தோழர்களுக்கு வணக்கம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட காத்திருக்கும் சாவிகள் புத்தகம் இருபது கவிதைகளோடு தோழர். இசாக் அவர்களின் தமிழ் அலை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. எப்போதும் போல அன்பையும் ஆதரவையும் வழங்கினீர்கள். ஒருவருடத்தைக் கடந்தும் யுத்தம் முடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது. இரத்தம் இடைவெளியில்லாமல் பாய்ந்து கொண்டே இருக்கிறது. படுகொலைகள் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. வேறு வழியில்லை எழுதித்தான் ஆகவேண்டும் என்று நினைத்தவற்றை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து எழுதப்பட்ட கவிதைகளையும் சேர்த்து மறுபதிப்பாக காத்திருக்கும் சாவிகள் வெளிவரப்போகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும் ஆதரவும் என்னைத் தொடர்ந்து எழுதச்செய்யும். எப்போதும்போல இந்தக் கவிதைகளையும் காற்றைப்போலக் கடத்திச் செல்லுங்கள் என்று உரிமையோடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கவிதைகளை நீங்கள் வாசிப்பது எந்தளவிற்கு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது, உங்களோடிருப்பவர்களையும் வாசிக்கச்செய்வது. செய்தீர்கள், இனிமேலும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தமுறை இயற்கையும், நீங்களும் ஒத்துழைத்தால் சென்னையில் வெளியீட்டு நிகழ்வு நடத்தலாமென்று நினைக்கிறேன். முறையாகத் திட்டமிட்டபின் தெரிவிக்கிறேன்.
மறுபதிப்பிற்கான முன்னுரையிலிருந்து . . .
ஏற்கனவே வெளிவந்ததில் “டென்னிஸ் மைதானத்தில் உடைந்த இதயம்” கவிதையும், “யுத்தக்களத்தின் செய்தியாளன்” கவிதையும், குழந்தைகளைப்பற்றி எழுதிய எல்லாக் கவிதைகளும் குறிப்பிட்டுப் பேசப்பட்டதைப்போல, இந்தத் தொகுப்பிலும், உங்கள் இதயங்களை உடைத்து நொறுக்கக்கூடிய பல கவிதைகள் இருக்கின்றன. உங்கள் கண்களைக் குளமாக்கக்கூடிய பல காட்சிகள் இருக்கின்றன. உங்களைத் தயார்ப் படுத்துவதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கிறேன். யுத்தம் அப்படிப்பட்டதுதான் தோழர்களே! “பிறப்புச் சான்றிதழ்” கவிதையை எழுதமுடியாமல் தவியாய்த் தவித்த கதையை உங்களிடமல்லாமல் யாரிடம் பகிர்ந்துகொள்வேன்!
என்னுடைய ஆரம்பகாலத்தில் எனக்குக் கவிதை கற்றுக்கொடுத்ததில் பாலஸ்தீனத்திற்கும் பெரும் பங்குண்டு. வலியையும், வேதனையையும், கோபத்தையும், சுதந்திர தாகத்தையும் எப்படிக் கவிதையாக்க வேண்டுமென்று அந்தத் தேசத்தின் கவிஞர்களே சொல்லிக் கொடுத்தார்கள். பதினைந்து வருடங்களுக்குப்பிறகு அந்தத் தேசம் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய தார்மீக ஆதரவாக, எப்போதும் நேசிக்கும் பாலஸ்தீனத்திற்கு இந்தக் கவிதைகளைத் திருப்பிக் கொடுக்கிறேன். கொள்வதும் கொடுப்பதுமே கலையல்லவா!
தோழர்களே, உலகத்தின் நிலைமைகள் மோசமாகிக் கொண்டே போகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கவிதை எதற்காகவும் காத்திருக்காது. மழைபோலப் பொழியத்தான் செய்யும். கவிதையை யாரும் தடுத்துவிடவும் முடியாது. பேரலைபோலப் பாயத்தான் செய்யும். விஷயம் என்னவென்றால் நீங்கள் முகம்கொடுக்கப் போகிறீர்களா? முகத்தைத் திருப்பிக்கொள்ளப் போகிறீர்களா என்பதுதான். பல்லாயிரம் வருடங்களாக இந்தப்பூமியின் காதுகள் கவிதையைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் வருடங்களாக இந்தப் பூமியின் தோலில் கவிதைகள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வரலாற்றுத் தொடர்ச்சியில் நிற்கப்போகிறோமா இல்லை விலகப்போகிறோமா என்பதைத்தான் நாம் முடிவுசெய்ய வேண்டும். மாற்றத்திற்கான முயற்சியைத் தொடங்குவோம். கவிதைகளோடு எப்போதும் காத்திருப்பேன் உங்களுக்காக!
*
காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தோடு சந்திப்போம். முன்பதிவு செய்ய விரும்பினால் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு எழுதுங்கள்.
தோழமையுடன்
ஜோசப் ராஜா
1 comment
கவிஞர் ஜோசப் ராஜாவின் “காத்திருக்கும் சாவிகள்” நூல் மறு வெளியீடு செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்நூலின் முதல் பதிப்புக்கு புக்டே இணையத்தில் நான் நூல் அறிமுகம் செய்தது நிழலாடுகிறது.
வாசியுங்கள்
வாசிப்பை நேசியுங்கள்.
.