ஒடுக்கப்பட்டவளின் ஏக்கப் பெருமூச்சு

பெரும்பாலான சகபயணிகள் கைப்பேசித் திரையைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். நீண்ட தூரத்திலிருந்து வேலைக்காக வந்துகொண்டிருப்பவர்களில் சிலர் மிச்சமிருக்கும் தூக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்வண்டிப் பயணத்தின் வேகக்காற்றை அனுபவித்தபடி செய்தித்தாளை வாசிப்பது எப்போதும் இனிதானதுதான். ஆனால் செய்திகள் அப்படி இனிதானதாக எப்போதுமே இருப்பதில்லை. ஒவ்வொரு பக்கங்களிலும் நிறைந்திருக்கும் செய்திகள், ஒவ்வொருவிதமான உணர்வுகளைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. கடந்த ஒருவாரமாக, அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த இந்திய ஒன்றியத்தின் பிரதமர் அவர்களைப் பற்றிய செய்திகள்தான் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு மாதிரியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபரும், இந்தியப் பிரதமரும் கட்டியணைத்தபடி வெளிப்படுத்திய புன்னகை இருவரும் நீண்டகால நண்பர்களாக இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றியது.

அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் பிரதமரோடு, இந்தியாவின் பெரும்பணக்காரர்களும் ஏன் சென்றிருக்கிறார்கள் என்று எந்தப்பக்கத்திலும் எழுதப்படவில்லை. அதிலும் ஆனந்த் மஹிந்திரா என்ற தொழிலதிபர் வெள்ளை மாளிகையின் இரவு விருந்தை ஒரு கை பார்ப்பதற்காக பகலெல்லாம் வயிற்றைக் காயப்போட்டிருக்கிறார் என்ற செய்தி அவ்வளவு ரசனையாக எழுதப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சகபயணி ஒருவர் – தொலைதூரத்தில் இருந்து வருவார்போல – அதிகாலையிலேயே சுடப்பட்டு வெங்காயச் சட்னியில் ஊறவைக்கப்பட்டிருந்த தோசையை எடுத்துச் சாப்பிடத் தொடங்கினார். வெங்காயத்தின் வாசனை, அதோடு கலந்த பூண்டின் நறுமணம் அந்தப் பெட்டியை நிறைத்திருந்தது. உழைக்கிற மக்கள் நேசிக்கும் உணவுப்பொருட்களான வெங்காயத்தின், பூண்டின் வாசனையோடு நான் இறங்கவேண்டிய நிறுத்தமான கோடம்பாக்கம் வந்ததும் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

கால்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் மூளைக்குள் அரைமணிநேரம் வாசித்த செய்திகளின் தாக்கம் நிறைந்திருக்கிறது. முக்கியமாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நம் பிரதமரிடம், இந்தியாவில் சிறுபான்மையினர் பிரச்சனை சம்பந்தமாக கேள்வி எழுப்புகிறார் ஒரு செய்தியாளர். அப்படி எந்தப் பிரச்சனையும் இல்லையென்று சொல்லியவர் ஒற்றுமையையும், அன்பையும் பற்றி நீண்ட உரையாற்றியதை நினைத்துக் கொண்டே நடந்துகொண்டிருந்தேன். இப்போது நான் கடக்க வேண்டிய வடக்கு உஸ்மான் சாலை வந்துவிட்டது. இதற்குமேல் இதையெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தால் நல்லதல்ல என்று நினைத்தபடி இரண்டுபக்கமும் சீறிவரும் வண்டிகளைக் கவனித்துக்கொண்டே சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்தேன். கடந்தசில வருடங்களாக இந்த தேசத்தின் வளர்ச்சி படுபயங்கரமாக இருக்கிறது என்று சொல்லப்படும் செய்திகள் சாலையில் ஓடுகின்ற வாகனங்களைப் போலவே மண்டைக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. வளர்கிறதோ இல்லையோ பேச்சுதான் அதிகமாக இருக்கிறது என்ற அசரீரியின் குரலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் சாலையைக் கடந்தேன்.      

ஒரே பாதையில்தான் தினமும் நடந்து செல்கிறோம், ஆனால் ஒரே காட்சிகளை தினமும் பார்ப்பதில்லை. நான் தினமும் கடந்துசெல்லும் வடக்கு உஸ்மான் சாலையானது சென்னையின் மிகுந்த பரபரப்பான சாலையில் ஒன்று. வணிக வளாகங்களும், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிகளும் நிறைந்திருக்கும் சாலை. வானுயர உயர்ந்திருக்கும் நகைக்கடைகளுக்கும் பஞ்சமில்லாத சாலை, அந்தச் சாலையில் தான், அந்தச் சாலையின் ஓரத்திலிருக்கும் நடைபாதையில்தான் எனக்குத் தெரிந்து ஏராளமான குடும்பங்கள், குழந்தைகளும் பெண்களுமாய்த் தங்கியிருக்கிறார்கள் பல வருடங்களாக. இந்த நகரத்தில் ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டு இரவில் இங்குதான் கூடடைகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் காலைநேரத்தில்தான் தினமும் அவர்களைச் சந்திப்பேன் நான். குழந்தைகள் அங்குதான் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இளம்பெண்கள் அங்குதான் தலைசீவித் தயாராகிக் கொண்டிருப்பார்கள். இது என்ன சமூகம்? இது என்ன வாழ்க்கை? என்று எப்போதும் நான் நினைப்பதுண்டு. இப்போதும் நீங்கள் அந்தச் சாலையைக் கடக்க நேர்ந்தால், அவர்களையோ, அவர்களுடைய பொருட்கள் கட்டிவைக்கப்பட்ட மூட்டைகளையோ பார்க்கலாம்.

இதோ அந்த இடத்தை நெருங்குகிறேன். இன்று குழந்தைகளைக் காணவில்லை. பெண்களைக் காணவில்லை. ஆனால் பூட்டப்பட்டிருக்கும் ஒரு கடைக்கு வெளியே, குவித்து வைக்கப்பட்டிருக்கும் மூட்டைகளுக்கு முன்னால் ஒரேயொரு இளம்பெண் மட்டும் கண்களை மூடி, முழங்காலிட்டபடி வேண்டிக் கொண்டிருக்கிறாள். ஒரு பழைய சுடிதாருக்குமேல், ஒரு ஆணின் சட்டையை அணிந்துகொண்டிருந்தும் கூட அவ்வளவு மெலிதாக இருக்கிறாள். கைகள் கூப்பியது கூப்பியதாகவே இருக்கின்றன. ஒரு சின்ன அசைவுகூட இல்லை அவளிடம். என்னையறியாமல் நங்கூரமிட்டதுபோல் நின்றபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தச் சாலையில் தங்கியிருக்கும் அவளுடைய பகல்கள் எப்படி இருக்கும்? அவளுடைய இரவுகள் எப்படி இருக்கும்? ஒவ்வொரு இரவிலும் அவளுடைய தூக்கம் எப்படி இருக்கும்? இந்தக் காலையில் அவளுடைய தெய்வத்திடம் அவளுடைய வேண்டுதல் என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் என்னை அந்த இடத்திலேயே ஆணியைப் போல அறைந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. இந்தியாவில் வறுமை இல்லை. இந்தியாவில் பாலியல் குற்றங்கள் இல்லை. இந்தியாவில் மதப்பிரச்சனைகள் இல்லவே இல்லை என்ற செய்திகளையெல்லாம் என்னசெய்வதென்றும் தெரியவில்லை.

அவள் வயதொத்த இளம்பெண்கள் இருசக்கர வாகனங்களில் அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ சென்று கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலபெண்கள் உயர்ரக கார்களில் வேகமாக விரைந்து கொண்டிருக்கிறார்கள். எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேண்டுதலில் மட்டுமே கவனமாக இருக்கும் அந்தப் பெண்ணைக் கண்டும் காணாமலும் பலபெண்கள் அந்தச் சாலையில் விரைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பரப்பரப்புகளுக்கு நடுவில், இவ்வளவு சத்தத்திற்கு இடையில், அவளைச் சாலையில் வாழவைத்த இந்த இதயமற்ற சமூகத்தில் அவளுடைய இதயமாக இருக்கும் தெய்வத்திடம் என்ன வேண்டிக் கொண்டிருக்கிறாள்? அவளை வெட்டவெளியில் வாழவைத்த இந்த ஆன்மாவற்ற சமூகத்தில் அவளுடைய ஆன்மாவாக இருக்கும் தெய்வத்திடம் என்ன வேண்டிக் கொண்டிருக்கிறாள் என்ற யோசனையோடு நின்று கொண்டிருந்தேன். வேண்டுதலை முடித்துக் கையை இறக்குகிறாள். தேக்கி வைக்கப்பட்ட கண்ணீர் நிறைந்திருக்கிறது. பாரத்தை இறக்கி வைத்தவளாய் அவள் விட்ட நீண்டதொரு பெருமூச்சு கொஞ்சம் தள்ளிநிற்கும் என்னையும் சுடுகிறது. அந்தப் பெருமூச்சை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. அந்தப் பெருமூச்சை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. உண்மையைச் சொன்னால் அந்தப் பெருமூச்சை உங்களிடம் சொல்லவேண்டுமென்றுதான் இதை எழுத நினைத்தேன்.

இப்படிப்பட்ட ஏக்கப் பெருமூச்சுகள் ஒன்றாய்ச் சேர்ந்துதான் இந்த உலகத்தில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்திக்காட்டின. இப்படிப்பட்ட ஏக்கப் பெருமூச்சுகள் ஒன்றாய்ச் சேர்ந்துதான் இந்த உலகத்தில் மாபெரும் புரட்சிகளைப் பிரசவித்துப்போட்டன. இப்படிப்பட்ட ஏக்கப் பெருமூச்சுகள் ஒன்றாய்ச் சேர்ந்துதான் மனிதகுலத்திற்கு எதிரான எண்ணங்கொண்டவர்களுக்கு மறக்கமுடியாத முடிவுகளைப் பரிசளித்தன. அப்படிப்பட்ட ஏக்கப் பெருமூச்சு அவளிடம் மட்டுமா இருக்கிறது தோழர்களே? உங்கள் இதயத்தை திறந்து சொல்லுங்கள், எத்தனை ஏக்கப் பெருமூச்சோடு ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? கடக்க முடியாத எத்தனை துயரங்களைக் கடந்து கொண்டிருக்கிறீர்கள் ஒவ்வொரு நாளும்? சகிக்க முடியாத எத்தனை பாடுகளைச் சகித்துக் கொண்டு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறீர்கள்? முக்கியமாகக் காதுகள் வலிக்கும் அளவிற்கு எவ்வளவு பொய்களை கேட்டுக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? அவள் சாலையோரத்தில் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறாள். அவள் சாலையோரத்தில் வேண்டிக் கொண்டிருக்கிறாள். இருக்கட்டுமே அவளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறதென்று சொல்லுங்கள். அன்பிற்குரிய தோழர்களே, அந்த ஏக்கப் பெருமூச்சை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியவில்லை என்னால். நீங்களும் மறந்து விடாதீர்கள். ஏக்கப் பெருமூச்சுக் கொண்டவர்கள் கைகோர்த்துக் கொள்ளவேண்டிய காலமிது. ஒற்றுமையாக இருக்கவேண்டிய காலமிது. சேர்ந்து போராடவேண்டிய காலமிது.

அவர்கள் மாளிகையில் விருந்துண்ணட்டும். அதைவிடச் சிறப்பான விருந்தை அவளுக்குப் பரிசளிப்போம் நாம். ஆயிரமாயிரம் பொய்களை அசராமல் சொல்லட்டும். அவர்கள் ஒருபோதும் எதிர்பாராத உண்மையை அவர்களிடம் சொல்வோம் நாம். இந்தியா ஒருபக்கம் வல்லரசாக வளரட்டும். ஒவ்வொரு சாலையோரத்தில் வசிப்பவர்களும், நாமும்கூட இன்னும் மேலான வாழ்க்கையை நோக்கி வளர்ந்து செல்வோம்.

வளர்ச்சி என்பது எல்லோரும் வளர்வதல்லவா!

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 27/06/2023 - 7:45 PM

வளர்ச்சி என்பது எல்லோரும் வளர்வதல்லவா?
என்று முடியும் கவிஞர் ஜோசப் ராஜாவின் பதிவுகள் ஆழ்ந்து வாசிக்க வேண்டியவை.

பாரதப் பிரதமர் நிருபர்களிடம் பேசுவது உலக அதிசயங்களுள் ஒன்று.

ஆனால் அப்படிப் பேசுவது இந்தியாவில் அல்ல. அமெரிக்க வெள்ளை மாளிகையில் என்பதுதான் கசப்பான உண்மை.

ஒன்பதாண்டு காலமாக இந்தியாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளிக்காத ஒரே பிரதமர் மோடி என்பதுதான் வேதனை.

இந்நிலையில் சாலையோரத்து எளிய மக்களின் காட்சிகளை அடுக்குகிறார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாருங்கள்
படியுங்கள்
மாற்றத்துக்காக பயணியுங்கள்.

Reply

Leave a Comment