காதலும் சமூகமும்

மானுட உணர்வுகளில் மகத்தான ஒன்று காதல். ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் மீது அளவிடமுடியாத விருப்பத்தைப் பெருக்கக் கூடியது காதல். ஒவ்வொருவருக்கும் வாழ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை உருவாக்கக்கூடியது காதல். மனிதன் உழைப்பை உணர்ந்ததைப் போல, காதலை உணர்ந்ததும் கூட சமூக இயக்கத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் இயக்க சக்தியாய் இருந்தது, இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. அப்படிப்பட்ட காதலே சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கும் திறவுகோலாக இருக்கிறது என்பதைத்தான், ஒவ்வொரு கைகளிலும் ரோஜாக்கள் முளைக்கும் இந்த நாளில் உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

காதலிக்கும்போது காதலைத் தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியாது என்பது எந்த விதத்திலும் ஒதுக்கமுடியாத உண்மையாகவே இருக்கிறது. ஒருவகையில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் நுழைவாயில் காதலாகத்தான் இருக்கும். ஒரு பட்டாம்பூச்சியைப் போல பறந்துதிரிய முடியுமென்றால், காதலிக்கலாம் அல்லவா! ஒரு பறவையைப்போல பறந்துதிரிய முடியுமென்றால் காதலிக்கலாம் அல்லவா! எடையில்லாப் பொருளைப்போல காற்றின் திசையில் பறந்திட முடியுமென்றால் காதலிக்கலாம் அல்லவா! கடிகாரத்தின் இயக்கத்திற்கு எதிராக இயங்க முடியுமென்றால், கடிகாரத்தையே கவனிக்காமல் வாழமுடியுமென்றால் காதலிக்கலாம் அல்லவா! அப்படித்தானே காதலித்திருப்பீர்கள் நீங்களும்! அப்படித்தான் காதலித்தேன் நானும்.

அப்படித்தானே காதலித்திருப்பார்கள் கண்ணகியும், முருகேசனும். அப்படியென்றால் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு சித்ரவதை செய்யப்பட்டு, கடைசியில் காதிலும், மூக்கிலும் நஞ்சூற்றப்பட்டு கொல்லப்பட்டது ஏனென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எத்தனை கனவுகளை இதயத்தில் நிறைத்து வைத்து அலைந்து திரிந்திருப்பான் அந்த இளவரசன். காதல் அவனுக்கு மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், இரக்கமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்டது ஏனென்று என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அதேபோல ஒரு தண்டவாளத்தின் அருகில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த கோகுல்ராஜ் என்ன செய்துவிட்டான், காதலித்ததைத்தவிர. பட்டப்பகலில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க சராமாரியாக வெட்டிவீசப்பட்ட சங்கரை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இங்கு மட்டுமல்ல கர்நாடகாவில், ஆந்திராவில், மஹாராஷ்ட்ராவில், டெல்லியில் என இந்த தேசம் முழுவதும் படுகொலை செய்யப்பட்ட காதல், படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் காதல் எண்ணிலடங்காதது என்பதை எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும். ஒருவகையில் நீங்களும் நானும் அப்படிப்பட்ட படுகொலையில் இருந்து தப்பித்தவர்கள் என்பதை இரவின் தனிமையில் எப்போதாவது எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?  

காதலுக்கு நடுவில் சாதி நங்கூரம்போல நின்று கொண்டிருப்பதைக் கவனிக்க மறவாதீர்கள். காதலுக்கு நடுவில் பணம் பாம்பைப்போலப் படுத்துக் கிடப்பதைப் பார்க்க மறவாதீர்கள். காதலுக்கு நடுவில் அதிகாரம், அந்தஸ்து, அகங்காரம் எல்லாமும் சகிக்கமுடியாத அளவிற்குச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை காலத்திற்கு அனுமதிக்கப் போகிறீர்கள். இருக்கலாம், செயற்கை நுண்ணறிவின் பாய்ச்சல், பயங்கரமாக இருக்கலாம். மனித மூளையை ஓர் இயந்திரம் கட்டுப்படுத்துவதில் அந்த முதலாளி வெற்றியடையலாம். இன்னும் இன்னுமாய் இயற்கை வளங்களையும் மனித வளங்களையும் தின்றுசெரித்து முன்னுக்கு வரலாம் முதலாளிகள். இதனால் என்ன நடந்துவிடப் போகிறது இந்தச் சமூகத்தில். இன்னும் கொஞ்சநாளில் கலாச்சாரக் காவலர்கள் காதலிக்கக்கூடாது என்று சொல்லி பைத்தியக்காரர்களைப் போல கூப்பாடு போடப் போகிறார்கள். என்ன செய்யப்போகிறோம் நாம். நாளை அரசாங்கத்தில் பதிவுசெய்துவிட்டு ஒரு ரோஜாப்பூவையோ, ஒரு பரிசுப்பொருளையோ பரிமாறிக்கொள்ளும் நிலை வராது என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்களா! அன்பின் பாதைகள் முற்றும் முழுவதுமாக அடைபட்டுக் கிடப்பது ஒரு சமூகத்திற்கு கொஞ்சம்கூட நல்லதல்ல என்பதை கனத்த இதயத்தோடு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

ஓ! காதலர்களே, உங்கள் காதலுணர்வைக் காயப்படுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதைத்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கண்டும் காணாமல் கடந்து போனவைகளைத்தான் உங்கள் கண்களுக்கு முன்னால் எடுத்து வைக்கிறேன்.  சுதந்திரமான வாழ்க்கையும், சுதந்திரமான காதலும் இந்தச் சமூகத்தில் சாத்தியமில்லை என்றால், எதற்காக இந்தச் சமூகத்தை இன்னும் அனுமதித்துக் கொண்டிருக்க வேண்டும். இவ்வளவு கேடுகளும், இழிவுகளும் நிறைந்திருக்கும் இப்படியான இந்தச் சமூகமைப்பைத்தானா, நாகரீகமானதென்றும், வளர்ச்சியடைந்ததென்றும் சொல்லிக்கொண்டு திரிகிறோம் என்ற கேள்விகள் இப்போதாவது கேட்கப்பட வேண்டும் தோழர்களே.

அழுக்கான இதயங்களிலிருந்து அழகு ஒருபோதும் பிறப்பெடுக்காது. அழுக்கடைந்த கண்களால் அழகை ஒருபோதும் பார்த்துவிட முடியாது. அழகின் பிரவாகத்தைக் காணவேண்டுமென்றால் கண்டிப்பாக நீங்கள் உண்மையாக இருக்கவேண்டும். அழகின் பேருருவைத் தரிசிக்க வேண்டுமென்றால் நிச்சயமாக நீங்கள் உண்மையின் பக்கம் உறுதியாக நிற்கவேண்டும்.

யுத்தம் எங்கோ நடந்து கொண்டிருக்கிறது என்று சத்தமில்லாமல் இருந்து கொண்டிருந்தது போதும். ஒவ்வொரு யுத்தத்திலும், யுத்தத்தின் ஒவ்வொரு படுகொலையிலும் நமக்கும் பங்கிருக்கிறது. காதலர்கள் எங்கோ படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று பார்த்தும் பார்க்காமலும் வாழ்ந்தது போதும், தண்டவாளங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் இரக்கமே இல்லாமல் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் நமக்கும் பங்கிருக்கிறது. காதலித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலவே, காதலுக்காக கொல்லப்பட்டவர்களும் அல்லவா காதலை இன்னும் இன்னும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றிச் சென்றிருக்கிறார்கள். நீங்கள் சுயநலமாக இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் சுயநலமாக இருக்கக் கூடாதென்று விரும்புகிறேன். வாழத் தகுந்தவாறும், காதலிக்கத் தகுந்தவாறும் இந்தச் சமூகத்தை மாற்றத் துணியும்போதுதான் காதல் முழுமையடையும். வாழ்க்கை அர்த்தம்பெறும்.

வாழ்த்துகள் தோழர்களே!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 14/02/2024 - 4:47 PM

“காதலும் சமூகமும்” எனும் கவிஞர் ஜோசப் ராஜாவின் கட்டுரை பொருத்தமான நாளில் பொருத்தமான வரிகளில் வந்துள்ளது மகிழ்ச்சி.

வாசியுங்கள்.
வசப்படும் காதல்.
முடிவுறும் ஆணவக் கொலைகள்.

Reply

Leave a Comment