைகளைப் பார்த்து ஓடிக்கொண்டிருந்த நாங்களும், பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள் மெல்லத் தளரத் தொடங்கியதும், ஒன்றுசேர்ந்து விளையாடத் தொடங்கினோம். வீடுகட்டப்படாமல் வெறுமனே கிடந்த மனைகளைச் சுத்தம்செய்து குழந்தைகளை விளையாட வைத்தோம், நாங்கள் ஒருபக்கம் விளையாட்டைத் தொடர்ந்தோம்.
விளையாட்டை விடவும் மனிதர்களை ஒன்றுசேர்க்கும் ஆற்றல் எதற்கும் இருக்கிறதா என்ன? நண்பர்கள் ஒவ்வொருவராக இணைந்து கொண்டே சென்றார்கள். நான்கு சுவர்களுக்குள் தங்களுடைய வாழ்க்கைக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தவர்கள், தெருவிற்கு வந்ததும், பொதுப்பிரச்சனைகளில் தலையிடத் தொடங்கினார்கள். எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற தைரியம், எதையும் செய்துவிடலாம் என்ற துணிச்சல் எல்லோருக்கும் அதிகமாகிக் கொண்டே சென்றது. போட்டியை, பொறாமையை மட்டுமே மனிதர்களுக்கு இடையில் வளர்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகம் அவ்வளவு எளிதாக யாரையும் சேரவிடாது. அதையும் மீறிச் சேர்ந்துவிட்டால், எப்படிப் பிரிப்பது என்பதற்கு ஆயிரம் காரணங்கள் முளைத்துக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் மீறித்தான் மக்கள் ஒற்றுமையாகவும், அன்பாகவும் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாங்களும்கூட நட்பைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
இதுவரையிலும் எங்களுக்குள் இருந்த கூட்டுணர்வைத் தெருமுழுவதும் விரிவுசெய்யலாமா என்று யோசித்து, எல்லோரும் சேர்ந்து தைத்திருநாளை, பொங்கல் விழாவைச் சிறப்பாக கொண்டாடலாம் என்று முடிவுசெய்தோம். இரண்டு வாரங்கள் எப்படி ஓடிக்கடந்தன என்று தெரியவில்லை. ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினோம். ஒவ்வொரு மனிதனையும் முகமுகமாகச் சந்தித்தோம். உண்மை தெரியுமா தோழர்களே! நான்கு சுவர்களுக்குள், அடைபட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னால் ஒவ்வொருவரும் அன்பிற்காகத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து ஆடலாம், எல்லோரும் சேர்ந்து பாடலாம் வாருங்கள் என்று தன்னைத் தெருவிற்கு இழுத்துச்செல்ல ஒருமனிதன் வந்துவிடமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, தற்சமயம் கைப்பேசிகளுக்கு மாறியிருக்கும் குழந்தைகளை பாடவும், ஆடவும், விளையாடவும் வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்துவிடாதா என்றுதான் காத்துக்கிடக்கிறார்கள் எல்லோரும்.
முப்பது குடும்பங்களுக்கும் மேல், காலையிலேயே தெருவில் கூடினோம். மகிழ்ச்சிப் பொங்கல் வைத்தோம். குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மறைந்திருந்த புன்னகையை எல்லோர் முகங்களிலும் பூக்கச் செய்ந்திருந்தது பொங்கல் விழா. புதுப்பானை மட்டுமல்ல பொங்கி வழிந்தது, கூட்டுணர்வில் நிறைந்திருந்த அன்பின் இதயங்களும்தான். மாலையில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, பெற்றோர்களை மட்டுமல்லாமல், பார்வையாளர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்கள். நிகழ்வு முடிந்து சிரித்த முகங்களில் அத்தனை வலியும் அடங்கிப்போனது. வெற்றியின் மகிழ்ச்சியை நண்பர்களின் அணைப்பில் உணர்ந்துகொள்ள முடிந்தது. இறுதியாக, ஒரு கவிஞனாக நான் உணர்ந்துகொண்டது இதுதான், இதுமட்டும்தான். மனிதர்கள் அன்பிற்காகத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் சேர்ந்துகொள்வதற்குத்தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படியே தொடரட்டும் நண்பர்களே, எப்போதும் உடனிருப்பேன். வாழ்த்துகள்.
ஜோசப் ராஜா
