”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற மாமேதை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகள் இன்று இந்த உலகத்தின் எங்காவது ஒரு மூலையில், ஏதாவது ஒரு வடிவத்தில் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தக் கூடிய சொற்களாகிவிட்டன என்பதை யாரும் மறுக்க முடியாது. மாறிக்கொண்டே இருக்கும் மனிதகுல வரலாற்றைக் கூர்ந்து அவதானித்துக் கூறப்பட்ட சொற்கள். இப்போதும் கூட நிலையானது என்பது பற்றிய பேச்சுகள் – விவாதங்கள் அல்ல – இந்தத் தேசத்தின் எல்லாப் பக்கங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்ஸின் ”மாற்றம் ஒன்றே மாறாதது” என்ற வார்த்தைகள் உங்களுக்குள்ளும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நிலையானது என்பதை மதத்தோடு மட்டும் சம்பந்தப்படுத்திப் பார்த்தோமென்றால், நேற்றைப்போல இன்றும் நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் அர்த்தமாகும்.
ஒருவகையில், இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மதமும் நிலையானது என்றுதான் சொல்லப்படுகின்றன. இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு கடவுள்களும் நிலையானவர்கள் என்றுதான் சொல்லப்படுகின்றன. இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மதவழிபாடுகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் நிலையானது என்றுதான் சொல்லப்படுகின்றன. இவைகளில் உடனடியாகவோ கொஞ்சம் தாமதமாகவோ மாற்றங்களுக்கு முகம்கொடுத்த மதங்களும் இருக்கின்றன மாற்றத்தை அனுமதிக்கவே மாட்டோமென்று தங்களுடைய பழைமைவாதப் படிக்கட்டுகளில் இறுக்கமாக உட்கார்ந்திருக்கும் மதங்களும் இருக்கின்றன. ஆக, நிலையானது என்பதை மதத்தோடு மட்டுமல்ல அதிகாரத்தோடும் பொருத்திப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால் வரலாறு முழுக்க ஒவ்வொரு மதமும் அதிகாரத்தின் வழியேதான் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிகாரத்தின் வழியேதான் பார்ந்து விரிந்து கொண்டிருக்கிறது. அந்த அதிகாரம்தான், அந்த அதிகாரத்தால் கிடைக்கும் சகலவிதமான வசதிகளும்தான் நிலையானது என்பதை நோக்கி நகரச்செய்கிறது. நிலையானது என்ற கருத்தை விட்டுவிடாமல் பற்றிப் பிடித்துக்கொள்ளச் செய்கிறது.
நினைத்துப் பாருங்களேன், ஆற்றங்கரை நாகரீகத்தைத் தொடர்ந்து, மக்கள் குழுக்களாக உழைத்து வாழத்தொடங்கிய காலத்தில் அவர்களுக்குத் தலைமை தாங்கிய குழுத்தலைவன், தன்னை நிரந்தரமானவனென்று நினைத்திருப்பான் அல்லவா! நூற்றுக்கணக்கான ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசனாகட்டும், ஆயிரக்கணக்கான ஊர்களை ஆட்சிசெய்த பேரரசனாக இருக்கட்டும், தலைமுறை தலைமுறைகளாக நாம்தான் ஆட்சிசெய்யப் போகிறோம் என்றுதானே நினைத்திருப்பான். ஆயிரமாயிரம் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நிலக்கிழார் ஒருவன், அத்தனை ஏக்கர் நிலங்களையும், அதன்மூலமாக வரும் செல்வங்களையும், அதற்குக் காரணமாக இருக்கும் விவசாயக் கூலிகளையும் நிரந்தரமானதென்றுதானே நினைத்திருப்பான். நிலையானது என்ற அவனுடைய நினைப்பில் நிகழ்த்தப்பட்ட சின்னஞ்சிறிய மாற்றம்தான், கீழ்வெண்மணியில் அத்தனை விவசாயிகளையும் உயிரோடு கொளுத்தத் தூண்டியது. இதோ இந்த முதலாளித்துவச் சமூகத்தில் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு முதலாளியும் தன்னிடமிருக்கும் செல்வத்தின் காரணமாகவும், அந்தச் செல்வத்தால் உண்டாக்கப்பட்ட அதிகாரத்தின் காரணமாகவும் தன்னை நிலையானவன் என்றுதானே நினைத்துக் கொண்டிருப்பான்.
1927 வரையிலும் இப்படித்தான் சீனாவின் நிலப்பிரபுக்களும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஹீனான் மாகாணத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த உழைக்கும் மக்கள் நிலப்பிரபுக்களின் கைகளில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளின் உழைப்பில் நிலப்பிரபுக்களின் செல்வங்கள் உயர்ந்து கொண்டேயிருந்தன. விவசாயிகளின் வியர்வையிலும், இரத்தத்திலும் தங்களுடைய சந்ததிகளுக்கான செல்வங்களைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள் நிலப்பிரபுக்கள். தங்களுடைய செல்வச்செழிப்பான வாழ்க்கை, தங்களுடைய சுகபோகம் அத்தனையும் நிலையானது என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார்கள் அந்தக் கேடுகெட்ட நிலப்பிரபுக்கள். ஆனால் மரங்கள் சும்மா இருந்தாலும் காற்று விட்டுவிடுமா என்ன. பெரும் புயலைப்போல, பெரும் சூறாவளியைப் போலப் புறப்பட்டு வந்தார்கள் விவசாயிகள். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நிலப்பிரபுக்கள் நின்று நிதானிக்குமுன் கிட்டத்தட்ட எல்லாமும் முடிந்திருந்தது. ஆம், நேற்றுவரையிலும் நிலப்பிரபுக்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு உழைத்துக் கொண்டிருந்த ஹீனான் மாகாண விவசாயிகள் இன்று ஹீனான் விவசாய இயக்கமாக, அமைப்பாய்த் திரண்டு அழிக்க முடியாத சக்தியாக உருமாறி நிற்கிறார்கள். நிலையானது என்று நம்பிக்கொண்டிருந்த நிலப்பிரபுக்களின் கனவுகளில் புரட்சியெனும் இடியை இறக்குகிறது ஹீனான் விவசாய இயக்கம். இப்போது ஒட்டுமொத்த சீனாவின் கண்களும் ஹீனான் விவசாய இயக்கத்தின் மீது நிலைகுத்தி இருக்கின்றன.
யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. யாரும் நம்பிடவுமில்லை. நிலப்பிரபு – விவசாயக்கூலி என்ற விதி ஒட்டுமொத்தமாக ஒரேயடியாகத் தலைகீழாய் மாறுவதில் யாருக்கும் உள்ளூர விருப்பமுமில்லை. விவசாயிகள் பக்குவமில்லாதவர்கள் என்ற விமர்சனங்கள் இடதுசாரி இதயங்களில் இருந்துகூட உதிரத் தொடங்குகின்றன. சீனாவின் இதர பகுதிகளில் இருக்கும் நிலப்பிரபுக்கள் ஹீனான் விவாசாயிகளின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைப் பொழிகிறார்கள். அரசவம்சத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பங்கிற்கு அவதூறுகளைப் பரப்புகிறார்கள். தேசமெங்கும் பரவியிருந்த வலதுசாரிகள் வழக்கம்போலவே விவசாய இயக்கத்தின்மீது விஷத்தைக் கக்குகிறார்கள். ஒருவர் மட்டும் அந்த மாகாணத்தில் ஏதோ புதுமை நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறார். நாளை நடக்கப்போகும் மாபெரும் மாற்றத்திற்கான இயக்குவிசை ஹீனானில் தொடங்கியிருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நம்புகிறார். தன்னுடைய கட்சியின் கட்டுப்பாட்டையும் மீறி பயணத்தைத் தொடங்குகிறார் ஹீனான் மாகாணத்திற்கு. கிராமங்களிலும் நகரங்களிலும் என முப்பத்தி இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஆய்வுசெய்கிறார். ஆய்வின் முடிவில், ”விவசாயிகள் என்ன செய்கிறார்களோ அது மிகவும் சரியானது; விவசாயிகள் என்ன செய்கிறார்களோ அது மிகவும் அருமையானது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார், தோராயமாக இருபது வருடங்கள் கழித்து ஒட்டுமொத்த சீனாவிற்குமான பெரும்புரட்சியின் நீண்டபயணத்திற்குத் தலைமையேற்கப்போகும் புரட்சியின் குருநாதர் மாவோ அவர்கள்.
ஓ! அப்படி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது அந்த மாகாணத்தில் என்று கேட்கிறீர்களா? ஒன்றுமில்லை, நிலப்பிரபுக்களின் அதிகாரம் மொத்தமாக ஒழிக்கப்பட்டு மாகாணத்தின் ஒட்டுமொத்த நிலங்களும் விவசாய சங்கங்களுக்கு உரியதாக மாறிவிட்டன. லட்சம் லட்சமாக விவசாய சங்கங்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டிருந்தார்கள் விவசாயிகள். அனைத்து அதிகாரங்களும் விவசாயிகளுக்கே என்ற முழக்கங்களுக்கு எங்கிருந்தும் எந்த எதிர்ப்பும் எழவில்லை. நிலப்பிரபுத்துவக் கொடுங்கோலர்களுக்கும், தீய எண்ணங்கொண்ட மேட்டுக்குடியினருக்கும் கடுமையான அபராதங்கள் விதிக்கிறார்கள் விவசாய சங்கத்தினர். சங்கங்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட மேட்டுக்குடிகளின் பண்ணைகளுக்குள் கூட்டமாய்ப் புகுந்திடும் விவசாயிகள் கிட்டத்தட்ட பண்ணையைக் காலிசெய்கிறார்கள். அவர்களுடைய அழகான பஞ்சணைகளில் படுத்துப் புரள்கிறார்கள். தேவைப்பட்டால் நிலப்பிரபுக்களைக் கைதுசெய்கிறார்கள். இன்னும் நேரடியாகச் சொல்வதென்றால், ஆம், அதுதான், அதுவேதான், தனிச்சொத்தை ஒழித்துக் கட்டினார்கள்.
இதெல்லாம் தான் ஒவ்வொருவரையும் அச்சுறுத்தியது. எப்படி சோவியத்தைப் பார்த்து ஒவ்வொரு முதலாளித்துவ நாடுகளும் அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு அலைந்தனவோ, அதுபோல ஹீனான் விவசாய இயக்கத்தைப் பார்த்து ஒவ்வொரு நிலப்பிரபுக்களும், மேட்டுக்குடியினரும் அவர்களை ஆதரிப்பவர்களும் தூக்கம் தொலைத்துப் பைத்தியமாய்த் திரிந்தார்கள். அப்படிப்பட்ட பைத்தியக்கார மனநிலையில் தான் விவசாய சங்கங்களைப் பற்றியும், அவர்களது புரட்சிகரமான நடவடிக்கைகளைப் பற்றியும் அவதூறு பரப்பினார்கள். பரப்பிக் கொண்டேயிருந்தார்கள். ஹீனான் விவசாய இயக்கத்தை முழுமையாக ஆதரித்த தலைவர் மாவோ, ஹீனான் விவசாயப் புரட்சியில் நாளை நடக்கப்போகும் சீனப்புரட்சிக்கான விதையைத் தரிசித்த தலைவர் மாவோ, அவர்களுக்கு ஆதரவாகவும், புரட்சியைப்பற்றி ஒவ்வொருத்தரும் புரிந்துகொள்ளவும் இப்படிச் சொன்னார். . .
” புரட்சி என்பது மாலைநேர விருந்தல்ல. ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் வரைவதோ, பூத்தையல் வேலையோ அல்ல. புரட்சி என்பது மிகவும் பண்பானதாகவும், ஓய்வும், இதமும் உள்ளதாகவும், நிதானமுள்ளதாகவும், கருணை, மரியாதை, அடக்கம் மற்றும் பெருந்தன்மையுள்ளதாகவும் இருக்க முடியாது. ஏனென்றால், புரட்சி என்பது ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி. ஒரு பலாத்கார நடவடிக்கை. ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தைத் தூக்கி எறிவது. விவசாயிகள் மாபெரும் சக்தியைப் பிரயோகித்தால்தானே, ஆழமாய் வேர்விட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் தூக்கியெறிய முடியும்.”
ஆம், மாபெரும் சக்தியைப் பிரயோகித்து நிலையானது என்று நிலப்புரபுக்கள் நம்பிக்கொண்டிருந்த எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்தார்கள் ஹீனான் விவசாய இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள். அந்தப் பெருநெருப்பை அப்படியே கடத்திக் கொண்டுபோய் இருபது வருடங்கள் கழித்து ஒட்டுமொத்த சீன தேசத்திற்குமான புரட்சியை நடத்திக் காட்டினார்கள் அந்தத் தேசத்தின் விவசாயிகளும், தொழிலாளர்களும்.
அந்த வகையில் அறுபது பக்கங்களே கொண்ட இந்தச் சிறுநூல் உலகத்தின் இதயங்களில் செலுத்திய புரட்சிகரமான தாக்கத்தை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதது. ”புரட்சி என்பது மாலைநேர விருந்தல்ல” என்ற வார்த்தைகள் ஒவ்வொரு மொழியிலும் புரட்சியை நேசித்த ஒவ்வொரு இதயங்களிலிருந்தும் புறப்பட்டு ஒவ்வொரு உதடுகளாலும் கம்பீரமாக உச்சரிக்கப்பட்டன. உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவோவின் வார்த்தைகளை ஒருமுறை உள்வாங்கி உச்சரித்துப் பாருங்கள், ஒருவேளை அவர்களால் நிலையானதென்று நம்பிக் கொண்டிருக்கும் முதலாளித்துவச் சமூகத்தை நிலைகுலையச் செய்ய நீங்களும் புறப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
புரட்சி என்பது மாலைநேர விருந்தல்ல. . .
1 comment
1927ல் எழுதப்பட்ட சீன தேசத்தின் ஹுனான் விவசாயிகள் நடத்திய எழுச்சி குறித்த மாவோவின் நூலை கவிஞர் ஜோசப் ராஜா தமக்கே உரிய நடையில் அறிமுகப்படுத்துவது
சிறப்பு.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ எனும் மார்க்சிய அடித்தளத்தில் நின்று கொண்டு உழைக்கும் வர்க்கம் தொடர்ந்து நிகழ்த்தி வரும் சமூக மாற்றங்களைக் கவிஞர் வழி படியுங்கள். பரப்புங்கள்