வாழ்த்துரை - ஓவியர். சந்ரு
நாங்க பெறந்து வளர்ந்தது அதே தெரு, அடுத்தடுத்த வீடு. வேறுவேறு சாதி. தாய்மாமன் மகனுக்கும் எனக்கும் ஒரே வயசு.
மாமன் ”மருமகனே அடுத்த வீட்டப் பாத்து நேரத்த ஏன் பாழடிக்கிற. ஏதாவது உதவின்னா வெட்கமில்லாமக் கேளு” ன்னார்.
மாமன் கெட்டது செய்ய மாட்டார். ஆனால் அம்மாட்ட கேலியா நம்ம விசயத்தப் போட்டு ஒடச்சாலும் ஒடைப்பார் நம்ப முடியாது.
காதல் கடிதம் ன்னு ஒன்னு எழுத முடியுமா என்ன? அதையும் எப்படி மாமனிடம் கொடுத்து அனுப்புவது.
”நம்ம விசயத்த எங்க பாட்டீட்ட சொன்னேன்” ன்னு ஏதோ பேச்சுக்கு இடையிலே அவா என்னிடம் சொன்னது ஞாபகம்.
எனக்கு வயது அறுபத்தி மூணாக சரியா இருபது நாள் பாக்கி. இப்போ எனக்கு எதை வாசித்தாலும் கவிதையா இருக்கு.
கவிதை ஓர் அனுபவம், கவிஞன் ( நபர் ) சமூகத்தில் ஓர் அங்கம், இவ்வகையில் கவிதை – கவிஞர், காதல் – காதலர் என பாகுபடுத்தலாம். இச்சை, அனிச்சை, தனிநபர், சமூகம் எனபனவற்றின் நீட்சியாக வெளி, கடவுள், கலை, காதல் போன்ற நம்பகத் தன்மைகள் உருக்கொள்கின்றன எனலாம்.
மரணம் கடவுள் காமம் என்பன பராபரமான அனுபவத்திற்குரியன. இதில் கேளிக்கை, பொழுதுபோக்கு என்பதிலிருந்து வேறுபடுத்தியும், இனவிருத்தியில் தன்னுடைய ஆளுமையை முன்னிறுத்தியும் காமத்தைப் புனிதப்படுத்தும் போக்கில் காதல் ஒருத்தி, ஒருத்தன் அடையாளம் கொள்கிறது எனலாம்.
நிலைப்பு, நிலையாமை என்பன யாவற்றிலுமான உந்துசக்தி. கவிதை செய்வதும், கலவியல் கொள்வதும் ஒன்றில் ஒன்று ( அ ) ஒன்றை ஒன்று உணர்த்துவது எனலாம். இவ்வாறு கவிதை செய்வதும் காதல் செய்வதும் எதிரும், புதிருமாய்க் கூடிப் புணர்ந்து தன்னை இழந்து, யாவுமாய் . . . . காதலால் கனிந்துருகி . . . .
இப்படி ஒரு ரூட்டு பக்திக்கும் காதலுக்கும் உண்டு என்பதால் இந்த கேச . . . . நான் கையில் எடுத்துக்கிட்டேன்.
ஆரம்பத்தில் இந்தக் கேசு போலீஸ், வக்கீல், மனநல மருத்துவர், சினிமாக்காரங்க கைக்கு போறதுபோல இருந்துச்சு . . . . நான் விடல . . . .
’ஒன்னும் பலகோடி’ அதனால அவங்களோடு சேர்ந்து நானும் இக்கவிதை வாசித்ததை இங்கு பட்டியலிடலாம்.
- மடியிலிருக்கும் குழந்தையிடம் தாய் கெஞ்சுகிறாள்
- இக்கரையில் அக்கரை தேடும் கனவும், நினைவும்
- பூ கடந்த காலத்தை எண்ணிப் புலம்புகிறது
- உங்கள் அந்தரங்கத்துள் நாங்கள் நுழைய விரும்பவில்லை
- இவ்வரிகள் அனைத்தும் ஒருவருக்கு முன் ஒருவர் வாசித்தவைகளா?
- நீதி போதனை வகுப்பு நேரத்தில் நிகழ்ந்த காதல் கவிதை போட்டி
- கவிஞனாக்குமானால் காதல் செய், கவிதை வாழவைக்கும்.
- விளக்கு அணைவதற்குள் கடவுள் வருவாரா . . . .
- கவிதை அவஸ்தையைக் கை மாத்தலாமா . . . .
- என்னை நினைத்தேன் . . . . வெட்கமாய் இருக்கிறது.
- தன்னை மறந்த காதலர்க்கு வெண்சாமரம் வீசிப் பெருமை கொள்ளலாம்.
- மற்ற காதல் ஜோடிகளைப் பார்த்து நாம் மகிழ்ந்த தருணங்கள் . . . .
- தனிமையாய் இருத்தல், தனிமையைத் துறத்தல் காதலுக்கும் கவிதைக்கும் பொது.
- சுய நலமானது காதல்.
- கிழவன் “ அடங்காக் கோபம் வருது ஓடி ஒளிஞ்சுக்கோ “
- கிழவி “ அடிச்சது போதும் ரெம்ப வலிக்குதாம் குதிருக்கு “
- தயவுசெய்து பிறர் எழுதியதை வாசிக்கும் போது என்னை எழுதத் தூண்டாதே கவிதையே . . . .
- இப்பாடல்களை எல்லோரும் சேர்ந்து பாடுவோம்.
- கேள்வியும், பதிலும் நான்தான் ஆனால் படபடப்பிற்கு மட்டும் பஞ்சமில்லை.
- காதலிக்க நேரமில்லை என்றாள் பாலியல் தொழிலாளி.
- காதலும், கடவுளும் ஒன்று. நீ . . . . ?
ஜோசப் ராஜாவின் இக்கவிதைகளை வாசிக்க நேர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
நீங்களும் வாசிக்கலாம்
எதிரும் புதிருமாக.
சந்ரு
16/04/2013