அளவில் சிறியதென்று எதையும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஒரு சின்னக்குழந்தை சில நேரங்களில் தன்னுடைய ஞானத்தால் உங்களைப் பிரமிக்க வைக்கலாம். சின்னஞ்சிறு தீக்குச்சி பெருங்காட்டை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம். ஒரு திரைப்படத்தின் துண்டுக்காட்சி உங்களைத் துளைத்தெடுத்துத் துடிதுடிக்கச் செய்யலாம். ஒரு சின்ன இசைத்துணுக்கு காலமெல்லாம் உங்கள் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கலாம். ஒரு நீண்ட கவிதையின் ஒற்றைவரி தொண்டையில் மாட்டிய முள்ளைப்போல உள்ளிருந்தே உங்களை குத்திக் கொண்டிருக்கலாம். ஆஜானுபாகுவான கோலியாத்தின் முன்னால் பொடியன் தாவீது நின்று கொண்டிருக்கிறான். நினைத்துப் பாருங்களேன் கோலியாத்தின் மூளைக்குள் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும். என்ன வேண்டுமானாலும் ஓடிக்கொண்டிருக்கட்டும், தாமதிக்கவில்லை தாவீது, நொடியில் வீழ்த்திவிட்டான் கோலியாத்தை.
சின்ன விஷயங்கள் என்று எப்போதுமே எதையுமே புறந்தள்ளுவதில்லை நான். வாசிக்கத் தொடங்கிய காலத்தில் இந்தச் சின்னஞ்சிறு புத்தகத்தை அறிமுகப்படுத்தினார் தோழர் ஒருவர். அரைமணிநேரத்தில் வாசிக்கக்கூடிய புத்தகம்தான், ஆனால் சிலநாட்கள் வைத்திருந்து வாசித்தேன். மீண்டும் வாசித்தேன். வாசித்துக் கொண்டேயிருந்தேன். பத்துப் பக்கங்கள்தான் இருக்கும் சிலந்தியும் ஈயும் என்ற அந்தப் புத்தகம். ஆனால் அது பற்றவைத்த நெருப்பு அணையாமல் இருந்து கொண்டிருக்கிறது இப்போது வரையிலும். சுரண்டுகிறவனை சிலந்தியாகவும், சுரண்டப்படுகிறவனை ஈயாகவும் வைத்துக்கொண்டு அவ்வளவு எளிமையாக இந்தச் சுரண்டல் சமூகத்தை விளக்கிய புத்தகம் சிலந்தியும் ஈயுமாகத்தான் இருக்கும். சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு ஈயையும் நோக்கி, சுரண்டும் சிலந்தியையும், அதன் கொடூரமான வலைப்பின்னலையும் உரக்கச்சொல்லி, ஒன்றுசேருங்கள் எவ்வளவு பெரிய வலையையும் உங்களால் அறுத்தெறிய முடியும் என்று சொன்ன அந்தச் சின்னஞ்சிறு புத்தகம் எனக்குள் விதைத்த சமூக அறிவு கொஞ்சமல்ல தோழர்களே!
இந்தப் புத்தகத்தை எழுதியவர், ஜெர்மனியின் தொழிலாளி வர்க்கத்தின் தலைவராக இருந்த தோழர் வில்ஹெம் லீப்னஹெட். மார்சியத்தின் ஆசான்களான மார்க்ஸுடனும், ஏங்கெல்ஸுடனும் நெருங்கிப் பழகியவர். ஜெர்மனியின் சமூக ஜனநாயக் கட்சியின் தலைவராக இருந்து சதா தொழிலாளர்களின் நல்வாழ்க்கைக்காகத் தொடர்ந்து போராடியவர். அதனால்தான் வில்ஹெம் லீப்னஹெட் என்ற பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தோடு பின்னிப் பிணைந்த பெயர் என்று சொன்னார் தோழர் லெனின் அவர்கள். சுரண்டும் சிலந்திக்கும், சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பகைமுரணை எளிமையாக விளக்கிச் சொன்ன இந்த நூல் வெளிவந்த காலத்தில் ஐரோப்பாவின் தொழிலாளர்களாலும், சமூக ஜானநாயகத்தை விரும்பியவர்களாலும் அளவற்ற அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்கப்பட்டது. கொண்டாடப்பட்டது.
வெறும் பத்துப் பக்கங்களில் எத்தனை வரிகளை உங்களால் அடிக்கோடிட முடியும் என்று குறைவாக நினைத்தீர்கள் என்றால், ஏமாந்துதான் போவீர்கள். எண்ணற்ற வரிகளை அடிக்கோடிட்ட நானும்கூட அதில் ஒரு பகுதியை மட்டுமே உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே நீங்கள் விரும்பினால், யாராலும் வெல்லமுடியாத பலம்படைத்தவர்களாக மாறமுடியும். இன்று சிலந்திகள் பலமுடையதாக இருக்கலாம், அவைகள் எண்ணிகையில் மிகமிகச் சொற்பம். ஆனால் நீங்களோ அதிகமாயிருக்கிறீர்கள். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின், இந்த உலகத்தின் எல்லாமும் நீங்களாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் ஒன்றுபட்டால், உங்கள் இறக்கைகளின் ஒரேஒரு வீச்சினால் உங்களைக் கட்டியிருக்கும் எல்லா இழைகளையும் அறுத்துவிடலாம். வறுமையையும், அடிமை வாழ்வையும் ஒழித்துக் கட்டிவிடலாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். ஒன்றே ஒன்றுதான். விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.
தோழர்களே, லீப்னஹெட்டில் காலத்திலிருந்த சிலந்திகளல்ல இன்றைய சிலந்திகள். ஹாலிவுட் இயக்குநர்கள் காட்டும் கொடூரமான மிருகங்களைக் காட்டிலும் கொடூரமாக வளர்ந்திருக்கின்றன மக்களைச் சுரண்டும் சிலந்திகள். ஒரேயொரு பெருமுதலாளியின் சொத்துக் கணக்கிற்கு முன்னால், தேசத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வருவாயை வைத்தால்கூட ஈடாகாது. இதைத்தான், இந்தக் கேவலத்தைத்தான் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் இந்த ஆட்சியாளர்களும் இந்த முதலாளிகளும். இன்னுமா இவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கப் போகிறீர்கள். ஈக்களே! விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள். புதிய வாழ்க்கையை, புதிய சமூகத்தை விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்.!
ஜோசப் ராஜா
1 comment
“சிலந்தியும் ஈயும்” நூலை வைத்து அற்புதமான வழிகாட்டியாக கவிஞர் ஜோசப் ராஜா, உழைக்கும் வர்க்கத்துக்கும் உழைக்கும் வர்க்கத்தை நேசிப்பவர்களுக்கும்
வேண்டுகோள் விடுத்துள்ளார். அர்த்த அடர்த்தி மிக்கவை அவை. என்னதான் என்று வாசித்துப் பாருங்களேன்.