உலகம் முழுவதும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் குறித்துப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கருணாபுரம் பகுதியில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. ஐம்பது பேரையும் தாண்டி பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால் இன்னும் சிலநாட்களுக்கு இந்தத் துயரம்தான் இங்கே பேசப்பட்டுக் கொண்டிருக்கப் போகிறது. தந்தை இழந்த குழந்தைகளின் கதறல்களையும், தந்தையையும், தாயையும் இழந்த குழந்தைகளின் அழுகுரல்களையும் கேட்கும்போது உண்மையிலேயே சொல்லமுடியாத துயரமும், சொல்லத் துடிக்கிற கோபமும் ஏற்படத்தான் செய்கிறது. அதிலும் கருணாபுரத்தில் மட்டுமல்ல, கள்ளச்சாரயம் குடித்து இதுவரையிலும் இறந்துபோன மனிதர்கள் அத்தனைபேரும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டிருக்கக் கூடியவர்கள் என்பது ஆழமாக யோசிக்கவேண்டிய செய்தியாக இருக்கிறது.
ஒரு பெருமுதலாளி எப்படி தன்னுடைய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பொருட்களை உற்பத்தி செய்து இலாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறானோ, அதுபோலவே சாராயம் காய்ச்சுகின்ற இந்தச் சிறுமுதலாளிகளும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்விடங்களைத் தேடித்தான் தங்களுடைய சாராய உற்பத்தியைத் தொடங்குகிறார்கள். யாருக்கும் தெரியாமல் யாரும் சாராயம் காய்ச்சுவதில்லை. சம்பந்தப்பட்ட பகுதியின் காவல்துறைக்குத் தெரியாமல் நடப்பதில்லை இந்தத் தொழில். அந்தப் பகுதியில் இருக்கும் அரசியல் கட்சியினரின் அளவற்ற ஆதரவு இல்லாமல் தொடர்வதில்லை இந்தத் தொழில். அந்த ஊரின் அரசு அதிகாரிகளின் கள்ளக்கூட்டு இல்லாமல் தொடங்கப்படுவதில்லை இந்தத் தொழில். இப்படித்தான் இங்கே ஆண்டாண்டு காலங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதும் விற்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எப்போதாவது ஏற்படும் இதுபோன்ற கொத்துக் கொத்தான மரணங்கள், எதிர்க்கட்சிகளால் பெரும்பாலும் அரசியல் செய்வதற்காகப் பயன்படுகின்றன. ஆளுங்கட்சிகளால் கருணைசுரக்கும் தங்களுடைய இதயத்தை ஒருதரம் திறந்து காட்டுவதற்கான நல்வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. எதுவும் எப்போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், இனியும் பாதிக்கப்படப்போகும் மக்களுக்கும் எந்தவிதத்திலும் எந்த உதவியும் செய்யப்போவதில்லை.
அவர்கள் மீண்டும் காய்கறிச் சந்தைகளில் மூட்டைதூக்கத்தான் போகிறார்கள். அவர்கள் மிண்டும் கல்குவாரிகளில் கல் உடைக்கத்தான் போகிறார்கள். அவர்கள் மீண்டும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டியெழுப்பத்தான் போகிறார்கள். அவர்கள் மீண்டும் நீங்கள் நினைத்துப்பார்க்கவே முடியாத வேலைகளை தங்களுடைய வாழ்விற்காகவும், தங்களுடைய பிள்ளைகளுக்காகவும் செய்யத்தான் போகிறார்கள். அத்தனை களைப்பும், அத்தனை வலியும் தீர மீண்டும் குடிக்கத்தான் போகிறார்கள். இதுபோன்ற மரணங்கள் இல்லையென்றாலும் இந்தக் குடியால் வெகுசீக்கிரத்தில் அந்தக் கொடூர மரணத்தைச் சந்திக்கத்தான் போகிறார்கள். அப்படியென்றால் இதிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ளப்போகிறோம். குடிகாரர்கள் என்று அவர்களை கேலிசெய்து கொண்டிருக்கும் யாரும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ, அவர்களின் வேலையைப்பற்றியோ இப்போதல்ல எப்போதும் பேசப்போவதில்லை. அரசாங்கம் தன்னுடைய அன்பின் கரங்களால் தெருவிற்குத்தெரு மதுபானக் கடைகளைத் திறந்து கொண்டிருக்கும் போதும், இந்தக் கள்ளச்சாராயம் ஏன் காய்ச்சப்படுகிறது, ஏன் விற்கப்படுகிறது, அதை ஏன் இந்த உழைக்கும் மனிதர்கள் வாங்கிக் குடித்துத் தொலைக்கிறார்கள். அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் மதுவின் விலையைக் காட்டிலும் இந்தக் கள்ளச்சாராயம் மலிவாகக் கிடைக்கிறது. அவ்வளவுதான்.
நான் சிறுவனாக இருக்கும் போதிருந்தே இந்தக் கள்ளச்சாராய விற்பனை பற்றியும், இப்படிப்பட்ட கொடூர மரணங்களைப் பற்றியும் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்றைய கருணாபுரத்தின் நிலைமையைக் கிட்டத்தட்ட நாம் எல்லோருமே கடந்து வந்திருப்போம். ஆனாலும் அந்த நிலைமை அப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதில் யாருக்கும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாத போது, ஆனாலும் அந்த எளிய மனிதர்களின் மரணங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லாத போது ஒரு மானுட சமூகமாக நாம் தோற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை இன்னும் அழுத்தமாகச் சொல்லவே விரும்புகிறேன். கள்ளச்சராயம் காய்ச்ச அனுமதிக்கும் இந்த அமைப்பை இவ்வளவு காலமாக அனுமதித்துக் கொண்டிருக்கும் நம் எல்லோர் கைகளிலும் அந்தப் பாவக்கறை அழியாமல் இருக்கிறது என்பதை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
நாம் பார்க்க, கைப்பேசி இன்று மானுட சமூகத்தோடு இன்னொரு கையாக இரண்டறக் கலந்துவிட்டது. ஊர்களை இணைக்க கூடிய மேம்பாலங்களில் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாந்து நாம் பார்த்துக் கொண்டிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இன்று வசித்துக் கொண்டிருக்கிறோம். நகரங்களுக்குள் மெட்ரோ இரயில்களில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இந்த தலைவர்கள் இதையெல்லாம் வளர்ச்சி என்று வாய்கிழிய கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தச் சமூகத்திற்கும் இவர்கள் சொல்லும் வளர்ச்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா. இன்னும் நீங்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால், இதைவிட ஆழமான பள்ளத்திற்குள் தள்ளப்படுவீர்கள் என்பதுமட்டும் மறுக்கவேமுடியாத உண்மை. அரசின் அத்தனை மதுபானக் கடைகளும் எளிய மனிதர்களையும் நடுத்தரவர்க்கத்து மனிதர்களையும் குறிவைத்து இலாபத்தைப் பெருக்கிக் கொண்டிருப்பதைப்போல, உடல் உழைப்பின் உச்சத்தில் இருக்கும் மனிதர்களைக் கள்ளச்சாராயம் குறிவைத்துக் காவுவாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவ்வளவு சாதாரணமாக கடந்துவிட முடியாது.
ஓபியத்தின் மூலம் இப்படித்தான் ஒரு நாடு காவுவாங்கப்பட்டது. ஓபியத்தின் மூலம் இப்படித்தான் ஒரு மானுடத்திரள் வீழ்த்தப்பட்டது. அப்படித்தான் இங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில்தான், இந்தச் சமூகத்தின் விழ்ச்சியும், முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் வேகமாக இருவேறு திசைகளில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அரசு மதுபானக் கடைகளை மொய்த்திருக்கும் மனிதர்களையும், கைவிடப்பட்ட கட்டிடமாக இருளடைந்து கிடக்கும் நூலகங்களையும் இந்த மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பார்க்கலாம் நீங்கள். நிலைமை அப்படி இருக்கும்போது நம்மை ஆள்கிறவர்களைப் பற்றிய விமர்சனத்திற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எனக்கென்னமோ இந்தச் சமூகம் இப்போதிருக்கும் நிலைமைக்கு இவர்களே மேலானவர்கள் என்றுதான் தோன்றுகிறது. மிகப்பெரிய மாற்றங்கள் நிகழாதவண்ணம் அரசின் மதுபானக் கடைகளும், அவர்களுடைய முதலாளிகளும், கள்ளச்சாராய வியாபாரிகளும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியென்றால் மாற்றத்தை நிகழ்த்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
வருத்தங்கள் நிறைந்திருப்பது உண்மைதான். ஆனாலும் திட்டமிட்டு குடிக்கு அடிமையாக்கப்பட்டவர்களும், திட்டமிட்டுக் குடியால் வீழ்த்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் கொஞ்சம் சமூக அறிவோடும், கொஞ்சம் சமூக மாற்றத்தின்மேல் விருப்பத்தோடும், இதுவரையிலும் தங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த, இதுவரையிலும் தங்களின் வாழ்க்கையை வஞ்சித்துக் கொண்டிருந்த இந்த அமைப்பிற்கு எதிராகத் திரும்பி நிற்கும் காட்சியை, எதிர்த்து நிற்கும் பேரழகை வார்த்தைப்படுத்தவே காத்துக் கொண்டிருக்கிறேன்.
ஜோசப் ராஜா