காத்திருக்கும் சாவிகள் – விமர்சனம் – பாலமுருகன்

ந்தக் கவிதைகள் இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்தக் கவிதைகள் இப்படித்தான் ஒருவர் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்குக் கடத்தப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கல்லூரி மாணவர்களிடம் இந்தக் கவிதைகள் வழியாகப் பாலஸ்தீனத்தின் குறையாத வலிகளும், நீண்டகாலத் துயரங்களும், புறக்கணிக்கமுடியாத போராட்டமும் சென்று சேரவேண்டும் என்று தவித்திருந்தேன். மெல்லமெல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அது நிகழத் தொடங்கியிருப்பதில் அந்த நிலத்தின் வேதனையை, யுத்தம் தொடங்கியதிலிருந்தே சுமந்து கொண்டிருக்கும் கவிஞனாகத் திருப்தியடைகிறேன்.

கவிதைக்கான சமூகத்தேவை முடிந்துவிட்டது என்று பல முட்டாள்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் ஏன் கவிதையை உறுதியாகப் பற்றிக் கொண்டிருக்கிறேன் என்று கேள்வி வரலாம். கவிதைக்கான வாசகர்களை நான் இரத்தமும் சதையுமாக சந்திக்கிறேன். தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்காகத்தான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவி கலைவாணி அவர்கள் காத்திருக்கும் சாவிகளி புத்தகத்தை வாசித்துவிட்டு விமர்சனம் செய்திருந்தார். இணையத்தில் வாசித்திருப்பீர்கள். தன்னுடைய சக மாணவரான பாலமுருகன் அவர்களுக்குப் புத்தகத்தை அறிமுகம் செய்திருக்கிறார். பாலமுருகனும் வாசித்துவிட்டு விமர்சனத்தை அனுப்பியிருக்கிறார். இணையத்தில் திருப்தியோடு வெளியிடுகிறேன். இவரும் பேராசிரியர் சத்தியமூர்த்தி அவர்களின் மாணவர் என்பது இதயத்தில் நம்பிக்கையை நிறைக்கிறது. இளைஞர்கள் புத்தகம் வாசிப்பதில்லை, இளைஞர்கள் கவிதையைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்று உளறிக் கொண்டிருப்பவர்களே பாருங்கள். இளைஞர்கள் கவிதையின் வழியாகப் பாலஸ்தீனத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் வாசியுங்கள் பாலமுருகன். நிறைய எழுதுங்கள். இந்த நிலைமைகளை மாற்ற வேண்டியதில் முன்னணியில் இருக்கப்போவது நீங்களும், உங்களைப் போன்றவர்களும்தான். வாழ்த்துகள்.

பாலமுருகனின் விமர்சனம் :

பிரம்மாண்ட படைப்பு என்று பெருமையாக பாராட்டிக் கொள்வதா?

இல்லை பிரம்மாண்ட அவலங்கள் என்று அகங்காரமாக அலட்டிக் கொள்வதா?

தெரியவில்லை…

அவ்வளவு செறிவூடப்பட்ட கண்ணீர், அவ்வளவு செறிவூட்டப்பட்ட சோகங்கள், அவ்வளவு செறிவூட்டப்பட்ட அவலங்கள், அவ்வளவு செறிவூட்டப்பட்ட இதயத்தின் புலம்பல்கள் அத்தனையும் அவ்வளவு செறிவூட்டப்பட்ட சொற்களில் சுழல்கிறது.

பாலஸ்தீனத்தின் படுகொலை விசித்திரமாக இருந்தது, வியப்பாக இருந்தது, கற்பனையாகத்தான் இருக்கக் கூடுமென்ற என் கருத்தையும் உடைத்தெறிந்தது, என்னையும் உடைத்தெறிய வைத்தது கவிஞரின் கண்ணீர் சொட்டுக்கள்…

எத்தனை குண்டுகள் கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்திருக்கும், எத்தனை குண்டுகள் குழந்தைகளின் உயிரை விழுங்கியிருக்கும், எத்தனை குண்டுகள் பாலஸ்தீனத்தின் ஆலிவ் விதைகளைப் பஷ்பமாக்கிருக்கும், எத்தனை குண்டுகள் காஸாவில் மரண ஒப்பாரிகளைத் தூண்டிவிட்டிருக்கும் என்றெல்லாம் கேட்கும் போதே அருவருப்பாகிறது இந்த சமூகத்தின் மீது.

எத்தனையோ கவிஞர்கள் பிரசவித்திருக்கிறார்கள் விண்மீன்களை இறைந்த பருக்கைகளாக ,சிதறிய சில்லரைகளாக இவரோ முதலாளித்துவ முதலைகளின் வாயில் விநோத வாள் பற்களில் சிக்கி சிதைந்த குழந்தைகளை காட்சிப்படுத்தியிருக்கிறார்.

விடுதலை எப்போது பாலஸ்தீனியத்தின் பசுமை காட்சிகளுக்கு, காஸாவின் காலநிலைகளுக்கு, சிறை பிடிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டங்களுக்கு , குண்டுகளால் கொல்லப்பட்ட ஆலிவ் விதைகளுக்கு, மறைந்த கலாச்சார மரபுகளுக்கு, கானலாக இருக்கும் புத்தாண்டிற்கு, புதிதாய் நடமாட இருக்கும் புதிய தலைமுறைக்கு எப்போது விடுதலை அந்த அப்பாவி இனத்திற்கு … என்று சொல்லிக் கொண்டே போகலாம்… காத்திருக்கும் சாவிகள் எப்போது காணும் அதனின் இன்ப பக்கத்தை … இறுதியாய்,

இவரின் வரிகள் வெறும் வரிகள் மட்டுமா? வலிகள் இல்லையா?

 

பா.பாலமுருகன்

முதுகலைத் தமிழ், தமிழ்த் துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர்.

Related Articles

Leave a Comment