இரண்டு பக்கமும் சேர்த்து அந்தத் தெருவில் தோராயமாக ஐம்பது வீடுகள் இருக்கும். சொத்துக்கள் என்று ஏதும் இல்லாத, அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் நடுத்தரவர்க்கத்துக் குடும்பங்கள்தான். தெருவின் பாதி வீடுகள் திண்ணைகள் வைத்துக் கட்டப்பட்ட பழைய வீடுகள். தொலைக்காட்சி வருவதற்கு முன்னால், ஒவ்வொரு திண்ணைகளும் மனிதர்களின் கதைகளால் நிரம்பி வழிந்தன, ஆனால் இன்று வீட்டிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் நாடகங்களின் உரையாடல்களைக் கேட்டபடி வெறுமனே கிடக்கின்றன அத்தனை திண்ணைகளும்.
இப்போது இந்தத் திண்ணைகளில் உட்காரவும் படுத்துக்கொள்ளவும் ஒருவனுக்குத்தான் உரிமையிருக்கிறது. அந்த தெருவில் இருக்கும் ஏல்லோராலும் நேசிக்கப்படக்கூடிய அவன் பெயர் சார்லஸ். பூமணியம்மாள் வீட்டில் வளர்கிறான் சார்லஸ் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, அது முழு உண்மையல்ல. ஏனென்றால் அந்த தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் சாப்பிடக் கூடியவன் சார்லஸ். அந்த தெருவின் அத்தனை கைகளும் வாஞ்சையாக அவன் தலையை வருடும் கைகள்தான். அதிலும் முக்கியமாக குழந்தைகளைக் கண்டால் போதும், அன்பை அள்ளிக் கொடுத்துவிட்டுத்தான் ஓய்வான் சார்லஸ். குழந்தைகளும் கூட அவர்கள் கையில் இருக்கும் திண்பண்டங்களில் கொஞ்சத்தை சார்லஸ்க்கு கொடுக்க மறப்பதே கிடையாது.
ஆனால், அதெல்லாம் பழைய கதை. சார்லஸைப்பற்றி எப்போதாவது யாராவது ஒருவர் யாருக்காவது சொல்லக்கூடிய கதை. இதுமட்டுமல்ல, சார்லஸ் காடுகளுக்குள் அலைந்து கொண்டிருந்தான், கல்லறை தோட்டத்திற்குள் படுத்துக்கிடந்தான். காவல் நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தான். பல இரவுகளில் தூக்கம் வராம ல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான் என்று சார்லஸைப் பற்றிய கதைகளுக்குப் பஞ்சமேயில்லை. ஆனால் அந்த சார்லஸ் இப்போது நடக்கக்கூடத் தெம்பில்லாமல் பூமணியம்மாள் வீட்டுத் திண்ணையில் ஒட்டிய வயிரோடும், ஒடுங்கிய உடலோடும் படுத்துக் கிடக்கிறான்.
சிலவருடங்களுக்கு முன்னால் ஒரு வேலையாக ராஜபாளையத்திற்கு வந்திருந்த பூமணியம்மாளின் மகன் செல்வம் எட்டுப்பேரோடு பிறந்திருந்த தன்னை நல்ல விலைகொடுத்து வாங்கி வந்ததையும், ஊருக்கு வந்தவுடன் நண்பர்கள் சகிதமாக கேக்வெட்டிக் கொண்டாடி தனக்கு சார்லஸ் என்று பெயரிட்டதையும், அன்றிலிருந்து செல்வம் இறக்கும் வரையிலும் தான் வாழ்ந்த ராஜவாழ்க்கையையும் நினைத்துப் பார்த்ததா இல்லையா என்று தெரியவில்லை. சார்லஸின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்து கொண்டேயிருந்தது. வீட்டிற்குள்ளிருந்து சாப்பாடு கொண்டுவந்து வைக்கும்போது கவனித்த பூமணியம்மாள், சார்லஸின் கண்களைத் துடைத்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள். செல்வத்தின் இழப்பை இந்தச் சார்லஸினாலே தாங்கமுடியாதபோது, பத்துமாதம் சுமந்து, பெற்று, வளர்த்து, ஆளாக்கி ஒரு திருமணம் செய்து பார்ப்பதற்குள் மகனை இழந்த சோகம் எப்படியிருக்கும்? அவளும்கூடத்தான் தனக்குள்ளே சுருங்கிவிட்டாள்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருப்பதால், “வாயில்லா ஜீவன் வலியை எப்படிச் சொல்லும்” என்று நினைத்து சார்லஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது, இருசக்கர வாகனத்தில் ஒரு ஆணும் பெண்ணும் தங்களுக்கு நடுவில் வளர்ப்பு நாயை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்ததை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது சார்லஸ். இப்படித்தான் செல்வம் தான் காதலிக்கும் பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்வதற்காக அழைத்துச் சென்ற நாளில் இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் நடுவில் உட்கார்ந்துகொண்டு ஊரெல்லாம் சுற்றிய ஞாபகம் மீண்டும் சார்லஸின் கண்களைக் குளமாக்கியது. இப்போதும் கண்களைத் துடைத்துவிட்ட பூமணியம்மாள் “ஏதோ வலிக்குதுபோல” என்று இறுக அணைத்தபடி மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். வலிதான், சார்லஸால் பேசமுடிந்தால் அத்தனை வலிகளையும் வார்த்தைகளால் சொல்லியிருக்கும், இப்போதும் கூட சார்லஸின் கண்களில் இருந்து கண்ணீரல்ல வார்த்தைகளே வழிந்து கொண்டிருக்கின்றன.
துவண்டுபோய்க்கிடந்த சார்லஸை மடியில் கிடத்தியபடி மருத்துவமனையில் தன்னுடைய முறைக்காகக் காத்திருந்தாள் பூமணியம்மாள். இடுப்புயரம் வளர்ந்திருக்கும் பெரிய நாயை இழுத்தபடி பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் ஒரு போலீஸ்காரன். கணநேரம் கூட தாமதிக்காமல் விருட்டென்று எழுந்து வேறுபக்கம் சென்று உட்கார்ந்து கொண்டாள். அந்தப் போலீஸ்காரனுக்கோ எதுவும் புரியவில்லை. பூமணியம்மாளை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு அவனது முறை வருவதற்கு முன்னமே தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி நாயை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். இப்படித்தான் முட்டாள்களில் கைகளில் கொடுக்கப்பட்ட அதிகாரம் முறைதவறிப் பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்தபடி சார்லஸை வாஞ்சையாகத் தடவிவிட்டுக்கொண்டே கண்ணைமூடி அமர்ந்திருந்தாள் பூமணியம்மாள். சிறிதுநேரம் கழித்து மருத்துவரின் உதவியாளர் அவளை உள்ளே வரச்சொன்னார்.
“என்னம்மா ரொம்ப வீக்கா இருக்கே” என்று கேட்டபடி சார்லஸைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார் மருத்துவர். “ஆமாங்க ஸார் சாப்பிடவே மாட்டேங்கிறான்” என்றாள் பூமணியம்மாள். “எத்தின நாளா” என்று கேட்டுவிட்டு சில மருந்துகளைக் ஊசிமூலம் சார்லஸின் மெலிந்த உடலுக்குள் செலுத்திக் கொண்டிருந்தார். “என் பையன் இறந்ததுல இருந்து ஸார்” என்று சொல்லிக்கொண்டே வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “ஒடம்பு சரியில்லாம இருந்தாரோ” என்று கேட்க, எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள். பதில் வரலையே என்று நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர்.
“போன தீபாவளிக்கு முந்தின நாளு. விசாரணைக்குன்னு ஸ்டேசனுக்கு கூட்டிட்டுப் போனாங்க, காலைல பொணமாத்தான் குடுத்தாங்க, நியூஸ்லலெல்லாம் பாத்திருப்பீங்களே, செல்வம்னு பேரு” என்று சொல்லும்போதே சார்லஸ் அழுது கொண்டிருந்தான். இப்போது மருத்துவர் சார்லஸின் கண்களைத் துடைத்துவிட்டார். நான் குடுத்திருக்க மருந்து ஒடம்புக்குத்தான்மா, இந்த மனுசங்களவிட அன்பான இதயம் இருக்குது இதுக்கு, அதுக்கு நாம என்ன மருந்து குடுக்க முடியும்” என்று சொல்லிக்கொண்டே சார்லஸிற்குத் தடவிக் கொடுத்தார். மருத்துவர் கண்கலங்கப் பூமணியம்மாளைப் பார்த்தார். எதுவும் பேசாத பூமணியம்மாள் சார்லஸை தூக்கிக்கொண்டு வெளியேறினாள்.
அவளுக்காக வெளியே காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் அவளைப் பார்த்ததும் வண்டியை இயக்கித் தயாரானார். சார்லஸைத் தூக்கியபடி பூமணியம்மாள் மெல்ல ஏறி உட்கார்ந்தாள். “வீட்டுக்குத்தானம்மா” என்றார் ஆட்டோக்காரர். “இல்லப்பா கல்லறைத் தோட்டத்துக்குப் போயேன்” என்று சொல்ல, வெடுக்கென்று திரும்பிப் பார்த்தார் ஆட்டோக்காரர். சார்லஸின் ஒட்டிய வயிறு, எந்த அசைவுமில்லாமல் உறைந்து போயிருந்தது. பூமணியம்மாளைப் பார்த்தார், அவள் தீர்க்கமாக வெளியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். ஆட்டோ வேகமாகச் சென்று கொண்டிருந்தது.
கல்லறைக்கு வெளியே நின்றதும் மெல்ல இறங்கினாள் பூமணியம்மாள். ஆட்டோக்காரர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்குப் பின்னால் நடந்து சென்றார். செல்வத்தின் கல்லறைக்குப் பக்கத்தில் சார்லஸைக் கிடத்தினாள். செல்வத்தின் புகைப்படத்தைப் பார்த்த ஆட்டோக்காரர் அதிர்ச்சியாகி, “ஸ்டேசன்ல அடிச்சிக் கொன்ன்னுட்டாங்களே அவர்தானம்மா” என்று கேட்க, பூமணியம்மாள் ஆமாவென்று தலையாட்டினாள். அவருக்கு எல்லாம் புரிந்தது. அதனால்தான் சார்லஸைப் புதைப்பதற்காக வேகமாகக் குழிதோண்டிக் கொண்டிருந்தார். இனி இரண்டு மரணத்துக்கும் சேர்த்துப் போராட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, மகனின் கல்லறையையும் சார்லஸையும் பார்த்தபடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பூமணியம்மாள்.
அதிகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட செல்வத்தை நினைத்து நினைத்தே உயிர்விட்ட சார்லஸ் இதோ தன்னுடைய செல்வத்தோடு மீண்டும் சேர்ந்து கொண்டது.
ஜோசப் ராஜா