காத்திருக்கும் சாவிகள். இந்த நூலினை மூன்று காரணங்களுக்காக எனக்குப் பிடிக்கிறது.
1.
தமிழ்க் கவிதை மரபில் அகம் புறம் என இரு பிரிவுகள் இருக்கின்றன. அகம் காதலையும் காதல் சார்ந்த மன உணர்வுகளையும்,புறம் போரினையும் போர்சார்ந்த புற வாழ்க்கையையும் சொல்கிறது. இந்தக் கவிதை நூல் போர் சார்ந்த அக உணர்வினைச் சொல்வதன் மூலம் புதிய சொல்முறையைப் பாடுகிறது. இதுபோல போர், அதுசார்ந்த இழப்புகளையும், மனச்சிக்கல்களையும் நூல் முழுக்கச் சொல்வதால் இந்த நூலை எனக்குப் பிடிக்கிறது.
தமிழில் முரண்தொடை என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. முரண்பட்ட இரண்டு விஷயங்களைக் அருகருகே உவமையாக வைப்பது.
இசையில் முரண் இருக்கிறது. Contrary motion என்று வழங்கப்படும் இந்த முரணை இரண்டு இசைக் கருவிகள் ஒரே நேரத்தில் ஒன்றை ஆரோகணத்திலும் இன்னொன்றை அவரோகணத்திலும் ஒரே நேரத்தில் அருகருகே வைப்பது.
நிழற்படத்தில் முரண் இருக்கிறது. நிழலையும் ஒளியையும் அருகருகே முரணாக வைப்பது. இதற்கு contrast என்று பெயர்.
திரைப்படத்தில் juxtapose என்று ஒரு விஷயம் இருக்கிறது. எதிர் எதிரான இரண்டு ஷாட்களை அருகருகே வைப்பது.
ஹைகூ கவிதையின் சிறப்பும் இந்த முரண்தான். முதல் வரியையும் இரண்டாவது வரியையும் நேர்மறை, எதிர்மறை எனக்கொண்டால் இரண்டும் மூன்றாவது வரியில் சேரும் போது ஒரு பொறி, ஒரு வெளிச்சம்,ஒரு மலர் மலரும்.
இவ்வாறு எதிர் எதிரான விஷயங்களை அருகருகே வைக்கிற உத்தியை ஜோசப் ராஜா கவிதையில் செய்கிறார்.காலைப் பொழுதில் நம் அன்றாட செயல்களை வரிசையாக அடுக்கிவைத்து அதை அடுத்து காஸாவின் அகதிகள் முகாமின் காலைப் பொழுதை அடுக்குகிறார். அவர் செய்வது இரண்டு காட்சிகளையும் அருகருகே வைப்பது மட்டும்தான். வெடிகுண்டுகள் நம் மனதில் வெடிக்கின்றன.
இங்கும் அங்கும் பறக்கும் டென்னிஸ் பந்து cut to இங்கும் அங்கும் பறக்கும் விமானங்கள்.
முரண் தொடையை, contrary motion ஐ contrast ஐ juxtapose ஐ மொழி உருவாக்கும் காட்சிகளின் வழியே செய்வதால் இந்த நூலை எனக்குப் பிடித்திருக்கிறது.
2
சமகாலத்தின் மனநிலையை ஆய்வு செய்யும் மனவியல் நிபுணர்கள் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். 2000த்துக்குப் பிறகான இந்த 24 வருடங்களில் மனித மனத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் ஒரு கண்ணாடி செருகப்பட்டுவிட்டது. இந்தக் கண்ணாடித்திரை உங்களைத் தனிமைப்படுத்துவது மட்டுமல்ல மற்றவரை நீங்களும், உங்களை மற்றவரும் தொடவிடாமல் செய்துவிட்டது.
ஒரு மனிதர் பசியில் உங்களிடம் உதவி கேட்கிறார் என்றால் அவரை நீங்கள் கண்ணாடி வழியாகத்தான் பார்க்கிறீர்கள். அவர் கேட்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர் குரல் உங்களுக்குக் கேட்காது.
பூங்காவில் ஒரு பெரியவர் தனியே அமர்ந்து அழுகிறார் என்றால் இருபது வருடங்களூக்கு முன்பு என்றால், அவரை அணுகி என்னாச்சு? என்று கேட்க ஆட்கள் இருந்தார்கள். இப்போது ஒருவர் அழுதால் அவரை வேடிக்கை பார்ப்பீர்கள். அல்லது உங்கள் கைபேசியில் அவரைப் படம் எடுத்து அவரைக் குறித்து சமூக ஊடகத்தில் போஸ்ட் எழுதுவீர்கள்.
இந்த மனநிலை ஏன் வருகிறது? உங்கள் முன்னால் கண்ணாடித்திரை இருக்கிறது. அது உங்கள் செல்போனின் திரை. உங்கள் மடிக்கணினியின் திரை. உங்கள் தொலைக்காட்சியின் திரை.
எதையும் தொடுகிற உணர்வை நீங்கள் இழந்து வருகிறீர்கள். உங்களுக்கான காய்கறியை நீங்கள் தொட்டு வாங்கவில்லை zomato ஆள் வாங்கி வருகிறார். உங்கள் குழந்தைகளுக்கான ரொட்டிகளை நீங்கள் தொட்டு வாங்கவில்லை. இன்னொருவர் வாங்கி வருகிறார். நீங்கள் தொடவேண்டியது கண்ணாடியை. கண்ணாடித் திரையை. அதைத் தொட்டால் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்.
எனவே இந்தக் கண்ணாடித்திரை வழியே உலகைப் பார்க்கிறீர்கள். திரையரங்கில் இருந்தாலும் பெரிய திரையில் படம் ஓடுகிறது. நீங்கள் இடையிடையே உங்கள் கண்ணாடித் திரையைப் பார்த்துக் கொள்கிறீர்கள். எதிரில் ஒரு கடற்கரை இருக்கிறது. நீங்கள் கண்ணாடித்திரை வழியே அதைப் பார்க்கிறீர்கள். அதை ஒரு படமும் எடுத்துக் கொள்கிறீர்கள். எனவே உங்கள் சுற்றுலாவில் நீங்கள் சேகரிப்பது சுற்றுலாவின் அனுபவத்தை அல்ல. கண்ணாடித்திரை வழியே நிழற்படங்களை, தற்படங்களை.
இதனால் நம் மனதில் என்ன நடக்கிறது. மனிதனுக்கே உரிய நெகிழ்வுத் தன்மையை நாம் இழந்து வருகிறோம் அல்லது முழுமையாக இழந்துவிட்டோம். இந்த நெகிழ்வுத் தன்மையை இழப்பதால் வேறு என்னவெல்லாம் இழக்கிறோம். சுவையை, ரசனையை, கோபத்தை, அறச்சீற்றத்தை இழக்கிறோம். இதையெல்லாம் இழக்கையில் முக்கியமான ஒன்றையும் இழக்கிறோம். empathy. பரிவுணர்வு. சக மனிதனின் துன்பத்தில், பிரச்சினையில் ,சோகத்தில், இழப்பில் நாமும் பங்கெடுக்கிற பரிவுணர்ச்சியை இழக்கிறோம்.
பாசமலர் என்றொரு திரைப்படம் பார்க்க என் சிறுவயதில் அம்மா என்னை அழைத்துச் சென்றிருந்தார். திரையில் அண்ணனும் தங்கையும் அழும்போது விசும்பும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். என் அம்மா அழுது கொண்டிருந்தார். சுற்றிலும் பார்த்தேன். படம் பார்த்த எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். ஏன் அழுகிறார்கள்? என்பது அந்த வயதில் எனக்கு வியப்பாக இருந்தது.
நான் பெரியவனாகி சேது படம் பார்க்கிறேன். இறுதிக் காட்சியில் நாயகி இறந்து விடுவாள். பார்க்க வரும் நாயகன் இனி மனிதர்களுடன் வாழ்வதை விட மனநலம் குன்றியவர்களுடனே வாழலாம் என்று திரும்பி நடப்பான். திரையரங்கம் அமைதியாக இருக்கும். இதுவரைக்கும் இந்தக் காட்சியில் எதுவும் நடக்கவில்லை. திரைப்படத்திலும் அமைதி. திரையரங்கிலும் அமைதி. அப்போது, ’வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி’ என்று ஒரு கரகரத்த குரலில் பாடல் எழும்பியதும் உடல் சிலிர்க்கிறது. அருகில் இருப்பவர் தேம்பி அழுகிறார். சுற்றிலும் பார்க்கிறேன். எல்லோரும் அழுகிறார்கள். ஏன் அழுகிறார்கள் என்பது எனக்கு வியப்பாக இல்லை. ஏனெனில் நானும் அழுகிறேன்.
இளையராஜா என்னைத் தொடுகிறார். திரையரங்கில் இருக்கும் அனைவரையும் தொடுகிறார். அந்த தொடுதல்தான் சிலிர்ப்பை உருவாக்குகிறது.
இப்போது திரையிலிருந்து யாரும் உங்களைத் தொடமுடியாது. ஏனெனில் கண்ணாடித் திரை இருக்கிறது. இன்று பல திரைப்படங்கள் ஏன் ஓடுவதில்லை? அவர்களும் உங்களைத் தொட நினைப்பதில்லை. நீங்களும் பிறர் தொடுவதை விரும்புவதில்லை.
இவ்வாறு சமகாலத்தில் நமக்கு முன் வைக்கப்பட்ட கண்ணாடித் திரையை இந்த நூல் உடைக்கிறது. தொலைவில் அழுவது இவருக்குக் கேட்கிறது. அங்கு தெறிக்கும் ரத்தம் இவர் முகத்தில் தெறிக்கிறது.காரணம் ஜோசப் ராஜா மனிதத்துடன் இருக்கிறார். அவருக்குள் மனித மாண்பும், பரிவுணர்வும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.
தனது பரிவுணர்ச்சியின் மூலம் எழும் அறவுணர்வால் தன் கவிதைகளின் ஒவ்வொரு சொல்லையும் கற்களாகக் கொண்டு அந்தக் கண்ணாடியை உடைத்து விட்டார்.
எனவே இந்த நூல் எனக்குப் பிடிக்கிறது.
‘சாலை என் வீடு. காற்று என் முகவரி’ என்று எழுதினார் தர்வீஷ்.
‘தன்னை நடும் கரங்களை இந்த அத்திமரங்கள் அறிந்தால் ஆலிவ் எண்ணைய்க்குப் பதில் கண்ணீரைத்தான் சுரக்கும் என்று எழுதுகிறார்.
‘நாங்கள் விழிப்பது உயிரோடு இருக்கிறோம் என்று இந்த உலகத்துக்குச்சொல்வதற்கு என்று அலரீர் எழுதுகிறார்.
அவர் எழுதுவதில் ஆச்சர்யம் இல்லை. அவரது வீடு குண்டுவெடிப்பில் தகர்ந்துவிட்டது. அவரது உறவினர்கள் இறந்துவிட்டார்கள். அந்த இழப்பின் வேதனையில் அவர் எழுதுவதில் ஆச்சர்யம் இல்லை.
உடலில் எங்கு காயம்பட்டாலும் கண்கள்தான் அழுகிறது, அதுபோல உலகின் யார் காயம்பட்டாலும் அழுகிறவன்தான் கவிஞன். 5000 கிலோமீட்டர் தொலைவில் காஸாவில் நடப்பதற்கு சென்னையில் ஒருவர் அழுகிறார். அதுதான் வியப்பு. அதுதான் அறவுணர்ச்சி. அதுதான் கோபம்.
அதனால் இந்த நூல் எனக்குப் பிடிக்கிறது.
3
முதல்முறை வாசிக்கையில் இது கவிதையாக இருக்கிறது. இரண்டாவது முறை வாசிக்கையில் உள்ளிருக்கும் கதை வெளிவருகிறது. மூன்றாவது வாசிப்பில் இதில் இருக்கும் கதாபாத்திரங்கள் தெரிகின்றன. நான்காவது முறை வாசிக்கையில் இதற்குள் இருக்கும் திரைக்கதைகள் தெரிகின்றன.
இந்த நூலில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைக்கதைகள் இருக்கின்றன. ஒருமுறை ஈரான் இயக்குனர் மக்மல்பஃபை சந்தித்தேன். அவர் சொன்னார், சினிமா என்பது இந்தியாவில் பார்ப்பவருக்குப் பொழுதுபோக்கு, எடுப்பவருக்குத் தொழில் ஆனால் சினிமா என்பது எங்களுக்குப் போர்முறை. அவர் கையில் இந்த நூல் கிடைத்தால் ஐந்து திரைப்படங்கள் எடுத்துவிடுவார்.
தேசங்களுக்கான தடுப்புச்சுவரில் ஓவியங்கள் வரையப்படுகின்றன? வரைவது யார்? அதற்க்குள் கதை இல்லையா?
ஒரு வெண்புறா. அமைதியின் குறியீடு. அது எந்த வீட்டில் கூடு கட்டியது? அது வளர்ந்ததா? இல்லை அதை யாரும் வளர்த்தார்களா? நுட்பமாகப் பார்த்தால் இது திரைப்படத்துக்கான கதை இல்லையா?
வீடு இழந்து, உறவுகளை இழந்து அழும் குழந்தைகளைச் சிரிக்கவைக்க கோமாளிகள் வருகிறார்கள். அவர்களும் இழந்தவர்கள். இது திரைப்படம் இல்லையா?
குண்டுச்சத்தத்தில் ஒரு தாய்க்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. குழந்தை அழுகிறது. போர் நின்றால்தான் தாய்ப்பால் சுரக்கும். இது கதையில்லையா?
பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு தந்தை போகிறான். அங்கு என்ன நடந்தது? இது ஒரு திரைக்கதை இல்லையா?
நூலின் பின் அட்டையில் ஒரு பாட்டி ஆலிவ் மரத்தைக் கட்டிக்கொண்டு அழுகிறார். இதில் திரைப்படம் இல்லையா?
கவிதை பல இடங்களில் திரைமொழியில் இருக்கிறது. யுத்தகளத்தின் செய்தியாளன் என்றொரு கவிதை இருக்கிறது. ஜோசப் ராஜா யுத்தகளத்தின் கவிஞன். எனவே இந்த நூலை எனக்குப் பிடிக்கிறது.
பாலஸ்தீனம் குறித்த செய்தியைப் பார்க்க அல் ஜஸீரா தொலைக் காட்சியைப் பாருங்கள். போரின் தீவிரத்தை இசையில் உணரவேண்டுமா Mary of Gaza கேளுங்கள். ஒரு நிழற்படத்தில் அதன் தீவிரம் புரியவேண்டுமா முகமத் சலாம் எடுத்த இந்தப் படத்தைப் பாருங்கள். ஒரு ஆவணமாக அதன் கொடுமையை அறிய வேண்டுமா 5 broken cameras என்ற ஆவணப்படத்தைப் பாருங்கள். திரைப்படமாகப் பார்க்க விரும்புகிறீர்களா? paradise now பாருங்கள்.
உங்கள் மொழியில் அதன் ரத்தத்தைத் தொட்டுப் பார்க்க விரும்புகிறீர்களா?
காத்திருக்கும் சாவிகள் படியுங்கள்.
செழியன்
16.02.2025
