எனக்குத் தெரிந்து அவர் அபூர்வமான மனிதர்தான். அவரைப்போல ஒருவரை இன்றுவரை நான் சந்திக்கவேயில்லை. ஒருவேளை இனிமேல் அப்படியொரு மனிதரைச் சந்திப்பேனா என்பதும் கூட சந்தேகம்தான். பகலில் மகிழ்ச்சியாகவும், இரவில் துயரம் நிறைந்தும் காணப்படுகின்ற ஒரு மனிதனை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? நானும்கூட கேள்விபட்டதிலிருந்து அவரைச் சந்திப்பது வரைக்கும் சுத்தமாக நம்பவேயில்லை. ஆனால் உண்மை என்னவென்றால் அவர் அப்படித்தான் இருந்தார். ஒருநாள் இரண்டு நாளல்ல தொடர்ச்சியாகவே அவர் அப்படித்தான் இருந்தார். “ஒவ்வொரு இரவையும் கழிப்பதென்பது உண்மையாகவே ஒரு யுத்தக்களத்திலிருந்து உயிரோடு திரும்பி வருவது போலத்தான் இருக்கிறது” என்று ஏற்கனவே அவர் என்னிடம் ஒருமுறை சொன்னது ஞாபகம் வருகிறது. பகலை துரத்திக்கொண்டும் இரவால் கடுமையாகத் துரத்தப்பட்டுக்கொண்டும் இருந்த அந்த மனிதனை உங்களுக்குச் சொல்ல வேண்டும் என்று ஆவலாயிருக்கிறேன் நான். கேட்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் தானே நீங்களும்.
பத்து வருடங்கள் கழிந்திருக்கும். ஆனாலும், இப்போது எப்படி அவரைப் பற்றிய நினைவுகள் எனக்குள்ளிருந்து எழுந்து வருகின்றன? நிகழ்காலத்தின் ஒன்று இறந்தகாலத்தின் ஒன்றை நினைவூட்டும் என்பது நிஜம்தான் போல. நேற்று நான் பார்த்த ஓவியம் எனக்குள் அந்தப் பழைய மனிதனை, நல்ல ஓவியனை எழுப்பி விட்டிருக்கிறது. அவருக்கும் எனக்கும் அவ்வளவாகப் பரிச்சயமிருந்ததில்லை. ஆனாலும் அந்தச் சின்னக் கிராமத்தில் ஓவியம் வரைகிற ஒருவனும், கவிதை எழுதிக் கொண்டிருக்கும் ஒருவனும் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சரியம். எனக்கும் அவருக்கும் இடையில் என்னுடைய நண்பன் ஒருவன் உறவுப்பாலமாக இருந்திருக்கிறான் என்பதே தாமதமாகத்தான் தெரியும். அவனுடைய பரிமாறுதல்களில் என்னுடைய கவிதைகள் அவருடைய கைகளுக்கும், அவருடைய ஓவியங்கள் என்னுடைய கைகளுக்கும் மாறியிருக்கின்றன. அந்த உறவுப்பாலமான நண்பன் ஒருநாள் அவசரஅவசரமாக ஓடிவந்து “அந்த ஓவியர் உன்னைப் பார்க்க வேண்டுமென்று சொன்னார்” என்றான். பின்குறிப்பாக “கொஞ்சம் பார்த்து அவர் ஒரு மாதிரியான ஆள்” என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான்.
அன்று மாலையே அவரின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கதவைத் தட்டி ரொம்ப நேரமாகியும் யாரும் வந்து திறந்த பாடில்லை. ஒருவேளை அவன் சொன்ன மாதிரி இருப்பாரோ, நின்று பார்க்கவா இல்லை கிளம்பி விடவா என்று என்னுடைய கால்கள் என்னைக் கேட்காமலேயே திரும்ப முயற்சிக்கையில் கதவு திறக்கும் சப்தம் கேட்டு நின்றேன். தாடியெல்லாம் வைத்து ஆளே ஒரு மாதிரிதான் இருந்தார். லேசாகச் சிரித்தபடி, “எதிர்பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரமா இல்ல. வாங்க வாங்க உள்ள போகலாம்” என்று அழைத்துச் சென்றார். ஒடுக்கமான ஒரு வழியில் நடக்க ஆரம்பித்தோம். இரண்டு பக்கமும் அவர் வரைந்தும் எழுதியும் வைத்திருந்த ஓவியங்களும் பேனர்களும் நிறைந்து கிடந்தன. கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணங்களால் நிறைந்திருக்கும் ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போல இருந்தது எனக்கு. ஒருவருக்குத் தாராளமான அந்த அறைக்குள் நுழைந்தோம். ஓவியம் வரைவதற்கான அத்தனை உபகரணங்களும் காகிதங்களும் அறையெங்கும் சிதறிக் கிடந்தன. அவற்றைத் தள்ளிவைத்துவிட்டு உட்காரச் சொன்னார்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தேன். சுவரெங்கும் ஓவியங்கள் தான் நிறைந்து காணப்பட்டது. அதிலும் அதிகமாகக் காணப்பட்டது பெண்ணுருவங்கள்தான். ஏதோ எங்களைச் சுற்றி அழகான பலபெண்கள் இருப்பதாக உணரச்செய்தது. என்ன பேசுவதென்றே தெரியாமல் ஒவ்வொரு ஓவியமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதிக நேரம் அந்த அறையில் குடிகொண்டிருந்த மெளனத்தை அவர்தான் உடைத்தார். “கவிதைகளை எல்லாம் வாசித்தேன் நன்றாக இருக்கிறது” என்றார். “நன்றி, எதற்காக என்னைப் பார்க்கவேண்டும் என்று சொன்னீர்கள்? ”என்றேன். “அவ்வளவு முக்கியமான விஷயம் ஒன்றுமில்லை, ஏதோ உங்களைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. ஏன் ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனைச் சந்திக்க காரணகாரியம் வேண்டுமா என்ன ”என்று கேட்டார். “இல்லை, அதெல்லாம் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு சில ஓவியங்களைக் காட்டி சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன். அப்படியே எங்களுடைய உரையாடல் ஓவியத்திலிருந்து கவிதைக்கும் கவிதையிலிருந்து ஓவியத்திற்குமாக மாறிமாறி பயணித்துக் கொண்டிருந்தது.
திடீரென்று என்னுடைய பார்வை எனக்கு வலது பக்கத்திலுள்ள ஒரு காகிதக்கட்டின் மீது பட்டு அசையாமல் நின்றது. புன்னகைக்கும் ஒரு பெண்ணின் உருவத்தைத் தாங்கி நின்றது அந்தக் காகிதக்கட்டின் முதல் பக்கம். ஏதோ ஒரு உள்ளுணர்வினால் அந்தக் காகிதத்தில் புன்னகைக்கும் பேரழகியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் தலைகவிழ்ந்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தவராக எனக்கு முன்னே அமர்ந்திருந்தார். மெல்ல தலைநிமிர்ந்து பக்கத்தில் இருந்த தூரிகையை எடுத்து அந்தக் காகிதக்கட்டை என்னருகில் தள்ளிவிட்டார். ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்டிப்பார்த்தேன். எல்லா பக்கங்களிலும் அவள்தான் நிறைந்திருந்தாள். ஆனால் முதல்பக்கத்தைத் தவிர அவள் எந்த பக்கத்திலும் சிரிக்கவில்லை. அவ்வளவாக ஓவியங்களில் பரிச்சயமில்லை என்றபோதிலும் அந்த ஓவியங்களில் ஏதோ இருந்துகொண்டு என்னை ஏதோ செய்வதைப் போலிருந்தது. நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, திடீரென்று அவர் சொன்னார், “இன்றிரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன். அதுதான் இறுதியாக உங்களைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்” என்று சொல்லிவிட்டு இடது கையில் வைத்திருந்த விஷப் பாட்டிலையும் கொஞ்சம் மாத்திரைகளையும் என்னிடம் காட்டினார்.
அவ்வளவுதான் எனக்குத் தூக்கிவாறிப் போட்டது. அதிர்ச்சியில் அப்படியே கொஞ்சநேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு வெளிவர மறுத்தது. என்ன பேசுவது, என்ன செய்வது என்றே தெரியாமல் சிறிது நேரம் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அசைவற்ற நிலையில் இருந்த என்னுடைய கைகளிலிருந்த அந்த ஓவியங்கள் எப்படி அவருடைய கைகளுக்கு சென்றது என்று தெரியவில்லை. ஒரு குழந்தையை ஏந்துவது போல அந்தக் காகிதக்கட்டை, ஒரு கையில் நெஞ்சோடு அணைத்துக் கொண்டபடி இன்னொரு கையால் அதிலிருந்த ஓவியங்களைத் தொட்டுத் தடவிக் கொண்டிருந்தார். எனக்குத்தான் அவைகள் ஓவியம்போல, அவருக்கு அது வெறும் காகிதத்தில் வரையப்பட்ட ஓவியம் இல்லை என்பது மட்டும் லேசாகப் புரிய வந்தது. அவர் என்னைக் கவனிக்கவே இல்லை ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பது என் காதுகளில் விழுந்தது. வார்த்தைகள் தெளிவாகக் கேட்கவில்லை. அதேநேரத்தில் அவர் என்னோடும் பேசிக்கொண்டிருக்கவில்லை. நீங்களாக இருந்தால் எப்படி இருந்திருப்பீர்களோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் நானோ எதுவென்றே புரியாத ஒரு துயரத்தால் நிறைக்கப்பட்டு முழுவதுமாக நிலைகுலைந்துபோய் உட்கார்ந்திருந்தேன்.
நேரம் என்ன ஆகிறது என்று பார்த்தேன் கிட்டத்தட்ட நடுச்சாமம் ஆகியிருந்தது. அதற்கு மேல் என்னால் அமர்ந்திருக்க முடியவில்லை. விருட்டென்று எழுந்து கைகளைப் பிசைந்தபடி அந்த அறைக்குள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தேன். என்னிடம் எதையுமே சொல்லாதது போல அவர் அமர்ந்திருந்தார். எனக்கோ “இன்றிரவு தற்கொலை செய்து கொள்ள போகிறேன்” என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டேயிருந்தன. ஒருவாறு என்னைத் திடப்படுத்திக் கொண்டு நான் பேச ஆரம்பித்தேன். “இதோ பாருங்கள் நண்பரே, நான் இன்றுதான் உங்களை முதன்முதலாகச் சந்திக்கிறேன். இவ்வளவு நேரம் உங்களோடு இருந்ததிலிருந்து உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அதற்காக நீங்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று சொல்வதெல்லாம் எனக்குச் சரியாகப் படவில்லை. முதலில் நீங்கள் என்னை எதற்காக அழைத்தீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள். இல்லை, பேசவேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா முதலில் பேசுங்கள்” என்று சொல்லிவிட்டு அவருக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டேன். இதுவரையிலும் அவர் தலையை நிமிராமல்தான் உட்கார்ந்திருந்தார். அவர் கைகளிலிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அந்தக் காகிதமே கிழிந்துவிடும் அளவிற்கு முழுவதுமாக நனைந்திருந்தது. மெல்ல அவருடைய தலையை நிமிர்த்திப்பார்த்தேன். ஓ! அந்தக் கண்கள் ஓய்வில்லாமல் கண்ணீரைச் சொரிந்து கொண்டே இருந்தன. அவருடைய தோள்களை இறுக்கிப் பிடித்து அவருக்கு ஆறுதல் சொல்ல முயற்சித்தேன். அவருடைய கைகளோ என்னுடைய கன்னங்களைத் துடைத்துக் கொண்டிருந்தது. நான் கவனிக்கவே இல்லை என்னையும் அறியாமல் நான் அழத்தொடங்கியிருந்ததை. அந்த இரவின் நிசப்தத்தில் தன்னுடைய மெல்லிய குரலால் அவர் பேச ஆரம்பித்தார்.
“நண்பரே, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த வாழ்க்கையில் எனக்குத் துளியும் விருப்பமே இல்லாமல் போய்விட்டது. என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் யாரும் உண்மையானவர்களில்லை. இப்பொழுதும்கூட கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டுதானிருக்கிறேன். நான் தற்கொலை செய்து கொள்ளவில்லையென்றாலும் இன்னும் சீக்கிரத்தில் செத்துப் போய்விடுவேன். இதோ இந்தத் தனிமையில் எத்தனை நாட்களை கடத்தியிருக்கிறேன் தெரியுமா? ஒரு மனிதன் எந்தத் துணையுமில்லாமல் ஆறுதல் வார்த்தை சொல்ல ஒரு ஆளுமில்லாமல் வாழ்க்கையைக் கழிப்பதென்பது எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். ஒரு சூறாவளி எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு ஒரேயொரு மனிதனை மட்டும் தனித்து விட்டுவிட்டு மறைந்து போனால் எப்படியிருக்கும்? என்னுடைய வாழ்க்கையின் சகலத்தையும் ஒரு சூறாவளிதான் நண்பரே துடைத்துவிட்டு என்னை தனியனாக்கிச் சென்றுவிட்டது. அதற்கப்புறம் எனக்கு ஆறுதல் சொல்லவோ, என் தனிமையைப் போக்கவோ யாருமே இல்லாமல் போய்விட்டது என்னுடைய துர்பாக்கியம் அல்லாமல் வேறென்ன? இதோ உங்களோடு பேசிக்கொண்டிருப்பது என்னுடைய ஆன்மாவிற்கு எவ்வளவு இதமாக இருக்கிறது தெரியுமா?” என்று சொல்லிவிட்டு வறண்டு கிடக்கும் தன்னுடைய உதடுகளையும் நாவையும் தண்ணீரால் நனைக்க ஆரம்பித்தார். என்னைப் பார்த்து தண்ணீர்க் குவளையை நீட்டினார், நான் தவித்திருப்பதையும் அறிந்து கொண்டவராய். “கொஞ்ச நேரம் நடந்து விட்டு வரலாமா” என்று கேட்டார். நிச்சயமாக, என்று அவருக்கு முன்னமே வேகமாக எழுந்து வெளியேறினேன்.
எப்படியும் நேரம் இரவு இரண்டு மணியைத் தாண்டியிருக்கலாம். தெருவில் மனித நடமாட்டம் சுத்தமாக இல்லை. ஒருசில தெருநாய்கள் ஊளையிட்டுக் கொண்டும் தங்களுக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. அரைவட்ட நிலவாக இருந்தாலும் வெளிச்சம் போதுமானதாகவே இருந்தது. நட்சத்திரங்களோ எண்ணிலடங்காதவைகளாய் இறைந்து கிடந்தது. வார்த்தைகள் ஓய்வெடுக்க மெளனமாகவே நடந்து கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஒவ்வொரு மனிதனிடமும் நிறைய விஷயங்கள் இருக்கும்போல, ஆனால் கேட்பதற்குத்தான் இங்கு யாருமே இல்லை. பகிர்ந்து கொள்ளப்படாத விஷயங்களும், சொல்லப்படாத துக்கங்களும் மனதிற்குள் நிறைய நிறைய அவைகள் இப்படித்தான் தற்கொலையாகவோ அல்லது மனப்பிறழ்வாகவோ வெளிவருகிறது என்று நினைத்துக் கொண்டேன். நல்ல இதமான காற்று வீசிக் கொண்டிருந்தது. சில வீட்டுத் திண்ணைகளில் வயதானவர்கள் தூக்கம்வராமல் புரண்டு கொண்டும், இறுமிக் கொண்டும் இருந்தார்கள். எல்லா வீடுகளிலுமே வயதானவர்களுக்கு ஏன் தூக்கம் வருவதில்லை? ஒருவேளை அவர்கள் தூங்குவதற்கான நிம்மதியான மனநிலையை கிட்டத்தட்ட எங்களைப் போல தொலைத்தவர்களாகிப் போனார்களோ என்ற கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன். ஊருக்கு வெளியே வந்திருந்தோம். நண்பரே அந்தப் பாலத்தில் உட்காரலாமா என்று கேட்டார் அவர். நாங்கள் கிட்டத்தட்ட ஊரைக் கடந்து வெகு தூரம் வந்திருந்தோம்.
சாலையின் ஓரத்தில் இருந்தது அந்தப் பாலம். ஒரு சில பேருந்துகள் சென்று கொண்டிருந்தன. “அந்தப் பெண்” என்று நான் மெல்லப் பேச ஆரம்பித்தேன். “யார் அந்தப் பெண்? எங்கே இருக்கிறார்?” என்று கேட்டேன். “அவளைக் கேட்கிறீர்களா நண்பரே” என்று ஆரம்பிக்கும் போதே அவருக்கு குரல் தழும்பியது. “அவள் அவள்தான் என்னுடைய ஓவியம். என்னுடைய தூரிகை, இல்லைஇல்லை அவள் ஒன்றுமில்லை. “தயவுசெய்து புரியும்படி சொல்லுங்கள். உங்களுக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன உறவு? எவ்வளவு நேரம் ஆனாலும் நான் கேட்கிறேன் சொல்லுங்கள் என்னிடம்.”
“அவளா, அவள் என்னுடைய இறந்த காலத்தின் சகலமுமாக இருந்தாள், ஏன் இப்போதும் கூடத்தான். இந்தத் தூரிகையை அவள்தான் எனக்குப் பரிசளித்தாள். இந்த ஓவியங்களை எனக்குள்ளிருந்து அவள்தான் வெளிக்கொண்டுவந்தாள். என் தனிமையைக் கொன்றுபோட வந்த ஒரு அழகான தேவதை நண்பரே. நான் வரைவதும் அவள் இரசிப்பதுமாக கழிந்து கொண்டிருந்தது எங்களுடைய காலங்கள். உறவுகளே இல்லாத ஒரு தனியன் நான். அவள்தான் எனக்கு எல்லா உறவுகளுமாக இருந்தாள். எங்கே இருக்கிறாள் என்று கேட்டீர்களல்லவா? அவள் இருக்கிறாள், எங்கேயோ இருக்கத்தான் செய்வாள். ஆனால் என்னோடு இல்லை நண்பரே.
இந்த ஊரில் உள்ள ஒரு வசதி படைத்தவனின் இல்லை இல்லை ஒரு மகா அயோக்கியனின் மகள் அவள். முட்களின் நடுவில் வளரும் ரோஜாவைப் போல அந்த முட்களுக்குள் பிறந்து வளர்ந்த அழகிய ரோஜா அவள். ஆனால் அவளுக்கு மட்டும் தனித்துவமான ஒரு இதயம் நண்பரே. அன்பு பாராட்டுவதைத் தவிர வேறொன்றும் அறியாதவள். எல்லோரையும் போலவே இரகசியமாகத்தான் காதலித்துக் கொண்டிருந்தோம் நாங்கள். ஏனென்றால் எங்களுக்குள் சாதி, மதம், அந்தஸ்து என்று ஏகப்பட்ட தடைகள். என்னுடைய வெற்றுக் கோடுகளுக்கு அவள்தான் உயிர்கொடுத்தாள் என்பது மிகையில்லாத உண்மை”. “அப்புறம் என்ன உங்களுக்குப் பிரச்சினை?” என்று இடைமறித்தேன். “பொறுங்கள் நண்பரே, வசந்த காலத்தைத்தான் சொல்லியிருக்கிறேன் இன்னும் மிச்சமிருக்கிறது” என்று மேகங்களுக்குள் எதையோ தேடுவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார். குரலைக் கொஞ்சம் சரிசெய்து கொண்டு மீண்டும் ஆரம்பித்தார்.
நண்பரே நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்ததுதான் தாமதம், அன்றிலிருந்தே பேரிடியும் பெருமழையும் ஒருநாளும் விடாமல் எங்களைத் துரத்திக் கொண்டிருந்தது. ஒருநாள் அவளுடைய தகப்பன் ஒரு பத்துப் பதினைந்து ஆட்களோடு வந்து என்னை மிரட்டிவிட்டுச் சென்றான். அவன் சொன்னது இன்னும் எனக்குள் ஜீரணமாகாமல் தான் இருக்கிறது நண்பரே. “அட கீழ்சாதிக்கார நாயே உனக்கு என் பொண்ணு கேட்குதாடா? ம் நீ திங்கிற சோத்த என் வீட்டு நாய் சாப்பிடாதுடா என்று அந்த மேல் சாதிக்கார நாய் சொன்னது எனக்குள் சுருக்கென்று தைத்தது”. அந்த வார்த்தைக்காகவாவது அவளை நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான திட்டமிடுதல்களில் இறங்கத் தொடங்கினேன். அவளுக்கும் செய்தி அனுப்பிவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தேன். ஆனால் ஒரு இரவில் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்ற செய்திதான் என்னை வந்து சேர்ந்தது. நான் நம்பவில்லை இப்போதும் கூட நான் சொல்கிறேன் அவள் தற்கொலை செய்து கொள்கிறவள் அல்ல. ஓடினேன் அவள் வாசலுக்கு, கூட்டம் நிறைந்திருந்தது. அவனும் சோகத்தில் இருப்பது போல உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும் அவனுடைய ஆட்களுக்கு சைகை காட்டினான். நான் கத்தத் தொடங்கினேன். அவள் தற்கொலை செய்யவில்லை நீதான் கொலை செய்து விட்டாய், கொலைகாரனே இதுதானா உன் மேல்சாதிக் குணம். நீயெல்லாம் ஒரு பெரிய மனிதனா? இல்லை இல்லை இது தற்கொலை அல்ல கொலை என்று சொல்லிக்கொண்டே கூடியிருந்தவர்களைப் பார்த்தேன். எனக்காக எந்த உதடுகளும் திறக்கவில்லை. திடீரென்று ஒரு கூட்டம் என்னைச் சுற்றி வளைத்தது அதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை. ஆனால் உணர முடிந்தது உயிர் போகும் வலியை.
எனக்கு நம்பிக்கை இல்லை நண்பரே. இந்தச் சுதந்திரம், உரிமை இதன் மீதெல்லாம் எனக்குச் சுத்தமாக எந்த நம்பிக்கையும் இல்லை. காதலிக்கத்தான் சுதந்திரம் வாழ்வதற்கு இல்லை அப்படியென்றால் இந்தச் சுதந்திரம் என்ன மாதிரியானது? காதல் பரிசுத்தம் நிறைந்ததுதான் ஆனால் வாழ்க்கை அசுத்தம் நிறைந்ததல்லவா? காதல் சுதந்திரம் நிறைந்ததுதான் ஆனால் வாழ்க்கை அடிமை வாழ்க்கையல்லவா? காதல் இன்பம், வாழ்க்கை துன்பம். காதல் சிரிப்பு, வாழ்க்கை துயரம். காதல் நம்பிக்கை, வாழ்க்கை துரோகம். நான் தோற்றுவிட்டேன் என்பது உண்மைதான், ஆனாலும் நான் சொல்கிறேன் காதலிக்கவேண்டும் நண்பரே. ஏனென்றால் காதல்தான் புதிர்களும், மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்த வாழ்வின் சாளரம்” என்று சொல்லி முடிக்கும் போது அவருக்கு மூச்சுவாங்கியது. மட்டுமில்லாமல் விடியப் போகும் அந்த அதிகாலைக் குளிரிலும் அவருக்கு முழுவதுமாக வியர்த்திருந்தது. அவருடைய கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன். மெல்ல என்னுடைய கைகளை விலக்கிக்கொண்டே அவர் எழுந்தார். தள்ளாடியவரைப் பிடித்துக்கொள்ள தயாரானேன், வேண்டாமென்று சைகை காட்டிவிட்டு நின்றார்.
“நண்பரே அவள் இங்குதான் இருக்கிறாள். அவளுக்குப் பக்கத்தில் இருந்துதான் நாம் இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவளும் கேட்டுக் கொண்டிருப்பாள்” என்றதும் நான் என்னையறியாமல் சுற்றும் முற்றும் பார்த்தேன். “இதோ இந்தக் காற்றிலும் நீரிலும் நிறைந்திருக்கிறாள். நம்பவில்லையா நீங்கள்? திரும்பிப் பாருங்களேன், அதோ அந்த மயானம், அங்குதான் அவள் எரிக்கப்பட்டாள். நாம் உட்கார்ந்திருக்கிறோமே இந்தப் பாலம் இதற்கடியில்தான் நான் உயிரற்ற ஒருவனாய் தாக்கப்பட்டுக் கிடந்தேன்” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்து நடித்துக்காட்டினார். துயரத்தின் உச்சத்தில் நான் வெடித்து விடுவதற்குத் தயாராக இருந்தேன்.
“இல்லை நண்பரே, முதலில் எழுந்திரிங்கள்” என்று சொல்லிக் கொண்டே அவரைப் பிடித்துத் தூக்கினேன். மேலே படிந்திருந்த மண்ணைத் தட்டிக் கொண்டே, “எப்போது இங்கு வந்து, வெந்து போவேன் என்றுதான் காத்திருக்கிறேன் நான். ஆனால் ஒவ்வொரு இரவும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. விஷமா, தூரிகையா என்ற போட்டியில் தூரிகைதான் ஒவ்வொரு இரவும் வெற்றி பெறுகிறது. இந்த ஓவியத்தை முடித்துவிட்டு செத்துவிடலாம் என்று தொடங்கும் என்னுடைய இரவுகள் ஓவியத்தோடே முடிந்து விடுகிறது. இதோ இன்று இரவு உங்களோடு கழிந்துவிட்டது” என்று சொல்லிவிட்டு பாலத்தின் மீது உட்கார்ந்து தலையில் கைவைத்துக் கொண்டு பெருஞ்சத்ததோடு அழத் தொடங்கினார். அவருடைய பார்வை அந்த மயானத்தில் நிலைகுத்தியிருந்தது.
“நண்பரே, அழுதுவிடுங்கள் இன்னும் மிச்சமீதி இருக்கும் கண்ணீரையும் இந்தக் காலையோடு காலிசெய்து விடுங்கள்” என்று நான் சொன்னதும் என்னை நிமிர்ந்து பார்த்தார். “உங்கள் காதலி இறந்து போனாள். அவள் இனி திரும்ப வரப்போவதில்லை. ஆனால் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள். ஆமாம் இருக்கிறீர்கள் வெறும் உயிர்சுமந்து கொண்டு மட்டும். இந்த வாழ்க்கை உங்களுக்கு வெறுத்துப் போனதா நண்பரே? எதற்காக சொல்லுங்கள்? நீங்கள் முழுவதுமாக நம்பிக்கை இழந்து விட்டீர்களா நண்பரே? எதற்காக சொல்லுங்கள்? உங்கள் காதலி மரித்துப் போனாள் என்பதாலா? ஆமாம் என்று சொல்லாதீர்கள் நண்பரே. ஒரு கீழ்சாதிக்காரனுக்கு என் மகளைக் கட்டிக் கொடுக்க மாட்டேனென்ற ஒரு மேல்சாதிக்காரனின் கெளரவத்திற்காகப் பலிகொடுக்கப்பட்ட உங்கள் காதலியின் உயிருக்கும் காதலுக்கும் ஒரு தற்கொலையின் மூலமாக அர்த்தம் கற்பித்து விடுவீர்களா என்ன? முடியவே முடியாது. நீங்கள் சொன்னீர்களல்லவா நான் தோற்றுப் போய்விட்டேன் என்று. நான் சொல்கிறேன் உறுதியாக நீங்கள் தோற்றுத்தான் போயிருப்பீர்கள். ஏன் என்று கேட்கிறீர்களா நண்பரே, நீங்கள் உங்களுக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மகா கோழையென்றும் சுயநலக்காரனென்றும் சொல்வதற்காக என்மீது கோபம் கொள்ளாதீர்கள்.
ஏனென்றால் உங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எனக்கு அந்தப் பெண்தான் பெரிதாகத் தெரிகிறார். ஒரு கணமாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? தான் சாகடிக்கப்படுவதற்கு முன் அவள் மனம் எப்படி இருந்திருக்கும்? அவள் எவ்வளவு போராடியிருப்பாள்? மரணத்தின் கரங்களிடம் உங்களுக்காக அவள் எவ்வளவு மன்றாடியிருப்பாள்? நான் சொல்கிறேன் அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் அவளுடைய துணிச்சல். நீங்கள் தற்கொலை செய்யப்போவதற்கான காரணம் உங்களின் கோழைத்தனம். சரி நண்பரே உங்களைச் சாதிசொல்லி அவமதித்த அந்த மேல்சாதிக்காரனுக்கு என்ன பதில்சொல்லப் போகிறீர்கள்? தற்கொலைதான் பதிலா என்ன? உங்கள் ஓவியங்களுக்கு என்ன எதிர்காலம் என்று யோசித்தீர்களா? நிகழ்காலத்திற்கும் வாராமல் இன்னும் எத்தனை நாளைக்கு இறந்த காலத்திலேயே மூழ்கிக் கிடக்கும் உங்கள் தூரிகைகள்? அடர்ந்த காடுகளுக்குள் வலுவுள்ள மிருகங்கள், வலுவில்லா மிருகங்களை வேட்டையாடிக் கொன்று புசித்து உயிர்வாழ்வதைப் போல, பரந்த இந்த உலகத்திலும் மனிதர்கள் மிருகங்களைப் போல ஒருவரையொருவர் வேட்டையாடிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே? பணக்காரன் ஏழையை வேட்டையாடுகிறான், மேல்சாதிக்காரன் கீழ்சாதிக்காரனை வேட்டையாடுகிறான். இப்படி வலுவுள்ளவன் வலுவில்லாதவனை வேட்டையாடிக் கொன்று புசிக்கிறானே இதற்காகவெல்லாம், இதில் ஒன்றால் பாதிக்கப்பட்டும் கூட உங்கள் தூரிகைகள் பேசாதா நண்பரே?
பேச வேண்டும் நண்பரே கெளரவக்கொலை என்ற பேரில் உங்கள் காதலியைப் போல எண்ணற்ற காதலிகள், உங்களைப் போல எண்ணற்ற காதலர்கள். மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் என்ன கெளரம்? அது வெறும் கெளரவமா என்ன? அது சாதியல்லவா? அது மதமல்லவா? அது பணமல்லவா? அது பதவியல்லவா? இவைகள் அழிக்கப்பட வேண்டாமா? சொல்லுங்கள் நண்பரே நாம் அழிக்க வேண்டியது இந்தத் தீமைகளையா? அல்லது நம் உயிரையா? ”என்று நான் பேசி முடிக்கும் வரை அவர் கண்கள் இமைக்காமலிருந்தது. அமைதி, மயான அமைதி குடிகொண்டிருந்தது எங்களுக்கிடையில். நீண்ட நேரம் மெளனமாக இருந்தோம்.
விருட்டென்று அவர் எழுந்து நின்றார். அவருடைய முகத்தில் சின்னதாக ஒளி தெரிந்தது. நிமிர்ந்து பார்த்தேன். சூரியன் எழுந்து வந்து கொண்டிருந்தது. “வாருங்கள் நண்பரே வீட்டிற்குப் போகலாம்” என்று என் கரம் பற்றினார். ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினோம் நாங்கள். சூரியனின் ஒளிக்கற்றைகளிலுள்ள நிறத்தைப் பற்றியும், இயற்கை ஒளியிலுள்ள சிறப்பைப்பற்றியும் உற்சாகமாக என்னோடு பேசிக் கொண்டே நடந்து வந்தார். நேற்றிரவைப் போலல்லாமல் வேகமாக முன்னோக்கி நடக்க ஆரம்பித்தார். நான் பின்தங்குவதைப் பார்த்த அவர் இன்னும் கொஞ்சம் முன்னுக்கு சென்று “நண்பரே என்னை பிடியுங்கள் பார்க்கலாம்” என்று வேகத்தை அதிகரிக்கத் தொடங்கினார். நானும் விரட்டத் தொடங்கினேன். எதிரே வந்த குழந்தைகள் எங்களைப் பார்த்துச் சிரித்தார்கள் ஆனாலும் நிற்கவில்லை ஓடினோம். ஏனென்று தெரியுமா உங்களுக்கு?
நாங்கள்தான் கலைஞர்களாயிற்றே.
ஜோசப் ராஜா