தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் அன்புத் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய மாணவி கலைவாணி அவர்களிடம் காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். நூலை வாசித்த கலைவாணி பாலஸ்தீனத்தின் பாடுகளை உணர்ந்து இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியிருந்தார். இதுதான் அவர் எழுதும் முதல் விமர்சனம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனால்தான் இதை இணையத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தேன். இன்னும் நிறைய எழுதுங்கள் கலைவாணி. இதுபோல் இன்னும் நிறைய மாணவர்களை உருவாக்குவீர்கள் என்று மனதார நம்புகிறேன் சத்தியமூர்த்தி தோழரே. நன்றி தோழர். நன்றி கலைவாணி.
கலைவாணியின் விமர்சனம் :
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”, என்ற வள்ளுவனின் வாக்கே! இந்த கவிதை புத்தகம் இதில் நூலின் ஆசிரியர் பாலஸ்தீன யுத்த கொடுமைகளை, தனது மன வேதனையை நம்முடன் பகிர்ந்துதுள்ளார். இவரின் வலியை வார்த்தையில் உணர்கிறேன். பேராசை என்ற சாத்தானின் குழந்தையே போர் என்பேன். குவியலாய் கிடந்த மனித உடல்கள். சிகிச்சைக்காக சென்றவர்கள் கூட சிதைக்கப்பட்ட அவலம். அதனை தாண்டிய வேதனை சொந்த நிலத்தில் அகதிகளாக நின்றது!
பருவ மழை பார்த்து ரசிக்க வேண்டிய குழந்தைகள் குண்டு மழையால் நடுங்கி போயினர். கவலை அற்ற வயதில் கவலை யுற்று,காலனை கண்டு ஓடுகின்றனர். வரும் தலைமுறை இன்றி தரிசாகும் பாலஸ்தீனம். களிப்பற்ற வெற்றியைக் கண்டு கதறிய ஜபீயர். பறவைகளுக்கு பதில் பறந்த ஏவுகனைகள் “பிறக்கும் முன்பே இறந்த ஆலிவ் குழந்தைகள் “, இவ் இன்னலை கண்ட இதயத்தின் வலியை வார்த்தையால் கூற இயலாது. பாலஸ்தீனம் என்றதுமே உயிரை காப்பாற்றி கொள்வதற்காக ஓடிய குழந்தைகளின் கதறல் சத்தங்கள் என் காதுகளில் ஒலிப்பதாக உணர்கிறேன். இதனைக் கண்டவரின் மனநிலை சற்று மோசமானதாய் மாறி இருக்க கூடும். கவிஞரின் கண்ணீர் துளிகள் பேனா மை ஆனது. “காத்திருக்கும் சாவிக்கு காலம் வரட்டும், பூட்டி இருக்கும் வீடுகள் திறக்கப்படட்டும்”, அமைதி என்ற அமுதத்தினை பாலஸ்தீனமும் பருகிட வேண்டுகிறேன்.
அ.கலைவாணி