என் வயநாடே!

யநாட்டை இப்படிப் பார்ப்பதற்கு முடியவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் இயற்கை சொல்லும் உண்மை இப்படித்தான் இருக்கிறது. பார்க்காமல் இருக்கமுடியாது.

இப்போதெல்லாம் இயற்கைப் பேரழிவு என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எண்ணற்ற உயிர்களைப் பலிகொடுப்பதும், இரங்கல்செய்தி சொல்லிக்கொள்வதும் தொடர்கதையாகிப் போய்விட்டது.

பெருமழையில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் வீடுகள் மட்டுமல்ல, நிகழ்ந்த நிலச்சரிவில் ஊர்களே புதையுண்டு போயிருக்கின்றன. நூற்றுக்கும் மேலான உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வழக்கம்போல மத்திய அரசு மாநில அரசைக் குறைசொல்லிக் கொண்டிருக்கிறது. மாநில அரசோ பதில்சொல்லிக் கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, யாரும் சொல்லாத உண்மைகளைக் காதுகிழியக் கத்திக்கத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வயநாடை அழகின் அழகு என்று சொல்லலாம். அந்த அழகின்மீது எதற்கு இத்தனை கட்டிடங்கள். அந்த அழகின்மீது எதற்கு இத்தனை தோட்டங்கள். அந்த அழகின்மீது எதற்கு இத்தனை ஆக்கிரமிப்புகள். இந்தக் கேள்விகளுக்கு இந்த முதலாளித்துவச் சமூகம் அவ்வளவு எளிதாகக் காதுகொடுத்து விடாது.

அப்படியென்றால் பெருமழையின் பேரழிவை, பேரழிவின் நிலச்சரிவை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

அந்தோ! புதையுண்ட அந்த மனித உயிர்களை நினைத்தால்தான் வேதனை பெருகுகிறது.

ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் நீலகிரி மலைத்தொடர் பரிச்சயமானது எனக்கு. காதலையும், வாழ்க்கையையும் கொடுத்த மலையென்பதால் இப்போது வரையிலும் இணக்கம் உண்டு அந்த மலையோடு.

இருபது வருடங்களுக்கு முன்னால் நான்பார்த்த மலையல்ல இப்போதிருப்பது. கண்ணுக்கெட்டிய தூரம் கட்டிடங்கள். கட்டிடங்கள். கட்டிடங்கள்.

அந்த மலையில், கல்லூரி படிக்கும்போது ஊட்டியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த காத்தாடிமட்டம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன். அப்போது என் கல்லூரி நண்பர்களுக்கு அந்த ஊரே தெரியாமல் இருந்தது.

இப்போது காத்தாடிமட்டத்தில் வீடுகளும், விடுதிகளும் நிறைந்திருக்கின்றன. தங்குவதற்கு இடம் கிடைக்காத அளவிற்கு அந்தக்கிராமம் வளர்ந்திருக்கிறது (?)   

நீங்களே சொல்லுங்கள், ஆனாலும் இந்த மானுடப் பதர்களுக்கு இவ்வளவு பேராசை இருக்கக் கூடாதல்லவா!

இன்று வயநாட்டில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பெருமழையும், பேரழிவும் நாளை நீலகிரி மலைக்கான அபாயத்தின் எச்சரிக்கை மணியென்பது, மண்மீது அக்கறைகொண்ட மனிதர்களாக நாம் இதயத்தில் இறக்கிக் கொள்ளவேண்டிய உண்மை.

முதலாளித்துவம் மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, இயற்கைக்கும் எதிரானது.

அவசரத் தேவையாக வயநாட்டை நோக்கி நம் அன்பின் கரங்களை, உதவிக் கரங்களை நீட்டுவோம். மானுட அன்பில் மட்டும்தான் மானுடம் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில், முதலாளித்துவத்திற்கு எதிரான சூடான இதயங்களோடு எண்ணிலடங்கா தோழர்கள் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்கள் வயநாட்டில். வயநாடு எனக்கு அப்படித்தான் அறிமுகம் ஆனது.

அவர்களை ஒழித்துவிட்டதாகச் சொன்னவர்கள் வயநாட்டையும் ஒழித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆனாலும் என் அன்பின் வயநாடே உன்னை ஆரத்தழுவிக் கொள்கிறேன்.

ஓர் உரையாடலில், இனி இப்படி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நண்பரொருவர்.

ஒன்றுமில்லை ஒவ்வொரு காடுகளையும், ஒவ்வொரு மலைகளையும் பழங்குடிகளிடமும், பூர்வகுடிகளிடமும் கொடுத்துவிட்டு ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும், ஒவ்வொரு முதலாளிகளும் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும்.

இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் இருந்தவரை இப்படியெல்லாம் இல்லை, இயற்கையின் திருடர்கள் பெருகப்பெருக பேரழிவுகளும் பெருக்கெடுக்கிறது வெள்ளமாய்.

ஆனாலும் என் அன்பின் வயநாடே உன்னை ஆரத்தழுவிக் கொள்கிறேன்.

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 02/08/2024 - 12:16 PM

இயற்கைப் பேரிடர் வயநாட்டில் பேயாட்டம் ஆடி இன்று சொல்லொணாத் துயரில் மனிதகுலம்.

ஆயினும் இயற்கையோடியைந்த வாழ்வுக்கு எதிராக இலாப வேட்டையில் இயற்கையைச் சீரழிக்கும் பெருநிறுவனங்களுக்கும் பங்குண்டுதானே

கவிஞர் ஜோசப் ராஜாவின் தொலைநோக்குப் பார்வையின் பதிவுகளைப் பகிருங்கள்.

சிந்திக்க வைக்கும்
செயல்பட வைக்கும்.

Reply

Leave a Comment