சந்தோஷ் பொய்சொல்லி விட்டான்

போர் நடந்து முடிந்த இடம்போல இருந்தது வீடு. பொம்மைகள் வீடுமுழுவதும் இறைந்து கிடந்தன. சமையலறையிலிருந்து பாத்திரங்கள் சில வீடெங்கும் சிதறிக்கிடந்தன. எல்லா வீடுகளிலும் போல இந்த வீட்டிலும் உடைந்து கிடந்தது ரிமோட். சாமிவந்து அடங்கியவளைப்போல பெருமூச்சு விட்டபடி, தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ஓரமாக உட்கார்ந்திருந்தாள் ரஞ்சனி. அத்தனைக்கும் காரணமான அந்த எருமை சந்தோஷ் எதுவும் தெரியாதது போல முகத்தை வைத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு  வீட்டிலிருந்து வேலைசெய்யும் ரஞ்சனி இந்த எருமை சந்தோஷால் கணிப்பொறியை அணைத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள். செய்தி தெரிந்து அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வேகமாக வந்துகொண்டிருக்கும் கணவனுக்கு போன்செய்து ”சீக்கிரம் வரச்சொன்னாத்தான் லேட்டா வருவீங்களா” என்று கடிந்துகொண்டாள்.

இன்னும் அடங்கவில்லை ஆத்திரம். வேகமாக எழுந்துசென்று இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு இன்னும் வேகமாக வந்து மீண்டும் சந்தோஷின் முதுகில் ஓங்கி அறைந்தாள். கையைப்பிடித்து முறுக்கினாள். ”அம்மா அம்மா வலிக்குதும்மா, இனிமே பொய்சொல்ல மாட்டேன்ம்மா” என்று கதறினான் சந்தோஷ். ”எத்தின தடவ எத்தின தடவ இதே மாதிரி சொல்லிருப்ப, கேட்டுக்கேட்டு காது புளிச்சிப்போச்சு” என்று சொல்லிக்கொண்டே மீண்டும் முதுகில் ஓங்கி அறைகிறாள். அடித்துக் களைத்தவளாக சோர்ந்துபோய் சோபாவில் உட்கார்கிறாள் ரஞ்சனி. போனை எடுத்துப் பார்த்துக் கொண்டாள், அருணிற்குப் போன்செய்து அரைமணிநேரம் ஆகிறது. அவள் கனிப்புப்படி இன்னும் பத்து நிமிடங்களில் கதவைத் தட்டுவான் அருண். பயங்கரமாகத் தலைவலிப்பதுபோல பாவனைசெய்துகொண்டே தலையைப் பிடித்துக்கொண்டு சந்தோஷை முறைத்துப் பார்க்கிறாள். எருமை என்ற வார்த்தை வெளிவரவில்லையே தவிர உள்ளுக்குள் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

ரஞ்சனி எந்தத் தவறையும் பொறுத்துக்கொள்வாள், ஆனால் பொய்சொல்வதை மட்டும் அவளால் ஜீரணித்துக் கொள்ளவே முடியாது. அவளுடைய அப்பாவும் அம்மாவும் அவளை அப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். தன்னுடைய மகனான சந்தோஷையும் அப்படித்தான் வளர்க்கவேண்டுமென்று விரும்புகிறாள். அப்படி என்ன பெரிய பொய் சொல்லிவிட்டான் சந்தோஷ் என்ற கேள்வி இந்நேரம் உங்களுக்குள் ஒலித்திருக்கும். ஒன்றுமில்லை, ஒன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சந்தோஷ், தொடர்ந்து ஒருவாரமாக வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்று தண்டனையும் வாங்கிய செய்தியை வீட்டில் சொல்லவே இல்லை. வீட்டுப்பாடம் இல்லையா என்று ரஞ்சனி கேட்டதற்கு கேட்டதற்கு ”மிஸ் லீவும்மா” என்று சொல்லிவிட்டான் சந்தோஷ். அவனுடைய கெட்டநேரம், அந்த மிஸ் இன்று ரஞ்சனிக்கு அழைத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அதுதான், அதுதான் இந்த ஆத்திரத்திற்குக் காரணம். அழுகிறதுபோல உட்கார்ந்துகொண்டிருக்கும் சந்தோஷைப் பார்த்து, ”பொய்சொன்னா என்னால தாங்கிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் பொய்சொல்ற ம் வரட்டும் ஒங்க அப்பா” என்று சொல்லி முடிப்பதற்குள், டக் டக் டக்டக் என்று கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அருண் வந்துவிட்டான். இது அவன் கதவைத்தட்டும் ஒலிதான். ரஞ்சனி கதவைத் திறக்கச்செல்ல, சந்தோஷ் மூச்சை இழுத்து விட்டபடி உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு அடுத்து அடிவாங்குவதற்குத் தயாராகிறான். சந்தோஷிற்கு நன்றாகத் தெரியும் அருணிற்கும் பொய் சொன்னால் சுத்தமாகப் பிடிக்கவே பிடிக்காது.

கதவைத் திறந்து உள்ளே வந்ததும், கையில் இருப்பது லேப்டாப் பை என்ற கவனமில்லாமல், பையைத் தூக்கி எறிந்துவிட்டு மூலையில் உட்கார்ந்திருக்கும் சந்தோஷை ஒற்றைக் கையால் தூக்கி ஒரு சுழட்டு சுழட்டி, ”பொய் சொல்றதையே ஒரு வேலையா வச்சிருக்கியா எருமை எருமை” என்று திட்டிக்கொண்டே ஆத்திரம் அடங்கும்வரைக்கும் அடிக்கிறான். தூக்கி எறியப்பட்ட சந்தோஷ் தன்னுடைய இடமான மூலையில் சென்று இறுக்கமாக உட்கார்ந்து கொள்கிறான். ”இவைனையெல்லாம் ஹாஸ்டல்லதான் போடனும், என்ன சொல்றீங்க?” என்று அருணைப் பார்க்கிறாள் ரஞ்சனி. ”ஆமா இப்பிடியே பொய் சொல்லிட்டு இருந்தா இம்மிடியட்டா ஹாஸ்டல்லதான் போடனும்” என்று அவளை ஆமோதிக்கிறான் அருண். மீண்டும் கோபமாக சந்தோஷைப் பார்த்து, ”ஏண்டா எருமை வயித்துக்கு சோறுதான சாப்பிடுற, பொய்சொல்றது தப்புன்னு தெரியலையா ஒனக்கு, சரி சொந்தப்புத்தி இல்ல, நாங்க சொல்றதையும் கேக்க கூடாதுன்னு நெனைச்சிருக்கியா? இனி ஒருதடவ பொய்சொல்லிப்பாரு, ஒண்ணக் குழிதோண்டிப் பொதைக்கிறேனா என்னான்னு” என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறான். ”சரி விடுங்க பாக்கலாம்” என்று ரஞ்சனி சொல்ல, ”இல்லமா பொய் சொல்றத மட்டும் என்னால ஜீரணிக்கவே முடியாதுன்னு ஒனக்குத் தெரியும்ல, பயங்கரமாக் கோவம் வருது” என்று சொல்லிக்கொண்டே கீழே கிடக்கும் ரிமோட்டைச் சரிசெய்து தொலைக்காட்சியைப் போடுகிறான்.

நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பதினைந்து லட்சம் கொடுக்கப்படும். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் கசப்பு மருந்தான இந்தப் பணமதிப்பிழப்பை அறிவிக்கிறோம். நமது தேசத்தில் எழுபதுகோடிப் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கப்படும். ஊழல் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் சென்ற பெருமுதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்று இந்த தேசத்தின் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கச் சொல்லப்பட்ட மாபெரும் பொய்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தொலைக்காட்சிச் செய்தியில். மூவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக சந்தோஷ் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்னும் முடியாமல் சென்று கொண்டிருக்கும் பொய்களின் எண்ணிக்கையைக் கேட்டுக்கொண்டே ரஞ்சனியையும், அருணையும் ஒரு பார்வை பார்த்தான் சந்தோஷ். அந்தப் பார்வையின் அர்த்தம் புரிய சிறிதுநேரம் ஆனது இருவருக்கும். தொலைக்காட்சியைப் பார்த்து கைநீட்டியபடி இருவரையும் பார்த்து ”பொய் பொய் பொய்” என்று கத்திக்கோண்டே படுக்கையறைக்குச் சென்று கதவை ஓங்கிச் சாத்திக்கொண்டான்.

கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது இருவருக்கும். முகத்தில் காறி உமிழ்ந்ததுபோல இருந்தது இருவருக்கும். கொஞ்சநேரத்திற்கு முன்னால் சந்தோஷை அடித்த கைகளை முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டான் அருண். படித்து பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கும், பொய்யைத் தாங்கிக்கொள்ளவே முடியாத ரஞ்சனியும், எத்தனை பொய்களைத் தாங்கிக்கொண்டு இந்தச் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்து எச்சிலை விழுங்கிக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சி தீடீரென்று கறுப்பாக மாறியது.  அருணும் ரஞ்சனியும் இறுக்கம் தாளாமல் எழுந்து பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

உங்களுக்குத் தெரியுமா? இருளுக்குள்தான் வெளிச்சம் ஒளிந்திருக்கிறது. உங்களால் இருளை விரட்டமுடியுமென்றால், நிச்சயமாக வெளிச்சத்தை தரிசிக்கலாம்.

ஜோசப் ராஜா

Related Articles

2 comments

பெரணமல்லூர் சேகரன் 29/02/2024 - 9:06 PM

இன்றைய தேவை இச்சிறு கதை.

ஒரு சம்பவத்தை நடப்பு அரசியலுடன் பொருத்தி இலக்கியம் படைப்பவன் எழுத்தாளன்.

அப்படித்தான் வீட்டுச் சம்பவத்தை நாட்டு நடப்புடன் பொருத்தி “சந்தோஷ் பொய் சொல்லிவிட்டான்” எனும் அற்புதமாக சிறுகதை ஒன்றைத் தந்துள்ளார் கவிஞர் ஜோசப் ராஜா.

வாசியுங்கள். உங்களுக்குள்ளும் பல சம்பவங்கள் நினைவுக்கு வரலாம். அந்நினைவுகளை நாட்டு நடப்புடன் பொருத்தி நீங்களும் எழுதலாம்.

முயற்சி செய்யுங்கள்.
முடியாதது எதுவுமில்லை.

Reply
தயாளன் மா 06/03/2024 - 11:12 PM

அருமை, அருமை
இந்த மாதிரி சிறுகதைகள் இன்றைய தேவையும்…..கூட.
அருமையான எழுத்துகள்,எதார்தமான வார்த்தைகள் அற்புதமான நடை.. படிக்கும் போது உள்ளத்தில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி..

திஜாரா வின் சிறுகதைகள் நினைவில் வருகின்றன….
கவிஞருக்கு வாழ்த்துகள்💐💐❤️

Reply

Leave a Comment