இரவெல்லாம் சாரல்மழை பெய்துகொண்டே இருந்தது. அறையை நிறைத்திருந்த மெல்லிய குளிரில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நல்லதூக்கம் கிடைக்கப்பெற்றதில் காலையில் உற்சாகமாக எழுந்து வந்தார் கேசவமூர்த்தி. கதவைத்திறந்து வெளியே வந்ததும் காற்று அவரை முழுவதுமாக தழுவிக்கொண்டதில் எங்கிருந்தோ மெல்லிய புன்னகை உதட்டில் உதித்து ஒளிசிந்திக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த மாமரத்தில் கிளிகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தன. மழைக்காலத்தின் விடியலில் மனதை உற்சாகம் கொள்ளச்செய்யும் மாயமொன்று நிச்சயமாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்பக்கூடியவர் கேசவமூர்த்தி. அந்த நம்பிக்கையை இந்த விடியலும் கூட அதிகரிக்கச் செய்திருக்கிறது.
மகிழ்ச்சியான மனநிலையோடு வீட்டிற்குள் சென்றவர் காலைக்கடன்களை முடித்துவிட்டு, நடைப்பயிற்சிக்கு செல்லும் ஆயத்தத்தோடு தயாராகி, படுக்கையறையின் மெல்லிய வெளிச்சத்திலும் ஒளிசிந்தியபடி தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை “சுப்பு” என்று மெதுவாக அழைத்தார். “ம் போய்ட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு குழந்தையைப் போலத் திரும்பிப் படுத்துக்கொண்டாள் சுப்பு என்ற சுப்புலட்சுமி. அவருக்கு நன்றாகத் தெரியும், அந்த முகத்தைப் பார்க்கத் தொடங்கினால் நேரகாலம் போவதே தெரியாது, பார்த்துக் கொண்டே இருக்கலாம். பார்க்கச் சலிக்காத முகம் சுப்புவுடையது என்பதை நாற்பது வருடங்களாக உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறார். காதலித்து, திருமணம் செய்து, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, அவர்களுக்கும் திருமணம் செய்துகொடுத்து, பேரன், பேத்திகளையும் பார்த்தபிறகும் இன்னும் சலிக்காமல் இருக்கிறது சுப்புவின் முகம்.
கதவைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார் மாமரத்தில் கிளிகள் இல்லை, ஆனாலும் அவைகளின் சத்தம் கேட்டது அவருக்கு, அந்தச்சத்தம் சுப்புவின் குரல்போல இருந்ததில் இன்னும் கூட இனிமையாக இருந்தது. வழக்கமான பாதைதான் என்றாலும் ஈரமாக இருந்ததால் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்துவைத்து நடக்க வேண்டியிருந்தது. “குட்மார்னிங் ஹெட்மாஸ்டர்” என்ற குரல்கேட்டு நிமிர்ந்து பார்த்தார். நடைப்பயிற்சி நண்பர் கோபால் பத்தடிதூரம் கடந்து நடந்து கொண்டிருந்தார். “கொஞ்சநேரத்துல திருப்பதி கெளம்புறோம், அதான் சீக்கிரமா வந்துட்டேன். நாளைக்குப் பாக்கலாம்” என்று சொல்லிவிட்டு திருப்பத்தில் திரும்பி மறைந்தார். “சரிசரி மெதுவாப் போங்க” என்று சொன்னது நிச்சயமாக அவருக்குக் கேட்டிருக்காது. பக்கத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்ததும் உச்சுக்கொட்டியபடி யாரென்று படித்துப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினார்.
தேநீர்க்கடைக்குப் பக்கத்தில் செல்லும்போதே “குட்மார்னிங் ஸார்” என்ற குரல்கள் அவரை வரவேற்றன. சிலருக்குப் புன்னகையைக் கொடுத்துவிட்டு, சிலருக்கு குட்மார்னிங்கை சொல்லிவிட்டு அதற்குள் அவருக்காகப் போட்டுவைக்கப்பட்டிருந்த தேநீரை எடுத்துக் கொண்டார். பெஞ்சில் உட்கார்ந்திருந்த இருவர் எழுந்துகொண்டு அவருக்கு உட்கார இடம் கொடுத்தார்கள். அவரும் உட்கார்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டே தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். அவர் தலைமை ஆசிரியராக வேலைசெய்யும் அரசுப்பள்ளியில், அங்கிருப்பவர்களில் அந்த தேநீர்க்கடைக்காரரின் குழந்தைகள் மட்டும்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எல்லோரும் தலைமை ஆசிரியருக்குரிய மரியாதையை அவருக்குக் கொடுத்தனர், மரியாதையைப் பெற்றுக்கொள்வதில் யாருக்காவது கசக்குமா என்ன? தேநீரின் சுவையைப்போன்று மரியாதையும் அவருக்கு சுவையாகவே இருந்தது. தேநீர் டம்ளரில் இருந்த கடைசிசொட்டை அண்ணாந்து ஊற்றும்போதுதான் எதிரில் ஒட்டப்பட்டிருக்கும் அந்தக் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை திரும்பவும் பார்த்தார். டீக்கடைக்காரரிடம் பத்துரூபாயைக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடக்கத் தொடங்கினார்.
வழக்கம்போலவே வீட்டிற்கு முன்னால் அழகாகக் கோலம் போட்டிருந்தாள் சுப்பு. அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். ஆவிபறக்க காபி கொண்டுவந்து கொடுத்துவிட்டு, வாடிப்போயிருக்கும் கணவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டே எதிரில் உட்கார்ந்து காபிகுடிக்கத் தொடங்குகிறாள். அவரது முகம் கலக்கமாக இருப்பது அவளது இதயத்தையும் கலங்கச்செய்கிறது. பக்கத்தில் சென்று தோளைத் தொடுகிறாள். அவரிடம் எந்த அசைவுமில்லை. அவளுக்கும் அவரை இப்பிடிப் பார்த்து அனுபவுமுமில்லை. குனிந்திருக்கும் தலையை ஒருகையால் தூக்குகிறாள். கலங்கியிருக்கும் கண்களைப் பார்த்து துடிதுடித்துப் போகிறாள். “என்னாச்சுங்க, ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு, ஒடம்பெதும் சரியில்லையா, பாப்பாக்கு போன்பண்ணி வண்டியெடுத்துட்டு வரச்சொல்லட்டா? ஹாஸ்பிட்டலுக்கு போய்ட்டு வந்திரலாம்” என்றவளை இழுத்துப் பக்கத்தில் உட்கார வைக்கிறார். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. துக்கத்தை அவளாலும் தாங்க முடியவில்லை.
மெல்லப் பேச ஆரம்பித்தார். “வாக்கிங் போகும்போது பாத்தேன், போஸ்டர் ஒட்டிருந்தாங்க. ஜெகன்னாதன் ஸார் இறந்துட்டாரு போல” என்றார். யாரு என்பது போல பார்க்கிறாள் சுப்பு. “நான் டீச்சரா ஸ்கூல்ல சேரும்போது அவருதான் ஹெட்மாஸ்டர்” என்றார். ஓ அவ்வளவுதான என்பதுபோல பெருமூச்சு விடுகிறாள் சுப்பு. அவர் முடிக்கவில்லை, தொடர்கிறார். “சுப்பு, நமக்கு கல்யாணமான புதுசில ஒனக்கு ஹார்ட் பிரச்சனை வந்துச்சுல்ல” ஆமா என்பது போல தலையசைக்கிறாள். “ஆபரேசன் பண்ணுனாதான் பொழப்பேன்னு சொல்லிட்டாங்க, ஹாஸ்பிட்டல்ல ஒண்ண சேத்துட்டு பணத்துக்கு அலைஞ்ச அலைச்சல் இருக்கே, அவருகிட்ட நான் கேக்கல, ஆனா பணத்துக்காக அலைஞ்சிட்டு இருக்கேன்னு தெரிஞ்சதும் அவராக் கூப்பிட்டு ஐம்பாதியிரம் ரூபா குடுத்தாரு. பெரிய உதவி, பெரிய மனுசன்” ஓ என்று கனிவான குரலில் சொல்லிவிட்டு, “போகனும்னா சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு எழப்போகிறவளை இழுத்து உட்கார வைக்கிறார். என்ன என்பதுபோல பார்க்கிறாள்.
“அந்தப் பணத்த அவருக்குத் திருப்பிக் குடுக்கல சுப்பு” என்று சொல்லிவிட்டு கதறியழுகிறார். “ஏன் குடுக்கல” என்கிறாள் மெல்லிய குரலில். “அவரு கேக்கல, பணமாச்சே அல்பப்புத்தில நானும் குடுக்காமயே விட்டுட்டேன். இப்பக் கஷ்டமா இருக்கு” என்று சொல்லும் அவரின் கையை உதவிட்டு எழுகிறாள். அறைக்குள் சென்று பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அவரின் முன்னால் வைத்துவிட்டு, அவரை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு வேகமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள். அந்தப் பார்வை இதயத்தின் ஆழம்வரையிலும் வலியை ஏற்படுத்துகிறது அவருக்கு.
சுமக்க முடியாத பாரத்தைச் சுமப்பவரைப்போல ஜெகன்னாதன் உடல் கிடத்தப்பட்டிருக்கும் வீட்டிற்குள் நுழைகிறார் கேசவமூர்த்தி. சுப்புதான் அவருக்கு உலகமென்றால் அந்த சுப்புவின் உயிரைக் காப்பாற்றக் காரணமாயிருந்த ஆசிரியர் ஜெகன்னாதன் கண்ணாடிப் பேழைக்குள் கிடத்தப்பட்டிருக்கிறார். யார் இருக்கிறார்கள், யார் அழுகிறார்கள் என எதையும் கவனிக்கவில்லை. நேராகச் சென்று கண்ணாடிப் பேழையைத் திறந்தார், அவர் குலுங்கி குலுங்கி அழுவதைப் பார்த்து யாரும் அவரை நிறுத்தவில்லை. கொண்டுவந்திருந்த பணத்தை மனைவிக்கு உயிர்கொடுத்த, உயிரற்ற ஜெகன்னாதனின் கைகளில் வைத்தார். கண்ணாடிப்பேழையை அடைத்துவிட்டு அழுதார், சொல்லி அழுதார், சொல்லிச்சொல்லி அழுதார், அவர் அழஅழ கூடியிருக்கும் எல்லோரும் சேர்ந்தழுதார்கள். சிறிதுநேரம் கழித்து பாரம் இறங்கிய இதயத்தோடு கண்களைத் துடைத்தபடி வெளியே வந்தார். கூடியிருந்தவர்கள் அவரின் கரம்பற்றி துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
பறவைகள் கூட்டமாகவும் தனியாகவும் வானத்தில் பறந்து கொண்டிருந்தன. வீட்டிலிருக்கும் சுப்புவை நினைத்துக்கொண்டே வேகமாக நடந்து கொண்டிருந்தார் கேசவமூர்த்தி. அவர் பக்கத்தில் ஒருபறவை வேகமாகப் பறந்து சென்றது. அவருக்கும் கூட பறப்பதுபோன்ற உணர்வுதான் இருந்தது. இத்தனை வருட அனுபவத்தில் பறக்கக் கற்றுக்கொள்ள இவ்வளவுகாலம் ஆகிவிட்டதே என்றும், இப்போதாவது கற்றுக்கொண்டோமே என்றும் மாறிமாறி நினைத்தபடி நிம்மதியாக நடந்து கொண்டிருந்தார் கேசவமூர்த்தி.
ஜோசப் ராஜா
1 comment
‘பறக்கக் கற்றுக் கொள்ளுதல்’ என்னும் சிறுகதையை வடித்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
இக்கதையைப் படிக்கும் எவர்க்கும் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவங்கள் வந்து போகும்.
ஆனால் அத்தகைய
அனுபவங்களை மனதுக்குள் பூட்டி வைத்தால் பயனில்லை
ஏதேனும் ஒரு வடிவத்தில் படைக்கும் போதுதான் அது உயிர் பெறுகிறது.
அப்படித்தான் உயிர் கொடுத்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.
நீங்களும் படியுங்கள்
உயிர் கொடுங்கள் உங்கள் அனுபவத்தை