ஊரடங்கின் உளவியல்

முன்னுரை

உங்களைப் போலத்தான் நானும், அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் முற்றிலும் நிலைகுலைந்திருந்தேன். உலகச் செய்திகள் என்ற பெயரில் வீட்டுக்குள் வந்த ஒவ்வொரு செய்தியும் அச்சத்தைத்தான் அதிகரித்ததே தவிர, என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்த, கோடான கோடி மக்களுக்கு யாரும் நம்பிக்கையைக் கொடுக்க முன்வரவில்லை. எதிர்காலத்தைப் பற்றி எந்தவொரு தெளிவும் இல்லாமல் குழம்பிக் கிடந்தார்கள் எல்லோரும்.

கடுங்கோடையில் கான்கிரீட் சுவர்களுக்குள் புழுங்கிக் கிடந்த நேரத்தில் பெய்த மழையை என்னால்  ஒருபோதும் மறக்க முடியாது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஒருசில நாட்களுக்குப் பிறகு பெய்த அந்த மழைத்துளிகளை இந்தக் கைகளில் ஏந்திக் கொண்டேன். வெறுமனே நிலத்தை மட்டும் நனைக்கவில்லை அந்த மழை. மரம் செடி கொடிகளுக்கு மட்டும் பெய்திடவில்லை அந்த மழை. எனக்காகத்தான், எனக்காகத்தான் பெய்தது என்றே எண்ணிக்கொண்டேன்.

அடைந்து கிடந்த என் ஆன்மாவை விடுதலை செய்தது, இறுகிக் கிடந்த என்னிதயத்தைக் கட்டவிழ்த்து விட்டது. குழந்தைகளோடு குழந்தையாக என்னுடைய இரண்டு கைகளிலும் அந்தத் துளிகளை ஏந்திகொண்ட பொழுதுகளில்தான் இந்தக் கவிதைகள் பிறப்பெடுக்கத் தொடங்கின. அந்த மழையின் தீண்டல்தான் உணர்வுகளை ஒளியின் வேகத்தில் பயணிக்கச் செய்தது. பூமியை உயிர்ப்பிக்கச் செய்யும் மழை இந்தக் கவிதைகளின் உயிர்ப்புக்கும் காரணமாக இருந்ததை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடற்கரைகள் மனித நடமாட்டம் இல்லாமல் வெறுமனே அலையடித்துக் கொண்டிருந்தன. பூங்காக்களில் குழந்தைகளை எதிர்பார்த்தபடி கிளைகளில் அமர்ந்திருந்தன சின்னச்சின்னப் பறவைகள். முதன்முறையாக வழிபாட்டுத்தலங்களெல்லாம் இழுத்து மூடப்பட்டன. கோபுர தரிசனம் செய்வதற்குக் கூட கோவில்களுக்கு முன்னால் யாருமே வரவில்லை. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது யாருக்கும் அவ்வளவு எளிதாக இல்லை.

பெருங் குழப்பங்களோடும், எண்ணற்ற கேள்விகளோடும் தொடங்கிய ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் வெளிப்படத் தொடங்கின. தொழிற்சாலைகளின் கனத்த கதவுகள் இழுத்து மூடப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை இழந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வேலையிழக்கத் தொடங்கினார்கள். வாழ்வைத் தொடர்வதற்காக வீட்டிலிருக்கும் சொற்பமான நகைகளை எடுத்துக் கொண்டு வங்கிகளுக்கும், அடகுக் கடைகளுக்கும் விரைந்தார்கள். எந்தக் கவலையும் இல்லையென்ற தோரணையில் வாழ்ந்து கொண்டிருந்த நடுத்தரவர்க்கத்து மனிதர்களின் மனநிலையோ சமநிலை இழந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. தொடர்ச்சியாக விழித்திருந்த இரவுகளில் நிறைய வீடுகளில் தூக்கம் தொலைத்த மனிதர்கள் விளக்கை அணைக்காமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்ததைக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

வீட்டிலிருக்கும் பெண்களின் பாடுகள் இன்னும் கூடத்தான் செய்தன. வீட்டுவேலைகள் பலமடங்கு அதிகரிக்கத்தான் செய்தன. வீட்டிற்குள்ளும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத் தொடங்கின. மொத்தத்தில் கட்டிலும் கசந்துபோன கதைகளெல்லாம் வார்த்தைகளில் விவரித்துவிடக் கூடியதா! அழுத்திக் கொண்டிருக்கும் பாரங்களிலிருந்து விடுதலை கிடைக்குமா என்றே எல்லோரையும் போல  நானும் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

மேலும், இந்த ஊரடங்கு முழுவதும் என் ஆன்மாவைத் துயருறச் செய்த காட்சியென்றால், புற்றுகளில் இருந்து புறப்பட்ட ஈசல்களைப் போல, இந்த தேசத்தின் ஒவ்வொரு மாநிலங்களிலும், ஒவ்வொரு தலைநகரங்களிலும், ஒவ்வொரு தெருக்களிலும் இருந்து புறப்பட்டு சாரைசாரையாக சாலைகளில் நடக்கத் தொடங்கிய அந்தப் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலக் காட்சிகள்தான். அவர்கள் இந்தியாவை இணைக்கும் எல்லாச் சாலைகளிலும் நீக்கமற நிறைந்திருந்தார்கள், சூரியனோடும் நிலவோடும் நடந்து கொண்டேயிருந்தார்கள்.

மிகப்பெரிய மானுட அவலத்தைச் சர்வசாதாரணமாக நிகழ்த்திவிட்டு அதற்காகச் சொல்லப்பட்ட காரணங்களெல்லாம் அற்பமாக இருந்தன. குழந்தைகள் நடந்து கொண்டிருந்தார்கள், வயதானவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள், கர்ப்பிணிகள் நடந்து கொண்டிருந்தார்கள். இந்த தேசமே நடந்து கொண்டிருந்தது. வேதனை, புறத்தின் வேதனை அகத்தைப் பற்றியெரியச் செய்தது.

அகம் புறத்தால் நிறைந்திருக்கிறது. புறத்தில் அகம் ஆதிக்கம் செலுத்துகிறது. அகத்தில் சமூக நிலைமைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. வாழ்வனுபவத்திலிருந்தும், இயல்பான தேடலிலிருந்தும் அகம் புறத்தை அறியத்தொடங்குகிறது. கண்களை மூடிக்கொண்டிருந்தால் காதுகள் கேட்டுக் கொண்டிருக்கும். காதுகளை மூடிக்கொண்டிருந்தால் கண்கள் பார்த்துக் கொண்டிருக்கும். ஆக, புறத்தின் காட்சிகள் அகத்தின் ஆழ அகலங்களுக்குள்ளும், அத்தனைப் புலன்களுக்குள்ளும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. உண்மையைத் தேடும் கவிஞனொருவன், இந்த மனிதகுலத்தின் மீது மாறாத அன்புகொண்ட கவிஞனொருவன் அதைக் கைப்பற்றிக் கொள்கிறான். தன்னுடைய வார்த்தைகளால் புறத்தை விவரிக்கத் தொடங்குகிறான். இப்போது புறக்காட்சிகள் கவிதைகளில் வார்த்தைகளாக வடியத் தொடங்குகின்றன.

உண்மையைச் சொன்னால் வேண்டுமென்றே முகத்தை திருப்பிக் கொண்டால்தான் எழுதாமல் இருக்க முடியும். வேண்டுமென்றே இதயத்தை அடைத்துக் கொண்டால்தான் எழுதாமல் இருக்க முடியும். என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனிதகுலத்தின் வேதனைகள் என்னை ஆழமாகப் பாதிக்கின்றன. அரசாங்கத்தாலும், முதலாளித்துவத்தாலும் மொத்தமாகக் கைவிடப்பட்ட சக மனிதர்கள் சாலைகளில் நடந்து செல்வதைப் பார்க்கப்பார்க்க இன்னும் வேகமெடுக்கின்றன என் கவிதைகள். அவர்களின் துயரங்கள் எனது துயரங்களாகின்றன. ஆயிரக்கணக்கான மைல்களை நடந்தே கடந்து கொண்டிருக்கும் அந்தக் கால்களில் தங்கியிருக்கும் வலி என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பெருந்தொற்றானது ஒட்டுமொத்த மனிதகுலத்தையே உலுக்கி எடுத்தாலும் கூட, மறுக்க முடியாத மாபெரும் உண்மைகளையும் நமக்குப் போதித்திருக்கிறது. ஆமாம், வல்லரசு நாடுகளின், பணக்கார நாடுகளின் முகத்திரைகளெல்லாம் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. எல்லா தேசங்களிலும் பணக்காரர்களின் பைகள் இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலும் நிரம்பிக் கொண்டுதான் இருந்தன. மக்களின் பைகள்தான் துழாவித்துழாவிக் கிழியத் தொடங்கின. முதலாளித்துவமும், முதலாளித்துவ அரசாங்கங்களும் மொத்தமாகத் தன்னுடைய மக்களை கைகழுவிவிட்ட கொடுங்காட்சிகளை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாதுதான்.

அமெரிக்காவில் உணவுவங்கிகளுக்கு வெளியே நீண்ட நேரமாக, நீண்ட வரிசையில் தங்கள் கார்களில் மக்கள் காத்துக் கிடந்தார்கள். முதலாளித்துவம் மனிதகுலத்திற்கு எதிரானது என்பதை ஒவ்வொரு முதலாளித்துவ தேசமும், வெவ்வேறு வடிவத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. பெருங்கோடீஸ்வரர்களும், அரசியல்வாதிகளும் நீண்ட நாட்களுக்கான உணவு தானியங்களைத் தங்களின் சேமிப்புக் கிடங்குகளில் பதுக்கி வைத்துக் கொண்டு மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் நாடகங்களை எந்த வெட்கமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருந்தார்கள். மக்கள்தான் நடந்து சென்றார்கள், மக்கள்தான் பட்டினி கிடந்தார்கள். கவிதை எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கவிதையில் ஒவ்வொன்றும் விடுபடாமல் ஒட்டிக்கொள்கிறது.

அதிகாரத்தின் கரங்களால் மக்கள்தான் முடக்கப்பட்டார்களே ஒழிய, அதிகாரம் எல்லாவற்றையும் எந்தத் தடங்கலும் இல்லாமல் செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் கறுப்பினத் தோழன் ஜார்ஜ் பிளாய்ட் இனவெறி நிறைந்த காவலதிகாரி ஒருவனால் மிதித்தே கொல்லப்பட்டான். அமெரிக்கா கிளர்ந்தெழுந்து அதிகார மையமான வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டது. அந்த நெருப்பு அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவெங்கும் பரவிக் கொண்டது. அடிமைமுறையை ஆதரித்த பழைய இதயங்கொண்டவர்களின் சிலைகளை அடித்து நொறுக்கி ஆற்றில் எறிந்தார்கள் மக்கள். சில நாடுகளில் அரசாங்கமே சிலைகளை அகற்றிக்கொண்டது.

இங்கும்கூட சாத்தான்குளத்தின் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கொடூரமாகச் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். நீண்டு கொண்டிருக்கும் ஊரடங்கைப் போல, நீண்டு கொண்டுதானிருக்கிறது  அந்த மரண விசாரணையும்.

கோடிக்கணக்கான மதிப்பிலான வர்த்தகங்களைத் தங்கள் குளுகுளு அறைகளுக்குள் வசதியாக உட்கார்ந்து கொண்டு கணினித்திரையில் கச்சிதமாக முடித்தார்கள் பெரு முதலாளிகள். இங்கேயோ தன்னுடைய ஏழைத் தந்தை வாங்கிய கடனுக்காக சேலத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டாள். ஊரடங்கின் நெருப்பு அணைக்க முடியாததாய் இருக்கிறது.

பீஹாரைச் சேர்ந்த பதினைந்து வயதுச் சிறுமி ஜோதிகுமாரி, காலில் காயம்பட்ட தன் தகப்பனை ஒரு கங்காருவைப் போல, ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூரம் டெல்லியிலிருந்து பீஹாருக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துச் சென்றாள். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபரின் மகள் “அது ஒரு அழகான சாதனையென்றும், அவள் அன்பின் அடையாளம்” என்றும் சொன்னாள். இங்கேயும் எல்லோரும் அதை வேறு வேறு வார்த்தைகளில் வழிமொழிந்தார்கள். நமது பிரதமரும் கூட, “வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது அவள் தைரியமும், வலிமையும்” என்று சொல்லி பாலபுரஸ்கார் விருது கொடுக்கிறார்.

அவள் செய்தது சாதனைதான் ஆனால், அந்தச் சாதனைக்குப் பின்னால் என்ன இருக்கிறது. அவள் அன்பின் அடையாளம் தான், ஆனால் அது முதலாளித்துவ மனோபாவத்தின் போலியான அன்பல்ல. உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான அன்பல்லவா. அவள் நிச்சயமாக தைரியமும், வலிமையும் கொண்டவள்தான். ஆனால், இந்த விருது என்பதெல்லாம் எதை அங்கீகரிக்க? எதை மறைக்க? இப்படித்தான் வெளிப்படும் துயரங்கள் எல்லாம் போலியான அங்கீகாரங்களால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன.

எல்லாமும் இவைகள் எல்லாமும்தான் கவிதைகளாக்கப்பட்டு உங்கள் கைகளை வந்தடைகிறது. உண்மைக்கும் கவிதைக்கும் வித்தியாசமில்லையென்று நம்புகிறவன் நான். கவிதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள். என்னுடையவைகளையும், என்னைப் போன்றவர்களுடையதையும் அள்ளிஅள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். மனிதகுல வரலாற்றில் கவிதையின் முக்கியத்துவம் மாறாமல் இருக்கக்கூடியது. மனிதகுல வரலாற்றைக் கவிதைகளை விட்டுவிட்டு கற்றுக்கொள்ளவும் முடியாது. நீண்ட நெடிய தொடர் ஓட்டத்தில் பங்கெடுத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.  இந்தக் கொடுங்காலத்தின் சாட்சிகள் இந்தக் கவிதைகள், இவைகளைக் கண்ணுங்கருத்துமாகக் கடத்திச் செல்வீர்களென்று நம்புகிறேன்.

நீங்களும் நம்பிக்கையோடிருங்கள். இந்த உலகம் நமக்கானது. இந்த நிலம் நமக்கானது. தங்களுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களைக் கடுங்குளிரிலும் கூட அந்த விவசாயிகள் இத்தனை நாட்களாக எதிர்த்து நிற்பதெல்லாம் நல்ல அறிகுறிதான். நீண்ட நாட்களாக இந்த தேசம் போராடிக்கொண்டுதான் இருக்கிறது. எல்லாவிதமான துயரங்களும், எல்லாவிதமான நம்பிக்கைகளும், எல்லாவிதமான மக்கள் எழுச்சிகளும் கவிதைகளாக உங்கள் கைகளில் இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். புயலைப் போல புறப்பட்டு பேரதிசயங்களை நிகழ்த்தக் கூடியவர்கள் உழைக்கும் மக்கள். நம்புங்கள் புயல்காற்று சுழன்றடிக்கும், பதர்களெல்லாம் இருந்த இடம் தெரியாமல் துடைத்தெறியப்படும்.

யாரும் சந்திக்க முடியாமல் இருந்த நேரத்தில், இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதைகளும், எழுதப்பட்டு உடனுக்குடன் சமூக ஊடகத்தின் வாயிலாக என் அன்பிற்குரிய தோழர்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது. அச்சமயம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்துகொண்ட அவர்கள் எல்லோரையும் அன்பின் கரங்களால் அணைத்துக் கொள்கிறேன்.

மேலும், இந்தத் தொகுப்பிற்கான அட்டைப்படத்தை வரைந்த மரியாதைக்குரிய ஓவியர். சந்ரு அவர்கள்  என்மீதும், என் வார்த்தைகள் மீதும் பேரன்பு கொண்டவர். என்னையும் தன் மகனைப்போலவே பாவித்து வாழ்விலும், கலையிலும் எப்போதும் வழிநடத்தக் கூடியவர்.  தன்னுடைய வேலைப்பளுவிற்கிடையே கேட்ட மறுநாளே விடியலை முந்திக்கொண்டு ஓவியத்தை அனுப்பிய, அந்த அற்புதமான கைகளை, மாறாத மானுடநேசம் கொண்ட அந்த விரல்களை ஒரு குழந்தையைப் போல வாஞ்சையோடு எப்போதும் பற்றிக்கொள்ளவே பிரியமாயிருக்கிறேன்.

இன்னும் என்னை வழிநடத்திக் கொண்டிருக்கும் குருநாதர், என்னைவிடவும் என் கவிதைகளின் மேல் அக்கறை கொண்டவர், என் கவிதைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பிரதான பாத்திரத்தை வகிக்கக் கூடிய மதிப்பிற்குரிய பேராசிரியர் மா.ப.அண்ணாதுரை அவர்களை எப்போதும் போல இப்போதும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

இறுதியாக, ஊரடங்கைப் பிறப்பித்தவர்கள் உட்பட யாருமே அறியாத ஒன்றைச் சொல்கிறேன். ஒரு கவிஞனை அடைத்து வைப்பது என்பது ஒருவருக்கும் ஒருபோதும் சாத்தியப்படாதது. வீட்டிலோ, சிறைச்சாலையிலோ, யாருமற்ற வனாந்திரத்திலோ எங்கே வைத்துப் பூட்டினாலும், சின்னஞ்சிறு துவாரத்தின் வழிபுகும் ஒளியோடு கலந்துகொண்டு, காற்றோடு காற்றாய் எல்லைகளைக் கடக்கக் கூடியவன். கவிஞனின் கரம்பற்றிக் கொள்ளுங்கள். எல்லைகள் கடந்திருங்கள். அன்பின் பேருருவாய், அழகாய் வாழ்ந்திடுங்கள். இந்தக் கவிதைகள் உங்களுடையவைகள் தான். உங்களுக்கானவைகள் தான்.

தோழமையுடன்

ஜோசப் ராஜா 

25.02.2021

Related Articles

Leave a Comment