அடிக்கோடிட்ட வரிகளும் அழியாத புத்தகங்களும் – 1

வாசித்து முடிக்கப்பட்ட ஒரு புத்தகத்தின் எத்தனை பக்கங்களில், எத்தனை வரிகளை, ஏன் எத்தனை வார்த்தைகளை அடிக்கோடிடுகிறீர்களோ அதுதான் அந்தப் புத்தகத்தின் ஆயுளை நிர்ணயிக்கப்போகிறது. புத்தகம் வாசிக்கும் பழக்கம்கொண்ட எல்லோரிடமும் அடிக்கோடிடப்பட்ட ஏராளமான  மேற்கோள்கள் நிறைந்திருக்கும். இன்று சமூக வலைத்தளவாசிகளில் பலர் மேற்கோள்களை மட்டுமே படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி நான்சொல்ல ஏதுமில்லை. சொந்த வாழ்வின் சுக துக்கங்களின் போதும், ஏற்ற இறக்கங்களின் போதும் ஏற்கனவே வாசித்த புத்தகங்களிலிருந்து எடுத்துக்கொண்ட வார்த்தைகள் வாழ்க்கையை முன்னோக்கி வழிநடத்தும் என்பதும் வாசிக்கும் பழக்கம்கொண்ட எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான அனுபவம்தான்.

வாசிப்பு என்பது ஒருவகையில் வாழ்க்கையின் சகல திசைகளையும் திறந்துகாட்டக்கூடிய அற்புதமான ஆயுதம். வாசிப்பு என்பது ஒருவகையில் சமூகத்தின் ஆன்மாவை உள்ளும் புறமும் உறுதியாகப் புரிந்துகொள்ளக்கூடிய உன்னதமான வழி. இன்று யாரோ ஒருவர் மூச்சைப்பிடித்து வாசித்து வைத்திருக்கும் ஒரு புத்தகத்தைக் காதால் கேட்டால் போதும் என்ற விஞ்ஞான வளர்ச்சிகள் வந்தபிறகும் புத்தக வாசிப்பைப் பற்றி பேசவேண்டுமா?

பேசவேண்டும். அடிக்கோடிட்ட வரிகளால் அழியாமல் இருக்கும் புத்தகங்களால் ஆதியிலிருந்து இன்றுவரை இந்த மனிதகுலம் பெற்றது எண்ணிலடங்காதது. இனி பெறப்போவதும் அப்படித்தான் எல்லைகளற்று விரியத்தான் செய்யும். ஊரடங்கு காலத்தில் கல்லூரி மாணவர்களோடு இணையவழிச் சந்திப்பில் இந்தத் தலைப்பில் உரையாடத் தொடங்கும்போதுதான், உண்மையைச் சொன்னால் அடிக்கோடிட்ட வரிகளையும், அந்த வரிகளின் ஆழமான தாக்கத்தையும் உணர்ந்துகொள்ளத் தொடங்கினேன். நான் வாசித்து முடித்திருந்த பல புத்தகங்களை எடுத்துப் பார்த்தேன். அடிக்கோடுகளாலும், குறிப்புகளாலும் நிறைந்திருந்தன ஒவ்வொரு பக்கங்களும். அடிக்கோடிட்ட அத்தனை வரிகளிலிருந்தும் அப்படி என்னதான் பெற்றுக்கொண்டேன். சுலபமாகச் சொல்லிவிடக்கூடியதா! அறிவின் சுவை அனுபவித்தால் அல்லவா தெரியும்.

சில புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பக்கத்தைக் கடக்க முடியாமல் நீண்ட நாட்களாக அங்கேயே உறைந்திருந்த அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். சங்ககால இலக்கியங்கள் தொடங்கி, உரைநடை இலக்கியங்களிலும், நாவல் இலக்கியங்களிலும் அப்படிப்பட்ட ஏராளமான அனுபங்களைப் பெற்றிருக்கிறேன் நானும். அதில் வாசித்துமுடித்தும் நீண்டநாட்களாக என்னைச் சுழட்டியடித்த சில அடிக்கோடிட்ட வரிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். நீங்களும்கூட உங்களைத் தொந்தரவு செய்த, உங்களை உற்சாகம் கொள்ளச்செய்த, உங்களால் மறக்கவேமுடியாத அடிக்கோடிட்ட வரிகளை நினைத்துப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்த மண்ணின் மகத்தான ஓவியரும், மகோன்னதமான சிற்பியுமான மதிப்பிற்குரிய ஐய. சந்ரு அவர்களை அப்போதெல்லாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த நாட்களில் பெரும்பாலும் நான் சைதாப்பேட்டையில் கண்விழித்து சூரியன் பார்ப்பது பெரம்பூரில்தான். அகலமான மற்றும் குறுகலான அந்த வீதிகளின் வழியே ஆழமான மற்றும் உண்மையான ஆயிரமாயிரம் விஷயங்களைப் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். அப்படிப்பட்ட சந்திப்பில் ஒருநாள் சட்டென்று கேட்டார் “ஜீஸஸ் ஏன் ஊருக்குள் இருக்கும் மதகுருமார்கள் எல்லோரையும் விட்டுவிட்டு காட்டுக்குள் இருக்கும் யோவானைத் தேடிப்போனார்” என்று. என்னுடைய எண்ண ஓட்டங்களைக் கண்களால் கண்டுபிடித்தவர் தொடர்ந்தார். “ ஒருவன் குருவைக் கண்டுபிடிப்பது முக்கியமானது, அந்தக் குரு எங்கிருக்கிறார் என்பது அவ்வளவு முக்கியமில்லாதது “ என்று சொல்லிவிட்டு எதுவும் பேசாமல் தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அன்றைய பொழுதிற்கு அது போதுமானதாக இருந்தது எனக்கு. பெற்றுக்கொண்டதை இறுகப்பற்றியபடி பெரம்பூரிலிருந்து நான் தங்கியிருந்த சைதாப்பேட்டைக்கு வந்து சேர்ந்தேன். வீடுவந்ததும் விட்டுவிடவில்லை அவரை, தொடர்ந்து தேடத்தொடங்கினேன்.

உரையாடியவர்கள் எல்லோருக்கும் தெரியும். அவருடைய பேச்சு விந்தைகள் நிறைந்தது.  அவருடைய கரம்பற்றுதலில் அவ்வளவு வாஞ்சை நிறைந்திருக்கும். அந்தச்சிரிப்பில் குழந்தையும் தெய்வமும் சரிபாதி கலந்த போட்டி நிறைந்திருக்கும். நம்புங்கள் மிகைப்படுத்தவில்லை நான். தந்தையை மிகைப்படுத்த வேண்டிய அவசியம் மகனுக்கிருக்கிறதா என்ன? இன்று என்னிதயத்தில் இருந்து வழிந்துகொண்டிருக்கும் இலக்கியத்திற்கு, அவருக்கும் முக்கியமான பங்கிருக்கிறது. அப்படியாக அப்போது அவருடைய பெரும்பாலான நேர்காணல்களைத் தொகுத்துக் கொண்டிருந்தேன். 2008 ஆம் ஆண்டு இனிய உதயம் இதழில் வெளிவந்த நேர்காணலொன்றில் நான் ஆழமாக அடிக்கோடிட்ட இந்த வரிகளை இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த நிலத்தின் மகா கலைஞன் ஒருவனின் நீண்ட நெடிய தேடல்களிலிருந்தும், கலைக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், மானுடத்திரளின் மீது மழையாய்ப் பொழிந்து கொண்டிருந்த பேரன்பின் ஊற்றுக்களிலிருந்தும் வெளிப்பட்ட வார்த்தைகள் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லப்போவதில்லை நான். 

குறுநில மன்னனாக வீரம் மட்டும் போதும்.

ஆனால் ஒரு சக்கரவர்த்தியாக

மதவாதியின் சாதுர்யம், கோமாளியின் ஈர்ப்பு,

மந்திரியின் வியூகம், தளபதியின் தலைமைப் பண்பு,

கலைஞனின் கருணை, எதிரியின் பலம்,

சுயபலவீனம் அறிதல்,

ஒரு பெண்ணின் தீர்க்கதரிசனம் என

எல்லாவற்றையும் கைப்பற்ற வேண்டும்.”

                                                                                    – ஓவியர். சந்ரு

Related Articles

3 comments

பெரணமல்லூர் சேகரன் 27/08/2023 - 5:10 PM

வித்தியாசமான பதிவிட்டுள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

நூல் வாசிப்போர் பலரின் வழக்கம் அடிக்கோடிடுதல். எனக்கும் அப்படியே.
அத்தகைய அடிக்கோடிடுதல் மூலமே அந்நூல் விமர்சனம் எழுதுவது எனது வழக்கம்.

கவிஞர் ஜோசப் ராஜா ஓவியர் சந்ருவின் நேர்காணலில் அடிக்கோடிட்டவற்றில்
சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.

யாவர்க்குமே, குறிப்பாக வாசிப்பாளர்ளுக்கு அடிக்கோடிடலும் அதன்மூலம் பின்னாட்களில் அசைபோடுதலும் காலத்தின் அவசியம்.

Reply
wwd.com 31/10/2023 - 7:35 AM

naturally like your website but you need to test the spelling
on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to inform
the reality however I will definitely come again again.

Reply
ஜோசப் ராஜா 31/10/2023 - 10:01 AM

நன்றி. பிழை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

Reply

Leave a Comment