எம்.டி. வாசுதேவன் நாயர்

தினைந்து வருடங்களுக்கு முன்னால், உலகத்தின் முக்கியமான திரைப்படங்கள் அறிமுகமானபோது பக்கத்தில் இருக்கும் மலையாளத் திரைப்படங்களையும் கவனிக்கத் தவறவில்லை. வாழ்வின் மிகத்துயரமான ஒரு காலகட்டத்தில் கேரளாவின் உள்ளும் புறமும் பயணம்செய்துவிட்டு வரலாம் என்று நானும் என்னுடைய நண்பன் பாஸ்கரும் சென்றிருந்தோம். திருவனந்தபுரம், ஆலப்புழா, கொச்சி போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் தொலைதூரத்தில் இருந்த சில கிராமங்களில் இருந்த நண்பர்கள் வீட்டிலும் தங்கினோம். அந்த அன்பின் உபசரிப்பு இத்தனை வருடங்கள் கழிந்தும்கூட நினைத்தால் இதயத்தை நெகிழச் செய்கிறது. ஓ! நான் சொல்லவந்தது இதுதான். அந்தப் பயணத்தில் நான் அதிகமாகத் தேடியது அடூர் கோபலகிருஷ்ணன், எம். டி. வாசுதேவன் நாயர் போன்ற அற்புதமான படைப்பாளிகளின் திரைப்படங்களைத்தான். ஊர் திரும்பியதும் முதலில் பார்த்தது நிர்மால்யம். இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தாலும், மறக்கமுடியாத இரவுகளில் நிர்மால்யம் பார்த்த இரவும்கூட நிலைத்திருக்கும்.

நிர்மால்யம் தொடங்கி ஒரு வடக்கன் வீரகதா போன்ற எம் டியின் மற்ற திரைப்படங்களையும், அவர் திரைக்கதை எழுதிய பல திரைப்படங்களையும் பார்த்து முடித்தேன். அதோடு விட்டுவிடவில்லை அவர் எழுதிய நாவல்கள், எண்ணிலடங்காச் சிறுகதைகள், மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட அவரின் திரைக்கதைகள் என ஒருசில வருடங்களை எம் டியோடு செலவு செய்திருந்தேன். மலையாள இலக்கியத் துறையிலும், திரைப்படத் துறையிலும் ஒரேநேரத்தில் உச்சத்தில் அமர்ந்திருந்த கடினமான உழைப்பிற்குச் சொந்தக்காரர் எம் டி. மலையாளத்துக்காரர்களின் இலக்கிய ரசனையையும், திரைப்பட ரசனையையும் கூடுமானவரையிலும் ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்றவர். இன்றைய மலையாளத் திரைப்படத்தின் முன்னணி நடிகர்களைத் தன்னுடைய எழுத்தால் செதுக்கித் தந்தவர். அப்படிப்பட்ட எம் டிக்கு மலையாளத் திரையுலகம் சிலநாட்களுக்கு முன்னால் மரியாதை செய்ததைப் பார்த்தேன். மலையாளத்தின் முன்னனி இயக்குநர்கள் இயக்க, முன்னணி நடிகர்கள் நடிக்க எம்டியின் ஒன்பது கதைகள் மனோரதங்கள் என்ற பெயரில் வலைத்தொடராகப் படமாக்கப்படிருக்கின்றன. அந்த வெளியீட்டு விழாவின் நாளில் தன்னுடய 91 வது வயதைக் கடந்த எம் டியை எல்லோரும் சேர்ந்து கொண்டாடத் தவறவில்லை.

வயோதிகத்தால் தளர்ந்துவிட்ட எம் டி, தன்னுடைய பிரியப்பட்ட நடிகர் மம்முட்டியின் நெஞ்சில் சிறிதுநேரம் சாய்ந்து கொண்டதை ஞான வயோதிகனின் குழந்தைமைத் தருணம் என்று பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. தமிழகத்தில் இருந்து, பாருங்கள் மலையாள சினிமாவை, ஒரு எழுத்தாளர் எப்படி மதிக்கப்படுகிறார்? ஒரு எழுத்தாளர் எப்படி அங்கீகரிக்கப்படுகிறார் என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவைப்பற்றி நான் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். சிறியதொரு உதராணத்தைச் சொல்ல வேண்டுமென்றால், பெரியளவில் வாசிப்பனுபவம் இல்லாமல், வாழ்பனுபவமும் இல்லாமல் படமெடுக்கப் போகிறேன் என்றும், கதையும் நான்தான் எழுதுவேன், திரைக்கதையும் நானே எழுதுவேன், இயக்கவும் செய்வேன் என்ற மனநிலையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருந்துகொண்டிருக்கும் போது பெரிய இயக்குநர்கள் என்று சொல்லப்படுகிறவர்களின் மனநிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கலைக்கு எந்த விதத்திலும் தேவையில்லாத நான் என்கிற அகந்தைதான் எங்குதிரும்பினாலும் நிறைந்து கிடக்கிறது. எழுத்தைப் புரிந்துகொண்டதினால் அவர்கள் எம் டியை நேசித்தார்கள். எழுத்தைப் புரிந்துகொள்வது என்பது சமூகத்தையும் புரிந்துகொள்வதுதான். எம் டியும் விடவில்லை வேறுவேறு முயற்சிகளில் வேகமாக இயங்கிக் கொண்டே இருந்தார்.

2014 ஆம் ஆண்டு சென்னையில் எம் டிக்கு விருது வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் பாம்குரோவ் ஹோட்டலில் தங்கியிருந்தார். மாலையில் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன். கவிதை எழுதுகிறவன் என்று சொன்னதும் உற்சாகமாக சந்திக்கலாம் என்று சொன்னார். மூன்று மணிநேரம் இலக்கியம், சினிமா, சமூகம் என்று தனது அனுபங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிதைகள் நீண்டநாட்களாக எழுதிக் கொண்டிருந்தாலும், திரைக்கதை அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்தேன். சில கதைகளை அவரோடு பகிர்ந்து கொண்டேன். நன்றாக எழுத வருகிறது, தொடர்ந்து எழுதுங்கள் என்று சொன்னார். ஒருவகையில் என்னை நம்பிக்கையாகத் திரைக்கதை எழுத வைத்ததில் எம் டிக்கு முக்கியப் பங்குண்டு. அந்தச் சந்திப்பு கவிதையையும், திரைக்கதையையும் குழப்பிக் கொள்ளாமல் முன்னே எடுத்துச் செல்வதற்கான தெளிவை எனக்குக் கொடுத்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

புறப்படும்போது நாளை நண்பர்களை அழைத்து வரட்டுமா, உங்களைச் சந்தித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று கேட்டேன். மிகுந்த மகிழ்ச்சியோடு அழைத்து வாருங்கள் என்றார். மறுநாள் நண்பர்களோடு அதே இலக்கியம், சினிமா, சமூகம் என்று நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தோம். முடிவில் எம் டியை நான் முழுவதும் விளங்கிக் கொண்டேன். மலையாள சமூகத்தையும், மலையாள சினிமாவையையும் புரிந்துகொண்டேன். கூடவே தமிழ்ச்சமூகத்தையும், தமிழ் சினிமாவையும் நன்றாக மிக நன்றாகப் புரிந்துகொண்டேன். ஆனாலும், இவர்களுக்கு நம்மைவிட்டால் யார் இருக்கிறார் என்ற எண்ணத்தில் நம்பிக்கையோடு இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

என் அன்பிற்குரிய ஞானவயோதிகனுக்கு வாழ்த்துச்சொல்ல இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

S lokesh 24/07/2024 - 6:53 PM

அருமையான பகிர்தல்.. வாழ்த்துக்கள். சமீபத்தில் எம் டி வாசுதேவ நாயரின் இரண்டாம் இடம் என்ற நாவலை படித்தேன் அருமையான ஒரு படைப்பு…எம் டி எமது வாழ்த்துக்களும் உரித்தாகுக..

Reply

Leave a Comment