இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் தொடங்கியதிலிருந்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிய கவிதைகளை இந்தத் தளத்தில் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவிதை மட்டுமல்ல, எந்தக் கலைவடிவமும் சமூக மாற்றத்திற்காக ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று உறுதியாக விரும்புகிறவன் நான். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக கவிதையில் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். இதோ காத்திருக்கும் சாவிகள் என்ற தலைப்பில் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகள் புத்தகமாக உங்கள் கைகளில் வந்து சேரப்போகிறது. எப்போதும் போல உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். புத்தகத்திற்காக எழுதப்பட்ட முன்னுரையிலிருந்து சில பகுதிகளை வாசிக்கத் தருகிறேன்.
“இந்த உலகத்திற்கு யுத்தம் தேவையாக இருக்கிறது என்பது சமீப காலமாக இன்னும் தெளிவாகத் தெரிகிறது. உக்ரைனைப் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள்தான், இஸ்ரேலோடும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். படுகொலைகளுக்கு மத்தியில் மனித இரத்தம் குடித்து. மனிதக்கறி புசித்து இருப்பை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம். ஆனால் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை, ஒருபோதும் விரும்பவில்லை. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன போராட்டங்கள். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன கவிதைகள். இந்த உலகத்தின் கவிதை வரலாற்றில் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட கவிதைகள்தான் அதிகமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். அதேநேரத்தில் அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் இருந்து வெளிப்பட்ட கவிஞர்கள் எண்ணிலடங்காதவர்கள், கவிதைகள் எண்ணிலடங்காதவைகள். ஏனென்ற காரணம் தெரியுமா? பாலஸ்தீனம் போராடிக் கொண்டிருக்கிறது, அவ்வளவுதான். அங்கிருந்து அளவிற்கதிகமான படைப்புகள் வருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
நாங்கள் கவிஞர்கள் மானுட விடுதலையைப் பாடுவோம். நாங்கள் கவிஞர்கள் மானுட சமத்துவத்தைப் பாடுவோம். நாங்கள் கவிஞர்கள் மானுட ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராகப் பாடுவோம். நாங்கள் கவிஞர்கள் மானுட வாழ்விற்கு எதிராக இருக்கும் ஆயுத வியாபாரிகளுக்கு எதிராகப் பாடுவோம். அன்றும் இன்றும் என்றும் கவிதை மக்களுக்கானதுதான். கவிதை உங்களுக்கானதுதான். எடுத்துக் கொள்ளுங்கள் எனதருமைத் தோழர்களே” !
ஜோசப் ராஜா
1 comment
மானுடம் செழிக்கட்டும்.. வாழ்த்துகள் அண்ணா.. ❤️