நேற்று மாலை பெரியார் திடலில் நடைபெற்ற கவிஞர். பூ. ஆசு அவர்களின் அதிகாரத்தின் முகங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன்.
தோழர் ஆசு, நேரடியாக எனக்கு அறிமுகம் இல்லாத போதும் அதிகாரத்திற்கு எதிரான அவரது அறச்சீற்றமே அந்த நிகழ்வில் கலந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.
சமகாலத்தில் அதிகாரத்தின் கரங்களால் எளிய மக்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராக கவிதைகள் எழுதியிருக்கிறார் ஆசு.
திடீரென்று ஊரடங்கை அறிவித்த அதிகாரத்திற்கு எதிராகவும், சாலைகளில் சாரைசாரையாக உயிரச்சத்தோடு நடந்துசென்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் கவிதை எழுதியிருக்கிறார்.
பெருந்தொற்றின் இரண்டாம் அலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்திய அதிகாரத்திற்கு எதிராகவும், ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத்திணறி மரணமடைந்த மக்களுக்காகவும் கவிதை எழுதியிருக்கிறார்.
சுடுகாட்டுப் பாதையை மறிக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும், இறந்த பின்னும் மறுக்கப்படும் உரிமையற்றவர்களுக்காகவும் கவிதை எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவில் கறுப்பின மனிதனின் கழுத்தை நெறித்த அதிகாரத்திற்காகவும், துடித்து துடிதுடித்து செத்துப்போன ஜார்ஜ் பிளாய்டுக்காகவும் கவிதை எழுதியிருக்கிறார்.
நிச்சயமாக நீங்கள் வாசிக்க வேண்டிய நூலென்று உறுதியாகச் சொல்வேன்.
ஆசு, தொடர்ந்து எழுதுங்கள். கவிதைகள் தேவைப்படுகின்ற காலம் இது.
அதிகாரத்தின் முகங்கள்
அசிங்கமாக இருக்கின்றன
அதிகாரத்தின் முகங்கள்
கோரமாக இருக்கின்றன
அதிகாரத்தின் முகங்களில்
இரத்தக்கறை படிந்திருக்கிறது
அதிகாரத்தின் முகங்களில்
போர்வெறி தாண்டவமாடுகிறது
கவிதை அதிகாரத்தை
வெல்ல வேண்டும்
கவிஞன் அதிகாரத்தை
வீழ்த்த வேண்டும்
உங்கள் கவிதைகள்
செய்யுமென்று நம்புகிறேன்
நீங்களும் நிச்சயமாக
செய்வீர்களென்று நம்புகிறேன்
தொடர்ந்து எழுதுங்கள் ஆசு. தோழமை வாழ்த்துகள்.
நூலை வெளியிட்டிருக்கும் வேரல் புக்ஸ் நிறுவனத்தாருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோசப் ராஜா
