திருமணமாகி மூன்று மாதங்களில் வாழ்க்கை கசந்துவிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை ஜெயா. ஆனால் நாம் நினைப்பதா இங்கு நடந்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் போலத்தான் அளவற்ற ஆசைகளோடும், கணக்கற்ற கனவுகளோடும் இந்த வாழ்க்கைக்குள் வலதுகாலை எடுத்துவைத்தாள் அவளும். அவளின் ஆசைகள் நிராசைகளாயின. அவளின் கனவுகள் சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டன. கல்லூரிக் காலத்தில் எறும்பைப் போல் மொய்த்துக் கொண்டிருந்த எத்தனையோ பேரில் எவனையாவது ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்பது போன்ற எண்ணங்கள் வராமலில்லை அவளுக்கு. அது கிடக்கட்டும், அவளுடைய சொந்த அத்தை மகன், அவன்மீது ஆசையை அவ்வளவு வளர்த்திருந்தாள். அப்பாவிற்கும், அத்தைக்கும் இடையில் எழுந்த சொத்துத் தகாறாரில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது அவளின் ஆசைகள்.
அதற்குப்பிறகு வரிசையாகப் பெண்பார்க்க வந்தவர்களில் ஐந்தாவதாக வந்தவன்தான் கார்த்திக். சென்னையில் வேலைசெய்கிறான் என்றதும் ஏதோ ஒரு உள்ளணர்வில் சரியென்று சொல்லிவிட்டாள். கல்யாணம் முடிந்த ஒருவாரத்தில், திருமண வாழ்க்கையைத் தொடங்குவதற்காக வாங்கி வைத்திருந்த புதுவீட்டில் புதுவாழ்க்கை. ஒருமாதத்தில் ஏற்கனவே பதிவுசெய்திருந்து வைத்திருந்த காரும் வந்தாச்சு. மளிகைப்பொருட்களும், காய்கறிகளும், ஆடு, கோழி போன்ற இறைச்சி வகைகளும் ஆன்லைனில் பதிவுசெய்தால் வீட்டிற்கு வந்துவிடும். அவ்வப்போது உணவும்கூட ஆன்லைனில் வாங்குவதுண்டு. எதற்கும் வெளியில் போகவேண்டாம் என்பது எல்லோரையும் போல முதலில் அவளுக்கும் வசதியாகவும், பெருமையாகவும்தான் தோன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகத்தோடு மொத்தமாக துண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்பது நெருப்பைப்போல சுடத்தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்து, பெரியமனது வைத்து கார்த்திக் எங்காவது வெளியில் கூட்டிச்சென்றால், சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம் கொஞ்சம். இல்லையென்றால் பால்கனியை எட்டிப்பார்க்கும் கொஞ்சம் காற்றைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
இப்படியாகக் காலையிலிருந்து அவளுடைய மூளைக்குள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். யாரிடமும் பகிர்ந்துகொள்ளத் தோன்றவில்லை அவளுக்கு. கார்த்திக் அலுவலகம் புறப்பட்டு மூன்றுமணி நேரங்களுக்கு மேலாகியும் இன்னும் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறாள். உண்மையைச் சொன்னால் பசிக்கவேயில்லை. ஆனால், எவ்வளவு குடித்தும் தாகம் மட்டும் அடங்காமல் இருக்கிறது. துயரத்தை விழுங்குகிறவள்போல வேகமாகத் தண்ணீர் குடித்துவிட்டு, சிறிதுநேரம் அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தாள். சுவரில் மாட்டப்பட்டிருக்கும் திருமண புகைப்படத்தை வேண்டா வெறுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதுதானா திருமண வாழ்க்கை என்பது? இவ்வளவுதானா திருமண வாழ்க்கை என்பது என்ற கேள்விகள் இதயத்தின் ஆழத்திலிருந்து தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
அம்மாவிடம் சொல்லலாமா என்ற யோசனையில் போனை எடுத்தவள், அனுசரிச்சுப் போம்மா, விட்டுக் குடுத்துதான் நடந்துக்கனும், சம்பாதிக்கிற மனுசன் அப்டி இப்டிதான் இருப்பான், உழைச்சிக் குடுக்கிறானா? வீட்டப் பாத்துக்கிறானா? சகிச்சிட்டுப் போகவேண்டியதுதான் என்ற பதில்கள் ஏற்கனவே தெரிந்ததால் போனை வைத்துவிட்டு, பால்கனியில் முகத்தைக் கழுவினாள் நீண்டநேரமாக. மூளைக்குள் இருக்கும் மொத்த குழப்பத்தையும் முகத்தின் வழியே கழுவுவது போலிருந்தது அவளின் செய்கை. முகத்தை துடைத்துவிட்டு ஒருகணம் மூச்சை இழுத்து விட்டாள். போனை எடுத்து கார்த்திக்கை அழைத்தாள். ”நான் ஃபீரியாகிட்டு கூப்ட்ரேன்” என்றான் அவசரமாக. ”நாம பிரிஞ்சிரலாம் கார்த்திக்” என்று சொன்னாள் ஜெயா. அமைதியாக இருந்தான் கார்த்திக். ”நீ ஃபீரியாகிட்டே கூப்டு” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள். சமயலறைக்குச் சென்று தேநீர் போட்டு எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள். பறவைகள் அவள் கண்களில் பறந்து கொண்டிருந்தன. சூரியன் அவள் முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சிறிதுநேரத்தில் வேர்க்க விறுவிறுக்க வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்திக், படுக்கையில் வெறுமனே படுத்திருப்பவளைப் பிடித்து உலுக்கித் தூக்கி உட்கார வைத்தான். ”ஒனக்கு என்ன ஆச்சு? என்ன கொற வச்சேன்? நீ வரும்போதே புதுவீடு வாங்கி வச்சிருந்தேனே! ஒனக்காகத்தான கார் வாங்குனேன். நைட்டும் பகலும் பாக்காம இவ்ளோ ஹார்ட் ஒர்க் பண்றது எல்லாம் யாருக்காக, ஒனக்காகத்தான. ஒனக்கு எப்டி அந்த யோசனை வந்தது? ஒடம்பு எதும் சரியில்லையா? ஹாஸ்பிட்டலுக்கு போகலாமா? என்ன பிரச்சனை எங்கிட்ட சொல்லு” என்று மூச்சுவிடாமல் பேசிமுடித்தவனை, ஏளனமாக ஒருபார்வை பார்த்துவிட்டு, ”இந்த மூணு மாசத்துல இந்த மாதிரி ஒரு மூணு நிமிசம் எங்கிட்ட பேசலையே நீ” என்று கேட்டதும் அமைதியானான் கார்த்திக்.
”மூணு மாசமா பாத்துட்டு இருக்கேன். சாப்பிடுற, தூங்குற, எப்பவாது கட்டிப்பிடிக்கிற. எப்பவாது முத்தம் குடுக்கிற. வேலைக்குப் போற, சம்பாதிக்கிற, வீட்டுக்கு வர்ற, எப்பவாச்சும் வெளில கூட்டிட்டு போற, நீ காட்டுறதப் பாக்கச்சொல்ற. என்னிக்காச்சும், எப்பவாச்சும் சாப்பிட்டியாமான்னு ஒருவார்த்த கேட்டியா? அதவிடு இந்த மூணுமாசத்துல ஒருதடவயாச்சும் எங்கிட்ட ஒருமுத்தம் கேட்டியா? என்ற ஜெயாவின் கேள்விகள் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக குலைத்துக் கொண்டிருக்கின்றன. ”எனக்கே எனக்குன்னு நாலு வார்த்த பேசமாட்டேங்கிற, ஓன் வீடயும், காரையும், பணத்தையும் வச்சிக்கிட்டு நான் என்ன செய்ய?” கார்த்திக் எதோ சொல்லவர, இடைமறித்தவள், ”சொல்லு மாசத்துல எனக்கு மென்சஸ் ஆகுற வாரம் எது சொல்லு. மூணு மாசம்தான் ஆகுது, இதுதான் வாழ்க்கன்னா இப்பவே முடிச்சிக்கலாம், அதான் சரியா இருக்கும்.” என்று சொல்லிவிட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறியழுதாள். கண்ணீரோடு ஓடிச்சென்று அவளை அள்ளியெடுத்து அணைத்துக் கொண்டான். ”ஜெயா, ஜெயா, ஜெயாம்மா” என்று உருகினான். ”நான் பாத்துக்கிறேன் அழாத” என்று கெஞ்சினான். மீண்டும் வேறுவிதமாக அழத் தொடங்கினாள். வார்த்தைகளுக்காகத்தான், இதுபோன்ற அன்புநிறைந்த வார்த்தைகளுக்காகத்தான் மூன்று மாதங்களாகக் காத்துக்கிடந்தாள் ஜெயா.
ஜோசப் ராஜா
1 comment
வணக்கம் தோழர். கவிதைகளை வாசித்திருக்கிறேன். இப்பொழுதுதான் முதலில் கதை வாசிப்பதாக உணர்கிறேன். கதையின் கரு ’அன்பிரக்கமாக’ ஒரு பெண்ணின் குரலாகவும் செயலாகவும் மனப்போராட்டமாகவும் வெளிப்படுகிறது. எப்படி சொல்வதென்று தெரியவில்லை. ”பலமாதிரியான கதைகளை வாசிப்பவன் என்ற வகையில் இன்னும் இன்னும் இக்கதையில் ஏதேதோ இடம்பெறலாம் என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது” அது எதுவாக இருக்கலாம் என்று விவரிக்க வழியில்லை. கதை இலக்கியம் இலக்கிய வகைமையின் உச்சம் என்றே நான் நம்புவேன். ஒரு கதையை எப்படி எழுதலாம்? இப்படி எழுதலாமா? இல்லை இல்லை.. இல்லவே இல்லை… என்ற பெரிய மனப்போராட்டத்திற்கு இடையில் நான் என் கதை எழுதும் எண்ணத்திற்குள் இன்னமும் ஈடுகொடுக்கவே இல்லை. அத்தனை அழகியலான கதையாடல்கள் இதுவரையில் பலவாறு எழுதப்பட்டதை படித்த உணர்வு எனக்குள் இருக்கமாக இருப்பதே அதற்கும் காரணம். அந்த வகையில் ஒர் பெண்ணின் உணர்வலைகளை அதிலும் குறிப்பாக திருமண வாழ்வுக்குப் பிறகு அவர்களுக்குள் எழும் அத்தனை பெரிய மாறுதலான சூழலில் நின்று சிந்திக்க முடியுமா? என்ற கேள்வி ஒரு ஆணாக எனக்குள் பலமுறை எழுந்திருக்கிறது. அகமும் புறமுமாக குடும்பம் என்னும் சமூக அமைப்புக்காக அவர்களுக்கு நிகழ்த்தப்பெறும் அல்லது அதுவாக நிகழ்ந்தேறும் அந்த மாறுதல் அவசியம் தானா? என்ற கேள்வியுடனே அவர்களின் உணர்வலைகளை அணுகலாமா? அல்லது அவசியம்தான் அதற்கு ஆணாக அல்லது கணவனான (நல்ல நண்பனாக) என்ற நிலையில் இருந்து எத்தனை அன்பாகவும், சுதந்திரமாகவும் பெண்ணியச் சிந்தனைமிக்க இயல்பான மனிதனாகவும் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயலுமே நம்மை ஆண் என்ற மையத்திற்கே கூட்டி வந்துவிடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். ”கி.நாகராஜன்’ கதைகளில் சுட்டிக்காட்டுவதைப் போல எப்பொழுதும் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் இருக்கப் பழகிய பக்குவப்பட்ட இச்சூழலுக்குள் இப்படித்தான் இருந்துவிட முடியுமே அன்றி? வேறென்ன செய்துவிட முடியும்? என்ற கேள்வி மட்டுமே இந்த கதையிலும் மீதமிருப்பதாகத் தெரிகிறது. உணர்வாக உயிர்களையும் உடனிருப்பவர்களையும் புரிந்துணரப் பழகாதச் சூழலுக்குள் நிச்சயம் மனைவியே ஆனாலும், காதலியே என்றாலும் பெண்ணாக இயல்பாக அவர்கள் உணரும் அந்த ஆசைகளை அன்பை எதிர்ப்பார்ப்பை ஒரு பாதிக்கு மேல் எப்படியும் ஆண்களால் அடைந்துவிட முடியவில்லை என்பது கூட உண்மையாக இருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒருபுறம் பார்த்தால் காலம் காலமாக காதலுடனான திருமண வாழ்வில் விட்டுத்தந்தவர்களாக இன்னும் பெண்கள் இருப்பார்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. நம்மால் விட்டுதரப்பட்ட அத்தனையும் அவர்களுக்கு போதுமானது என்றில்லாத போது – அப்படித்தானே தோழர். இது என் எண்ண ஓட்டம். இக்கதைக்கான கருத்துரையோ விமர்சனமோ அல்ல. அவர்களாக எழுத எழுத – அவர்களாக அவர்களின் அன்பையும் வலியையும் வெளிப்படுத்த வெளிப்படுத்த – அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் பெண்சார் உணர்வுகள் முழுமையாக இங்கு பதிவு செய்யப்படலாம். புரிந்துகொள்ள வழிவகைகள் ஏற்படலாம் போல… நன்றியும் மகிழ்ச்சியும் தோழர்.