நேற்று பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியின் வரலாற்றுத்துறையானது, தற்போது வெளிவந்திருக்கும் காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பின் அறிமுக விழாவை சிறப்பாக நடத்தியது. வரலாற்றுத் துறைத்தலைவர் தோழர் பேரா.ஜெகஜீவன்ராம் அவர்கள், நான் எழுதத்தொடங்கிய காலத்திலேயே எனக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். எங்கள் பேராசிரியர் அண்ணாதுரை ஐயாவோடு வரலாற்று ஆய்வுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தவர். இப்போதும் தன்னுடைய மாணவர்களோடு அந்தப்பணியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் என்பதை மாணவர்களின் முகங்களில் ஒளிரும் புன்னகையில் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
கல்லூரியின் முதல்வரான முனைவர்.ம.ச. தில்லைநாயகி அவர்களைச் சந்தித்தது நல்அனுபவமாக இருந்தது. நிகழ்விற்விற்குத் தலைமை தாங்க வந்திருந்தவர் புத்தகத்தை முழுமையாக வாசித்துவிட்டு வந்திருந்தார். கவிதைகள் இதயத்தைக் கனக்கச் செய்துவிட்டதாக கலங்கிப் பேசினார். தோழர். ஜெகஜீவன்ராம் அவர்கள் கவிதையின் வரலாற்றுத்தேவை என்ன என்பதை கிறிஸ்டோபர் காட்வெல் அவர்களின் கவிதை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையின் துணைகொண்டு ஆழமாக எடுத்துவைத்தார். அவரோடு அந்த மேடையைப் பகிர்ந்துகொண்டது இனிய அனுபவமாக இருந்தது. அரசியல் நிறைந்த கருத்துக்களை கவனமோடும், கூர்மையோடும் காதுகொடுத்த மாணவர்கள் நிச்சயம் பாராட்டுக்குரியவர்களே! அம்மாணவர்கள் மத்தியின் புத்தகத்திலிருந்து மூன்று கவிதைகளை வாசித்ததும், பாலஸ்தீனம் குறித்து திறந்த மனதோடு அவர்களோடு சிலவார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டதும் நேற்றைய நாளை நிறைவான நாளாக்கியது. நான் பேசியதின் சாரம் இதுதான்.
போருக்கு எதிரான கவிதைகள் :
இந்த உலகம் அப்படியொன்றும் நிம்மதியாக இல்லை. இந்தச் சமகாலம் இரண்டு போர்களைச் சுமந்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் நேட்டோ ஆதரவோடு உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கிறது யுத்தம். இன்னொரு பக்கம் கடந்த மூன்று மாதங்களாக அதே நேட்டோ நாடுகளின் ஆதரவோடு இஸ்ரேல் பாலஸ்தீனத்தைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பின்னணியில் போருக்கு எதிராக எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தோடு உங்களைச் சந்திக்க வந்ததில் மகிழ்கிறேன் நான்.
போருக்கு எதிரான கவிதைகள் என்றால், போரைத் தொடங்கியவர்களுக்கு எதிரானது என்று அர்த்தம். போருக்கு காரணமாக இருப்பவர்களுக்கு எதிரானது என்று அர்த்தம். போரை விரும்புகிறவர்களுக்கு எதிரானது என்று அர்த்தம். எல்லாவற்றையும் வைத்து இலாபம் சம்பாதிப்பதைப்போல, போரையும் வைத்து இலாபம் சம்பாதிப்பவர்களுக்கு எதிரானது என்று அர்த்தம்.
தோழர்களே, போர் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடியதல்ல. போர் மனிதர்களை அகதிகளாக்கி அலைக்கழிக்க கூடியது. குழந்தைகளையும், பெண்களையும் இரக்கமில்லாமல் கொன்று குவிக்க கூடியது. வீடுகளைத் தரைமட்டமாக்கி மனித வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிவிடக்கூடியது. ஒட்டுமொத்தத்தில் போர் என்பது கொடூரமானது, போர் என்பது இரக்கமில்லாதது. போர் என்பது எதிர்க்க வேண்டியது. அப்படிப்பட்ட போரை எதிர்த்து இந்த வரலாறு நெடுகிலும் ஏராளமான கவிஞர்கள் எழுதிப் போயிருக்கிறார்கள். அதில் என்னால் மறக்கவே முடியாத, உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த ஒரு புறநானூற்றுக் கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் இப்படி நடந்திருக்கிறது. முல்லைக்குத் தேர்கொடுத்தவன் என்று புகழப்படும் வேள்பாரியும் அவனுடைய பறம்பு மலையும் மூவேந்தர்களால் சூழப்பட்டிருக்கிறது. போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. தாக்குப்பிடிக்கிறான் பாரி. அப்போது அவனோடு தங்கியிருந்த பெரும்புலவர் கபிலர் எல்லாவற்றையும் எழுதிவைத்திருக்கிறார். புறநானூற்றில் பார்க்கலாம் நீங்கள். போரின் முடிவில் வழக்கம்போல வஞ்சகத்தால் கொல்லப்படுகிறான் பாரி. இறப்பின் தருவாயின் தன்னுடைய இரண்டு மகள்களையும் கபிலரின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு இறந்துபோகிறான் பாரி. கபிலர் இரண்டு மகள்களோடும் பறம்பு மலையை விட்டுக் கீழே வருகிறார். கபிலர் உள்ளும் புறமும் வார்த்தைப்படுத்திய பறம்புமலை, பாரி இல்லாததால் பார்க்கச் சகிக்க முடியாமல் இருக்கிறது. அந்த துயரம் சூழ்ந்த இரவில், அந்த நிலவொளியில் பாரியின் மகள்கள் பிறந்து, வளர்ந்து, இப்போது இழந்த மலையைப் பார்க்கிறார்கள். கவிதை பிரசவமாகிறது.
”அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம்! எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்: யாம் எந்தையும் இலமே! “
என்ற கவிதையை எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்று எண்ணிச் சொல்லிவிடமுடியாது. ஆனால் அத்தனை முறையும் அழிந்து கொண்டிருந்த இனக்குழுக்களின் ஓலத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். பேரரசுகளால் நசுக்கப்பட்ட ஆயிரமாயிரம் மனிதர்களின் கூட்டு ஒப்பாரியை கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். பேரரசுகள் பிரம்மாண்டமாக நிலைபெற வேண்டுமென்றால் சிற்றரசுகளும், இனக்குழுக்களும் பலிகொடுக்கப்படத்தான் வேண்டுமல்லவா! அப்படி ஒரு போரின் வலியை, அப்படி ஒரு போரின் விளைவைக் காட்சிப்படுத்திய அந்தக் கவிதையைப்போல இரண்டாயிரம் வருடங்களுக்குப் பின்பும், இப்போது நடக்கும் போரைக் காட்சிப்படுத்தும் முயற்சிதான் இந்தக் கவிதைகள்.
பாரியின் மகள்கள் வேதனையோடு பார்த்த போரின் காட்சிகளை இன்று என்னுடைய மகள்களும் வேதனையோடு பார்த்துக் கொண்டிருப்பதைச் சகிக்க முடியவில்லை என்னால், அதனால்தான் கவிதை எழுதுகிறேன். எதற்காக இப்படிப்பட்ட போரை, போரின் கொடூரங்களை எழுதுகிறீர்கள் என்றென்னைக் கேட்டால். நிச்சயமாக உங்கள் நிம்மதியைக் குலைக்கத்தான் எழுதுகிறேன் என்று சொல்வேன். உங்கள் அமைதியை உடைக்கத்தான் எழுதுகிறேன் என்றே சொல்வேன்.
தோழர்களே, இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான பழைய சமூகம் அல்ல, கண்ணீர் சிந்திவிட்டுக் கடந்துசெல்ல. பல பெரும் புரட்சிகளைப் பார்த்துப்பார்த்து நகர்ந்து கொண்டிருக்கும் காலமிது. நீங்கள் நினைத்தால் போரை நிகழ்த்தக் கூடிய இந்தச் சமூகமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்க்க முடியும். அதற்கு முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டியது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான். அப்படி அறிந்தவற்றை புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான்.
நீங்கள் நினைத்தால் போர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும்
நீங்கள் நினைத்தால் பொதுவுடமைச் சமுதாயத்தை உருவாக்க முடியும்.
உங்களைத்தான் நம்புகிறேன்.
மீண்டும் ஒருமுறை அன்புத் தோழரும், வரலாற்றுத்துறை தலைவருமான பேரா.ஜெகஜீவன்ராம் அவர்களுக்கும், இந்நிகழ்விற்கான ஒருங்கிணைப்பை மேற்கொண்ட, அவர்துறையில் பணிபுரியும் அன்புத் தோழர்கள் பேரா.ரமேஷ் அவர்களுக்கும், பேரா.உத்திரகுமார் அவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஜோசப் ராஜா
2 comments
Great job sir….
மகிழ்ச்சி வாழ்த்துகள் ஜோசப்