ஆசிரியர் சித்திரபுத்திரன்

நான் பிறந்த ஊரான சிவகிரியின் வடக்கு எல்லையில் இருக்கிறது பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி. என்னுடைய சகோதரியும், சகோதரர்களும் அங்குதான் படித்தார்கள் என்பதால் இயல்பாகவே நானும் அங்குதான் சேரநேர்ந்தது.  தொண்ணூறுகளின் மத்தியில் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். அங்கிருந்த ஐந்து வருடங்களும் வாழ்வின் அற்புதமான காலங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.  விளையாட்டு மைதானம் என்றால் என்னவென்றே தெரியாத இக்காலத்தின் பள்ளிக்குழந்தைகளை நினைத்து உண்மையிலேயே மனம் வருந்துகிறேன். அதேநேரத்தில் என்னுடைய பள்ளியை நினைக்கும் போதே பசுமையாய் ஞாபகம் வருவதெல்லாம் பள்ளியின் நாலாபக்கமும் பரந்துவிரிந்த மைதானங்கள்தான். விளையாட்டு ஆர்வம் விடாமல் பற்றிக்கொண்டது அந்தக் காலத்தில்தான். நேரகாலம் தெரியாமல் மைதானங்களே கதியெனக் கிடந்த அந்தக் காலங்களின் சாட்சியை இவ்வளவு காலங்கழித்தும் இந்த உடல் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் சிறுவயதிலேயே மொழி மீதான ஆர்வத்தைத் தூண்டியது பைபிள்தான். அப்போதெல்லாம் வாரம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்திற்குச் சென்றுவிடுவேன். யோபுவின் சரித்திரமும், தாவீதின் அற்புதமான சங்கீதமும், என்றும் அழியாத சாலமனின் உன்னதப்பாட்டும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை இப்போதும் கூட என்னுடைய வார்த்தைகளில் பார்க்கலாம் நீங்கள். இயேசுவின் மலைப்பிரசங்கம் தான், இரசிக மனோபாவத்தில் இருந்த என்னுடைய சிந்தனையை வேகமெடுக்கச் செய்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். “ஊசி முனையில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே தவிரப் பணக்காரன் ஒருபோதும் பரலோக ராஜ்ஜியத்திற்குள் சமீபிக்க முடியாது” என்ற அவரின் சொற்கள் இடியைப் போல எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தன. ”வலைகளை விட்டுவிட்டு வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குகிறேன்” என்று அவர் கைநீட்டி அழைத்தது என்னையும் கூடத்தான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். இப்படியாகப் பைபிளின் மொழி என்னை ஆட்கொண்டிருந்த காலத்தில்தான், என்னுடைய எட்டாம் வகுப்பில் அறிமுகமானார் ஆசிரியர் சித்திரபுத்திரன் அவர்கள். 

நெடிய உயரம், கரகரப்பான குரல், கம்பீரமான உடல்மொழி. தமிழை அவர் உச்சரிக்கத் தொடங்கினால் நான்கு சுவர்களும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கும். இடியைப் போலத் தமிழ் ஒலித்துக் கேட்டிருக்க வேண்டுமென்றால், மழையைப் போலத் தமிழ் பொழிந்து பார்த்திருக்க வேண்டுமென்றால் அவர் வகுப்பில் அமர்ந்திருக்க வேண்டும். அன்புகூட ஒருவித அதட்டல் தோரணையில்தான் அவரிடமிருந்து வெளிப்படும். தமிழை அவரைப்போல உச்சரிக்க வேண்டும். தமிழை அவரைப்போல கம்பீரமாகப் பேச வேண்டும் என்ற ஆசையை எனக்குள் விதைத்தது அவர்தான். ஒவ்வொரு மாணவரையும் பெயர் சொல்லி அவர் அழைக்கும் அழகே தனி அழகுதான். என்னையும் அப்படித்தான் அழைப்பார்.  நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத குணமும் எல்லோருடைய மனதிலும் அவரால் விதைக்கப்பட்டது. கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கும் மேலாக, இந்த மொழியின் மீதான காதலை நினைக்கும் போதெல்லாம் அவர்தான் நினைவுகளின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வருகிறார்.

எல்லாப் பாடங்களிலும் நன்றாகப் படித்தாலும், தமிழில் இன்னும் கொஞ்சம் நன்றாகப் படித்ததற்குக் காரணம் கண்டிப்பாக ஆசிரியர் சித்திரபுத்திரன் அவர்கள்தான். ஒப்புக்குப் பாடம் எடுப்பவராக ஒருநாளும் அவரைப் பார்த்ததில்லை நான். ஒவ்வொரு மாணவனோடும் அவரால் ஒன்றுகலக்க முடிந்தது என்பதை வகுப்பு முடியும் ஒவ்வொரு பொழுதும் உணர்ந்திருக்கிறேன். ஒருவேளை நான் ஆசிரியப் பணிக்குச் சென்றிருந்தால் நிச்சயமாக அவரைப் பிரதியெடுத்திருப்பேன். ஆனாலும் என்ன, இப்போதும் எனக்குள் அவர் கலந்திருக்கத்தான் செய்கிறார். மூன்று வருடங்கள் மட்டுமே அவரிடம் தமிழ் பயின்றது வாழ்வு முழுமைக்கும் வழிநடத்தும் என்று அப்போது அறிந்திருக்கவில்லை நான். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவுமில்லை. ஆனால் ஒருநாளும் மறந்ததுமில்லை. பச்சை மரத்தில் அறையப்பட்ட ஆணியைப்போலப் பதிந்திருக்கிறார் நெஞ்சுக்குள். இப்போது ஓய்வு பெற்றிருப்பார். என்னுடைய யோசனையெல்லாம், பாடம் நடத்தாமல் வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிப்பார்? இல்லை அவருக்குத்தான் அசைபோட ஆயிரம் இருக்குமே!

இதயம் கனிந்த நன்றி ஆசிரியரே!

ஜோசப் ராஜா

05.01.2023

Related Articles

1 comment

Ram 20/01/2023 - 5:41 PM

என்னுடைய ஆசிரியரையும் நினைக்கத் தூண்டிய நினைவுக் குறிப்பை எழுதியதற்காய் நன்றி தோழர்.

Reply

Leave a Comment