என்றென்றும் ஒளிரும் நட்சத்திரம்

தோராயமாக இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்துபோன மகத்தான ஒரு கவிஞனை இன்று நினைத்துப்பார்ப்பது சிலிர்க்கக் கூடியதாகத்தான் இருக்கிறது. வெறும் இருபத்தி ஐந்து வயதுவரை மட்டுமே வாழ்ந்த அந்தக் கவிஞன் இருநூறு வருடங்களைத் தாண்டியும் கவிதையை விரும்பும், காதலை விரும்பும் ஒவ்வொரு உதடுகளாலும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது வியப்பளிக்கக் கூடியதல்ல, ஏனென்றால் அவனுடைய வார்த்தைகள் அதற்குத் தகுதியானவைகள்தான். உண்மைதான் அழகென்று உள்ளத்தின் ஆழத்திலிருந்து உரக்கச்சொன்ன அந்தக் கவிஞன் அப்படியொன்றும் அதிகமாக எழுதிவிடவுமில்லை, ஆனால் அதிகமாக எழுதியவர்களைக் காட்டிலும் அளவுக்கதிகமாக வாசிக்கப்பட்டவன். அவன் வாழ்ந்த காலத்தில் அவன் கவிதைகளின் வழியாக இங்கிலாந்தில் அவனைக் காதலித்த இதயங்கள் எண்ணிலடங்காதவைகள். நவீனத்துவத்தின் ஒளிமிக்க காலகட்டத்தில் ஒளிரும் நட்சத்திரம் என்ற கவிதையின் மூலமாக உலகத்தின் ஒவ்வொரு இதயங்களிலும் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து கொண்டவன். இத்தனைக்கும் ஷெல்லியும் வேர்ட்ஸ்வர்த் போன்றவர்களும் பிரகாசமாக இருந்த காலத்தில் தன்னுடைய அற்புத மொழிநடையால் ஆங்கில இலக்கியத்தில் இணையில்லா இடத்தைத் தனதாக்கிக் கொண்டவன். அவன்தான் ஆங்கில மொழியை ஆசீர்வதித்துவிட்டுப்போன அற்புதக் கவிஞன் ஜான் கீட்ஸ். ஓ! இன்று அவனுடைய நினைவு தினமா!

பள்ளிப்படிப்பு வரையிலான தமிழ்வழிக் கல்வியிலும், தொடர்ந்து படித்த தொழிற்கல்வியிலும் கீட்ஸை அறிந்துகொள்ளும் பெரும்பேறு முன்னமே வாய்க்கவில்லை எனக்கு. சென்னை வந்து உலக இலக்கியங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்த போதுதான் ஆங்கிலக் கவிஞர்களும் முக்கியமாகக் கீட்ஸும் அறிமுகமாகிறார்கள். அந்தக்காலம் மழைமேகத்தைப் போல, காதலால் முழுமையாக நான் மூடப்பட்டிருந்த காலம். காதலின் வழியாக இந்த உலகத்தின் மேடுபள்ளங்களை உணரத் தொடங்கியிருந்த காலம். காதலின் ஆசீர்வாதத்தால் கவிதையை நான் இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருந்த காலம். கீட்ஸ் என்னை எந்த அளவிற்குப் பாதித்திருப்பான் என்பதை ஓரளவிற்கு நீங்கள் புரிந்துகொள்ளமுடியும். கீட்ஸின் கவிதைகளின் வழியாக இங்கிலாந்தின் வானத்தை இங்கிருந்தே பார்த்தேன். கீட்ஸின் கவிதைகளின் வழியாக இங்கிலாந்தின் புல்வெளிகளில் இங்கிருந்தே நடந்தேன், இங்கிலாந்தில் பூத்துக்குலுங்கிய ஒவ்வொரு பூக்களையும் இங்கிருந்தே இரசித்தேன். ஒரு மொழி எப்போது புகழ்பெறுகிறது? காலத்தால் அழிக்கமுடியாத இலக்கியங்கள் அம்மொழியில் உருவாகும் போது, அந்த மொழியின் புகழுக்கும், வளர்ச்சிக்கும் உங்களுடைய எந்தவொரு முயற்சியுமே தேவையில்லாததாகிறது. இலக்கியத்தை விட்டுவிட்டு வெறுமனே மொழியைப் பிடித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தைக் கண்டிப்பாக பரிதாபமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ஒன்பது வருடங்கள் கடந்திருக்கலாம், அண்ணன் அறிவுமதி அவர்களுடனான உரையாடல் ஒன்றில் ஜேன் கேம்பியான் இயக்கிய கீட்ஸைப் பற்றிய திரைப்படமான Bright Star யைப் பற்றி அறிந்துகொண்டதும், ஒன்றிரண்டு நாட்களில் தேடிக் கண்டுப்பிடித்தேன். கவிதையைப் போலவே அப்போது திரைப்படங்களையும் தேடித்தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். Bright Star திரைப்படத்தை முதன்முதலில் பார்த்த அந்த நீண்ட இரவை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. கீட்ஸுக்கும் அவர் காதலியான ஃபேனி பிரெளனுக்கும் இடையிலான காதல் கடிதங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். காதல் கடிதங்களின் வழியாகக் காதலித்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சிதான். கடிதங்களின் வாசனையறியாத கைப்பேசிக் காதலர்களை நினைத்துக் கொள்கிறேன் இந்நேரத்தில். கீட்ஸ் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில், ”நாமிருவரும் மூன்று நாட்கள் பட்டாம்பூச்சிகளாக வாழவேண்டும்” என்று எழுதுகிறான் . அவ்வளவுதான் ஃபேனி பிரெளனின் அறை கொஞ்சநேரத்தில் பட்டாம்பூச்சிகள் வசிக்கும் கூடாரமாகிறது. ஒவ்வொரு பட்டாம்பூச்சிகளிலும் கீட்ஸைப் பார்க்கிறாள். ஒவ்வொரு பட்டாம்பூச்சியாகவும் அவளே உருமாறுகிறாள். ஒரு கவிஞனின் காதலியாகத் தான் ஏற்றிருந்த அந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு அற்புதமாகக் கையாண்டிருப்பார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆபி கார்னிஷ் என்ற அந்தத் திரைக்கலைஞர். கீட்ஸை நினைக்கும் போதெல்லாம் அமைதியான அழுத்தமான கார்னிஷின் முகம் நினைவிற்கு வரத்தான் செய்கிறது. அதற்காக இயக்குநர் ஜேன் கேம்பியானைத்தான் பாராட்ட வேண்டும். கீட்ஸின் கவிதைகளைக் காட்சி மொழியில் அவ்வளவு நேர்த்தியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

கீட்ஸின் மரணச் செய்தியைத் தாங்கி வந்திருக்கும் கடிதத்தைப் படித்துவிட்டுப் பேசமுடியாமல் விக்கித்துப்போய் உடைந்தழும் இறுதிக் காட்சியில் கார்னிஷ் வெளிப்படுத்திய உணர்வுக் குவியல்களை எத்தனையோ பேரிடம் சொல்லியிருப்பேன் இதுவரை, இப்போது உங்களிடமும் சொல்கிறேன். ஒளிரும் அந்த நட்சத்திரத்தை ஒருமுறையாவது பார்த்துவிடுங்கள். கீட்ஸின் மரணத்திற்குப் பிற்பாடு, அவன் கவிதைகள் உருவான இடங்களுக்கு ஃபேனி பிரெளன் செல்வதுபோலவும், கீட்ஸின் கவிதைகள் பின்னணியில் ஒலிப்பது போலவும் அந்தத் திரைப்படத்தை முடித்திருப்பார் இயக்குநர். இருநூறு வருடங்கள் கடந்தும் எல்லா எல்லைகளையும் தாண்டி ஒலித்துக் கொண்டிருக்கும் கீட்ஸின் கவிதைகள் என்றென்றும் ஒலிக்குமென்று நம்புகிறேன். இதோ காரணம் சொல்கிறார் கிறிஸ்டோபர் காட்வெல் தன்னுடைய Illusion And Reality என்ற நூலில்,     ”ஷெல்லியை விடவும், வேர்ட்ஸ்வர்த்தை விடவும் எதிர்காலக் கவிதையில் ஆதிக்கம் செலுத்தப்போகும் புதிய சொற்களஞ்சியம் கீட்ஸின் கவிதைகளில் இருந்துதான் தொடங்குகிறது”. என்று.

கீட்ஸைப் போன்ற மரணமில்லா வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதா? எல்லாவற்றையும் கொடுக்கும் சமூகத்திற்கு எதையாவது திரும்பக் கொடுக்கும் போதும், மானுட நேசத்தை மதிப்பிற்குரிய ஒன்றாகக் கருதும் போதும், மானுட அன்பை இறுகப் பற்றிக்கொள்ளும் போதும், உறவுகளிடத்தில் உண்மையாக இருக்க முயற்சிக்கும் போதும், சுற்றியிருக்கும் இயற்கையை அதன் தன்மைமாறாமல் பாதுகாத்து இரசிக்கக் கற்றுக்கொள்ளும் போதும், முக்கியமாகக் கவிதையை நேசிக்கும் போதும் சாத்தியம்தான் எல்லோருக்கும் மரணமில்லா வாழ்க்கை.

இப்போதும் இதை நான் சொல்லத்தேவையில்லை. ஆனாலும்கூட, எப்போதும் உன்னை நேசிக்கிறேன் கீட்ஸ்.

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 24/02/2023 - 10:50 AM

ஜான் கீட்ஸ்
ஓர் ஆங்கிலக் கவிஞராக இருக்கலாம்.
ஆனால் அக்கவிதைகளின் அழகியலை அவரது கவிதைகளை வாசித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
அப்படித்தான் உணர்ந்து, துய்த்து, இன்புற்று
தனது கவிதைகளுக்கு உரமூட்டியவர் கவிஞர் ஜோசப் ராஜா.

அவர் மிகவும் விரும்பிய கவிஞராக ஜான் கீட்ஸ் மிளிர்வதற்குக் காரணம் கவிஞர் ஜோசப் ராஜா, ஜான் கீட்ஸின் கவிதைகளை வாசித்து வசப்படுத்தியதுதான்.

நாமும் அவர்போல பிறமொழிக் கவிதைகளை வாசிக்கலாம். நம் எழுத்துக்களுக்கு அழகும் வலிமையும் கிடைக்கும்.

Reply

Leave a Comment