படம் : மிச்சமிருக்கும் பாரியின் பறம்பு மலை
இந்த மனிதகுலத்திற்குப் போர்கள் புதியதல்ல. நிலத்தைக் கண்டடைந்து, நிலத்திற்கான மதிப்பைத் தெரிந்துகொண்டபோதே போர்கள் தொடங்கிவிட்டன. நிலத்தை அபகரித்துக் கொள்வதென்பது அந்த நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அடிமைகளாக்குவதற்குச் சமம். முக்கால்வாசிப் போர்களும் அதற்காகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன. காலங்காலமாக நிலமே குறிவைக்கப்படுகின்றது. காலங்காலமாக நிலமே வேட்டையாடப்படுகின்றது. இஸ்ரேல் பாலஸ்தீன நிலத்திற்காகத்தான் கொத்துக் கொத்தாக குழந்தைகளைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், இந்தப் பூமியில் தண்ணீருக்காக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. எதிரிகளின் கண்களை உறுத்திக் கொண்டிருக்கும் பொன்னிற்காக யுத்தங்கள் நடந்திருக்கின்றன. பொருளுக்கு நிகராகப் பெண்ணையும் பார்த்துப் பழகியதால் பெண்ணிற்காகவும் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்ற பேராசை எத்தனையோ யுத்தங்களுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. நான் என்ற அகந்தை சொல்ல முடியாத பேரழிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.
நோயுற்ற இதயத்திலிருந்து வெளிப்பட்ட சகமனிதனின் மீதான வெறுப்புணர்வு நினைத்துப் பார்க்கவே முடியாத படுகொலைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. அப்படி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் எச்சங்கள் இன்றும்கூட பார்ப்பவர்களைப் பதறச் செய்து கொண்டிருக்கின்றன. இப்படியாக வரலாற்றின் பக்கங்களிலெல்லாம் இரத்தக்கறை படிந்திருப்பதை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. போர் என்ற பெயரில் அப்பாவி மனித உயிர்களைப் பலிகொடுத்துத்தான் ஒவ்வொரு நூற்றாண்டாகக் கடந்து கொண்டிருக்கிறது மனிதகுலம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் நடந்த ஏராளமான போர்களில், ஒரேஒரு போரைப்பற்றி எப்போது நினைத்தாலும் என்னிதயம் கதிகலங்கிவிடும். மூவேந்தர்கள் என்றழைக்கப்பட்டவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து பறம்பு என்ற சிறியதொரு குன்றை, போர் என்ற பெயரில் குத்திக்கிழித்த அந்தக்கதை கல்நெஞ்சையும் கரையச்செய்யக் கூடியது. பேரரசுகளின் வளர்ச்சியானது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டிருந்த இனக்குழுக்களின் அழிவைத் தொடங்கி வைக்கின்றன. ஒரு சாதாரண வேளிர்குலத் தலைவனான பாரியின் புகழைப் பேரரசர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களோடு ஒப்பிட்டால் பாரியின் செல்வம் ஒன்றுமே கிடையாது. பறம்பு மலை, அதைச்சுற்றி நானூறு சிற்றூர்கள் அவ்வளவுதான்.
ஆனால், யாரோடும் ஒப்பிட முடியாத ஒன்று பாரியிடம் இருந்தது. அதுதான் அவனுடைய இதயத்தில் நிறைந்திருந்த ஈகைக்குணம். கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தான். கேட்டதையெல்லாம் கொடுத்தான். பாரியின் புகழைப் பாணர்கள் போகும் இடமெல்லாம் பாடிக் கொண்டிருந்தார்கள். பாரியின் புகழைப் பாணர்கள் போகும் இடமெல்லாம் விதைத்துக் கொண்டிருந்தார்கள். பொறுக்குமா சின்ன இதயங்கொண்ட மெரிய மனிதர்களுக்கு. படையெடுத்து வந்தார்கள். பறம்பு மலையை முற்றுகையிட்டார்கள். பறம்பிலிருந்து ஒருவரும் கீழிறிங்கி வராதவாறும், வெளியிலிருந்து உணவுப்பொருட்கள் உள்ளே செல்லாதவாறும் சுற்றிவளைத்தார்கள். கடைசியில் பசி அவர்களைக் கீழிறிக்கிச் சரணடைய வைத்துவிடும் என்று அந்த முட்டாள்கள் நினைத்தார்கள். பறம்பு மலையில் நிறைந்திருக்கும் மூங்கில் அரிசியையும், தேனையும், பலாவையும் பற்றி அவர்களுக்கு எப்படித் தெரியும். உண்மை என்னவென்றால், பறம்பையும், பாரியையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை அவர்களால். நேரடியாக மோதமுடியாதவன் கடைசியில் துரோகத்தைத் தேர்ந்தெடுப்பது போல, அந்தக் கயவர்களும் தேர்ந்தெடுத்தார்கள் துரோகத்தை. வீழ்த்தினார்கள் பாரியை. வீழ்த்தினார்கள் பறம்புமலையை.
வீழ்த்தப்படுவோம் என்றறிந்த பாரி, நம்பிக்கைக்குப் பாத்திரமான பெருங்கவிஞன் கபிலரோடு தன் செல்ல மகள்களை பறம்பைவிட்டு அனுப்பிவிடுகிறான். பேரழிவின் சாட்சியாகக் கண்ணீரோடு மலையிலிருந்து இறங்குகிறார்கள் மூவரும். மலையடிவாரத்தில் இருந்தபடி தந்தையில்லாத மலையை, தங்களுடைய மலையை, ஓடி விளையாண்ட மலையை, ஓங்கி வளர்ந்த மலையை குமுறும் இதயத்தோடும், கலங்கும் கண்களோடும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வானத்தில் முழுநிலா ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. முன்னொருநாள் பாரியின் தோள்களைப் பற்றியபடி பறம்பின் உச்சியிலிருந்து முழுநிலாப் பார்த்ததைக் கண்ணீரோடு நினைத்துப் பார்க்கிறார்கள் பாரியின் மகள்கள். உங்களுக்கு அழுகை வருகிறதல்லவா! அவர்களுக்கோ கவிதை வருகிறது. காலத்தால் அழிக்கமுடியாத அந்தக் கவிதை இதுதான்.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம்! எம் குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் நிலவில்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்: யாம் எந்தையும் இலமே!
இந்தக் கவிதையின், கவிதை மொழியின் வழியாக எத்தனையோ ஆண்டுகளைக் கடந்தும் கூட கேட்டுக் கொண்டிருக்கும் இனக்குழுக்களின் துயரக்கதையானது பாரியின் பறம்பு மலையை மட்டுமல்ல காற்று வீசும் திசையெங்கும் சுற்றிச் சுழன்று கொண்டுதானிருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும் நவீன உலகத்தில், நவீன வடிவத்தில் போர்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. போருக்கு எதிரான கவிதைகளும் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டேதானிருக்கின்றன.
ஓ! மனிதர்களே
ஒவ்வொரு போர்களையும்
நினைத்துப் பாருங்கள்
பேரழிவுதான்
ஞாபகத்திற்கு வரும்
அப்படியென்றால்?
ஜோசப் ராஜா
1 comment
போருக்கெதிரான பதிவுகளைக் கவிஞர் ஜோசப் ராஜாவின் எழுதுகோல் எழுதிக் குவித்தவண்ணம் உள்ளது.
இப்போது வள்ளல் பாரி மற்றும் பாரி மகளிர் குறித்த பதிவுகள்.
படித்தால்தான் அதன் அர்த்த அடர்த்தி தெரியும்.
படியுங்கள்
பரப்புங்கள்.