அடிக்கோடிட்ட வரிகளும் அழியாத புத்தகங்களும் – 3

செயற்கை நுண்ணறிவு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், இலக்கியம் எதற்காக மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்வியை எல்லோரும் கேட்டுக் கொள்ளலாம். இலக்கியம் மனித வாழ்க்கையைப் பேசுவதால், இலக்கியம் சமூக வாழ்க்கையைப் பேசுவதால், இலக்கியம் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் இடையிலான உறவைப் பேசுவதால் இன்றைக்கல்ல, என்றைக்குமே இலக்கியம் மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறத்தான் செய்யும்.

தன்னுடைய அனுபங்களையும், கனவுகளையும் சிந்தித்துச் சேகரித்து வெளிப்படுத்தி நிறைத்து வைத்திருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுதான் நாளை செயற்கை நுண்ணறிவு வேலைசெய்யப் போகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எல்லா வகையான நுண்ணறிவுக்குமான பேரறிவை விதைத்துப் போயிருக்கிறார்கள் மூத்தோர்கள். அந்த மூத்தோர்களில் பேரழகியான ஒருத்தியைப் பற்றித்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

சங்ககாலம் தொடங்கி காப்பியங்கள், நீதிநூல்கள் எழுதப்பட்ட காலம் வரையிலும் அவள் பெயர் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. கபிலரும், கணியண் பூங்குன்றனாரும், கல்லாடனாரும் பாடிக் கொண்டிருந்த காலத்தில் அவளும் பாடிக் கொண்டிருந்தாள். பேரரசுகள் நிலைபெற்று பெருங்காப்பியங்கள் தோன்றிக்கொண்டிருந்த காலத்தில், கம்பனோடும், புகழேந்தியோடும், ஒட்டக்கூத்தரோடும், செயங்கொண்டாரோடும் அவளும் பாடிக் கொண்டிருந்தாள். ஒன்று ஒளவை என்ற அற்புதமான அந்தப் பெயரை அந்தக் காலத்தில் பாடிய எல்லாப் பெண்களும் பயன்படுத்தியிருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் பிற்பாடு தொகுத்தவர்கள் ஒளவை என்ற அந்தப் பெயரைப் பெருந்தன்மையாக எல்லோருக்கும் சூடியிருக்க வேண்டும். எது எப்படியோ நமக்கு அவளும், அவளுடைய அழியாக் கவிதைகளும் கிடைத்தது பெரும் பாக்கியம்தான்.

மகத்தான ஓவியர் சந்ரு அவர்கள்தான், சித்திரமும் கைப்பழக்கம் என்ற வார்த்தைகளின் மூலமாக ஒளவையை எனக்கு முதன்முதலில் அறிமுகம் செய்தார். ஓளவையைப் பற்றிப் பேசும்போது அவர் முகத்தில் குடிகொண்டிருந்த பரவசத்தையும், அவர் வார்த்தைகளில் நிறைந்திருந்த பேரன்பையும் இப்போது நினைத்துப் பார்த்தாலும் இனிக்கத்தான் செய்கிறது. தொடர்ந்து ஒளவையின் கவிதைகளில் மூழ்கித் திளைத்தேன். அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஒளவை எனக்குள் குடிகொண்டிருக்கிறாள். ஓளவை என்னைக் கரம்பிடித்து அழைத்துச் செல்கிறாள். அவள் காலத்தில் வாழ்ந்த அரசவைக் கவிஞர்கள் போலல்லாமல், இந்தப் பெருநிலம் முழுக்க நடந்து திரிந்தவள் ஒளவை. பெரும்பாலான கவிஞர்கள் பொன்னிற்கும், புகழுக்கும், பதவிக்கும் பாடிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், உப்புக்கும், புளிக்கும், ஏன் கூழுக்கும் பாடுகிறாள் ஒளவை. எளிய மனிதர்களோடு உறவாடுகிறாள், உழைக்கும் மக்களோடு நெருங்கிப் போகிறாள். அவர்களின் வாழ்க்கையைத் தன்னுடைய கவிதைக் கண்களால் தரிசிக்கிறாள். அவ்வளவுதான் ஒளவையின் இதயத்திலிருந்து கவிதைகள் ஆறாய்ப் பாய்ந்தோடி வருகின்றன.

அந்தக் காலத்தில் அரசவைக் கவிஞர்களின் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்பதை, இந்தக் காலத்தில் இருக்கும் கவிஞர்களோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம் நீங்கள். அப்படி அரசவைக் கவிஞராக இருப்பதாலேயே அரசவையில் புகழப்பட்டுக் கொண்டிருக்கும் கவிஞரையும், கவிதையும் எள்ளி நகையாடுகிறாள் ஒளவை, பாருங்களேன் அந்தப் பாட்டை

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்

விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்

பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை

நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

என்ற ஒளவையின் சூடான விமர்சனம் சோழனின் அவையைச் சுட்டுப் பொசுக்கிறது. சோழன் புலமை நுணுக்கத்தையே பார்ப்பதாகச் சொல்லியும் விடவில்லை ஒளவை, சோழனைப் பார்த்துக் கேட்கிறாள். தூக்கணாங் குருவிக் கூட்டைப் பார்த்திருப்பாய், அதனைப்போல யாராவது கூடுகட்ட முடியுமா? குளவிகளைப் போல யாராவது கூடுகட்ட முடியுமா? கரையானின் புற்று எவ்வளவு அழகுடனும் நுட்பமுடனும் அமைந்திருக்கிறது பார்த்தாயா! தேனீக்கள் கட்டும் கூடுகளில் நிறைந்திருக்கும் நுட்பங்களைக் கவனித்திருக்கிறாயா! சிலந்தியின் வலையைப் போல யாராவது வலைபின்ன முடியுமா! ஆக, ஒரு துறையில் சிறந்தவரை எல்லாம் அறிந்தவராகக் கொண்டாடுவது நல்லதல்ல. அவரும்கூட தான் என்ற அகந்தையை விட்டொழிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் பிறரால் செய்ய முடியாத ஒன்றை எளிதாகச் செய்ய முடியும் என்கிறாள் ஒளவை. அதன் உச்சத்தில்தான் சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்று பயிற்சியின், முயற்சியின் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறாள் ஒளவை.

ஒளவையிடம் நான் வியந்துபார்த்த பாடல் ஒன்றிருக்கிறது. அரசவையில் ஒருநாள் அழகு என்றால் எது என்ற கேள்வி கேட்கப்படுகிறது.

சுரதந் தனில்இளைத்த தோகை – சுகிர்த

விரதந் தனில்இளைத்த மேனி – நிரதம்

கொடுந்திளைத்த தாதா – கொடுஞ்சமரிற் பட்ட

வடுத்துளைத்த கலபிரா மம்

என்று பாடுகிறாள். அதாவது, நாயகனோடு கூடிக்கலந்து களைப்புற்றுப் படுத்திருக்கும் நாயகியின் முகம் அழகானதாம். பயபக்தியோடு வேண்டிக் கொண்டு, கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தரின் இளைத்த உடல் அழகானதாம். வறியவர்களுக்கு கொடுத்துக் கொடுத்து தன் செல்வத்தை இழந்தவனும் அழகானவனாம். கடுமையான போரில் காயம்பட்ட வீரனின் உடலும் அழகானதாம்.

அப்படிப்பட்ட ஒளவை ஒருநாள் தெருவழியே நடந்துசென்று கொண்டிருக்கிறாள். ஒரு வீட்டுச் சுவரில் வெண்பாவின் முதல் ஏழுசீர்கள் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது, பாடல் முடிவடையாமல் இருக்கிறதே என்று வீட்டிற்குள் செல்கிறாள். அங்கே ஒருத்தி சோகமாக அழுது கொண்டிருக்கிறாள். விசாரிக்கிறாள் ஒளவை. சிலம்பி என் பெயர், தாசித்தொழில் செய்கிறேன். ஆனாலும் என்ன! கவிதையை நேசிக்கிறேன் நான். அதனால் புலமையில் புகழ்பெற்றிருக்கும் கம்பரைச் சந்தித்து நான் சேர்த்து வைத்திருந்த ஐநூறு பொன்களைக் காணிக்கையாகச் செலுத்தி என்மீது ஒருபாடல் இயற்றித்தரக் கேட்டேன். அவரோ ஆயிரம் பொன்னிற்கு பாடல் இயற்றுகிறவராமே, ஐநூறு பொன்னிற்கு இரண்டடி மட்டும் கொடுத்தனுப்பி விட்டார் என்றாள் சோகமாக. எளியவளின் கண்ணீர் கண்டு விடுவாளா ஒளவை

தண்ணீருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே

மண்ணா வதுஞ்சோழ மண்டலமே – பெண்ணாவாள்

அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு

என்று சிலம்பியையும் அவள் பொற்பாதங்களில் அணிந்திருக்கும் சிலம்பையும் போற்றிப் பாடிவிட்டுப் போகிறாள் பரந்த இதயம்கொண்ட ஒளவை.

இப்படியாக மானுட உணர்வுகளின் எல்லாப் பக்கங்களின் வழியாகவும் பாய்ந்தோடிய ஒளவை நம்மை ஆச்சரியப்படவைப்பதில் வியப்பொன்றும் இல்லை என்றே எண்ணுகிறேன். உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிக்கும் என்றன் உளம் என்று பாடிய ஒளவையின் அற்புதமான வார்த்தைகளுக்கு அழிவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். பெருங்கடலில் இருந்து இப்போது உங்களுக்கு நான் பருகக் கொடுத்தது ஒருதுளிதான். வேண்டுமென்றால் அள்ளிப் பருகுங்கள். ஒளவை நமக்கானவள். நமக்காகப் பாடியவள்.

 

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

பெரணமல்லூர் சேகரன் 06/02/2024 - 2:21 PM

‘அடிக்கோடிட்ட வரிகளும் அழியாத புத்தகங்களும்’ எனும் தலைப்பில் கவிஞர் ஜோசப் ராஜாவின் இலக்கிய அலசல் சுவாரஸ்யமானவை.

அதைப் படித்தால் மட்டுமே அதன் இன்பத்தை அனுபவிக்க முடியும். வாசியுங்கள். நீங்களும் இலக்கிய இன்பம் காணலாம்.

Reply

Leave a Comment