அமெரிக்காவைப் பிடித்தாட்டும் பூதம்

மார்க்சியத் தத்துவத்தை இந்த உலகத்திற்குக் கொடுத்த மாமேதைகளான கார்ல் மார்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் தங்களுடைய புகழ்பெற்ற நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இப்படித் தொடங்குவார்கள், ஐரோப்பாவை பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மொழியின் முதல்பதிப்பு வெளிவந்தது 1872 என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஐரோப்பாவைப் பிடித்தாட்டத் தொடங்கிய அந்தக் கம்யூனிஸ பூதம் இன்றுவரைக்கும் முதலாளித்துவத்தின் கண்களில் மரணபயத்தைப் பிரசவிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்து புறப்பட்ட கம்யூனிஸக் கருத்துகள் ஜாரின் ருஷ்யாவில் பெளதீக சக்தியாக உருமாறி சோவியத் யூனியனாக வெற்றியடைந்தது. சீனாவும் கூட மாவோவின் நீண்டபயணத்தின் விளைவாக மக்கள்சீனமாக மாற்றம் கண்டது. ஹோசிமின் தலைமையில் வியட்நாமை விடுதலை செய்த கம்யூனிஸம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அடிமைச் சங்கிலிகளையும் உடைத்தெறியத் தவறவில்லை. கியூபாவிலும் பொலிவியாவிலும், சிலியிலும் கம்யூனிஸக் கருத்துக்கள் விடுதலை வேட்கையோடு வேகமாகப் பரவத்தொடங்கின.

வேறு எந்த நாட்டையும் விடவும் மாபெரும் இந்தக் கம்யூனிஸப் பரவல் அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாக மாறியது. ஏனென்றால், கம்யூனிஸத்தால் வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறியப்பட்ட சுரண்டல் சமூகங்களால் நேரடியாகப் பலனடைந்து கொண்டிருந்தது அமெரிக்காதான். அப்படியென்றால் அந்த அமெரிக்காவிற்குக் கோபம் வருவது நியாயம்தானே.

அன்று ஏற்பட்ட கம்யூனிஸத்தின் மீதான அமெரிக்காவின் கோபம் இன்றுவரைக்கும் வளர்ந்திருக்கிறதே தவிர, கொஞ்சம்கூட குறையவில்லை. ஏனென்றால், அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையும், சுரண்டும் மனோபாவமும், செல்வம் சேர்க்கும் பேராசையும், அதிகார வெறியும் இன்னும் வளர்ந்திருக்கிறதே தவிர, கொஞ்சம்கூடக் குறைந்துவிடவில்லை. அதனால்தான் நெருங்கும் அமெரிக்கத் தேர்தல் நேரத்தில் கம்யூனிஸம் அங்கு பேசுபொருளாகியிருக்கிறது.

இப்போதைக்கு இந்த உலகத்தில் அதிகமாகவும் அவசரமாகவும் மாற்றம் தேவைப்படும் நாடு எதுவென்று கேட்டால், ஆப்பிரிக்காவோ, ஆப்கானிஸ்தானோ இல்லை ஏதாவதொரு ஏழைநாட்டின் பெயரோ சொல்லப்படலாம். என்னைக்கேட்டால் எந்த நம்பிக்கையும் இல்லையென்றாலும்கூட அமெரிக்காதான் என்று சொல்வேன். அதற்குக் காரணம் இருக்கின்றது.

உக்ரைன் அதிபரை பின்னிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. விளைவோ ஒரு வருடத்தைத் தாண்டியும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்திற்கு மெல்லிய ஆதரவும், இஸ்ரேலுக்கு மாபெரும் உதவியும் செய்து கொண்டிருக்கிறது அமெரிக்கா. விளைவோ பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈராக்கையும், லிபியாவையும் இப்படித்தான் கபளீகரம் செய்தது. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படியாக வரப்போகும் அமெரிக்கத் தேர்தலில் பேசுபொருளாக இருக்கவேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் குடியரசுக் கட்சியினராலும், அவர்களது ஆதரவாளர்களாலும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட் என்ற பிரச்சாரம் கடுமையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. டிரம்பின் ஆதரவாளரான பெருமுதலாளி எலான் மஸ்க் ஒருபடி மேலேசென்று கமலா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா கம்யூனிஸ நாடாகிவிடும் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் கமலா ஹாரிஸ் தன்னைக் கம்யூனிஸ்ட் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. அப்படியென்றால் ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? ஒன்றுமில்லை, கேவலம் ஓட்டுக்காகத்தான். அமெரிக்காவிலுமா என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது.

கம்யூனிஸ வெறுப்பு அமெரிக்க அதிபர்களுக்கு மட்டுமோ அல்லது அமெரிக்காவின் உளவுத்துறைக்கு மட்டுமோ ஊறிப்போனது கிடையாது. அமெரிக்க மக்களிலும் பாதிக்குமேல் அப்படித்தான் வெறுப்புணர்வில் ஊறவைக்கப்பட்டிருக்கிறார்கள். – இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகான இந்தியாவை நினைத்துப்பார்த்துக் கொள்ளுங்கள் – அப்படிப்பட்ட வலதுசாரிச் சிந்தனையில் ஊறிப்போயிருக்கும் மக்களின் வாக்குகளை வேட்டையாடுவதற்காகத் திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கிறது இந்தப் பிரச்சாரம்.

ஆம், கியூபா, பொலிவியா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் மாற்றங்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் அங்கிருந்து ஓடிவந்த மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்கள் 36.2 மில்லியன் அளவில் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 14% மக்கள். ஏற்கனவே கம்யூனிஸத்தை வெறுத்து ஓடிவந்தவர்களிடம் கமலா ஹாரிஸ் கம்யூனிஸ்ட் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தால் வெற்றியடையலாம் என்று செய்து கொண்டிருக்கிறார்கள். டிரம்பும் அவரது ஆதரவாளரான எலான் மஸ்க்கும் இந்தப் பிரச்சாரத்தை நேரடியாக முன்னெடுக்கிறார்கள். இவர்கள் செய்யும் வேலையால் அமெரிக்காவில் பதினேழு மணிநேரத்தில் இணையத்தில் மார்க்சிஸ்ட் என்ற வார்த்தையின் தேடல் ஆயிரமடங்கு அதிகமாகியிருக்கிறது.

திருப்பதி லட்டும், பழனி பஞ்சாமிர்தமும் விவாதப் பொருளாக நிறைந்திருக்கும் இந்தியாவைப் போன்ற நாட்டில் இருந்துகொண்டு அமெரிக்கத் தேர்தல், கம்யூனிஸம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பது ஒருபக்கம் நகைப்புக்குரியதாக இருந்தாலும், வேறு வழியில்லை பேசித்தான் ஆகவேண்டும். அமெரிக்காவிற்கு மட்டுமல்ல நாளைய இந்தியாவிற்கும் சேர்ந்ததுதான். மார்சியத்தை இணையத்தில் அறிந்துகொள்ள முயற்சித்த அமெரிக்க இளைஞர்கள் சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினால், ஜனநாயக கட்சியோ, குடியரசுக் கட்சியோ யாருமே ஆட்சிக்கு வரமுடியாது.

ஏனென்றால் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று விளம்பரப்படுத்தப்பட்ட பராக் ஒபாமா பத்தோடு பதினொன்றாக வெள்ளை மாளிகையை அலங்கரித்து விட்டுப் போனதையும், அவர்பங்கிற்கு யுத்தங்களை நடத்திவிட்டுப் போனதையும் பார்க்கத்தான் செய்தோம். கமலா ஹாரிஸும் அதற்கு விதிவிலக்கல்ல, அதாவது அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கு, அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களின் நலன்களுக்கு சேவகம் செய்வதல்லாமல் வேறெதுவும் செய்யப்போவதில்லை. கம்யூனிஸத்தைப் பூதமாகவே டிரம்பும் அவரைப்போன்ற வலதுசாரிகளும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பயமுறுத்த மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும்கூட, 1870 களில் ஐரோப்பாவைப் பிடித்தாட்டத் தொடங்கிய கம்யூனிசம் என்னும் பூதம் 2024 அமெரிக்கத் தேர்தலையும் பிடித்தாட்டிக் கொண்டிருப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அவ்வளவுதான்.!

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment