அம்ரிதா பிரீத்தம்

பஞ்சாபின் கவிதை பக்கங்களில் இருபதாம் நூற்றாண்டு முழுக்கப் பயணித்தவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையைத் தேடும் எவரும் உற்சாகமான ஆன்மா கொண்ட அம்ரிதா பிரீத்தத்தை எளிதாகக் கண்டடைய முடியும். புருவங்களை உயர்த்தி வியந்துபோகக் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர். அகலக் கண்கள் விரித்து ஆச்சரியப்படக்கூடிய அற்புதமான எழுத்துக்களை எழுதிச் சென்றவர். ஒருவிதத்தில் ஆண்டாளைப்போலக் காதல் உணர்வினால் நிறைந்திருந்தவள்.  ஒருவிதத்தில் மீராவைப்போலக் காதல் உணர்வினில் தோய்ந்திருந்தவள். ஆனால், அவர்களுக்கும் அம்ரிதாவிற்கும் இருக்கும் மாபெரும் வித்தியாசம், அவர்கள் தெய்வத்தின் மீது காதல் கொண்டு கசிந்துருகினார்கள். அம்ரிதாவோ மானுடத்திரள் மீது காதல் கொண்டு கம்பீரமாக இருந்தாள். சுதந்திரத்தை நேசித்த, சுதந்திரமாகவே வாழ்ந்த அம்ரிதாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எழுத்தை நேசித்த எழுதுவதற்காகவே வாழ்ந்த அந்த உன்னதமான மனுஷியை அறிந்துகொள்ள வேண்டும். அம்ரிதாவின் வாழ்வையும், கவிதையையும் பிரித்துப்பார்க்கவே முடியாது. அம்ரிதாவின் வாழ்விலிருந்துதான் கவிதை. கவிதையைப் போன்ற வாழ்வுதான் அம்ரிதாவுடையது.

1919 ல் பிளவுபடாத பஞ்சாபில் (இன்று பாகிஸ்தானில் இருக்கும் குஞ்ரன்வாலா என்ற இடத்தில்) பிறந்தார் அம்ரிதா. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இப்போதைய லாகூருக்குக் குடிபெயர்ந்தது அம்ரிதாவின் குடும்பம். பதினாறு வயதில் எழுதத் தொடங்கிய அம்ரிதா, பத்தொன்பது கவிதைத் தொகுப்புகள், பத்து நாவல்கள், மூன்று சுயசரிதை நூல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள் மட்டுமல்லாமல் நாகமணி என்ற இலக்கிய இதழை நீண்டகாலம் நடத்தினார். அதனால்தான் எத்தனை விருதுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டுமோ, அத்தனை விருதுகளாலும் அங்கீகரிக்கப்பட்டார். அம்ரிதாவின் முதல் கவிதை மிகமுக்கியமானது.  முதல் காதலைப் போல, முதல் மழையைப் போல, முதல் கனவைப் போல முதல் கவிதையும் முக்கியமானதல்லவா!

காட்சி : 01

1940 களின் அரசியல் கொந்தளிப்பில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போல வெறியூட்டப்பட்ட மதவெறி நாட்டையும் மக்களையும் ரணமாக்கிக் கொண்டிருந்ததைத் தன்னுடைய கண்களாலும், இதயத்தாலும் பார்க்கிறாள் அம்ரிதா என்ற பதினாறு வயதுச்சிறுமி. இன்று வாரிஷ் ஷாவைக் கேட்பேன் நான் என்ற கவிதையைத் தூய்மையான தன்னுடைய இதயத்திலிருந்து எழுதுகிறாள்.

வாரிஷ் ஷா

உங்களுடைய கல்லறையிலிருந்து பேசுங்கள்

உங்களுடைய கல்லறையிலிருந்து எழுந்து வாருங்கள்

காலத்தால் அழிக்கமுடியாத உங்களுடைய காவியத்தில்

இன்னும் சில பக்கங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்

பஞ்சாபின் ஒரேயொரு மகளின் கண்ணீருக்காக

எவ்வளவு நீண்ட கவிதையை எழுதினீர்கள்

இன்று மில்லியன் கணக்கான பெண்கள்

அழுது கொண்டிருக்கிறார்கள்

உங்களிடமிருந்து ஆறுதலை எதிர்பார்த்தபடி!

துயரப்படுகிறவர்களை நேசிப்பவரே

எழுந்து பாருங்கள் உங்கள் பஞ்சாபை

வயல்வெளிகள் பிணங்களால் நிறைந்திருக்கின்றன

செனாப் நதியில் இரத்தம் வழிந்தோடுகிறது

பஞ்சாபின் ஐந்து நதிகளிலும் யாரோ விஷம் கலந்திருக்கிறார்கள்

அந்த விஷம் கலக்கப்பட்ட நீர்தான்

பசுமையான வயல்வெளிகளில் பாய்ந்து கொண்டிருக்கிறது

வளமான இந்த நிலத்தின்

அருகாமையிலும் தொலைவிலும்

நச்சுச் செடிகள் முளைத்திருக்கின்றன

வெறுப்பின் விதைகள் அதிகமாக விதைக்கப்படுகின்றன

எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்தப்படுகிறது

காடுகளுக்குள்ளும் பரவிய நச்சுக்காற்று

புல்லாங்குழல்களைப் பாம்புகளாக மாற்றுகிறது

பிரகாசமான ரோஜாநிறப் பஞ்சாபை

அவர்களின் விஷம் நீலநிறமாக மாற்றியிருக்கிறது

எப்படிப்பாடுவது என்பதை மறந்துவிட்டன தொண்டைகள்

சுழலும் சக்கரங்கள் நண்பர்களை இழந்து அமைதியாகிவிட்டன

கிளைகளில் தொங்கும் ஊஞ்சல்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன

காதலின் கீதங்களை வாசித்துக் கொண்டிருந்த புல்லாங்குழல்கள் எங்கே

ரஞ்சாவின் சகோதரர்கள் புல்லாங்குழல்களை வாசிக்க மறந்துவிட்டார்கள்

பூமியில் இரத்தமழை பொழிந்து கொண்டிருக்கிறது

கல்லறைகள் எல்லாமும் இரத்தக்கறையால் சிவந்திருக்கின்றன

காதல் இளவரசிகள்

இப்போது கல்லறைகளுக்கு நடுவில் அழுது கொண்டிருக்கிறார்கள்

இன்று எல்லோரும் குவேதேக்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்

காதலையும் அழகையும் திருடிக் கொண்டிருக்கிறார்கள்

ஓ எங்கே பார்க்கப் போகிறேன் இந்தப் பூமியில்

இன்னும் ஒரு வாரிஷ் ஷாவை!

ஓ எங்கே பார்க்கப் போகிறேன் இந்தப் பூமியில்

இன்னும் ஒரு வாரிஷ் ஷாவை!”

காட்சி : 02

ஒரு வியாபாரியோடு ஒத்துப்போகாத அம்ரிதாவின் கவிதைமனம் ஒரு குழந்தையோடு அந்த வாழ்வை முறித்துக் கொள்கிறது. சக கவிஞரும், பிரபலமான பாடலாசிரியருமான சாஹிர் லுத்வானியை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உறுதியாக நேசித்தார். ஆனால் கடைசிவரை அம்ரிதாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை சாஹிர். இதோ நிறைவேறாத காதலுக்காகக் கசிந்துருகும் அம்ரிதாவின் இதயத்தைப் பாருங்களேன்.

” மீண்டும் உன்னை நினைக்கிறேன்

மீண்டும் அந்த ஒளியை முத்தமிடுகிறேன்

ஒருவேளை காதல்

ஒரு கோப்பை விஷமாக இருக்கலாம்

ஆனபோதிலும்

மீண்டும் அதைக் குடிக்கவே நினைக்கிறேன்”

காட்சி : 03

அம்ரிதாவின் கவிதைத் தொகுப்புகளுக்கு ஓவியம் வரைந்துகொடுப்பதன் மூலமாக இம்ராஷ் அம்ரிதாவின் வாழ்விற்குள் நுழைகிறார். கிட்டத்தட்ட வாழ்வு முழுவதும் அம்ரிதாவை தன்னுடைய தூரிகையைப் போல இல்லை அதைவிடவும் அதிகமாகத் தாங்கிக் கொள்கிறார். இம்ராஷை விட்டுவிட்டு அம்ரிதாவைப்பற்றி எழுதுவது சரியானதல்ல. அந்த இம்ராஷிற்காக அம்ரிதா எழுதிய கவிதைதான்

” உன்னை மீண்டும் சந்திப்பேன்

எங்கே எப்படி என்று

எனக்குத் தெரியாது

ஒருவேளை

உன்னுடைய கற்பனையின்

உருவம் ஆகலாம்

உன்னுடைய

ஓவியச் சட்டகத்தின்

மர்மமான ஒரு கோடாக

என்னை நானே விரித்தபடி

உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்

ஒருவேளை

சூரியனின் ஒளிக்கற்றைகளாக மாறி

உன்னுடைய வண்ணங்களோடு கலந்து

உன்னுடைய சட்டகத்தில்

என்னை நானே வரைந்து கொள்ளலாம்

எங்கே எப்படி என்று

எனக்குத் தெரியாது

கண்டிப்பாக உன்னைச் சந்திப்பேன்

ஒருவேளை

வசந்தகாலத்தின் நீர்த்துளிகளாக மாறி

எரியும் உன்னுடைய மார்பில்

என்னுடைய குளிர்ச்சியைச் சேர்க்கலாம்

எதுவும் தெரியாது எனக்கு

ஆனால் இந்த வாழ்க்கை

என்னோடு வந்து கொண்டேயிருக்கிறது

உடல் அழியும் போது

அனைத்தும் அழிந்துவிடும்

ஆனால் நினைவின் இழைகளோ

நிரந்தரமான அணுக்களால் பின்னப்பட்டது

நினைவுகளின்

அந்தத் துகள்களை அள்ளியெடுத்து

இழைகளைப் பின்னுகிறேன்

இப்படியாக இப்படியாக

உன்னை மீண்டும் மீண்டும் சந்திப்பேன் நான்!”

இப்படியாக இந்த மூன்று கவிதைகளின் வழியாக நான் நேசிக்கும் அம்ரிதாவை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். நானும் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 20/04/2023 - 9:29 AM

கவிஞர் அம்ரிதா பிரீத்தம் என்பவரின் அறிமுகம் அசத்தலானது. கவிஞர் ஜோசப் செய்யும் அறிமுகம் எனின் அதற்கு தனித்துவம் உண்டுதானே.

எத்தனை அம்ரிதாக்கள் புதியதாய்ப் பிறந்து வந்தாலும் இந்தியாவுக்குப் போதாது.
பாடுபொருள்கள் அந்தளவுக்கு அணிவகுத்து வருகின்றன. ஆனால் நம் நாட்டுக் கவிஞர்களோ அவற்றைப் பற்றிப் பெரிதாக அக்கறைப் பட்டதாகத் தெரியவில்லை.

என்ன செய்ய?

இருக்கின்ற கவிஞர்களை சமூக பிரக்ஞை உள்ளவர்களாக மாற்றும் வேலை சமூகத்தின் முன்பாக உள்ள முக்கியப் பணியாகவே படுகிறது.

Reply

Leave a Comment