நேற்று கொஞ்சம் தாமதமாக, புறநகர் செல்லும் மின்சார இரயிலில் பயணிப்பதற்காக இரவு ஒன்பது மணிக்குமேல் கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்குச் சென்றேன். சென்னைக்கு வந்து இருபது வருடங்கள் முடியப்போகிறது. இத்தனை வருடங்களிலும் பெரும்பாலான பயணங்கள் இதே மின்சார இரயில்தான். முதலில் நுங்கம்பாக்கம், அடுத்து சைதாப்பேட்டை, இப்போது பல்லாவரம் என இதுவரையிலும் நான் தங்கியிருக்கும் மூன்று இடங்களும் இரயில் நிலையங்களில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருப்பவைதான். பயணிக்கத் தொடங்கிய முதல்நாளில் இருந்து இப்போது வரையிலும் சலிக்காத பயணம் சென்னையின் மின்சார இரயில் பயணம் என்று சொன்னால் அது மிகையில்லைதான். ஆயிரத்திற்கும் மேலான பயணிகளை ஒரேநேரத்தில் ஏற்றிச்செல்லும் இந்தத் தொடர்வண்டி, முதல்நாள் எப்படி என்னை ஆச்சரியப்படுத்தியதோ அதேபோல்தான் இன்றும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எத்தனையோ பாடல்களை இந்தப் பயணத்தில்தான் கேட்டிருக்கிறேன். எத்தனையோ புத்தகங்களை இந்தப் பயணத்தில்தான் வாசித்திருக்கிறேன். எத்தனையோ கவிதைகளுக்கான தொடக்கத்திற்கு இந்தப் பயணமே காரணமாக இருந்திருக்கிறது. எத்தனையோ மனிதர்களை இந்தப் பயணத்தில்தான் பார்த்திருக்கிறேன். காலைநேரப் பயணம் அன்றைய நாளின் வேலைகளைத் திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கக் கூடியது. மாலைநேரப் பயணம் அன்றைய நாளின் வேலைகளை அசைபோட்டுப் பார்க்கக்கூடியது. ஆகமொத்தத்தில் அன்றாட நடவடிக்கையாகிப்போன இந்தப் பயணத்தின் அனுபவங்களை எழுதலாம் என்றால், எழுதிக் கொண்டேயிருக்கலாம். இப்போது நான் உங்களிடம் பகிர்ந்துகொள்ளப் போவதும் அப்படி ஒரு அனுபவம்தான். என்னிதயத்தை இளகச் செய்த, என் கண்களைக் கலங்கச் செய்த அனுபவம்.
வழக்கம்போல ஒன்பது மணி ஆனாலும்கூட வண்டிக்காகக் காத்திருக்கும் கூட்டத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. வழக்கமாக வண்டியும் கொஞ்சம் கூட்டமாகத்தான் வந்தது. பக்கத்தில் வரும்போதே சிலர் சத்தமாக பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க முடிந்தது. ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றுவிட்டு வருகிறவர்கள் பயணத்தில் ஜப்பானியர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். கண்டிப்பாக நாம் அதற்கு நேர்மாறானவர்கள்தான். எங்கும் பேசமுடியாத வாய்கள் பயணத்தைப் பேசப் பயன்படுத்திக் கொள்கிறதோ என்றுகூட நினைத்திருக்கிறேன் சிலநேரங்களில். சிலர் அப்படிப் பேசுவார்கள்! பேசிக்கொண்டே வருவார்கள். அப்படித்தான் ஒருவர் பேசிக்கொண்டே வந்தார். வம்புக்குப் பேசுகிறவரைப் போலத்தான் எனக்குத் தெரிந்தது. உப்புச் சப்பில்லாத விஷயத்தை நீட்டி முழக்கி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இடமில்லாமல் அவருக்குப் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தேன்.
இரண்டு நிறுத்தங்கள் கடந்தது. இன்னும் கொஞ்சம் கூட்டம் கூடியிருந்தது. அவருக்கு எதிரிலேயே உட்கார எனக்கு இடம் கிடைத்தது. வேறு வழியில்லை இன்னும் ஐந்து நிறுத்தங்கள். அவர் வழியாக உலக அரசியலை உள்வாங்கத்தான் வேண்டும் என்று தயாராகிக் கொண்டேன். சட்டென்று என்பக்கம் திரும்பியவர் ”தம்பி, நீங்க சொல்லுங்க மோடி ஆபத்தானவரா இல்ல ட்ரம்ப் ஆபத்தானவரா சொல்லுங்க” என்றார். யோசிக்கவில்லை ”இரண்டு பேரும்தான்” என்றேன். அதை ஆமோதிப்பதுபோல கைதட்டி சிரித்தார் சத்தமாக. அவரோடிருந்த நான்குபேரும் இன்னும் பேசுங்கள் என்பதுபோல அவரை உற்சாகப்படுத்துவது போலிருந்தது. அவரும் பேசுவதற்கே வந்தவர்போல, இல்லை பேசுவதற்கே பிறந்தவர் போல பேசிக்கொண்டே வந்தார்.
உண்மையைச் சொன்னால் எனக்கு கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருந்தது. அதுவும் பேச்சுக்கு இடையில் ஊறுகாயைப்போல என்னையும் தொட்டுக்கொள்வது இன்னும் கொஞ்சம் எரிச்சலை அதிகப்படுத்தியது. சுற்றியிருப்பவர்களைப் பார்த்தேன். அவர்களும் என்னைப்போலவே தான், அவரை ஒருமாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் இன்னும் சத்தமாகப் பேசிக்கொண்டுதானிருந்தார். தொங்கிக் கொண்டு வந்த இளைஞனை உரிமையோடு உள்ளே அழைத்தார். விழுந்து சாக வந்தவன் யார் பேச்சைக் கேட்கப் போகிறான். அவரைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவரோ சிரித்துக்கொண்டே, விட்ட இடத்திலிருந்து தொடர்கிறார். தப்பித்துவிடலாம் என்று கைப்பேசியை எடுக்க முயற்சிக்கும் போது, ”இந்த போனையே பாத்துக்கிட்டு இருக்கிறவனுங்க கண்ணுக்கு மனுசங்களே தெரியாதில்ல” என்றார். அப்படியே வெறுங்கையை வீசிவிட்டு அவர் சொன்னதை ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டினேன். பரங்கிமலையில் வண்டி நிற்கிறது. ஒரு குடும்பம் ஏறி உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்திலும், ஒரு காலில் பிரச்சனை இருக்கும் கணவரை கைத்தாங்கலாக உட்கார வைத்துவிட்டு, பேசிக்கொண்டிருக்கும் நபரைப் பார்த்து வந்துகொண்டிருக்கிறார் ஓர் அம்மா. அவரும் அந்தம்மாவைப் பார்த்து புன்னகைத்தார்.
பக்கத்தில் வந்தவள், வாஞ்சையோடு அவரின் கைகளைப் பற்றிக்கொண்டாள். ”எப்டிம்மா இருக்கீங்க?” என்று கேட்கிறார். பதில் சொல்லவில்லை, ஆனால் அழுகிறாள் அந்தம்மாள். சிரித்துக்கொண்டே ”வீட்டுக்காரர் எப்டிம்மா இருக்காரு?” என்று கேட்கிறார். இப்போதும் பதில் சொல்லவில்லை, ஆனால் அழத்தான் செய்கிறாள். புன்னகை ததும்ப அந்தம்மாவின் முகத்தைப் பார்க்கிறார். கண்ணீரோடு அவரின் முகத்தைப் பார்க்கிறாள் அந்தம்மா. எனக்குப் பக்கத்தில் இருப்பவர் எழுந்துகொள்ள அந்தம்மாவை உட்காரச் சொல்கிறார். கண்களைத் துடைத்துக் கொண்டே என்னருகில் உட்கார்கிறாள். அவரைக் கும்பிட்ட கையை இறக்கவேயில்லை அவள். இப்போதும் கண்களில் நீர் நிறைந்திருக்கிறது. ”அழாதிங்கம்மா” என்றேன் நான். அவர் மீண்டும் உரத்த குரலில் செல்போன் மனிதர்களை விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
நான் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவள், ”ஏங் குடும்பத்த காப்பாத்துன சாமி தம்பி, இப்பிடித்தான் அவசரத்துல கிளம்புன டிரெய்ன ஏறிட்டோம், நானும் விழுந்து ஏன் வீட்டுக்காரும் விழுந்துட்டாரு, பாதி ஒடம்பு டிரெனுக்குள்ள, பாதி வெளில. உள்ள ஒக்காந்திருந்தவரு பாய்ஞ்சு வந்து, உயிரப் பணயம் வைச்சு காப்பாத்தினாரு. எனக்கு ஒண்ணும் ஆகல, ஏன் வீட்டுகாருக்குக் கூட கால்ல சின்னக் காயந்தான். ஆனா!” என்று சொல்லிக்கொண்டே அவரின் காலைப் பார்த்து அழுதாள். நானும் பார்த்தேன். ஒரு கால், இன்னொரு செயற்கை கால்! இதயம் படபடவென்று அடித்ததை உணரமுடிந்தது. கண்கள் கலங்கின. பல்லாவரத்தில் வண்டி நின்றது. எழுந்தேன். ”சரி தம்பி பாத்துப்போங்க” என்று சொல்லி தட்டிக் கொடுத்தார். கையெடுத்துக் கும்பிட்டேன். ”நாளைக்குப் பாக்கலாம் தம்பி” என்று இளைஞனைப்போல உற்சாகமாகக் கையசைத்தார்.
யாருமற்ற நடைமேடையில் நான்மட்டும் நின்று கொண்டிருந்தேன். யுத்தம் என்ற பெயரில் இனப்படுகொலை செய்யும் முட்டாள்களுக்கு மத்தியில், மதத்தை வளர்க்க மனிதர்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கும் மடையர்களுக்கு மத்தியில், போட்டியும், பொறாமையும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் இப்படியும், இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் மனிதர்கள்!
ஜோசப் ராஜா
