இன்று எழுதிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழத்தான் செய்யும். முக்கியமாக ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் வரையிலும் இந்தக் கேள்வி என்னை அலைக்கழித்த விதத்தை அவ்வளவு எளிதாக வெளிப்படுத்திவிட முடியாது. இத்தனைக்கும் பதினைந்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ கவியரங்கங்களில் கவிதை வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு மேடைகளிலும் நான்பெற்ற நேசத்தை, என் கவிதைகளுக்கான எதிர்வினையை கிடைத்தற்கரிய ஒன்றாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இதோ கவியரங்கங்கள் இல்லாமல் இருக்கிறதே என்று தெரிந்ததும் வலையொளிப் பக்கத்தில் கவிதைகளை வாசித்து பதிவேற்றம் செய்கிறேன். அந்தப் பக்கங்களில் இருக்கும் கவிதைகளைக் கேட்டுவிட்டு அன்பின் வார்த்தைகளால் என்னை அணைத்துகொண்டவர்களை நினைத்துப் பார்க்கிறேன். இன்னும் பலபேரை கவிதைக்கான வாசகர்களாக உருவாக்கிவிடலாம் என்ற ஆசையில் இணையதளம் தொடங்கியபோதும், அதில் வெளியான கவிதைகளை வரவேற்று ஏந்திக்கொண்டவர்களையும் எண்ணிப்பார்க்கிறேன். ஆனபோதிலும் அந்தக் கேள்வி இப்போதும் கூட முழுமையாக என்னிலிருந்து விடுபட்டது என்று உறுதியளிக்க முடியவில்லை.
இன்றைக்குக் கவிதை தினம், ஆகையால் கவிதையைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று காலையில் கேட்டார் ஒரு மாணவர். அவரின் கேள்விதான் என்னை இந்தக் கேள்விக்கும் அழைத்து வந்திருக்கிறது. உலக வரலாற்றில் கவிதையின் இடமென்பது மனிதன் குறிசொல்லத் தொடங்கியதில் இருந்து தொடங்குகிறது. எத்தனையோ மொழிகளை எத்தனையோ கவிஞர்கள் தங்களின் வார்த்தைகளால் ஆசீர்வதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நவீனத்துவக் காலகட்டம் என்று சொல்லக்கூடிய, பதினைந்தாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தொடங்கிய தொழிற்புரட்சி, எல்லோருடைய சிந்தனையிலும் கூட புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஷேக்ஸ்பியரில் தொடங்கி, மில்டன், ஷெல்லி, கீட்ஸ், வேர்ட்ஸ்வர்த் என்று காலத்தால் அழிக்கமுடியாத வார்த்தைகளை உருவாக்கிய கவிஞர்கள் பிறந்து வந்தார்கள். கூடவே கவிதைகளுக்கான வாசகர்களும் பெருகி வந்தார்கள். ஆங்கிலமொழியில் வெளிவந்த இவர்களின் படைப்புகள், அப்படியே உலகமெல்லாம் வலம்வரத் தொடங்கியது. பலமொழிகளில் மொழிபெயர்க்கவும் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் தொடங்கிய நவீனத்துவச் சிந்தனை உலகெங்கிலுமுள்ள சிந்திக்கும் மனிதர்களிடமும் கலைஇலக்கியவாதிகளிடமும் பாதிப்பை ஏற்படுத்தியது. நம்முடைய பாரதிகூட ஷெல்லிதாசனாகவும், கீட்ஸை நேசித்தவனாகவும் இருந்தான். தொடர்ந்து கவிஞர்கள் சமூகத்தின் அவலங்களையும், விவசாயிகள் தொழிலாளர்களது வாழ்க்கைப் பாடுகளையும் பாடத்தொடங்கினார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகத் தொடங்கியிருந்த கவிதைக்கான வாசகர்கள் தொழிற்புரட்சியின் காரணத்தாலும், சமூகப் புரட்சியின் காரணத்தாலும் இன்னும் அதிகரிக்கத் தொடங்கினார்கள்.
அப்படி அதிகரிக்கத் தொடங்கிய கவிதைக்கான வாசகர்களின் எண்ணிக்கை உச்சம்தொட்ட வரலாற்றுத் தருணத்தை இன்று நினைவுகூர்வது பொருத்தமாக இருக்குமென்று எண்ணுகிறேன். என்னைப்பொருத்தவரையில் உண்மையான கவிதைதினம் அந்த மண்ணில்தான் உருவானது 1917 க்கு அப்புறமாக. அந்த வரலாற்றுத்தருணம் உருவாகக் காரணமாக இருந்த தலைவர் புரட்சியின் விஞ்ஞானி விளாடிமிர் லெனின். அந்த வரலாற்றுச்சிறப்பை உருவாக்கிக் காட்டியவர்கள் சோவியத் யூனியனின் தொழிலாளர்களும் விவசாயிகளும். உலக வரலாற்றில் கவிதைக்கான வாசகர்கள் லட்சக்கணக்கில் இருந்தார்கள் என்றால் அது சோவியத் யூனியனில்தான். கவிதைகள் அதிகமாக எழுதப்பட்டன, கவிதைகள் அதிகமாக வாசிக்கப்பட்டன. கவிஞர்கள் மரியாதைக்குரியவர்களாகக் கவனிக்கப்பட்டார்கள். முக்கியமாகக் கவிஞர்கள் முதலாளித்துவ தேசத்தின் மாதிரிவடிவமாக இல்லாமல் மக்களோடு மக்களாகக் கலந்திருந்தார்கள்.
உதாரணத்திற்கு 1915 ல் பிறந்து 1979 ல் இறந்த கான்ஸ்டாண்டின் சிமினவ் என்ற கவிஞர். இரண்டாம் உலகப்போரில் சோவியத் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியவர். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் யுத்தக்களத்தில், பதுங்குக்குழியில் இருந்து தனக்காகக் காத்திருக்கும் காதலிக்கு கவிதை எழுதுகிறார். எனக்காக காத்திரு என்ற தலைப்பிலான அந்தக் கவிதை சோவியத்தின் மக்கள் தொகையில் தோராயமாக முக்கால்வாசிப்பேரைச் சென்றுசேர்கிறது. முக்கியமாக எல்லையில் நாஜிக்கள் என்ற நாசகர சக்திகளோடு போராடிக்கொண்டிருக்கும் போர்வீரர்கள் இந்தக் கவிதை வெளியான சிலநிமிடங்களில் பத்திரிக்கையிலிருந்து அந்தப் பக்கத்தைக் கிழித்து சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள். (என்னது! கவிதை பத்திரிக்கையில் வெளியானதா என்ற வியப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அங்கே இதுபோல ஆயிரமாயிரம் வியப்புகளும், விந்தைகளும் நிறைந்திருந்தன) நான் நினைக்கிறேன் துப்பாக்கியை விடவும் அந்தக் கவிதை அவர்களுக்கு மனவலிமையையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கும் என்று. அப்படி எழுதினார்கள் கவிஞர்கள், அப்படி ஏந்திக்கொண்டார்கள் வாசகர்கள். இதை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
வாசகர்கள் வானத்தில் இருந்து வருகிறவர்கள் கிடையாது. இந்தச் சமூகத்தில் இருந்துதான் வருகிறார்கள். உதாரணத்திற்குத் தமிழகத்தைக் கொஞ்சம் பகுப்பாய்வு செய்து பார்க்கலாம். உச்ச நட்சத்திரங்கள் என்று சொல்லப்படும் ஒரு பத்து சினிமா நடிகர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் ரசிகர்களாக இந்த மாநிலத்தின் மக்கள்தொகையில் பாதிப்பேர் இருப்பார்கள். மீதி இருப்பவர்களில் பாதிப்பேர் மதுபானக் கடைகளில் பாய்ச்சப்படும் மதுவால் நரம்புத்துடிப்பிழந்தவர்களாக மாறியிருக்கிறார்கள். இன்னும் சிலர் மதவெறி பிடித்தவர்களாக, இன்னும் சிலர் சாதிவெறி பிடித்தவர்களாக, இன்னும் சிலர் எல்லாவற்றையும் பார்த்து சோர்ந்துபோய் எல்லாக் கட்சிகளிலும் விரவிக்கிடக்கிறார்கள். எனக்குத்தெரிந்து இந்த நிலைமை நீடிக்கும்வரையிலும் முதலாளித்துவத்திற்கு எந்தக்குறையும் ஏற்படப்போவதில்லை. அப்படியென்றால் இந்த நிலைமையை நீடிக்கச்செய்கிறவர்கள் யாரென்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா! ஆம் முதலாளிகளேதான். இந்த நிலைமையில் கவிதைக்கான வாசகர்கள் எங்கே என்ற கேள்வி நியாயமாகத்தான் தோன்றும். ஆக இந்தச் சமூகமைப்பில் கவிதைக்கான ஒற்றை வாசகனை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றால் முதலாளித்துவத்திற்கு எதிராக ஒற்றை மனிதனை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்னும் சொல்லப்போனால் அவனை மனிதனாகவே உருவாக்குகிறீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில் நீங்கள் கவிதையை விரும்பினால், முதலாளித்துவத்தை வெறுக்கிறீர்கள் என்று அர்த்தம். என்னசெய்யப் போகிறீர்கள்?
சோவியத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப்போல இங்கும் மாற்றம் நடந்தால் மட்டுமே கவிதையும் கவிதைக்கான வாசகர்களும் உயிர்த்தெழ முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒருசில ஆதரவுக்கரங்களோடும், எண்ணற்ற பாராமுகங்களோடும் நம்பிக்கையோடு நான் எழுதிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தக் கனவுதான். புத்தம்புதிய சமூகத்திற்கான, புத்தம்புதிய வாழ்க்கைக்கான அந்தக் கனவை நீங்களும் கைக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் கொண்டாடலாம் கவிதையை. ஓ! கான்ஸ்டான்டின் சிமினவின் அந்தக் கவிதையை வாசிக்க விரும்புவீர்கள் அல்லவா?
எனக்காக காத்திரு மீண்டும் வருவேன் நான்
மீண்டும் வருவேன் நான், எனக்காக காத்திரு
உன்னுடைய முழு வலிமையோடு காத்திரு
துயரத்தின் துளிகளால்
ஆகாயம் மூடப்பட்டிருக்கும் போதும் காத்திரு
உறைபனியிலும் காத்திரு
உச்சிவெயிலிலும் காத்திரு
காத்திரு, யாரும் யாருக்காகவும் காத்திருக்காத போது
இறந்த காலங்களை நீ மறந்து போனாலும்
என்னுடைய குரலைக் கேட்காமல் போனாலும்
என்னுடைய ஒரு கடிதத்தைக்கூட நீ பெறாமல் போனாலும்
என்னுடைய எல்லா உறவுகளும்
எனக்காகக் காத்திருந்து சோர்ந்து போனாலும்
நீ எனக்காக காத்திரு, மீண்டும் வருவேன் நான்
எனக்காகக் காத்திரு, மீண்டும் வருவேன் நான்
பொறுமையின் எல்லை வரையிலும் காத்திரு
காத்திருந்து காத்திருந்து களைத்துப்போன
என்னுடைய எல்லா உறவுகளும்
நான் இறந்திருப்பேன் என்றுகூட நினைத்திருக்கலாம்
அவர்கள் கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டு
குடிக்கத் தொடங்கியிருக்கலாம்
நெருப்பு என் நினைவுகளோடு பேசிக்கொண்டிருக்கிறது
ஆனால் என் அன்பே
இதயத்தை அறுக்கும் அந்த ஒயினை
நீ ஒருபோதும் குடிக்க வேண்டாம்
யார் என்ன சொன்னாலும் கேட்காதே
பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் எனக்காகக் காத்திரு
எனக்காகக் காத்திரு, மீண்டும் வருவேன் நான்
நீ பார்த்த எல்லா மரணங்களையும்
ஏளனம் செய்தபடி எனக்காகக் காத்திரு
ஏனென்றால், உன்னுடைய நிலைத்த காதல்
நம்முடைய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றும்
உன்னுடைய காதல்
என்னை உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கும்
எனக்காகக் காத்திரு
சூரியன் சுட்டெரிக்கும் நேரத்திலும்
பனிபெய்யும் நேரத்திலும்
நீ நான் மட்டும்
நாம் இரண்டு பேர் மட்டும் நிலைத்திருப்போம்
உனக்குத் தெரியுமா நமக்கு இறப்பே கிடையாதென்பது
யாருக்கும் தெரியாத இந்த இரகசியம்
நமக்குத்தான் தெரியும்
அதனால் தான் எனக்காக நீ காத்திருக்கிறாய்
யாரும் யாருக்காகவும் காத்திருக்காததைப் போல!
( கான்ஸ்டாண்டின் சிமினோவ் , 1941 , சோவியத் யூனியன் )
2 comments
உலக கவிதை தினத்தில் பொருத்தமான படைப்பைத் தந்துள்ள கவிஞர் ஜோசப் ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சோவியத் யூனியனைப் போல ஒரு கட்டமைப்பு இங்கில்லை. கவிதைகளைக் கொண்டாட தலைவர்களில்லை. வாசக நெஞ்சங்கள் இல்லை. ஆனால் அதற்காக விரக்தியின் விளிம்புக்குச் சென்று வாளா இருக்க முடியாது.
“எமக்குத் தொழில் கவிதை. இமைப்பொழுதும் சோராதிருத்தல்” எனும் மகாகவியின் வரிகளுக்கிணங்க எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் ஜோசப் ராஜாவின் வேண்டுகோளின்படி கவிதைகளை நேசிப்போம். கவிதைகளை சுவாசிப்போம். அவை நம் வாழ்விற்கு அழகூட்டும். அவை நம் வாழ்வை மெருகேற்றும்.
”எனக்காக நீ காத்திருக்கிறாய் / யாரும் யாருக்காகவும் காத்திருக்காததைப் போல!” ‘காத்திருத்தலின் அவசியத்தையும் அன்பையும் அதில் ஒட்டியிருக்கும் நம்பிக்கையையும் அழகாகவும் அழுத்தமாகவும் சொன்ன கவிதை. சிறப்பு தோழர். கவிதை தினத்தில் கவிதைகள் குறித்து பேசுவதைக் காட்டிலும் கவிதைகள் மீதான வாசிப்பு குறித்த தளத்தை கவனத்தை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதையும், வாசகர்கள் புரிந்துகொள்ள வேண்டிய சூழலுக்குள் நின்று நீங்கள் இக்கட்டுரையின் வழியே பேசி இருப்பதாகவே உணர்கிறேன். உண்மையில் ஒரு படைப்பு வாசிப்பின் வழியே உள்வாங்கப்பெற்ற நிலையிலேயே முழுமையடைகிறது. எழுதுபவரின் வீச்சியும் வாசகரின் கருத்தியலில் கலந்துரையாடும் நிலைக்கு சென்று சேர்வதை இலக்காக கொண்டிருக்கிறது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கின்றீகள். இன்றைய கால நேரங்களை நம்மிடமிருந்து திருடிச்செல்லும் பல்வேறு ஊடக அரசியல் அட்டகாசங்களுக்கு இடையே வாசிப்பின் நேரம் குறைந்து விட்டதை நானும் உணர்கிறேன். அதன் தேவையை படிப்படியாக அதிகரிக்க வேண்டியுள்ளது. நன்றி தோழர்.