பதினேழு வருடங்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனை காலங்களைக் கடந்தாலும் மறக்கமுடியாத அந்தக் காலைநேரத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். காலம் எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிடும் என்று உறுதியாக நம்பத்தொடங்கின நேரம். வாழ்க்கை எல்லா அனுபங்களையும் வாரிவழங்கிவிடும் என்று ஒவ்வொன்றாக அனுபவித்துத் தெரிந்து கொண்டிருந்த நேரம். உங்களில் தற்கொலை எண்ணமே தோன்றாதவர்கள் யாராவது இருப்பீர்களா என்றெனக்குத் தெரியாது. ஆனால், அப்போது அப்படிப்பட்ட எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கையில், வாழ்வின் மீது பெருமதிப்பு உண்டாகிறது. தண்டவாளத்தின் பக்கத்தில் பலமணிநேரமாக யோசனையோடு உட்கார்ந்திருந்துவிட்டு மரணத்தை வென்றவனாக வீடுதிரும்பியிருக்கிறேன். உயரமான மலைகளில் உட்கார்ந்து பலமணிநேரமாகப் பள்ளத்தாக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, பார்க்கலாம் என்ற மனநிலையோடு இறங்கி வந்திருக்கிறேன் எத்தனையோமுறை. எல்லாவற்றையும் கொடுத்த காதல், என் கரங்களிலிருந்து வலியப் பிடுங்கப்பட்டிருந்ததுதான் அத்தனை அலைக்கழிப்புகளுக்கும் காரணம். தினமும் கேட்டுக் கொண்டிருந்த குரல், திடீரென்று என்னிடமிருந்து பறிக்கப்பட்டபோது எனக்கேற்பட்ட பதட்டத்தை வார்த்தைகளில் சொல்லிவிடுவதும் சிரமம்தான். அதிகாலைச் சேவலைப் போல என்னை தினந்தோறும் எழுப்பிவிட்ட குரல், தாயின் தாலாட்டைப்போல ஊற்றெடுக்கும் நேசத்தால் ஒவ்வொருநாளும் என்னைத் தூங்கவைத்த குரல் திடீரென்று சிறைப்படுத்தப்பட்டபோது நான்மட்டும் சுதந்திரமாகவா இருந்திருப்பேன்.
ஒவ்வொரு நாளைக் கடத்துவதுமே சவாலாகத்தான் இருந்தது. ஒருநாள் காலையில் எழுதத்தொடங்கியிருந்த கவிதைகளைத் தட்டச்சு செய்யக் கொடுத்திருந்த கடைக்குச் சென்றேன். திறக்கப்படாமலிருக்கவே எதிரில் இருந்த கோயிலின் தெப்பக்குளத்தில் காத்திருக்கலாம் என்று முடிவுசெய்தேன். காலைச் சூரியன் குளத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சூரியக்கதிர்கள் குளமெங்கும் பாசியைப்போல படர்ந்திருந்தது. சூரியனின்மீது கல்லை எறிந்தேன். அலையலையாய் அலைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்ததும் பரவசம் பற்றிக்கொண் டது. எல்லாம் கொஞ்சநேரம்தான். குளத்தின் ஒரு மூலையில் இறந்துபோன முன்னோர்களுக்குச் செய்யப்படும் சடங்குகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்ததும், ஒளிந்து கொண்டிருந்த எண்ணங்கள் மீண்டும் வெளிவரத் தொடங்கின. காலமும் நேரமும் ஓயாமல் நம்மைச் சோதித்துப் பார்ப்பதை அப்போதே புரிந்துகொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சரி, தேர்வு வரும்போதுதானே நாம் எழுதத் தயாராக இருக்க வேண்டும். நாம் தயாராக இருக்கும்போதெல்லாம் தேர்வு வராதல்லவா? அதற்குமேல் அந்தக்குளத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் தாங்கமுடியாத வெப்பத்தில் பொசுங்கிவிடுவேன் என்று புரிந்தவுடன் எழுந்து வேகமாக நடக்கத் தொடங்கினேன். எண்ணற்ற புறாக்களும், ஒருசில காக்கைகளும் நானிருந்த மனநிலையில் இருந்தனவாவென்று தெரியவில்லை, வெடுக்கென்று பறக்கத்தொடங்கி வானோடு ஒட்டிக்கொண்டன.
கடை திறந்திருந்தது. கடையிலிருந்த பெண் நகலெடுக்கும் இயந்திரத்தில் வேகமாக வேலைசெய்து கொண்டிருந்தாள். இன்னொரு இளம்பெண் தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்களில் எழுத்துக்கூட்டிப் படிப்பவள்போல, எழுத்துக்களோடு விரல்களையும் ஓடவிட்டபடி படித்துக் கொண்டிருந்தாள். என்னைப்பார்த்த கடைக்காரப்பெண் வேகமாக வந்து அந்தப்பெண்ணிடமிருந்த காகிதக் கட்டுகளை வெடுக்கென்று வாங்கி என்னிடம் கொடுத்தாள். என்ன நினைத்தாளோ படித்துக்கொண்டிருந்தவள் என்னிடமும் கடைக்காரப்பெண்ணிடமும் இரண்டுமுறை மன்னிப்புக் கேட்டாள். நான் கவிதைகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது, அவள் நகலெடுக்கக் கொடுத்த காகிதங்களும் கொடுக்கப்பட்டது. அத்தனையும் இசைக்குறிப்பு எழுதக்கூடிய காகிதங்கள். சிறிதுநேர மெளனத்திற்குப் பிறகு அவளிடம் கேட்டேன். என் தந்தை இசை சொல்லிக்கொடுக்கிறார் என்று சொல்லிவிட்டு, அந்த வெயிலிலும் கூட குளிரச்செய்யும் ஒரு புன்னகையையோடு வேகமாக நடக்கத் தொடங்கினாள். இந்த தேசத்தின் பெண்களுக்கு இருக்கும் இயல்பான உணர்வில் அச்சம்கொண்ட மானைப்போல அவ்வளவு வேகமாக நடந்து கொண்டிருந்தாள். ஏனென்றால் அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபடி இன்னும் வேகம் கூட்டினாள். எனக்கு இசையைத் தவிர வேறெதும் நினைவில் இல்லை, நானும் வேகமாகச் சென்றுகொண்டிருந்தேன். அவளல்ல, அவள் கையிலிருக்கும் காகிதங்கள்தான் காற்றைப்போல என்னை இழுத்துக்கொண்டு சென்றது. ஒரு அடுக்கத்திற்குள் நுழைந்து இரண்டாவது அடுக்கில் இருக்கும், முன்றாவது வீட்டிற்குள் அவள் நுழைந்த கொஞ்சநேரத்தில் அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். கண்கள் கோபத்தில் சிவந்தபடி கதவைத் திறந்து அவர் பார்த்ததை நான் பொருட்படுத்தவில்லை. ஐயா, நான் கவிதை எழுதுகிறவன். மானுட உறவிற்கு எதிரான எல்லாக் காரணங்களையும் சொல்லிச்சொல்லி என் காதலி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருக்கிறாள். என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. தற்கொலை எண்ணத்திலிருந்து தப்பிப்பதற்காக இசை கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று சொல்லிமுடித்தும் ஆரத்தழுவிக்கொண்டார். இருவரின் கண்களும் கலங்கியிருந்தது. எனக்கும் கூட கனம்குறைந்து இதயம் லேசானதை உணரமுடிந்தது. ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனின் பாரங்களைத் தாங்கிக்கொண்ட நேரம். அவ்வளவுதான்.
கண்களை மூடியபடி ஏந்திய சிதாரிலிருந்து வழியும் இசையால் என்னை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார். நிறைந்த புன்னகையோடு இவ்வளவு தூரம் என்னை அழைத்து வந்தவள் சுவரோரத்தில் சாய்ந்திருந்த இன்னொரு சிதாரைப்போலவே நின்றபடி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்றிலிருந்து நான்குவருடங்கள், அதாவது என்காதலி என் கரங்களுக்குள் வந்துசேர்ந்த வசந்தம் வரையிலும் அந்தக் கம்பிக் கருவிகளிலிருந்து வழிந்த இசைதான், இசையையும், கவிதைகளையும் பற்றிய எண்ணங்கள்தான் வழிநடத்தியது என்னை.
இசைகேட்கும் போதெல்லாம், இசையில் நிறையும் போதெல்லாம், இசையின் திசைகாட்டியான அவளை மறப்பதில்லை நான்.
3 comments
If nothing save us from death, at least love should save us from life – Pablo Neruda
தோழர் வணக்கம்.
காதல் கதையில் அனைத்து உணர்வுகளையும் கொண்டு வந்து எங்கள் மனங்களை கசக்கி பிழிகின்றது தங்கள் கதை.ஒரு மனிதர் காதல் என்ற வர்ணனையாளராக உருவாகிறபோது இயற்கையின் அழகும் மனித உணர்வுகளும் பிரமாதமாக அமைகின்றன; அழகு படுகின்றன.இத்தகைய நிலையில் ஒரு மனிதன் மேலும் உயர்ந்த மனிதனாக,உண்மையை நேசிக்கும் மனிதனாக வளர்ந்து வருகிற அழகிய காட்சியை தங்கள் கதை சரியாகப் படம் பிடித்துள்ளது.ஒரு மனிதன் காதலால் சமூக உறவு பெறுவதும் அந்த காதலாலே மனம் வெறுத்து மரணம் வரை சென்று திரும்புவதும் பின்பு மரணத்தை வென்று காதலியை கைபிடிப்பதும் நெடுங்காலமாக நீடிக்கும் சமூக நிகழ்வுதான்;இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம்.அதை படிக்கும் போது,விழுந்து போன மனிதர் திரும்பவும் பெரும் மனிதனாக காதலை வென்ற மனிதனாக, காதலனாக,கணவனாக வளர்கின்ற, வாழுகின்ற வாழ்க்கையை எவ்வளவு அழகாக இக்கதை அமைந்துள்ளது;தொடரட்டும் எழுத்துக்கள்,;வாழ்த்துக்கள்.
இசையின் மீது காதல்
இசையின் மீது ஆர்வம்
இசையின் மீது தாகம்
உள்ளவர்களால் மட்டுமே இப்படி இசையை உணர்ந்து உருவகப்படுத்தி எழுத முடியும்.
அவ்வகையில் அமைந்த கவிஞர் ஜோசப் ராஜாவின் படைப்பு இசையின் திசைகாட்டி நம்மை இசையின்பத்திற்கு அழைத்துச் செல்கிறது.
மகிழ்ச்சியுடன் இசையின் விரல்பிடித்துப் பயணிப்போம்.
வாருங்கள்.