“காத்திருக்கும் சாவிகள்” அறிமுகக் கூட்டம்

ன்னுடைய அன்பிற்குரிய தோழர்.தஞ்சை சாம்பான் என்றழைக்கப்படும் ஜோதிவேல் அவர்களுடைய ஒருங்கிணைப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர், பெசன்ட் அரங்கத்தில் காத்திருக்கும் சாவிகள் நூலின் அறிமுகக் கூட்டம் நடைபெற இருக்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தோழர். ஜோதிவேல் அவர்கள் நீண்டகாலங்களாக என்னுடைய கவிதைகளோடு பயணித்துக் கொண்டிருப்பவர். ஒவ்வொரு படைப்பையும் பரவசம் நிறைந்த இதயத்தோடு உள்வாங்கிக் கொள்ளும் பரந்த இதயத்திற்குச் சொந்தக்காரர். கால்கள் வலிக்க ஒவ்வொரு இடத்திற்கும் சென்று, ஒவ்வொருவரையும் சந்தித்துப் புத்தகங்களைக் கொடுக்கக்கூடிய முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். தலைமுறையை நான் குறிப்பிட்டுச் சொல்லக் காரணங்கள் நிறைய இருக்கிறது. காத்திருக்கும் சாவிகள் தொகுப்பில் இருக்கின்ற கவிதைகள் பரந்த அளவில் பேசப்பட வேண்டும் என்ற உந்துதலோடு, இந்த நிகழ்வைத் திட்டமிட்டிருக்கிறார். நிகழ்வு நிச்சயம் வெற்றிபெறும் தோழர்.

புத்தகம் கொடுத்தவர்களிடம் விமர்சனங்களைப் பெற்று அகமகிழ்வோடு என்னிடம் பகிர்ந்துகொள்வார். ஆனபோதிலும், “இந்தக் கவிதைகள் இன்னும் பரவலாக சென்று சேரவேண்டும் தோழர்” என்று சொல்லிக் கொண்டே இருப்பவர்களில் தோழரும் ஒருவர். உண்மைதான் தோழர், என்னுடைய விருப்பமும் அதுதான். அதற்காகத்தான் இத்தனை வருடங்களாக மலையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன். நீண்ட காலங்களாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். கவிதைகள் வாசிக்கப்படவில்லை என்பது பொய். சுத்தமான வடிகட்டிய பொய். வேலைசெய்யாத, வேலைசெய்ய விருப்பமில்லாத சோம்பேறிகளாவிட்டவர்களால் புனையப்பட்ட பொய். கவிதைகள் எப்படி வாசிக்கப்படுகிறது என்பதற்கு காத்திருக்கும் சாவிகள் தொகுப்பு சிறந்த உதாரணம் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

சென்றவருடம் அக்டோபரில் தொடங்கப்பட்ட யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இதுவரையிலும் அனுபவித்ததைக் காட்டிலும் அதிகமான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது பாலஸ்தீனம். இதுவரையிலும் இழந்ததைக் காட்டிலும் அதிகமான உயிர்களை இழந்துகொண்டிருக்கிறது பாலஸ்தீனம். அதேநேரத்தில், இதுவரையிலும் இல்லாத அளவிற்கு உலகத்தின் மனசாட்சியை தட்டியெழுப்பவும் செய்திருக்கிறது பாலஸ்தீனம். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை பாலஸ்தீனத்தின் பாடுகளை, அதனால்தான் கவிதை எழுதினேன். என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை பாலஸ்தீனத்தின் அவலக்காட்சிகளை, அதனால்தான் கவிதை எழுதினேன். என் முழுமனதோடும், என் முழுஇதயத்தோடும் பாலஸ்தீனம் சுதந்திரமடையவேண்டுமென்று விரும்புகிறேன், அதனால்தான் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் உங்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம் கொண்டுசெல்லுங்கள் இந்தக் கவிதைகளை என்பது மட்டும்தான்.

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் இன்னும் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கிறது. ரஷ்யா உக்ரைன் யுத்தம் இன்னும் முடிவடையாமல் நீண்டு கொண்டிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில், இந்த இரண்டு யுத்தங்களுக்கும் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்து கொண்டிருக்கும் நேட்டோ கூட்டமைப்பின் நாடுகளின் தலைவர்கள் எழுபந்தைந்தாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவதற்காகவும், இரண்டு யுத்தங்களையும் எப்படிக் கொண்டு செல்லலாம் என்று விவாதிப்பதற்காகவும் அமெரிக்காவில் கூடியிருக்கிறார்கள். இன்னும் தாராளமாக செலவு செய்யவும், ஆயுதங்களைக் கொடுக்கவும் முடிவெடுத்திருப்பதாகவே அவர்களின் அறிக்கைகள் சொல்கின்றன. ஆகமொத்தத்தில் உலகத்தின் நிலமைகள் நன்றாக இல்லையென்பதே நாம் உணர்ந்துகொள்ளக் கூடிய உண்மையாக இருக்கிறது. இந்தச் சூழலில் இந்தக் கவிதைகள் பேசப்படுவது முக்கியாமனதென்றே கருதுகிறேன்.

முதல்பதிப்பின் பிரதிகள் முடிந்துவிட்டன. தொடர்ந்து எழுதப்பட்ட கவிதைகளையும் சேர்த்து இரண்டாவது பதிப்பைக் கொண்டுவரவேண்டும். நீங்கள் ஒத்துழைத்தால் அதுவொன்றும் பெரிய காரியமில்லை. முயற்சிக்கலாம். இறுதியாக, தோழர்.ஜோதிவேல் அவர்களுக்கும், நிகழ்வில் உரையாற்றவிருக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வெற்றிச்செல்வன் அவர்களுக்கும் ( பதினோரு வருடங்களுக்கு முன்னால், பேராசிரியர் என்னுடைய முதல்புத்தகமான அழைப்பின் பாடல்களுக்கு தஞ்சையில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் சிறந்த உரையை வழங்கினார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன் ) மற்ற தோழர்களுக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிகழ்வு சிறக்க வாழ்த்துகள் தோழர்களே!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment