இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக

2018 ஆம் ஆண்டில் வெளிவந்தஇன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காகநூலிற்கு எழுதப்பட்ட முன்னுரை . . .

                         இந்தத் தேசம் பாதுகாப்பானதாக இருக்கிறதா?

தோழர்களே!

மனிதர்கள், அதிலும் குறிப்பாகக் குழந்தைகளும் பெண்களும் வாழ்வதற்குத் தகுதியானதாக இந்தத் தேசம் இருக்கிறதா?

கோடானகோடி பெண்தெய்வங்களைக் கும்பிட்டு வணங்கும் இந்தத் தேசத்தின் இதயத்தில், உண்மையிலேயே பெண்களுக்கு ஓரத்திலேனும் இடம் இருக்கிறதா?

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விதமாய்ப் பூக்கும் குழந்தைகளை இந்தத் தேசம் குழந்தைகளாகத்தான் நடத்துகிறதா?

காதுகளில் இடியாய் இறங்கும் ஒவ்வொரு செய்தியும் இதைப்போல ஆயிரமாயிரம் கேள்விகளை எழுப்பி விடுகிறது எனக்குள்.

தூக்கமில்லாமல் நிலவோடும், நட்சத்திரங்களோடும் தவியாய்த் தவித்த இரவுகளை உங்களுக்கும் கைமாற்ற வேண்டுமென்று நினைத்தேன். காயம்பட்ட பறவையின் சிறகாய், காயம்பட்ட என்னிதயத்தின் படபடப்பை உங்களுக்கும் கடத்தவேண்டுமென்று நினைத்தேன்.

அவ்வளவுதான் வேறொன்றுமில்லை. கவிதைகளின் மூலமென்பது எல்லையில்லா மகிழ்ச்சியும் எல்லையில்லாத் துயரமும் தான். மகிழ்ச்சியும் துயரமும் தனிமனிதன் சமைத்துவிடக்கூடியதல்ல. அது சமூகத்தின் பிரதிபலிப்பு.

பாலியல் வன்கொடுமைகள் என்ற இந்த நிகழ்காலத் துயரத்தைக் கூட இந்தச் சமூகத்தின், இந்த முதலாளித்துவச் சமூகத்தின் முட்டிமோதும் முரண்களின் வெளிப்பாடாகத்தான் புரிந்து கொள்கிறேன்.

நான் விரும்புவது போல் இந்தச் சமூகம் இல்லை, விடாப்பிடியாகக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் விரும்புவது போல இந்தச் சமூகம் இருக்கிறதா? இல்லையென்றால் என்ன செய்யப் போகிறீர்கள்.

என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நிலையான ஒரு புயலை நீங்காமல் எனக்குள் சுமந்து கொண்டேயிருக்கிறேன். பச்சிளம் குழந்தைகளும் கூட பாலியல் பொருட்களாய் பார்க்கப்படுவதெல்லாம் நல்லதாகத் தெரியவில்லை. எனக்கென்னமோ இந்தத் தேசத்திற்கு அழிவுகாலம் தொடங்கி விட்டதாகத்தான் தெரிகிறது.

சாதியின் பெயரால் எத்தனை எத்தனை பலாத்காரங்கள். மதத்தின் பெயரால் எத்தனை எத்தனை பலாத்காரங்கள். ஆணாதிக்கத்தின் பெயரால் எத்தனை எத்தனை பலாத்காரங்கள். கல்விக்கூடங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? வழிபாட்டுத்தலங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?

ஓ! என் தேசமே, உன்னை எவ்வளவு நேசித்திருந்தேன். ஓ! என் தேசமே, உன்னை எவ்வளவு காதலித்தேன்.

ஆனால், எண்ணிலடங்கா குழந்தைகளின் அலறல் சத்தம் என் ஆன்மாவைச் சுக்குநூறாக்கிச் செல்கிறதே. எண்ணிலடங்கா இளம்பெண்களின் அடக்கப்பட்ட ஆத்திரம் எனக்குள் வெடித்துச் சிதறுகிறதே

அழுகிய பழத்தின், நாள்பட்ட காயத்தின் துர்நாற்றம் எங்கும் எங்கெங்கும். எப்படி நேசிப்பேன் என் தேசமே! இப்பொழுதும் உன்னை எப்படி நேசிப்பேன்?

தேசத்தைப் பற்றிய இந்த மாதிரியான கேள்விகள் இந்தக் காலத்திற்கும் இந்த நேரத்திற்கும் விரோதமானதா? தேசமென்பது வெறும் கருத்தா? தேசமென்பது வெற்றுச் சொல்லா?

தேசமென்பது மக்கள் திரளில்லையா?  தேசமென்பது நீங்களில்லையா? தேசமென்பது குழந்தைகளில்லையா?  தேசமென்பது பெண்களில்லையா? எல்லாம் சேர்ந்ததுதான் தேசமில்லையா?

ஆனால், நிலமெங்கும் சிதறிக்கிடக்கும் ரத்தத்தின் பிசிபிசுப்பை முகர்ந்து பார்த்துக் கொண்டே நீங்கள் சொல்வது போல் எப்படிப் பெருமைப்பட முடியும்.

யுத்தகளத்தில் நின்றுகொண்டிருக்கும் ஒரு போர்வீரனின் கவனத்தோடு குழந்தைகளை இந்தச் சமூகத்தில் நடமாடச் செய்திருக்கிறோம். புத்தகப்பைகளை முதுகிலும் பேரச்சத்தை இதயத்திலும் சுமந்து செல்லும் குழந்தைகளைப் பார்க்கப் பார்க்கப் பதறுகிறது நெஞ்சம்.

இந்த உலகத்தை நான் அறிந்துகொள்ளத் தொடங்கிய போது இவ்வளவு கேள்விப்பட்டதில்லை. எங்கோ தொலைதூரத்தில் நடந்ததாய்க் கேள்விப்பட்டதெல்லாம், இன்றோ நமக்குப் பக்கத்தில், ஏன் நமது வீட்டிலும். உங்களுக்கும் எனக்கும் பொறுப்பிருக்கிறது.

இது சரிசெய்யப்பட வேண்டும். மனித மாண்புகள் மாபெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மனித உறவுகள் மிக மோசமான சிக்கலுக்குள் சுழன்று கொண்டிருக்கிறது.

ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை மேல்சாதி மனநிலையோடு பார்க்க ஆரம்பித்து, தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்ணை ஒரு அடிமையைப் போலப் பார்க்க ஆரம்பித்து இப்படியே சரிசெய்யப்படாத தவறுகள் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெருகிப்பெருகி இன்று பச்சிளம் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைச் சீக்கிரம் சரிசெய்யத்தான் வேண்டும்

கவனிக்கப்படாத முற்றிய நோய் உடலுக்கும் உயிருக்கும் ஒருபோதும் நல்லதல்ல.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போதுதான் இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசை வாங்குகிறாள் ஈராக்கைச் சேர்ந்த நாடியா முராத். வலியும் வேதனையும் கோபமும் ஆற்றாமையும் அலைபாயும் அவளின் முகத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். அவளின் வலி எனது வலியாகிறது.

ஒவ்வொரு குழந்தையின் அச்சமும் எனது அச்சங்களாகிறது

ஒவ்வொரு பெண்ணின் கதறல்களும் எனது கதறல்களாகிறது.

உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. காற்றைப் போல இந்தக் கவிதைகளை எங்கெங்கும் கடத்திச் செல்லுங்கள்.

 

தோழமையுடன்

ஜோசப் ராஜா

07.12.2018

Related Articles

Leave a Comment